சித்ரா பௌர்ணமி வழிபாடு

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாள் சித்ரா பௌர்ணமி! இந்த தினத்தில், திருக்குற்றால மலையில் உற்பத்தியாகும் சித்திரா நதியில் நீராடினால் கோடி புண்ணியம் கிடைக்குமாம். தவிர, சித்ரா பௌர்ணமியன்று
சித்திரகுப்தம் மஹா ப்ராக்ஞம் லேகனீ
பத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம்
ஸர்வ தேஹினாம்
-எனும் ஸ்லோகத்தை கூறி, சித்ரகுப்தனை வழிபட நமது பாவக் கணக்குகள் குறையும்; புண்ணியம் பெருகும்.
தவிர, இந்தப் புனித நாளில் ஏழை-எளியோருக்கு உதவுவதாலும் அன்னதானம் அளிப்பதாலும், அன்று நாம் கடைப்பிடிக்கும் சித்ரா பௌர்ணமி விரதத்தாலும் தேவர்கள் மகிழ்ந்து நமக்கு நற்பலன்களைத் தருவார்களாம்!
வரதரை பூஜிக்கும் பிரம்மன்!

காஞ்சி ஸ்ரீவரதராஜர் கோயிலில், சித்ரா பௌர்ணமி யன்று நள்ளிரவில் பிரம்மன் வந்து வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் இரவு பூஜையின்போது, பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் பட்டாச்சார்யர்கள் இதன்பின் கருவறையை விட்டு உடனடியாக வெளியேறி விடுவார் களாம். ஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு கருவறைக்குள் சென்றால், பிரசாதத்தில் நறுமணம் கமழுமாம்!


பாலாற்றில் இறங்கும் வரதர்!
அந்நிய படையெடுப்பின் போது பாதுகாப்புக் கருதி... காஞ்சி ஸ்ரீவரதராஜரின் உற்ஸவர் விக்கிரகம், காஞ்சி - வந்தவாசி சாலையில், பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாம்.
சுமார் ஒரு வருட காலம்... காஞ்சி வரதருக் கான திருமஞ்சனம், உற்ஸவம் ஆகியவை செவிலிமேடு தலத்திலேயே நடை
பெற்றதாம். இதை நினைவு கூரும் விதம்... சித்ரா பௌர்ணமி விழாவின்போது பாலாற்றில் இறங்கும் வரதர், திரும்பும் வழியில் செவிலிமேடு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்துக்கும் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவாராம்.


மாணிக்கக் கல் கிரீடம்!
மதுரை சித்திரைத் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த விழாவின்போது ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கு, 'வாசுவாலை கிரீடம்' அணிவிப்பது வழக்கம். 1.577 கி.கி எடை கொண்ட இந்த கிரீடத்தில் பெரிய மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

மேலும், முத்துகள்- 439; ரத்தினங்கள் -247; மரகத கற்கள்- 39: பவளம்- 300; பச்சை வண்ண வைரக் கற்கள்- 27; நீலக் கற்கள்- 6; கோமேதகம்-2 ஆகியவற்றுடனும் திகழும் இந்த கிரீடம் முற்கால பாண்டிய மன்னர்களால் வழங்கப்பட்டதாம்!
செல்வம் தரும் சித்ராதேவி!
குபேரனின் துணைவி சித்ராதேவி! மனிதர்களுக்கு பாவ-புண்ணியங்கள் மற்றும் முன்வினை கர்மாக்களுக்குத் தக்கபடி, செல்வங்களைப் பிரித்தளிக்கும் குபேரனிடம்... எவருக்கு எவ்வளவு செல்வம் தரலாம் என்று பரிந்துரைப்பது இவளே! சித்ரா பௌர்ணமி நாளில், நெய் தீபமேற்றி இந்த தேவியை வழிபட, சோம்பல் நீங்கும்; சுறுசுறுப்பு ஏற்படும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
வலம் வந்தால் பலன்!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் மலை மீது அமைந்துள்ளது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஆலயம். இங்கு ஆதிகேசவ பெருமாளும் அருள்பாலிக்கிறார். புராணங்களும் ஆன்மிக ஆன்றோர்களும் லிங்கமாகப் போற்றும் திருச்செங்கோட்டு மலையை, சித்ரா பௌர்ணமியன்று வலம் வந்தால், கயிலாயம் மற்றும் வைகுண்டத்தை வலம் வந்த பலன் கிடைக்குமாம்!

கணக்கு பார்க்கும் கருப்பண்ணசாமி!
மதுரையில், சித்ரா பௌர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாகக் கொண்டாடப் படும். இதற்காகக் கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்படும் போது, அவரின் ஆபரணங்களை கோயிலின் காவல் தெய்வ மான பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியின் முன்னே வைத்து என்னென்ன நகைகள் உள்ளன என்பதைப் படித்துக் காட்டுவர். இதையடுத்து ஊர்வலமாகச் சென்று வைகையில் எழுந்தருளும் கள்ளழகர், பிறகு கோயிலுக்குத் திரும்பியதும்... மீண்டும் அவரது ஆபரணங்களைக் கருப்பண்ணசாமிக்கு முன் வைத்துச் சரிபார்ப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

ஆயுள் விருத்தி ஹோமம்!
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ளது மாணிக்கவாசகர் கோயில். இங்கு, சிவனார் சந்நிதிக்கு முன் உள்ள தனிச் சந்நிதியில்... வலக் கரத்தில் எழுத்தாணி, இடக் கரத்தில் ஏடு ஆகியவற்றுடன் தியான நிலையில் காட்சி தருகிறார் சித்ரகுப்தர்.
சித்ரா பௌர்ணமி நாளில், சித்ரகுப்தரை தரிசித்து வணங் கினால், நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்! மேலும் இந்த நாளில், ஆயுள் விருத்தி மற்றும் சஷ்டியப்த பூர்த்திக்கான ஹோமங்களும் சித்ரகுப்தரது சந்நிதிக்கு முன்னே நடைபெறுகின்றன.
இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு... மற்ற சிவாலயங்களில் அமர்ந்த நிலையில் தரிசனம் தரும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் இங்கு நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.

Comments