ஆன்மீக வினா - விடைகள்

கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் எலுமிச்சம் பழத்தை ஊறுகாய், ஜூஸ் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்துகிறார்களே... இது சரியா

தங்களது விருப்பப்படி தாராளமாகப் பயன்படுத்தலாம். பிரசாதப் பொருட்களை விரயமாக்காமல், பயன்படுத்த வேண்டும். அதுவே முக்கியம்!

ஆனால், பல கோயில்களில் பிரசாதப் பொருள் கள் வியாபாரப் பொருள்களாக மாறிவிட்டன. மக்கள் விருப்பம், வியாபாரத்தை வளர்த்தது.
பிரசாதமாக வந்ததைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். அதில் தவறில்லை.

தினமும் விளக்கேற்றி, ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுபவள் நான். பித்ரு தினமான அமாவாசையன்று கடவுள் ஸ்லோகங்களைச் சொல்லலாமா ?
அமாவாசை அன்று முன்னோர் ஆராதனை முடிந்த பிறகு ஸ்லோகம் சொல்லி வழிபடலாம். தேவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோருக்கான வழிபாடுகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டி வந்தால், முதலில் முன்னோர்களையே வழிபட வேண்டும். பிறகு தேவர்களை வணங்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.
முன்னோர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது சாஸ்திரத்தின் கருத்து. அதே நேரம், தினம் தினம் செய்யும் கடமைகளையும் நிறுத்தக் கூடாது.

கணவனை இழந்த பெண்ணிடம், துக்கம் விசாரிக்கச் செல்லும் சுமங்கலிகள், சேலை முந்தானையில் மஞ்சள் கிழங்கை முடிந்து வைத்துச் செல்கின்றனர். இப்படி எடுத்துச் செல்லவில்லையெனில், துக்கம் கேட்பவரது வீட்டிலும் இதேபோல் அசம்பாவிதம் நிகழும் என்கின்றனரே...
- 

துக்கம் விசாரித்து விட்டு வரும் சுமங்கலிகள், நீராடிய பிறகே தங்களது வீட்டுக்குள் நுழைய வேண்டும். குளிப்பதற்கு மஞ்சள் தேவை. வீட்டுக்குள் சென்று மஞ்சள் எடுக்க முடியாது என்பதால், துக்கம் கேட்கச் செல்லும் போதே மஞ்சளை எடுத்துச் செல்வது நடைமுறையில் உண்டு. மற்றபடி... மஞ்சள் கிழங்கு மடியில் இல்லையெனில் அசம்பாவிதம் நிகழும் என்பதெல்லாம் தவறு.
கணவனை இழந்து தவிக்கும் பெண்ணைப் பார்க்கும் போது,'இப்படியரு துயரம் எனக்கு நேரக்கூடாது' என்று துக்கம் விசாரிக்க வந்த பெண்ணுக்குத் தோன்றலாம். இந்த சிந்தனைக்கு மருந்தாக சுமங்கலியின் அடையாளமான மஞ்சள் கிழங்கைக் கையில் வைத்திருக்கச் சொல்கின்றனர்.
அசம்பாவிதம் என்பது, நமது கர்ம வினையால் மட்டுமே நேரும். பொருந்தாதது போல் தோன்றினாலும் மஞ்சள் கிழங்கை மடியில் வைத்துக் கொண்டு துக்கம் கேட்கச் செல்வதில் தவறு இல்லையே!


செவ்வாய், வெள்ளிகளில் விளக்கு பூஜை செய்பவள் நான். சமீபகாலமாகக் குடும்பப் பிரச்னைகளை நினைத்து அழுதபடி பூஜிக்கிறேன். இதனால் பலன் உண்டா?

