நந்தியின் நாயகன்!

நடராஜரின் திருநடனம்! சிவ கணங்கள், ஆளுக்கொரு இசைக் கருவியை எடுத்துக் கொண்டு பரமனின் நடனத் துக்கு தக்கபடி வாசித்தனர். ஓடோடி வந்த தேவர்களும், கயிலாய வாசலில் நின்று, நடராஜரின் நடனத்தைக் கண்டு ரசித்தனர்.
அனைவரும் சிவ நடனத்தில் லயித்திருக்க, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காவலனாக இருந்த நந்திதேவர், தன்னையும் தன் நிலையையும் மறந்தார்; 'சிவனாருக்கும் எனக்குமான உறவு வேறு யாருக்கு உண்டு?' என்பது போல், மத்தளத்தை எடுத்துக் கொண்டு, நடனத்துக்குத் தகுந்தாற் போல் வாசித்தார். கூடியிருந்தோர் வியந்தனர். இவ்வகையில், சிவனாரின் வாகனராக இருந்த நந்திதேவர், நடராஜரின் நடனத்துக்கு லயம் சேர்ப்பவராக, வாத்தியம் வாசிப்பவராக மாறினார். இதே காட்சியை நாம் வெகு சில தலங்களில் மட்டுமே காண முடியும்.
ஆம்! சிவாலயங்களில் பொதுவாக நடராஜர் சந்நிதியில் அவருக்கு அருகில் மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் முதலானோர் இருப்பர். ஆனால், நடராஜருக்கு அருகில் அமர்ந்து கொண்டு குடமுழாவை வாசித்தபடி காட்சி தரும் நந்திதேவரைக் காண்பது அரிது! திருச்சி காந்தி மார்க்கெட் அருகில், (டவுன் ஸ்டேஷன் அருகில்) கீழப்புலிவார்டு சாலையில் உள்ள ஸ்ரீபூலோகநாதர் கோயிலில், இந்தத் திருக்காட்சியை தரிசிக்கலாம்.
இங்கே... நடராஜர் விக்கிரகம் கொள்ளை அழகு! திருவாதிரை நாளில், சிறப்பு அபிஷேகம் திருவீதியுலா என நடைபெறும் வேளையில், காந்தி மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரள்வார்கள். நந்திதேவருடன் காட்சி தரும் நடராஜரை தரிசித்து வழிபட்டால், கல்வி-கேள்வியில் சிறந்து விளங்கலாம்; வீடு - மனை வாங்கும் யோகம் உண்டாகும் என்கின்றனர் பக்தர்கள்.
இந்த ஆலயத்தில், வருடத்துக்கு எட்டு நாட்களில், வாஸ்து யாகமும் பூஜையும் சிறப்புற நடைபெறுகிறது.
கோயில் தொடர்புக்கு: 0431-2711360

Comments