ஸ்ரீபொன்னேஸ்வரி!

எப்போதும் சிவ நாமத்தில் லயித்திருக்கும் நாகார்ஜுன முனிவரின் மனதை, இப்போது வேறு சிந்தனைகள் ஆக்கிரமித்திருந்தன...
'கயிலாயம் திரும்பி விடலாமா..? இப்போது வேண்டாம்... இன்னும் சில காலம் போகட்டும். இந்த மலையும் அதன் சூழலும் மிக ரம்மியம்! தெய்வ சாந்நித்தியம் மிக்க இந்த இடம், உலக உயிர்களுக்கு உய்வளிக்கும் திருவிடமாக பரிணமிக்க வேண்டும். அதற்கு நான் ஏதேனும் செய்தாக வேண்டும்.'
_ கயிலாயவாசியான நாகார்ஜுன முனிவர், பூலோகத்தில் தவம் செய்ய விரும்பி, இங்கு (தற்போதைய திருச்சி- பொன்மலை பகுதி) வந்து வெகு காலமாகி விட்டது. தனது தவத்தை பூரணமாக்க உதவிய இந்த இடத்தின் புனிதத்தை உணர்ந்த முனிவர், தன்னைப் போலவே உலக மாந்தர்களும் இங்கு வந்து இறையருளால் சிறப்படைய வேண்டும் என விரும்பினார்.
சிந்தனையின் ஊடே... ஆகாயத்தை வெறித்திருந்த அவரின் பார்வை, மெள்ள நிலத்தின் பக்கம் திரும்பியது. மரங்கள், அதன் கிளைகளில் வந்து அமரும் கிளிகள், பழம் கடிக்கும் அணில்கள்... என்று சுற்றிச் சுழன்ற முனிவரின் பார்வை, ஒரு புதரில் நிலைத்தது. அந்த புதரின் மறைவில்... ஒரு விக்கிரகம்; சாட்சாத் ஸ்ரீசாமுண்டீஸ்வரிதேவியின் விக்கிரகம்! இதைக் கண்ட முனிவரின் மனதில் சட்டென்று ஓர் யோசனை!