கவலையில் ஆழ்ந்திருக்கும்போது எந்தச் செயலையும் சிறப்புற செய்ய முடியாது. அழுது கொண்டே பூஜிக்கும் போது, மனம் பூஜையில் லயிக்காது.
பிரச்னைகள் இல்லாமல் வாழ்பவர் யார் சொல்லப் போனால், வாழ்க்கையின் சுவாரஸ்யமே பிரச்னைகள்தான்!
சீடன் ஒருவன் தன் குருவை அணுகி,"தங்கள் அருளால் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றிருப்பினும், ஒன்று மட்டும் எனக்குப் புரிபடவே இல்லை. அதாவது, வாழ்க்கையில் பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன; அலைக்கழிக்கின்றன. அவற்றில் இருந்து மீள வழி தெரியவில்லை'' என்றான்.
இதைக் கேட்ட குரு,"நாம் பிறக்கும்போதே பிரச்னை களும் நம்முடன் பிறந்து விடுகின்றன. சிறு வயதில் உனது பிரச்னையை பெற்றோர் பார்த்துக் கொள்வார்கள். பருவ வயதில், பிரச்னைகளை நாமே எதிர்கொண்டு வெல்வோம். ஆனால், ஒரு பிரச்னையின் முடிவு மற்றொரு பிரச்னையின் துவக்கம்! பிரச்னைகளைக் களைய களைய ஒன்றன் பின் ஒன்றாய்... புதிது புதிதாக பிரச்னைகள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஒருவன் இறக்கும் வரை பிரச்னைகளும் இருக்கும்! அவற்றில் இருந்து விடுபட இரண்டு வழிகள் உண்டு.
பிரச்னைகளை லேசாக எடுத்துக் கொண்டு அவற்றை அலட்சியப்படுத்துவது முதல் வழி. அடுத்து... பிரச்னையைத் தலை தூக்க விடாமல் அழித்துவிட வேண்டும். இதற்கு உறுதியான மனம் அவசியம். தர்மசாஸ்திரத்தை நடை முறைப்படுத்தினால், மனம் உறுதி பெறும்.
இன்னொரு விஷயம்... கடமையை எப்படி நிறைவேற்றலாம் என்பது குறித்துக் கவலைப் படலாம். ஆனால், அதன் பலன் குறித்துக் கவலைப்படக் கூடாது. பலனை எதிர்பார்த்தால், பிரச்னைகளை சந்திக்கும் வலு இருக்காது; துயரத் தில் துவண்டு விடுவோம். எனவே, எது வந்தாலும் ஏற்றுக் கொள்!'' என்று அறிவுரை கூறினார்.
இது உங்களுக்கும் பொருந்தும்!


அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் பிறையை வழிபடுபவள் நான். அதற்கான பூஜை மற்றும் விரத முறைகள் குறித்து விளக்குங்களேன்
மூன்றாம் பிறையை தரிசிப்பதுதான் வழிபாடு. பூஜை, விரதம் என்று தரிசனத்தை சுமையாக்கிக் கொள்ளாதீர்கள். கோயில்களில் நடைபெறும் விஸ்வரூப தரிசனத்துக்கு இணையானது இது! அமாவாசையில் சூரியனுடன் ஒன்றி
கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த சந்திரன், கண்ணுக்குப் புலப்படும் அளவுக்கு வளர்ந்து தரும் இந்த தரிசனம், மிகுந்த புண்ணியம் அளிக்கும்.
குறிப்பாக... வளர்பிறை சந்திரனை தரிசிக்கும் வேளையில்,'உன்னைப் போல் நாங்களும் வளர்ச்சியை அடைய வேண்டும்' என்ற எண்ணமும் வளர்ச்சி பெறுவோம் எனும் நம்பிக்கையும் மனதில் தோன்றும். தரிசித்து மகிழுங்கள்!
'சஞ்சீவி மலையை ஒரு கையால் தூக்கினார் அனுமன்' என்கிறது இதிகாசம். அவர், அவ்வளவு பலசாலியா
ஒற்றை விரலால் கோவர்த்தனகிரியைத் தூக்கினார் ஸ்ரீகிருஷ்ணர். இமயத்தைத் தன் முதுகில் சுமந்தான் ராவணன். தன் திருவடிகளால் உலகையே அளந்தார் வாமனன். ஓர் அம்பினால், ஏழு மரங்களைத் துளைத்தார் ஸ்ரீராமன். காளியனை அடக்கினான் வாயுவின் மைந்தன் அனுமன்!
இந்திரன், பால அனுமனைத் தாக்கியதால் உலகையே ஸ்தம்பிக்க வைத்தான் வாயு. அதிர்ந்து போன தேவர்கள், வாயு பகவானை சமாதானப்படுத்தி, அவன் மகனான அனுமனுக்கு ஏகத் துக்கும் வரங்கள் வழங்கி, மிகுந்த பலசாலியாக்கினர். இப்படியிருக்க... அனுமன், ஒரு கரத்தால் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கியதில் ஆச்சரியம் இல்லை. அந்த மலையைத் தூக்க ஒற்றை விரல் போதும் அவருக்கு!
புத்தி நல்லபடி செயல்பட ஸ்ரீசரஸ்வதிதேவி; புகழ் பெற- அம்பாள்; தைரியம் பெற- ஸ்ரீதத்தாத்ரேயர்; பயம் நீங்க- அபயங்கரன் (ஈசன்); உடல் நலத்துடன் வாழ- தன்வந்திரி; ஜாட்யம் (சுணக்கம் சோம்பல்) விலக- ஸ்ரீஹயக்ரீவர்; செல்வாக்கு பெற- முருகப் பெருமான்; உடல் வலிமையைத் தக்க வைக்க இந்திரன் முதலான தேவர்களை வழிபட வேண்டும். இப்படி, பல தெய்வங்களிடம் பெற வேண்டிய திறமைகள் மொத்தத்தையும் அனுமனை வழிபட்டு அவரிடம் பெற்று விடலாம். நம் நினைவில் அவர் தோன்றினாலே... அத்தனை தேவைகளும் நமக்கு வந்துவிடும்!

