பாபா கேட்ட குருதட்சிணை!

அவன்பால் அணுகியே அன்பு செய்வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயம் அது ஆமே!

- (திருமந்திரம் : 1880)
பொருள்: ஞானிகள், தம்மை அணுகும் அடியவர்களை, சிவபெருமானிடம் சரணடையச் செய்யும் வல்லமை கொண்டவர்கள்; ஞானிகளை அணுகி, அவரை விரும்புகிற அடியவர்களிடத்தில், சிவஞானிக்கு உள்ள பெருமை வந்து சேரும்.
மும்பையைச் சேர்ந்த யச்வந்த் ஜனார்த்தன் கல்வன்கர், ஷீர்டி பாபாவை சாது என்று மட்டுமே அறிந்திருந்தார். மற்றபடி பாபா மீது எந்தப் பற்றுதலும் இல்லை!
ஒருநாள்... கல்வன்கரின் கனவில் தோன்றிய பாபா, 'ரெண்டு ரூபா தட்சிணை கொடு' என்று கேட்க, இவரும் ''அதிகம் கேட்டால் தரமாட்டேனா என்ன?'' என்று கேட்டாராம். மெள்ள புன்னகைத்தபடியே, ''உன்னிடம் கேட்டது பணத்தை அல்ல... நேர்மையுடனும் தூய்மையுடனும் இரு; மனைவியைத் தவிர வேறு பெண்களை விரும்பாமல், பரிசுத்த மாக இரு! இந்த இரண்டையும் குரு தட்சிணையாகக் கேட்டேன்'' என்று கூறி மறைந்தாராம்!
கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தார் கால்வன்கர். மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்தில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தவர், இவர். லஞ்சம் மற்றும் சபலத்துக்குள்ளாகும் அலுவலர்கள் இங்கே அதிகம்! தீர்க்கதரிசியான பாபா, இதைக் கருத்தில் கொண்டுதான் இரண்டு கட்டளைகளைப் பிறப்பித் துள்ளார் என்று எண்ணி வியந்தார் கால்வன்கர்! மறுநாள், மணியார்டர் மூலம் இரண்டு ரூபாயை ஷீர்டிக்கு அனுப்பிய கால்வன்கர், பாபாவின் இரு கட்டளைகளையும் ஈடுபாட்டுடன் கடைப்பிடித்து வரலானார்.
சில நாட்கள் கழித்து, ஷீர்டிக்குச் சென்று பாபாவை நமஸ்கரித்தார் கால்வன்கர். அப்போது தன் வலது கரத்தை அவரின் சிரசில் வைத்து ஆசீர்வதித்தார் பாபா! அப்போது, கால்வன்கரின் உடல் முழுவதும் மின்னொளி பாய்ந்தது. இந்த உணர்வில் லயித்துப் போனார் கால்வன்கர். அப்போது அங்கே இருந்த பக்தர்களிடம், ''இவன் பரிசுத்தமானவன்; யோக்கியவான்! பிறவிகள் பலவற்றிலும் சாதுக்களை நேசித்து வணங்கியவன்; இந்தப் பிறவியில் இவனுடைய தாயாரின் வயிற்றில் இவனை அமர்த்தினேன்'' என்றார் பாபா.

