நீரில் சுட்ட ரொட்டி!

வானுயர்ந்த மலைகள்; அதற்குப் போட்டியாக வளர்ந்த மரங்கள்; வண்ண மலர்கள், சலசலவென்று ஓடும் ஆறு... இயற்கையின் அழகை ரசித்தபடியே சென்றுகொண்டிருந்தனர் சிவபிரானும் அன்னை பார்வதியும். அப்போது பார்வதியின் கழுத்திலிருந்த மணிமாலை தவறி அருகில் ஓடிக் கொண்டிருந்த நதியில் விழுந்துவிட்டது. பதறிப் போனாள் தேவி; ஐயனை நோக்கினாள்.
இதைப் புரிந்துகொண்ட பெருமான் பூத கணங்களை ஏவினார். முடிந்த மட்டும் அவர்கள் தண்ணீரில் தேடினார்கள். தேவியின் மணி மட்டும் கிடைக்கவில்லை. பல மணிமாலைகளைக் கொண்டு வந்தனர். ஆனால் பார்வதியோ, “எனக்கு என் மணிமாலைதான் வேண்டும்” என்று பிடிவாதமாக இருந்தாள்.
இறைவனுக்கு மிகவும் கோபம் வந்தது. நெற்றிக் கண்ணைத் திறந்து ருத்திர தாண்டவம் ஆட ஆரம்பித்தார். அண்ட சராசரங்கள் நடுங்கின. எல்லோரும் ஆதிசேஷனை, அந்த மணிமாலையை எடுத்துக் கொடுக்கும்படி வேண்டினர். சற்றுநேரம் கழித்து ஆதிசேஷன், நீரின் மட்டத்துக்கு மேல் வந்தார். கோபமாக ‘ஹ்ஸ்’ என்று வாய் திறக்க, மிகவும் சூடான வெந்நீர் பீறிட்டு வந்தது. சூடு தாங்க முடியவில்லை. அந்த வெந்நீரில் அன்னையின் மணிமாலை யும் கிடைத்தது. தேவி மிகவும் ஆனந்தப் பட்டாள்.
அன்றுமுதல் இந்த இடத்துக்கு ‘மணிகரண்’ என்று பெயர் வந்தது.
இமாச்சல பிரதேசத்தில், பீயாஸ் (BEAS) நதிக்கும், பார்வதி நதிக்கும் இடையில் உள்ள பள்ளத்தாக்குதான் மணிகரண்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5300 அடி உயரம். பிரசித்திபெற்ற கோடை வாசஸ்தலமான குலுவிலிருந்து 45 கி.மீ. தூரம். குலு, மணாலி வருபவர்கள் இந்த புனித தலத்துக்கு கட்டாயம் வருகிறார்கள்.
இங்கு சீக்கியர்க்கு குருத்வாராவும் உண்டு. சீக்கியர்களின் தல புராணத்தைப் பார்ப்போம். ஒருசமயம் சீக்கியர்களின் மத குருவான ஸ்ரீகுருநானக் தேவ்ஜி, தம் சிடர்கள் பாய் பாலாவுடனும் (Bhai Bala), பாய் மர்தனாவுடனும் (Bhai Mardana) இங்கு விஜயம் செய்தனர்.
சீடர்களுக்கு மிகுந்த பசி. குருவின் உத்தரவுப்படி, அங்கிருந்த வீடுகளில் ‘ஆட்டா மாவு’ (கோதுமை மாவு) வாங்கி வந்தனர். அதை வைத்து ரொட்டி செய்யலாம் என்ற எண்ணத்தில் கொண்டு வந்தனர். அதற்கு நெருப்பு வேண்டுமே? எங்கு பார்த்தாலும் தண்ணீர் - மரங்கள்தான்.
அர்த்தத்துடன் குருவின் முகத்தை கவலையுடன் பார்த்தனர் சீடர்கள். அதைப் புரிந்துகொண்ட ஸ்ரீகுருநானக், பாய் மர்தானாவைப் பார்த்து, ஒரு பாறாங்கல்லைக் காட்டி, “அதை சற்றுப் புரட்டிப் போடு” என்றார். அவன் அப்படியே செய்தான்.