பிள்ளையாருக்கு மூஞ்சுறு, முருகனுக்கு மயில், திருமாலுக்கு கருடன் என்று வாகனங்கள் உள்ளன. இதுபோல், பிரம்மன் மற்றும் சிவபெருமானுக்கு வாகனங்கள் உண்டா மூஞ்சுறுவால் பிள்ளையாரை சுமக்க முடியுமா இதில் உள்ள இறை தத்துவம் என்ன
வேதம் அறிமுகம் செய்த விலங்குகளும் பறவைகளும் இறையுருவங்களுக்கு வாகனமாக விளங்குகின்றன.

ஸ்ரீவிநாயகருக்கு மூஞ்சுறு (ஆகுஸ்தெ ருத்ரபசு:); முருகப் பெருமானுக்கு மயில் (ஸெளரீ பலா கர்ச்யோ மயூர:...); திருமாலுக்கு கருடன் (ஸுபர்ணோஸி கருத்மான்); பிரம்மனுக்கு அன்னம் (ஸுபர்ண பார்ஜன்யோ
ஹம்ஸோ), சிவபெருமானுக்கு காளைமாடு (உன்னதரிஷபோ...) என இறை வாகனங்கள் அமைந்துள்ளன.
ஸத்வம், ரஜோ, தமோ ஆகிய மூன்று இயல்புகளும் இந்த இறை வாகனங்களில் தென்படும்.
மூஞ்சுறு, பொருட்களை அழித்து குப்பையாக மாற்றும் இயல்புடையது. தண்ணீர் கலந்த பாலைப் பிரித்தெடுக்கும் பகுத்தறிவு அன்னப் பறவைக்கு உண்டு.
விஷக் கிருமிகளை அழித்து, சுற்றுச்சூழலை சுத்தமாக்கும் திறன் மயிலுக்குஉண்டு.
கருடன், தொலைவில் இருக் கும்எதிரியையும் அடையாளம் கண்டு அழிக்கும் வல்லமைபெற்றது. கழிவுப் பொருளாக நாம்ஒதுக்கும் வைக்கோலை உண்டு, பொறுமையுடன் நமக்காக பாரத்தை சுமப்பது காளைமாடு.
இப்படி... வாழ்க்கைக்குத் தேவையான நற்பண்புகளை நமக்குச் சுட்டிக் காட்டுபவையாகத் திகழ்கின்றன கடவுளரின் வாகனங்கள்!
இறையுருவத்தின் சாந்நித்யம், இறை வாகனங் களுக்கு பலம் அளிக்கிறது.'உருவில் சிறிய சுண்டெலி மலையையே குடைந்து விடும்' என்பார் கள். இது போல் இறை வாகனங்கள் அனைத்துக்கும் தனிப் பெருமை உண்டு.
தவிர, இறைவனுடன் இணையும்போது துரும்பும் அம்பாக மாறி விடும்!

