சத்தியம்

சத்தியத்தைவிட சிறந்தது எதுவும் இல்லை. நூறு கிணறுகளை விட, ஒரு குளம் உயர்ந்தது. நூறு குளங்களைவிட, ஒரு வேள்வி உன்னதமானது. நூறு வேள்விகளைவிட, ஒரு நல்ல மகன் மேலானவன். நூறு நல்ல பிள்ளைகளைவிட, சத்தியமே போற்றத் தக்கது. எல்லா வேதங்களையும் ஓதி, எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினாலும் அவற்றின் பயன், சத்தியத்தின் ஒரு பங்குக்கு இணையாகாது.
சத்தியத்துக்கு ஈடான புண்ணியமும் இல்லை; பொய்மைக்கு சமமான பாவமும் இல்லை' என்கிறது மகாபாரதம்.
உண்மை இல்லாத இடத்தில் உயர்ந்த அறம் இல்லை. பிற உயிர்களுக்குத் துன்பம் தரும் செயல் களில் சத்தியம் இருக்காது என்பதே தர்மத்தின் நுட்பம். பொய்களின் ஊர்வலத்தில் இருந்து விடுபட்டு, உண்மை தனியாகத்தான் விலகி நிற்கும். உண்மை தனியாக நின்றாலும், அது உண்மையாக இருக்கும் வரை, அதற்கு ஆயிரம் யானைகளின் பலம் இருக்கும். உண்மை முதலில் தோற்பது போல் தெரிந்தாலும் முடிவில் அதன் தோள்களில்தான் வெற்றி மாலை வந்து விழும்.
'உண்மை என்பது பின்தொடரப்படுவது அல்ல; கண்டறியப்படுவது! புத்தகங்களைப் புரட்டியோ, அனுபவங்களைத் திரட்டியோ உண்மையை அறிய முடியாது' என்கிறார் தத்துவ ஞானி ஜே.கிருஷ்ண மூர்த்தி. சத்தியம்தான் கடவுள்.
வாழ்க்கைப் பயணத்தில், பொய்யின் பாதையில் நடப்பவர்க்கு ஆயிரம் சுகங்கள் வந்து சேரலாம். ஆனால், அந்த சுகங்களின் நிழலாக அழிவு தொடர்வதை

எவரும் தடுக்க முடியாது அதர்மத்தால் அடையும் சுகம் ஆணவத்தை வளர்க்கும். ஆணவத்தின் விளைவு எவரிடத்தும் அச்சமற்றுப் போகும். அச்சமற்றவனிடம் நாணம் விடைபெற்றுக் கொள்ளும். நாணமற்றவன் எந்த இழிசெயலிலும் இறங்குவான். அவனது இழிசெயல்களால் இறுதியில் வாழ்க்கை நாசமுறும். உள்ளும் புறமும், உண்மையை இயல்பாகக் கொண்டவன் உத்தம நிலையை அடைவான். அவன் அடையும் சுகமே அழிவற்றது. அதனால்தான் நம் முன்னோர், 'சத்தியத்துக்கு ஒப்பான தவமில்லை' என்றனர். சத்தியமாக வாழ்பவனுக்கே சோதனைகள் வரும்; மனசாட்சி உள்ளவனுக்கே தர்மசங்கடங்கள் உண்டு. காந்தியின் வாழ்க்கை வரலாறுதான் சத்திய சோதனை. சத்திய சோதனையில் வென்றவனுக்கே, இறைவனின் திருவடிகளில் இருப்பிடம்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் வேத- உபநிடதங்களில் சத்தியம் பெரிதாகப் போற்றப்படுகிறது. 'சத்யம் வத' (உண்மையே பேசு) என்கிறது உபநிடதம். 'சத்யமேவ ஜயதே' (உண்மை மட்டுமே வெல்லும்) எனும் முண்டக உபநிடதத்தின் வேத வரிதான் இந்திய அரசின் இலச்சினையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் பொய்யுரைக்காமல் வாழ்வதை விட, அரிய தவம் இங்கு வேறில்லை.
சாந்தோக்ய உபநிடதத்தில் சம்பவம் ஒன்று!
கௌதம ரிஷியிடம் சிறுவன் ஒருவன் வேதம் பயில விரும்பினான். முனிவரிடம், தனது பெயர் சத்யகாமன் என்றும், தன் தாயின் பெயர் ஜாபாலா என்றும் தெரிவித்தான். முனிவர், "உன் தந்தையின் பெயரைக் கூறு" என்றார். "எனக்குத் தெரியாது" என்று சத்யகாமன் தயக்கமின்றிச் சொன்னதும் அங்கிருந்த சீடர்கள் அனைவரும் சிரித்தனர்.