'இந்த இடத்தில் அற்புதமாக ஓர் ஆலயம் அமைந் தால்... இங்கு மக்கள் வெள்ளம் அலைமோதுமே! ஆனால், அதற்கு நிறைய பொருள் செலவாகுமே... எவரிடம் கேட்பது?' இதற்கும் விடை கண்டார் முனிவர். ஸ்ரீமகாலட்சுமியிடமே பொருள் வேண்டு வது என்று முடிவு செய்தார் அவர். அக்கணமே, அலைமகளை தியானித்து தவத்தில் ஆழ்ந்தார்.
விரைவில் அவரின் தவம் பலித்தது! முனிவரின் முன் தோன்றிய திருமகள், அவர் தவம் செய்த மலையையே பொன் மலையாக மாற்றி அருளினாள்.
பிறகென்ன... அற்புதமாக உருவானது பொன் மலை ஆலயம். புதரில், தான் கண்ட ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவிக்கு 'ஸ்ரீபொன்னேஸ்வரி' என்று திருநாமம் சூட்டி, இந்தக் கோயிலில் எழுந்தருளச் செய்தார் முனிவர். அது மட்டுமா? அஷ்டதள தீர்த்தக் கிணறு அமைத்து அதன் நீரால் அம்பாளை அபிஷேகித்த துடன், சரக்கொன்றை மரத்தின் (கோயிலின் ஸ்தல விருட்சமும் இதுவே) பூவால் அர்ச்சித்து தினமும் இவளை பூஜித்தார் என்கிறது தலபுராணம். அன்று தொடங்கிய வழிபாடு இன்றும் தொடர்கிறது!
சரி... எங்கிருக்கிறது இந்த பொன்மலை?
திருச்சி ஜங்ஷனில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், திருச்சி மத்திய சிறைச்சாலை மற்றும் விமான நிலையத்துக்கு பின்புறம் அமைந்திருக்கிறது பொன்மலை. தற்போது இந்தத் தலம், பெயரில்
மட்டுமே பொன்னைக் கொண்டு திகழ்ந்தாலும்... இங்கு வந்து, தன்னை வேண்டிக் கொள்ளும் பக்தர் களுக்குப் பொன்னும் பொருளும் வாரி வழங்கும் ஸ்ரீபொன்னேஸ்வரி அம்மனின் அருட்கடாட்சத் துக்கு அளவே இல்லை!
ஒற்றைப் பிராகாரத்துடன் திகழ்கிறது திருக் கோயில். நுழைவாயிலில் இருந்தே அம்பாளை தரிசிக்க முடிகிறது. அம்பாள் சந்நிதியின் வலப்புறம் ராஜ கணபதி; இடப் புறம் நவக்கிரகங்கள். கன்னி மூலையில் ஸ்ரீகன்னிமூல கணபதியை தரிசிக்கலாம். இவரை தரிசிப்பதற்கு முன்... கருப்பண்ண சாமி மற்றும் மதுரவீரசாமி ஆகியோரது தரிசனம்.
ஆடி மாதம் 18 மற்றும் 28-ஆம் தேதிகளில் இவர் களுக்கு விசேஷ வழிபாடு நடைபெறுகிறது.
அம்பாள் கருவறைக்கு பின்புறம் நந்தியுடன் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் அருள் பாலிக்கிறார். அடுத்து ஒரு வாசல். இங்கிருந்து பார்த்தால் மலைக்குச் செல்லும் படிக்கட்டுகள்! மேலே ஏறிச் சென்றால் இடும்பன் சந்நிதியையும் வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீமுத்துகுமார ஸ்வாமி, ஸ்ரீஐயப்பன் ஆகிய தெய்வங்களையும் சரக்கொன்றை மரத்தையும் தரிசிக்கலாம். மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் ஸ்ரீமுத்து குமார ஸ்வாமிக்கும், உத்திர நட்சத்திரத்தில் சுவாமி ஐயப்பனுக்கும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். இந்த மலையின் மீது நின்று பார்த்தால்... உச்சிப் பிள்ளையார் மற்றும் திருவெறும்பீஸ்வரர் ஆலயங்களை ஒருசேர தரிசிக்க முடிகிறது!
இந்தக் கோயிலின் கொலு மண்டபமும், குபேர மூலையில் இருக்கும் சப்தகன்னியர் தரிசனமும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள ஸ்ரீதுர்கை அம்மனும் சிறந்த வரப்பிரசாதியாக திகழ்கிறாள்!
சோட்டானிக்கரை ஸ்ரீபகவதி அம்மன் ஆலயத்தின் கருவறை விமானம் போன்று இங்கு அமைந்திருக்கும் அம்பாள் கருவறை விமானமும், அபிராமி அந்தாதிப் பாடல்கள் பொறிக்கப்பட்டிருக்கும் தூண்களும் கோயிலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.
கருவறையில்... கருணை நாயகியாக தரிசனம் தருகிறாள் ஸ்ரீபொன்னேஸ்வரி அம்மன். அருகில், அம்பாளின் ஆதி விக்கிரகம். இந்த விக்கரகத்தையே நாகார்ஜுன முனிவர் வழிபட்டாராம். திருமணத் தடை உள்ளவர்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இங்கு வந்து விளக்கேற்றி, அம்பாளை 18 முறை வலம் வந்து வணங்க வேண்டும். இந்த வழிபாட்டை 18 வாரங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் விரைவில் திரு மணம் கைகூடுமாம்! அம்மனுக்கு நெய்விளக்கேற்றி வணங்குவதுடன், இங்குள்ள நவக்கிரகங்களை 18 முறை வலம் வந்து வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்கிறார்கள். மேலும் பௌர்ணமி தோறும் இங்கு கிரிவலம் வந்து அம்பாளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறுமாம்!
திருப்பணிகள் நடந்தேறி, விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இந்த ஆலயத்துக்கு!
மன நோய் தீர்க்கும் தீர்த்தம்!
ஸ்ரீபொன்னேஸ்வரி அம்மன் கோயிலின் அஷ்டதள தீர்த்தம் கோயிலின் அக்னி பாகத்தில் அமைந்திருப்பது சிறப்பான அம்சம் என்கிறார்கள்!
மன நலம் பாதிக்கப்பட்டவர்களை இங்கு அழைத்து வந்து, அஷ்டதள தீர்த்தத்தை அருந்தச் செய்து, தல விருட்சமான சரக்கொன்றை மரத்தை வலம் வந்து வழிபட்டால், பிணி நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம்!

Comments