ஸ்ரீநடராஜர் சிறப்பு தரிசனம்!

திருவாதிரை- ஸ்ரீநடராஜரை தரிசிக்க உகந்த திருநாள்! நடராஜர் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிதம்பரம்தான். ஆனால், இதனுடன் தொடர்புடைய இன்னும் நான்கு தலங்களும் உண்டு! இந்தத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் நடராஜ மூர்த்தங்கள், ஒரே ஸ்தபதியால் வடிக்கப்பட்டவை!
தில்லை சிவகங்கை தீர்த்தத்தில் நீராடிய பலனால் தனது பாவமும் ரோகமும் நீங்கப் பெற்றான் மன்னன் சிங்கவர்மன். நன்றிக்கடனாக, நடராஜருக்குக் கோயில் எழுப்ப எண்ணினான். அதன்படி நமசிவாய முத்து ஸ்தபதியால் வடிக்கப்பட்ட நடராஜர் சிலை, தாமிரத்தால் ஆனது. இதன் அழகில் வியந்த மன்னன், தங்கத்தில் இன்னொரு சிலை வடிக்குமாறு பணித்தான். அப்படி உருவான 2-வது விக்கிரகம் ஈசனின் திருவிளையாடலால் செப்புத் திருமேனியாகவே அமைந்தது (இதுகுறித்த விரிவான கதை இந்த இதழில் 74-ஆம் பக்கத்தில்...) முதல் விக்கிரகம், மன்னன் ராமபாண்டியனால் செப்பறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2-வது திருமேனி சிதம்பரத்தில் பிரதிஷ்டையானது.

செப்பறை நடராஜரை தரிசித்து வியந்த சிற்றரசன் வீரபாண்டியன், தனக்கும் இரண்டு விக்கிரகங்கள் செய்யுமாறு சொல்ல... அதன்படி வடித்தார் ஸ்தபதி. 'இதை விட அழகிய சிலைகளை, ஸ்தபதி வடிக்கக் கூடாது!' என்ற எண்ணத்துடன், அவரின் வலது கரத்தை துண்டித்தான் வீரபாண்டியன். பின்னாளில் மனம் திருந்திய வீரபாண்டியன் கட்டாரிமங்கலம், கரிசூழ்ந்தமங்கலம் ஆகிய தலங்களில் ஸ்ரீநடராஜர் சிலைகளை பிரதிஷ்டை செய்தான். இதன் பின், ராமபாண்டியனது கோரிக்கையின்படி, மரத்தாலான செயற்கை கை பொருத்திக் கொண்டு, ஐந்தாவதாக ஒரு நடராஜர் சிலையை வடித்தார் ஸ்தபதி. இது, நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தில் உள்ளது.


Comments