'வீட்டில் பஞ்சாங்கம் இருக்கக் கூடாது' என்று ஸ்தபதி ஒருவர் கூறியதாக என் நண்பர் தெரிவித்தார். இது சரியா

வீட்டில் டி.வி. இருக்கக் கூடாது; ஏ.சி. அறையில் தூங்கக் கூடாது என்று எவரேனும் சொன்னால், அதை காது கொடுத்துக் கேட்க மாட்டோம்.
ஆனால், பஞ்சாங்கத்தைத் தவிர்க்க தருணம் பார்த்து கொண்டிருக்கும்போது, உங்களுக்கு நண்பனும்... அவருக்கு ஸ்தபதியும் கிடைத்து விட்டனர். உடனே உங்களுக்கு சந்தேகம் எழுந்து விட்டது. முதலில் தெளிவாக சிந்திக்கப் பழகுங்கள்!
_
ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருமணம் ஆனவரா? ஆந்திர மாநிலம் சுருட்டப் பள்ளியில், மனைவி சமேத ஸ்ரீதட்சிணா மூர்த்தி அருள்பாலிப்பதாகப் படித்தேன். அவர் மனைவியின் பெயர் என்ன?
- ஒரு வாசகர்
மௌனமாக, தெற்கு நோக்கி இருப்பவர் ஸ்ரீதட்சிணா மூர்த்தி. இவருக்குள்ளே ஒளிந்திருக்கும் தாயுருவம், வெளியே வந்து இவரின் தேவியாக காட்சி தருவதாக எண்ணிய பக்தனின் மனம், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை திருமணம் ஆனவராக மாற்றியது.
பிள்ளையாருக்கு சித்தி-புத்தி என்று இரு மனைவிகளைச் சேர்த்து வைத்தது புராணம். நல்ல புத்தியையும் நம் எண்ணத்தை நிறைவேற்றும் ஸித்தியையும் தரும் சக்திகள் ஸ்ரீவிநாயகரிடம் உறைந்திருக் கின்றன. இந்த சக்திகளை இறைவனின் தேவியராகவே கருதுகிறான் பக்தன்.
ருக்மிணி- சத்யபாமாவுடன் இணைந்த கோபால கிருஷ்ணன், நித்ய பிரமச்சாரியாக திகழ்கிறார். தினமும் உண்டு களிக்கும் துர்வாசர், நித்ய உபவாசியாக திகழ்கிறார்!
நாம் குடும்பத்துடன் வாழ்ப வர்கள். எனவே, நாம் வணங்கும் தெய்வங்களையும் குடும்பஸ்தர்க ளாகப் பார்ப்பதில் ஆனந்தம் கொள்கிறோம். சும்மா இருக்கும் சிவத்தை, சோமாஸ்கந்த பரமேஸ்வரராகப் பார்க்கிறோம்.
அதாவது, நம்மோடும் நமது இயல்புகளு டனும் இறை திருவுருவங்களை பொருத்திப் பார்க்கிறோம். நமக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ, அது இறைவனுக்கும் மகிழ்ச்சி தரும் என்று எண்ணுகிறோம்.
ஆண்மையும் பெண்மையும் அரச மரத்தில் உறைந்திருக்கிறது. ஆனால், கணவன்-
மனைவி உறவு மரங்களுக்கு இல்லை. இருப்பினும் வேப்பமரத்தை அரச மரத்தின் மனைவியாக்கினோம். இந்த விளையாட்டை செய்வது பக்தர்களே!
பேரறிவில் சிற்றறிவின் நடைமுறைகள் பொருந்தாது. எனினும், பேரறிவை எட்டுவதற்கு இந்தக் கற்பனைகள் பயன்படும்.
சிவபெருமானின் அம்சம் ஸ்ரீதட்சிணா மூர்த்தி. எனில், இவரின் மனைவி சாட்சாத் அந்த அம்பாள்தானே!

Comments

  1. புதுவீடு வாங்கி உள்ளோம். இன்னும் கிரகப்பிரவேசம் செய்யவில்லை. அதற்குள் ஆனி மாதம் வந்துவிட்டது. தற்போதுள்ள வாடகை வீட்டு உரிமையாளர் ஒரு மாதத்திற்கு வீடு வேண்டும் என்கிறார். ஆனி மாதத்தில் புது வீட்டில் பால் காய்த்துவிட்டு செல்லலாமா? பிறகு பழைய வீட்டிற்கு வந்து பிறகு நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து கிரகப்பிரவேசம் செய்யல்லாமா? ஒரே குழப்பமாக இருக்கிறது. நல்ல ஆலோசனை வழங்கவும்.

    ReplyDelete

Post a Comment