முன்னூர் வாருங்கள் முன்னுக்கு வருவீர்கள்!

எண்ணற்ற தலங்களில் ஆடல் நாயகனாம் ஸ்ரீநடராஜரை தரிசித்திருப்பீர்கள். ஆனால், மூலவரே ஸ்ரீஆடவல்லீஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருளும் தலம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்- மரக்காணம் சாலையில், சுமார் 19 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலங்குப்பம். இங்கிருந்து தெற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் முன்னூர்.

'முன்னூற்று மங்கலம்' என்று புராணங்களும் சரித்திரமும் போற்றும் இந்தத் தலத்தில், சோழ மன்னன் குலோத்துங்கனுக்கு நடனக் கோலம் காட்டி அருளியதால், ஸ்ரீஆடவல்லீஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்கிறார் ஈசன். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபிரஹன்நாயகி.
பிரகஸ்பதியும் அருள் பெற்ற தலம் இது! வேத ஞானம், புகழ், தவ பலன் என்று எவருக்கும் கிட்டாத தனது மகிமை குறித்து பெருமிதம் கொண்ட பிரகஸ்பதிக்கு, அவரையும் அறியாமல் அவருக்குள் கர்வம் தலை தூக்கியது!
விளைவு... தேஜஸை இழந்தார்; மதிப்பு- மரியாதையை இழந்து பெரிதும் வருந்திய பிரகஸ்பதி, பிரம்மனை சரண் அடைந்தார். தனது பழைய பொலிவையும்- தேஜஸையும், ஆத்ம பலத்தையும் மீண்டும் பெற, வழி கூறுமாறு வேண்டி னார். ''பூவுலகில், அன்னை பராசக்தியுடன் நடனம் புரிந்து, பேரானந்தத்துடன் திகழும் ஆடவல்லீஸ்வரரை தரிசித்து, தவம் செய்தால்... பெறலாம்'' என்றார் பிரம்மன்.
அவ்வாறே செய்ய, பிரகஸ்பதிக்கு ஆத்மபலத்தையும் தேஜஸையும் மீண்டும் அருளினார் ஈசன்.
பூவுலகில் இருந்து சொர்க்கம் செல்ல பாலமாகத் திகழும் தலம் இது என்பது ஐதீகம். சித்தர்கள் சூட்சுமமாக உலாவரும் இந்தத் தலத்தில் மனக்குறைகளைக் கூறி பிரார்த்தித்தால், குறிப்பிட்ட பிரச்னைகளுக்கான தீர்வு நம் கனவில் அசரீரியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தேவியருடன் அருளும் ஸ்ரீசிவசுப்பிரமணியர் அழகோ அழகு! வருடம்தோறும் சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் வரும் முதல் செவ்வாய்க் கிழமை அன்று நடைபெறும் வேல் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
இங்கே அருளும் சிவகாமியம்மை சமேத ஸ்ரீநடராஜர் வரப்பிரசாதி! குலோத்துங்க மன்னனுக்கு நடனக் கோலத்தில் காட்சி அளித்த தலம் இது. ஆகவே மார்கழி திருவாதிரை அன்று சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.
கர்ம வினைகளாலும் தீராத நோயாலும் துன்பப்படுவோர் இங்கு வந்து, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீஆடவல்லீஸ்வரரை தரிசிப் பதுடன், ஸ்ரீநடராஜரையும் வழிபட, இன்னல்கள் நீங்கி நலம்பெறலாம்.
தொடர்புக்கு : 94440 24751, 044 - 2247 0545
ஒரே கோயிலில் மூன்று குரு மூர்த்திகள்
மூலவர் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் தென்திசை நோக்கி அருள் பாலிப்பது விசேஷ அம்சம். எனவே, இங்கே வந்து வழிபட ஆயுள் தோஷம் நீங்குமாம்.
தேவகுரு பிரகஸ்பதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி மட்டுமின்றி, தேவகுருவுக்கு அருளிய ஈஸ்வரனும் குரு அம்சமாகவே திகழ... மூன்று குரு மூர்த்திகளை தரிசிக்கும் பாக்கியம் இந்தத் தலத்தில் கிடைக்கிறது. எனவே, ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்கள், கல்வியில் சிறக்க விரும்புவோர், நல்ல உத்தியோகம் எதிர்பார்ப்பவர்கள் முன்னூருக்கு வந்து உரிய வழிபாடுகள் செய்து வழிபடுவது சிறப்பு. இதனால், இன்னல்கள் அகன்று வாழ்வில் சீக்கிரம் முன்னுக்கு வரலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

Comments