வாயிலார் நாயனார்

இறைவனையே நினைந்து தியானத்தில் ஒருமுகப் பட்டவராக, நீண்ட செவிகளுடன் இவர் காட்சி தருகிறார். அறுபத்துமூவர் விழாவுக்குப் பிரசித்தி பெற்ற ஊர் மயிலாப்பூர் என்பது தெரியும்தானே? வாயிலார் நாயனார், அறுபத்துமூன்று அடியார்களில் ஒருவர். என்ன செய்தார்?
இவர், தொண்டை நாட்டில் திருமயிலையில் தோன்றி னார். மௌன விரதம் பூண்டு இறைவனை வழிபட்டார். எனவே, 'வாயிலார்' எனப்பட்டார். பரம்பொருளை என்றும் எப்போதும் மறக்காமல் தியானித்தார்; தன் மனதுக்குள்ளேயே கோயில் கட்டினார். வாயிலார், இறைவனை மறக்காமல் மனதிலேயே வைத்ததால், இறைவன் உறையும் இடமே கோயிலானது. 'மறவாமையால் அமைத்த மனக் கோயில்' என்று இதைச் சேக்கிழார் விவரித்தார்.

சரி. அந்தக் கோயிலில் என்ன நடந்தது? கோயிலில் குடியிருக்கும் கருணை வள்ளலுக்கு, உணர்வு விளக்கை ஏற்றினார்; ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டினார்; அன்பு என்பதையே நைவேத்தியம் இட்டார்; அக மலர் (இதய கமலம்) கொண்டு அர்ச்சனை செய்தார். இவ்வாறே இறைவனிடம் இனிமை கொண்டு, சித்தத்தை சிவன் பால் வைத்து, இறையடி சேர்ந்தார்.
அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும்
நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே
திகழ நெடுநாள்செய்து சிவபெருமான் அடிநீழல் கீழ்ப்
புகல் அமைத்துத் தொழுது இருந்தார்
புண்ணியமெய்த் தொண்டனார்

_ என்று பெரிய புராணத்தில் சேக்கிழாரால், இவரது வரலாறு விளக்கப்படுகிறது.
வாயால் பேசாது, மனதுக்குள்ளேயே ஆலயம் அமைத்த அந்த வள்ளலை அடிபணிந்து வணங்குகிறோம். அறுபத்து மூவரில் பூசலார் (திருநின்றவூர்க்காரர்) நாயனார், மனக் கோயில் கட்டியவர். அதேபோல் மனக் கோயில் கட்டிய மற்றொருவர் வாயிலார் நாயனார்! வாயிலாரை வழிபட்டு வெளியே வருகிறோம்.

துவஜாரோஹண மண்டபத்துக்கும் தெற்காக, கோயிலின் தென்மேற்கு மூலையில், நூலகம். மேற்குத் திருச்சுற்றில் திரும்பினால், அலுவலகப் பகுதி. அடுத்து, சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிராக, அருணகிரிநாதர் சந்நிதி.
அருணகிரிநாதர் சந்நிதியிலிருந்து பார்த்தால், சிங்கார வேலர் சந்நிதி அற்புதமாகத் தெரிகிறது. இங்கிருந்து நோக்கியபடிதான் அருணகிரிநாதர், இந்த முருகனை விதவிதமாகப் பாடினார் போலும்! என்னவெல்லாம் சொல்கிறார்!
துளபமணி மார்ப சக்ரதரன் அரிமுராரி சர்ப்ப
துயிலதரன் ஆதரித்த மருகோனே
சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவும் உக்ர
துரகத கலாபப் பச்சை மயில்வீரா
அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீளழைப்ப
அருள்பரவு பாடல் சொற்ற குமரேசா
அருவரையை நீறெழுப்பி நிருதர்தமை வேரறுத்து
அமரர் பதி வாழ வைத்த பெருமாளே