"சிறுவனே, உன் அன்னையிடம் தந்தையின் பெயரைக் கேட்டறிந்து வா" என்றார் கௌதமர். சத்யகாமன் தன் தாயிடம் சென்று தந்தையின் பெயரைக் கேட்டான். "மகனே, இளமையில் நான் பலரைச் சந்தித்தவள். எவரால் உன்னைப் பெற்றேன் என்று உண்மையில் நானறியேன். உன் தந்தை யாரென்று என்னால்
சொல்ல இயலாது. நீ முனிவரிடம் சென்று 'ஜாபாலா பெற்றெடுத்த ஜாபாலன் நான்' என்று சொன்னால் போதும்" என்றாள் சத்ய காமனின் தாய்.
அவள் சொன்னதை அப்படியே ஒளிவுமறைவின்றி முனிவரிடம் ஒப்புவித்தான் சத்யகாமன். முனிவரின் விழிகள் வியப்பால் விரிந்தன. உண்மையைத் தெளிவாகவும் உறுதியாகவும் உரைத்த சிறுவனை அருகில் அழைத்தவர், "சத்தியத்திலிருந்து சிறிதும் விலகாத நீயே பிராமணன். உனக்கு, நான் உபநயனம்
செய்து சீடனாக ஏற்கிறேன். இனி, எனது ஆசிரமத்தில் தங்கி நீ வேதம் பயிலலாம்" என்றார் கௌதமர்.
'சத்தியவானுக்கு சாதி மற்றும் வருணபேதம் எதுவும் இல்லை' என்கிறது சாந்தோக்ய உபநிடதம். வேதம் ஓதுவதோ, சாத்திரங்களை அறிவதோ ஒருவனுக்கு உயர்வைத்
தராது. சத்தியம் சார்ந்த ஒழுக்க நெறிகளே ஒருவனை உயர்த்தும் என்பதற்கு வேறு சான்று எதுவும் தேவை இல்லை.
'மனிதர்கள், சத்தியத்திலிருந்து தவறுவதற்கும் பொய்களை விரும்பித் தழுவுவதற்கும் அவர் களது நெறி தவறிய ஆசைகளே காரணம். உணர்ச்சிகளுக்கு எளிதில் அடிமையானவர்கள்... செய்யத் தகுந்தது எது, செய்யத் தகாதது எது என்று பேதப்படுத்திப் பார்க்கும் பார்வையை இழந்துவிடுகின்றனர்' என்கிறார் சுவாமி தயானந்தர்.
'உண்மையற்ற நிலையிலிருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல் (ஓம் அஸதோ மா ஸத்கமய!)' என்று இறைவனிடம் விண்ணப்பிக்கிறது சுக்ல யசுர்வேத சம்ஹிதை. உண்மையான பேரின்பம் எதுவென புரியாத நாம், உண்மையைத் துறந்து பொய்யிடம் புகலிடம் தேடுகிறோம். உண்மையற்றதில் இருந்து உண்மையைப் பிரித்து உணரும்போதுதான், நமது அறியாமை நமக்குப் புலப்படும். 'சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டும் அல்ல. நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வது சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ, அதுவே சத்தியம். சத்தியத்தைச் சொல்; பிரிய மானதைச் சொல்; சத்தியத்தைப் பிரியமாகச் சொல்ல முடியவில்லை எனில், அப்படிப்பட்ட சத்தியத்தை சொல்லாதே. அதேபோல், கேட்கப் பிரியமானதாக இருந்தா லும் அசத்தியத்தைச் சொல்லாதே' என்று விளக்குகிறார் காஞ்சி முனிவர்.
'வினைப் பயன்களுக்கு உட்பட்டு மனிதன் பல்லாயிரம் பிறவிகளில் சுழல்கிறான். சுக்கல் சுக்கலாக நொறுங்கிப் போகும் உலகப் பொருள்களைப் போன்றே மனித உடலும் ஒரு நாள் ஒன்றுக்கும் உதவாமல் சிதைந்து புழுதி மண்ணில் புதைந்து விடுகிறது. உண்மை தவறியவர் அனைவரும்
போதம் (அறிவு) மிக்கவர்களால் புழுதி மண் போலவே புறந்தள்ளப்படுவர்' என்று தன் மகன் ராகுலனுக்குப் புகன்ற புத்தர், கதை ஒன்றும் சொன்னார்.
"பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல் லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கியிருந்தான் பாகன். ஒரு நாள்! போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க... அதுவரை வளைத்து வைத்திருந்த துதிக்கையை நீட்டியது யானை. இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை
எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்தக் களிறை வெளியேற்றினான். அரண்மனையில்
அரசனைச் சந்தித்த பாகன், 'அரசே, நம் யானை இன்று போர்க்களத்தில் தனது துதிக்கையை நீட்டி விட்டது. இனி அது போருக்குப் பயன்படாது' என்றான்.
