நற்கதி அருளும் ஆனந்த தாண்டவர்!

பொதுவாக எல்லாத் தலங்களிலும் நடராஜருக்கு வருடத்தில் ஆறு அபிஷேகம் என்றால், பேரூர்- ஸ்ரீபட்டீஸ்வரர் ஆலயத்தில் மட்டும், வருடத்துக்கு 10 அபிஷேகங்கள்! பங்குனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் ஒரே தலமும் இதுதான்!

கோயம்புத்தூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் (சிறுவாணி பிரதான சாலையில்) உள்ளது பேரூர். இங்குள்ள ஸ்ரீபட்டீஸ்வரர் ஆலயம், கரிகாலச் சோழனால் கட்டப்பட்டதாம். ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் திருமலை நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் கண்ட இந்த பிரமாண்ட ஆலயத்தின் விசேஷ அம்சம், அதன் கோஷ்டம்தான். இங்கே ஸ்ரீநடராஜர் எழுந்தருளி உள்ள கனகசபை மண்டபத்தைக் கட்டி முடிக்க சுமார் 36 வருடங்கள் ஆனதாம். ஸ்தூல சரீரத்தில் (உடம்பில்) அடங்கியுள்ள 36 தத்துவங்களைக் குறிக்கும் வகையில் 36 தூண்களுடனும், உடம்பின் நவ துவாரங்களைக் குறிக்கும் 9 ஜன்னல்களுடனும் அமைந்திருக்கிறது மண்டபம்.
ஸ்தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம் ஆகியவற்றைத் தாண்டியே ஒருவர் முக்தி அடைய முடியும். இதை உணர்த்தும் விதமாக, மண்டபத் தின் முகப்பிலும், உள் பிராகாரத்திலும், கருவறைக்குமாக முறையே ஐந்து படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். கருவறையின் (ஒரே கல்லிலான) நான்கு தூண்கள்- நான்கு வேதங்களை உணர்த்துகின்றனவாம்.
கருவறையில் ஸ்ரீநடராஜர் தரிசனம். ஆனந்த தாண்டவம் ஆடியவர் ஆதலால், விரிசடையுடன் இல்லாமல் பனித்த சடையுடன் இவர் காட்சி தருவது விசேஷம்! இத்தகு அமைப்புடன் திகழும் நடராஜரை தரிசிப்பதால் நற்கதி கிடைக்கும்.
ஸ்வாமியின் விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது. வெள்ளி பிரபை, சிற்பத்துடன் சேர்ந்து அமைந்துள்ளது. இதில்... வடமொழியின் 51 அட்சரங்களைக் குறிக்கும் தீப்பொறிகள். ஸ்ரீநடராஜருக்கு அருகில் (காரைக்கால் அம்மை மற்றும் மாணிக்கவாசகருக்கு பதிலாக) வலப்புறம் மகாவிஷ்ணு- கோமுனியாகவும், இடப்புறம் பிரம்மன்- பட்டிமுனியாகவும் வீற்றிருக்கின்றனர்.
இறைவனின் ஆனந்த தாண்டவத்தைக் காண விரும்பிய மகாவிஷ்ணுவும் பிரம்மனும் தங்களது விருப்பத்தை சிவனாரிடம் தெரிவித்தனர். 'இந்தத் தலத்தில் அவர்களின் விருப்பம் நிறைவேறும்' என்று அருளினார் சிவனார். அதன்படி, கோயிலுக்கு தெற்குப் பகுதியில் (தென் கயிலாயம்) மகாவிஷ்ணுவும், வடக்குப் பகுதியில் (வட கயிலாயம்) பிரம்மனும் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தைக் காணும் பேறு பெற்றனராம். இருவரும் தவமிருந்த இடங்களில் தோன்றிய (தென்பகுதி- சக்ர தீர்த்தம்; வடபகுதி- பிரம்ம தீர்த்தம்) தீர்த்தங்களை இன்றும் காணலாம். பெரும்பாலும் நடராஜர் நடனமிடுவது ஆல மரத்தின் கீழ்தானாம்! ஆனால், இந்தத் தலத்தில் மட்டும் அரச மரத்தின் கீழ் நடனக் காட்சி கொடுத்தார் என்பது சிறப்பு. வரும் மார்கழி- திருவாதிரை நாளில், அன்று பேரூர் ஆனந்த நடராஜரை தரிசித்து, வாழ்வில் பேரானந்தம் பெறுவோம்!
கோயில் தொடர்புக்கு: 0422-2607991 / 2606849

Comments