அருணகிரியார், முருகனை மட்டுமா பாடுகிறார்? எத்தனை சொல்கிறார் பாருங்கள். துளசி மாலை அணிந்தவனும் சக்கரத்தைக் கொண்டவனும், முராரி ஆனவனும் பாம்பின் மீது துயில்வோனுமான திருமால் அன்பு செலுத்தும் முருகா! வேத வேள்விகள் நிரம்பிய மயிலையில், வேகமும் தோகையும் மிக்க மயிலின் மீதேறி
வரும் வீரா! குபேரனுடைய அழகாபுரி அளவு செல்வம் படைத்த வணிகர் குலத்தில் தோன்றிய பெண்ணின் உயிரை மீட்க அருள்மிக்க பாடலைக் கூறிய குமரா!'
கடைசியில் சொல்லப்படும் கதை, நெஞ்சத்தைத் தொடுகிறதே- அது என்ன சங்கதி?
மயிலாப்பூருக்கே உரித்தான பெருமைகளில் ஒன்றான 'பூம்பாவை கதை'தான் இது!
7-ஆம் நூற்றாண்டில், மயிலாப்பூரில் சிவநேசச் செட்டியார் என்பவர் வாழ்ந்தார். பெருஞ் செல்வந்தரான இவரின் மகள் பூம்பாவை. சைவம் தழைக்க அவதரித்த செம்மலான திருஞானசம்பந்தரைப் பற்றிக் கேள்விப் பட்ட சிவநேசர், தன் மகளை ஞானசம்பந்தருக்கு மணம் செய்து கொடுப்பது என்று எண்ணம் கொண்டு, அதன்வழி அவளை வளர்த்தார்.
என்னதான் மனித எண்ணங்கள் திட்டமிட்டாலும், விதி சும்மா இருக்குமா? அது விளையாடியது. விளைவு?
பாம்பு தீண்ட அந்தப் பெண் இறந்து போனாள். மகளது மரணத்தால் மனம் உடைந்த சிவநேசர், 'என்ன இருந்தாலும், இவள் ஞானசம்பந்தருக்கென்று நிச்சயிக்கப்பட்டவள்; எனவே அவருடைய உரிமை' என்று நினைத்து, அவளின் எலும்புகளை ஒரு கலசத்தில் இட்டு வைத்திருந்தார். என்றாவது ஒரு நாள் ஞானசம்பந்தரிடம் ஒப்படைக்கலாம் என்று சிந்தித்தாரோ என்னவோ!
அத்தகையதொரு நாளும் அமைந்தது.வடநாட்டுத் தலங்களை வணங்கி விட்டு, தொண்டை மண்டலப் பகுதியின் திருத்தலங்களை வணங்கி, திருவொற்றியூரில் தங்கியிருந்தார் ஞானசம்பந்தர். இந்தத் தகவல், சிவநேசரை அடைந்தது.
சண்பை மன்னவர் திருவொற்றியூர் நகர் சார்ந்துபண்பு பெற்ற நல் தொண்டர்களுடன் பணிந்திருந்த நண்புமிக்க நல் வார்த்தை அந்நல்பதி உள்ளோர்
வண் புகழ்பெருவணிகர்க்கு வந்து உரை செய்தார் ஞானசம்பந்தரைப் பற்றிய தகவலைத் தந்தவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்த சிவநேசர், அவரை அழைத்து வருவதற்காக, ஒற்றியூரிலிருந்து மயிலை வரை அழகிய நடைப் பந்தல் அமைத்தார். அதன்மீது அழகிய துணிகளால் விதானம் போன்று கட்டினார். பாக்கு, வாழை மரங்களால் அலங்காரம் செய்யச் செய்தார். மகர தோரணங்களும் மாலைகளும் கட்டச் செய்தார். ஊர்ப் பெரியவர்களுடன் சேர்ந்து, ஞானசம்பந்தரை அழைத்து வரப் புறப்பட்டார்.
அதே வேளையில், ஞானசம்பந்தரும் தொண்டர் புடை சூழ மயிலை நோக்கிப் புறப்பட்டார்.
இரு சாராரும் எதிர் எதிர் சந்திக்க... ஞானசம்பந் தரைக் கண்ட சிவநேசர் அகமும் புறமும் மகிழ... தொண்டர்கள் வழியாக, சிவநேசரைப் பற்றி அறிந்து கொண்ட ஞானசம்பந்தர், மயிலையை அடைந்தார்.
காழி நாடரும் கதிர்மணிச் சிவிகை நின்று இழிந்து
சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்தருளி
வாழி மாதவர் வணிகர் செய்திறம் சொலக்கேட்டே
ஆழிசூழ் மயிலாபுரித் திருநகர் அணைந்தார்