_ ராகுலா! மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரை நன்மை அடைவர். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரைதான் யானைக்குப் பாதுகாப்பு. நாவைக் கட்டுப்படுத்திப் பொய் பேசுவதைத் தவிர்த்தால்தான் தீமையில் இருந்து மனிதருக்குப் பாதுகாப்பு" என்றார் புத்தர்.
மனதில் மாசு இருந்தால்தான் நாக்கு பொய் பேசும். மனதை அடக்காமல் நாக்கை அடக்குவதால் நன்மை இல்லை. ஆனால், மனது எளிதில் அடங்கி விடாது.
ஜென் குரு ஒருவரது ஆசிரமத்தில், அவரின் சீடன் ஒரு மூலையில் அமர்ந்தபடி, சலனமற்ற மனதை அடையும்
பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அவனைப் பார்க்க எவர் வந்தாலும் விழி திறந்து அவன் பார்க்கவில்லை. வெளியில் சென்றிருந்த குரு ஆசிரமத்துக்குள் நுழைந்ததும்
சீடன் தன்னைத் திரும்பிப் பார்ப்பதற்காக, அவன் அருகில் போய் நின்றார். நெடுநேரம் கடந்தும் சீடன் அவரைக் கண்டுகொள்ளவில்லை. ஒரு செங்கல்லைக் கொண்டு வந்து தரையில் தேய்க்கத் தொடங்கினார்.
இந்த சத்தத்தில் விழி திறந்த சீடன், குருவைப் பார்த்து,
"என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான். "செங்கல்லை கண்ணாடியாக்க முயலுகிறேன்" என்றார் குரு.
"செங்கல் எப்படி கண்ணாடியாகும்?" உங்களுக்குப் பைத்தியமா?" என்று எரிச்சலுடன் கத்தினான் சீடன்.
அவனது எரிச்சலைக் கண்டு நகைத்தவர், "செங்கல் கண் ணாடியாகாது எனில், உன் மனம் மட்டும் கண்ணாடியாகி விடுமா, என்ன?" என்றார் ஜென். மனதைக் கண்ணாடியாக்குவதுதான் கடும் முயற்சி. 'சத்' என்ற வேரிலிருந்தே 'சத்தியம்' என்ற வார்த்தை விளைந்தது. 'சத்' என்றால் 'இருத்தல்' என்று பொருள். சத்தியத்தைத் தவிர வேறெதுவும் நிலையானதன்று. சத்தியம் இருக்கும் இடத்தில்தான் களங்கமற்ற அறிவு பிறக்கும். சத்தியமும் நல்லறிவும் இணைந்தால், 'ஆனந்தம்' தானாக வந்து கலக்கும். அதனால்தான், வாழ்வின் பேருண்மையைப் புரிந்து கொண்டவர்கள் ஆண்டவனை, சத்-சித்-ஆனந்தம் என்று அடையாளம் கண்டனர்.
'சத்திய உபாசகனாக இருப்பதே மனித வாழ்வின் முக்கிய நோக்கம். சத்தியத்தைச் சுற்றியே மனிதனின் செயல்கள் நடைபெற வேண்டும். மனம், பேச்சு மற்றும் செயலில் உண்மை இருக்க வேண்டும். உண்மை இல்லாத இடத்தில் அமைதி இருப்பதில்லை. சத்திய சோதனை ஒரு பெரிய தவமாகும். சத்தியம் சார்ந்தவன் துன்பங்களைச் சந்திக்க நேரிடும். ஒருவேளை... உயிர்த்தியாகம் செய்யக் கூட நேரலாம். சத்திய வாழ்வில் சுயநலத்துக்குச் சிறிதளவும் இடம் இல்லை. உண்மையைக் கடைப்பிடித்தலே உயர்ந்த பக்தி. அதுதான் இறைவனிடம் சேர்க்கும் சரியான வழி' என்கிறார் மகாத்மா காந்தி.
பொய் பேசவும் பேசிய பொய்யை மறவாமல் நினைவில் நிறுத்துவதற்கும் அதிக திறமை அவசியம். ஆனால்,உண்மை பேசவும் சத்தியம் சார்ந்து வாழவும் திறமை தேவையே இல்லை. நேர்மையான வாழ்க்கை மீது உண்மையான நாட்டம் இருந்தால் போதும். பொய்யில் கிடைக்கும் சுகம், நரகத்தின் வாசற் கதவுகளை
நோக்கி நம்மை வழி நடத்தும். சத்தியத்தில் கிடைக்கும் இன்பம், மரணமில்லாப் பெருவாழ்வைக் கொண்டு சேர்க்கும்.

Comments