மறுகணம், பொறுக்கமுடியாத சூட்டில் வெந்நீர் மேலே பீறிட்டு வந்தது.
அந்த நீரில் ரொட்டியை வேகவைப்பதற்காக, ஒவ்வொன்றாக போட்டார். அவை நீருக்குள் மூழ்கின.
இதைக் கண்ட குருநானக், “இறைவா, ரொட்டிகள் வெந்து மேலே மிதந்து வந்தால் ஒரு ரொட்டியை உனக்கு காணிக்கையாக்குகிறேன்” என வேண்டினார். எல்லா ரொட்டிகளும் வெந்து மேலே வந்தன. அதில் ஒன்றை இறைவனுக்கு அர்ப்பணித்தனர்.
இன்றும், இந்த கடும் வெந்நீரில் ஒரு மூட்டை அரிசி, ஒரு மூட்டை உருளைக் கிழங்கு 30 முதல் 40 நிமிடங்களில் வெந்துவிடுவதைக் காணமுடிகிறது.
இங்குள்ள கடைகளில் கையகல துணிப் பைகளில் அரிசி போட்டு விற்கின்றனர். அதை வாங்கி சிறிது நேரம் இங்குள்ள வெந்நீரில் வைக்கின்றனர். அரிசி வெந்து, சாதம் ஆனவுடன் ஆண்டவனுக்கு அர்ப்பணித்து பிரசாதமாக ஏற்கின்றனர்.
யாத்திரிகள் குளிப்பதற்காக, வெந்நீரும், பீயாஸ் நதியின் குளிர் நீரும் கலந்து வரும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும் குளிக்க, தனித்தனி குளியல் அறைகள்! இந்த வெந்நீர் மருத்துவ குணங்கள் கொண்டது என்பதால், இதில் நீராடுவதற்காகவே சுற்றுலாவாக வருபவர்களும் அநேகர்.
இங்கு ஒரு அழகிய சிவன் கோவில் உள்ளது. வண்ணத்துணிகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட நந்திபகவான்.
அங்கிருந்து சிறிய அழகிய கடைத்தெரு வழியாக ராமர் கோவிலுக்கு வருகிறோம். 20 படிகள் மேலே ஏற வேண்டும். அழகான கோவில். உள்ளே சன்னிதியில் ராமனும் சீதையும் மட்டும்தான் இருக்கின்றனர். லக்ஷ்மணன் சிலை, முன்பு இருந்ததாகச் சொல்கின்றனர்.
17ஆம் நூற்றாண்டில் ராஜா ஜகத்சிங் என்பவரால் இது கட்டப்பட்டது என்று கூறுகின்றனர். இந்த சிலா ரூபங்களை ‘குலு’வை ஆண்ட மன்னர், அயோத்தியில் இருந்து கொண்டு வந்து நிறுவியதாகச் சொல்கிறார்கள்.
ஆலயத்தின் வெளிச்சுவற்றில் அழகிய பஞ்சமுக ஆஞ்சநேயர் புடைப்புச்சிற்பம். வெளிப்பிரகாரத்தில் அம்பிகைக்கும் ஆஞ்சநேயருக்கும் தனித்தனிச் சன்னிதிகள்.
குருத்துவாரா போன்று இங்கும் வெந்நீரில் குளிக்கத் தன்னித்தனி அறைகள் உண்டு. தங்குவதற்கு 200 ரூபாய் முதல் அறைகள் கிடைக்கும். எல்லா வகை உணவு வகைகளும் கிடைக்கும். பேருந்து வசதிகளும் அதிகம். சிறிய டவுன்தான். ஆனால் இன்டர்நெட் வசதி வரை உண்டு.
இத்தலத்துக்கு வந்தால் காசிக்குச் சென்று வந்த பலன் உண்டு என்கிறது தலபுராணம்.
சுற்றுலாப் பயணிகள், இந்துக்கள், சீக்கியர்கள்... என்று அனைவரும் ஈர்க்கும் ஆனந்த பவனமாக விளங்குகிறது மணிகரன்!

Comments