மயிலைத் திருக்கபாலீஸ்வரம் அடைந்த ஞானசம்பந்தர், கோயிலை வலம் வந்து, உள் சென்று கபாலீஸ்வரம்
அமர்ந்த ஆதிப் பரமனை வழிபட்டார். பின்னர், திருக்கோயிலின் புறத்துக்குச் சென்றார். சிவநேசரை நோக்கினார். 'இறைவனிடத்தில் உணர்வு ஒடுங்கப் பெற்ற பெருமகனாரே! தங்கள் திருமகளாரின் எலும்புக் கலசத்தைக் கொணருங்கள்' என்று வேண்டினார்.
சிவநேசர், தன் மகளின் எலும்புகளை ஒரு கலசத்தில் இட்டு, அதனை தனது இல்லத்தில், கன்னிமாடத்தில் வைத்திருந்தார். தினந்தோறும், அதற்கு தூப- தீபமும் இட்டு வந்தார். இப்போது ஞானசம்பந்தர் கேட்க, அந்தக் கலசத்தைக் கொணர்ந்து, ஞானசம்பந்தர் முன்பு வைத்தார். ஜடாமுடிநாதரான சிவப்பரம்பொருளைத் தொழுத ஞானசம்பந்தர், 'மட்டிட்ட புன்னை அம்கானல் மடமயிலை' என்னும் பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.
இந்தப் பதிகத்தின் 10-வது பாடலான 'உரிஞ்சாய வாழ்க்கை' எனும் பாடலைப் பாடும்போது, குடத்துக்குள் பூம்பாவை உயிர்பெற்றாள். பன்னிரண்டு வயதுப் பெண்ணாக எழுந்து வந்தாள். உலகம் வியக்க, பார்த்தோரெல்லாம் புளகாங்கிதம் எய்த, கபாலீஸ்வரத்தில் அற்புதம் நிகழ்ந்தது.
எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் மகளைத் தழுவிய சிவநேசர், ஞானசம்பந்தரைப் பணிந்து போற்றினார். 'இவள் உங்களுக்காக வளர்க் கப்பட்டவள்; இவளை ஏற்றருளும்' என்று ஞான சம்பந்தரிடம் கையடை கொடுக்க யத்தனித்தார். திருஞானசம்பந்தர் சற்றே திரும்பினார்; சிவநேசரை நேசமுடன் பார்த்தார். ''இவள் தங்கள் மகள். பாம்பு தீண்டி இறந்து போனாள். பின்னர் இறைவன் அருளால், இவளை உயிர்ப்பிக்க இயன்றது. இப்போது, இவள் என் மகளைப் போன்றவள். எனவே தங்களது உரை தகாதது'' என்று கூறிவிட்டு, சிவநேசரும் பூம்பாவையும், பிறரும் கலங்கியும் மயங்கியும் நிற்க, அவர் திருக்கோயிலுக்குள் சென்று விட்டார்.
ஞானசம்பந்தர் மறுத்தபின் வேறு எவருக்கும் தனது மகளை மணமுடிக்க விரும்பாத சிவநேசர், திருக்கோயில் அருகிலேயே கன்னிமாடம் ஒன்று அமைத்து, அங்கேயே மகளை தங்கச் செய்தார்; அவளும் சிவத்தொண்டு புரிந்து வந்தாள்.
திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்தால் உயிர்பெற்றாள் பூம்பாவை என்பதை சற்றே மாற்றி, அவளை உயிர்ப் பிக்க முருகனே பாடியதாக அருணகிரியார் கூறுகிறார். முருகப் பெருமான், திருஞானசம்பந்தராக அவதரித்ததாக நம்பிக்கை ஒன்று உண்டு. இவரும் இறைவனாரின் செல்ல மகன், அவரும் அப்படியே! இத்தகைய நம்பிக்கையை முன் வைத்துக் கொண்டுதான், அருணகிரியார் இவ்வாறு பாடியிருக்க வேண்டும்.
அருணகிரியாரையும் சிங்காரவேலரையும் வணங்கி விட்டு, பிராகார வலத்தைத் தொடரலாமா? கோயிலின் மேற்குச் சுற்றிலல்லவா நிற்கிறோம்! இங்கிருந்தபடியே நிமிர்ந்தால், எதிரில் சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் முன்பாக உள்ள மண்டபப் பகுதி தெரிகிறது. மண்டபத்துக்குள் போகாமல், பிராகாரத்திலேயே தொடர்ந்தால், அடுத்ததாகக் கோயிலின் மேற்கு வாசல்; வாசலுக்கு எதிரில் கொடிமரம்; வாசலுக்கு அருகில் உயரமாக மணி மண்டபம்; மண்டபத்தில் அழகான மணி.
மேற்கு கோபுரம் அளவில் சிறியது. கோபுரத்தின் வெளிப்புறத்தில் ஒருபக்கம் விநாயகர், மறுபக்கம் முருகப் பெருமான். கபாலீஸ்வரர் திருச்சந்நிதி மேற்குப் பார்த்த சந்நிதி என்பதால், இந்தக் கோபுரம் வழியாகவே பலர் உள்ளே வருகின்றனர். இன்னொன்று... கோயிலின் திருக்குளம், கோயிலுக்கு மேற்காக இருப்பதால், குளத்தில் கால் கழுவி, கோயிலுக்குள் வருவதற்கும் இந்த வாசலே வசதி.
மேற்கு வாசலைத் தாண்டி நமதுவலத்தைத் தொடர்ந்தால், அடுத்து நாம் அடைவது அங்கம் பூம்பாவை சந்நிதி. இவள்தான் ஞான சம்பந்தரால் உயிர்ப்பிக்கப்பட்ட பூம்பாவை; கிழக்கு நோக்கி நிற்கிறாள். இவளுக்கு வலப் பக்கமாக திருஞானசம்பந்தரும் நிற்கிறார்.
மயிலைத் திருக்கோயிலில் நிறைய திருவிழாக்கள் நடப்பது நமக்குத் தெரியும். பூம்பாவைக்காகப் பதிகம் பாடிய ஞான சம்பந்தப் பெருமான், பற்பல விழாக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சீகாமரப் பண்ணில் அமைந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு விழாவைக் குறிப்பிட்டு, 'அத்தகைய விழாவைக் காணாமல் போவாயோ பூம்பாவை' என்றழைக்கிறார். அதுவும் முதல்
பாடலிலேயே அவர் குறிப்பிடும் விழா சிறப்போ சிறப்பு.

ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோயிலில், சமீபத்தில் அறுபத்துமூவர் (பங்குனித் திருவிழா) திருவுலா வைபவம் கோலாகலமாக நடந்தது. இந்தத் திருவிழாவின்போது தமிழ்நாடு பத்திரிகை விற்பனையாளர்கள் சங்கம் மயிலை பகுதி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, அன்னதானமும் சிறப்பாக நடந்தது.

'பல்வேறு சிவனடியார்களுக்கு அமுது செய்விக்கும் அழகைக் காணாமல் போவாயோ' என்று ஞானசம்பந்தர் வினவுவதே அழகு.
புரட்டாசி மாதம் பூரட்டாதி நாளில் பெருஞ்சோற்று விழா என்று தொடங்கி,
ஐப்பசியில் திருவோணத் திருநாளில் பல்லோரும் வழிபடும் விழா, கார்த்திகையில் பெண்கள் விளக்கீடு நடத்தும் தீபத் திருவிழா, மார்கழியில் ஆதிரைத் திருவிழா, தைப் பூசத்தில் எம்பெருமானுக்கு நெய்ச் சோறு படைக்கும் பெரு விழா, மாசியில் கடலாட்டு காணும்
தீர்த்தத் திருவிழா, பங்குனி உத்திரத் தில் மங்கல மந்திர ஒலிகள் நிரம்பிய விழா, சித்திரை அட்டமித் திருவிழா, வைகாசி ஊஞ்சல் விழா, ஆனிப் பவித்தோற்ஸவமான பெருஞ்சாந்திப் பெருவிழா என்று வரிசையாக இவற்றைக் குறிப்பிட்டு... இவை யாவும் காணாமல் எவ்வாறு பூம்பாவை போவாய் என்று சம்பந்தர் கேட்பதில் இருந்தே இந்த விழாக்களின் சிறப்புகளை உணரலாம்.
இந்தக் காலத்திலேயும், மயிலையின் மங்கல விழாக்களுக்குக் குறைவில்லை. அதுவும் அடியார் களுக்கான விழா என்றாலே மயிலைக்குத் தனி களை வந்து விடும். இப்போதும் மயிலாப்பூர் என் றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது, அறுபத்து மூவர் திருவிழாதான்! பங்குனி மாதம், பெருவிழா என்னும் பிரம்மோற்ஸவம். பத்து நாட்கள் நடை பெறும் விழாவில், நிறைவு நாள் பங்குனி உத்திரமாக அமையும். பிரம்மோற்ஸவத்தின் 8-ஆம் நாள் விழா வெகு சிறப்பானது. அன்று மதியம், சிவநேசருடன் குளக் கரைக்கு எழுந்தருளும் சம்பந்தர், இறைவனிடம் அனுமதி பெற்று, குளக்கரையில் 'மட்டிட்ட' பதிகம் பாடி, பூம்பாவையை உயிர்ப்பிக்கும் வைபவம் நடைபெறும். பின்னர் கபாலீஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடனும் அறுபத்துமூவருடனும் காட்சி கொடுப்பார். அன்று மாலை அறுபத்துமூவர் வீதி உலா வருவர். மயிலையின் அறுபத்துமூவர் விழாவைக் காண, ஆண்டு முழுவதும் திட்டமிட்டுக் காத்திருப்பவர்கள் உண்டு.