இதையடுத்து, ஷீர்டியை பண்டரிபுரமாகவும் பாபாவை பண்டரிநாதராகவும் போற்றி வணங்கி வந்தார், கால்வன்கர்! விடுமுறை நாட்களில், ஷீர்டிக்குச் செல்வது அதிகமாயிற்று; தம்மை ஊருக்குச் செல்லும்படி பாபா சொல்லும் வரை அங்கேயே தங்குவது வழக்கமாயிற்று!
ஒருமுறை கால்வன்கரின் கனவில், ''இந்த உடலுக்குள் மட்டும் நான் அடங்கிவிடவில்லை. எங்கும் இருக்கிறேன். எல்லா இடத்திலும் என்னைப் பார்!'' என்று அருளினார் பாபா.
காலங்கள் ஓடின! பாபா ஜீவசமாதி அடைந்த பிறகும்கூட கால்வன்கர், ஷீர்டிக்குச் சென்று வருவதைத் தொடர்ந்தார்.
'நான் வைத்த நிலையிலே யாம் இருக்க வேண்டுமே' எனும் கபீர்தாசரின் பாடலை, பாபா வின் திருவுருவப் படத்துக்கு முன்னே அமர்ந்து அனுதினமும் பாடிவந்தார் கால்வன்கர். அவரது மனதுள் பாபாவே குடிகொண்டிருந்தார்.
ஒரு முறை, குடும்பத்தாருடன் காசிக்குச் சென்றார் கால்வன்கர். பிரயாகையில், அனைத்து புண்ணியத் தலங்களுக்கும் அழைத்துச் சென்று விவரித்தனர் வழிகாட்டிகள்! அவர்களிடம் மகான்கள் குறித்து விசாரித்தார். பரத்வாஜரின் ஆஸ்ரமத்துக்குச் சென்று, பாபாவை எண்ணி பிரார்த்தித்தார் கால்வன்கர்: 'பாபா! இந்த மண்ணில், மகான் எவரையேனும் தரிசிக்க, அனுக்கிரகம் செய்யுங்கள்' என மனதார வேண்டினார்.
பிறகு ஆஸ்ரமத்தில் இருந்து காரில் புறப்பட்ட சிறிது நேரத்தில், உடன் வந்திருந்த வழிகாட்டி காரை நிறுத்தும்படி அவசரப்படுத்தினார். காரும் நின்றது. எதிரே, வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் நீண்ட தாடியுடன் வந்து கொண்டிருந்தார்.
''நீங்கள் அதிர்ஷ்டக்காரர்தான்! இந்த மகான், வருடத்துக்கு ஒருமுறைதான் பிரயாகைக்கு வருவார். ஆனால் ஒன்று... அருகில் நெருங்கக் கூடாது; இவருக்கு காசு பணமும் தரக்கூடாது. இதனை அவர் விரும்பமாட்டார்; சுள்ளென்று கோபம் வந்துவிடும்!'' என்று விளக்கம் தந்தார் வழிகாட்டி.
வியப்பும் மகிழ்ச்சியுமாக பாபாவை வேண்டினார் கால்வன்கர்... 'பாபா! மகானைக் காட்டினீர்கள்; அவரது ஆசீர்வாதத்துக்கும் அருளுங்களேன்' என வேண்டினார். அந்த நிமிடமே அந்த அதிசயம் நிகழ்ந்தது!
ஆம்... அந்த மகான் மெள்ள புன்னகைத்தபடி கால்வன்கரை அழைத்தார். 'வா குழந்தாய்' என்றவரை குடும்ப சகிதமாக விழுந்து வணங்கினார் கால்வன்கர். அனைவரையும் ஆசீர்வதித்தார் மகான். 'மகானுக்கு ஏதேனும் தரவேண்டுமே...' என்று தவித்த கால்வன்கர், சட்டைப் பையில் இருந்து நாணயங்களை அப்படியே அள்ளினார்; மிகவும் பவ்யமாக மகானிடம் வழங்கினார். புன்னகை மாறாமல் கனிவு பொங்க அதனைப் பெற்றுக் கொண்ட மகான், ''என்ன... இப்போது திருப்திதானே?!'' என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் எதிர்திசையில் சென்று மறைந்தார்!
உடனே கால்வன்கரின் அருகில் வந்த வழிகாட்டி, ''நீங்க அதிர்ஷ்டக்காரர்தான் சாமீ! இந்த மகான்கிட்ட ஒருத்தரும் நெருங்கக்கூட முடியாது; நீங்களும் உங்க குடும்பத்தாரும் புண்ணியம் செஞ்சவங்க'' என்று வியப்பு மேலிடச் சொன்னார்.
தன்னையும் தன்னுடைய குடும்பத்தாரையும் வேறொரு உருவத்தில் வந்து ஆசீர்வதித்தவர், ஸ்ரீசாயிபாபா எனும் உண்மை கால்வன்கருக்கு மட்டும்தானே தெரியும்!

Comments