அடியார்களுக்குச் சிறப்பு செய்யும் இன்னும் சில விழாக்களும் இங்கே தவறாமல் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் சதய நாளில், நாவுக்கரசர்
கட்டமுது உற்ஸவம். திருப்பைஞ்ஞீலி எனும் திருத் தலத்துக்குப் போகும்போது, வழியில் நாவுக்கரசர் பசியால் வாடினார். பொதி சோறு கட்டிக் கொணர் பவராகக் காட்சி தந்து, இறைவனார் அவரது பசியைப் போக்கினார். இதை நினைவுகூரும் உற்ஸவமே,
பேசாத குழந்தையும் பேசும்!
தொண்டை மண்டலப் பகுதிகளில், இன்றளவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. சின்னக் குழந்தைகள், பேச வேண்டிய பருவத்தில் பேசாமல் இருந்தாலோ, சரியாகச் சொற்கள் வராமல் திக்கித் திணறினாலோ அவர்களுக்காக திருக்கபாலீஸ்வரத்தில் இருக்கும் வாயிலார் சந்நிதிக்கு வருவதாக நேர்ந்து கொண்டால், அந்தக் குழந்தைகள் பேசத் தொடங்குவார்களாம்!
அதன் பின் அவர்களைக் கோயிலுக்கு அழைத்து வருவது வழக்கம். சமீப காலங்களிலும் இந்த நம்பிக்கை நடைபெற்று வருவதை, இப்போது 40-45 வயதில் இருக்கும் சிலர், தங்களையே ஆதாரங்களாகக் காட்டி விளக்குகிறார்கள்!

கட்டமுது உற்சவம். வைகாசி மாதத்தில் திருஞான சம்பந்தர் திருவிழா. பத்து நாள் விழாவில் சம்பந்தரது
பிறப்பு, வளர்ப்பு, அவர் நிகழ்த்திய அற்புதங்கள், நிறைவாக அவரும், அவருடன் பலரும் ஜோதியில் கலத்தல் முதலான நிகழ்வுகள் நடத்தப் பெறுகின் றன. ஆடித் திங்கள் சுவாதி நன்னாளில்
சுந்தரர் உற்ஸவம். தம் கெழுதகை நண்பரான சேரமான் பெருமாள் நாயனாருடன் வெவ்வேறு வாகனங் களில் சுந்தரர் வீதியுலா வருவார்.
அங்கம் பூம்பாவையின் சந்நிதி முன்பல்லவா நிற்கிறோம்! கன்னி மாடத்தில் இருந்து சிவத்தொண்டு புரிந்த இந்தப் பெண்ணும், எந்த நாளில்... நல்லூர் பெருமணத்தில் ஞான சம்பந்தர் ஜோதியில் கலந்தாரோ, அதே நாளில் கபாலீஸ்வரருடன் ஐக்கியமானாளாம்.
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்
மலிவிழா வீதிமடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்

என்றெல்லாம் சம்பந்தப் பெருமான் பாடிய பாடல்கள், தேவாரத்தின் 2-ஆம் திருமுறையில் உள்ளன. நோய்கள் தீரவும் விஷக்கடி போன்ற துன்பங்கள் அகலவும், இந்தப் பதிகத்தைப் பாராய ணம் செய்வது நலம் தரும். இன்றளவும் எத்தனையோ பக்தர்கள், பூம்பாவை சந்நிதிக்கு அருகிலோ, அம்மன் மண்டபப் பகுதியிலோ அமர்ந்து இவ்வாறு செய் வதைக் காணலாம்.
(இன்னும் வரும்)
படங்கள்: வி. செந்தில்குமார்,

Comments