'மகான் ஷீரடி பாபா'

'காசீ சேத்ரம் நிவாஸச்ச ஜாஹ்னவீ சரணோதகம்
குரூர் விச்வேச்வர: ஸாக்சாத் தாரகம் ப்ரஹும- நிச்சய:'

_ ஸ்ரீகுரு கீதை
'குரு வசிக்கும் இடமே காசி சேத்திரம்; அவரின் பாத தீர்த்தமே கங்கை; குருவே தாரக பிரம்மமாகிய விஸ்வேச்வரர்' என்று குருவின் மகிமை குறித்து பார்வதியாளுக்கு ஸ்ரீபரமேஸ் வரன் உபதேசித்ததாகக் கூறுகிறது ஸ்ரீகுரு கீதை!
ரிபூரணமான இறைவனின் திருவருள், சில தருணங்களில் குருவின் வடிவில் நம்மை நாடி வரும். நம்மில் பலர் அதை உணர மாட்டோம்! மகாராஷ்டிர மாநிலம்- அகமத் மாவட்டத்தில், வருவாய்த் துறை அதிகாரியாக இருந்த நாநாவின் வாழ்விலும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது!

''அந்த பக்கிரியை, இதுவரை நான் பார்த்ததே கிடையாது. அப்படியிருக்க அவர் எப்படி என்னை அழைத்து வரச் சொல்வார். போ... இனியும் என்னை தொல்லை பண்ணாதே!''_ கிராம அதிகாரியான குல்கர்னியை கோபமாக கடிந்து கொண்டார் நாநா. அவர், 'பக்கிரி' என்று குறிப்பிட்டது ஷீர்டி சாயிபாபாவை!
குல்கர்னி, ஷீர்டியில் கிராம அதிகாரியாகப் பணிபுரிபவர். ஸ்ரீசாயி பக்தரான அவரிடம், 'உன் அதிகாரி நாநாவை அழைத்து வா' என்று கட்டளையிட்டிருந்தார் பாபா! குல்கர்னி இந்த விஷயத்தை நாநாவிடம்... அவரைச் சந்தித்த இரண்டு முறையும் தெரிவித்தார். நாநா மறுத்து விட்டார். கோபர்காவ் கிராமத்தில், ஜமாபந்தி வைபவம் ஒன்றில் நிகழ்ந்த இந்த சந்திப்பு... மூணாவது முறை!
வேத- சாஸ்திரங்களில் அதீத நம்பிக்கை யுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நாநாவை ஷீர்டிக்கு வர சம்மதிக்க வைப்பது கடினம்தான். அவரும் அவரின் தந்தை கோவிந்தராயரும் பாபாவை இஸ்லாமிய சாதுவாகவே கருதினர். எனினும், எப்படியாவது நாநாவை ஷீர்டிக்கு அழைத்துச் செல்வது என்பதில் குல்கர்னி உறுதியாக இருந்தார்.
''ஐயா... ஏற்கெனவே இரண்டு முறை தாங்கள் வர மறுத்த விவரத்தை பாபாவிடம் தெரிவித்தேன். ஆனால் அவரோ... 'எனக்கும் அவனுக்கும் பூர்வ ருணம் உள்ளது. காலில் கயிறு கட்டி இழுப்பது போல் அவனை இழுத்து விடுவேன். எனினும்.... இந்த முறை அழைத்துப் பார்; நிச்சயம் வருவான்' என்றார். ஆகவே ஒருமுறை அவரை சந்தியுங்களேன்!''_ பாபா தன்னிடம் கூறியதை நாநாவிடம் விளக்கினார் குல்கர்னி.
நாநா யோசிக்கலானார். ஷீர்டி நாதனின் புகழ், அந்த பிராந்தியம் முழுக்கப் பரவி வருவதை அவரும் அறிந்திருந்தார். 'பலரும் மகானாக வணங்கி வழிபடும் ஒருவர் என்னை அழைக்கிறார் என்றால்... எதற்காக? இரண்டு முறை மறுத்து விட்டோம். இனியும் மறுக்கக் கூடாது!' என்ற முடிவுக்கு வந்தவர் ஷீர்டிக்கு வர சம்மதித்தார்.
ஷீர்டியில்... ஸ்ரீசாயிபாபாவை சந்தித்த நாநா கேட்ட முதல் கேள்வி இதுதான்: ''இதுவரை உங்களை நான் பார்த்ததே இல்லை. அப்படியிருக்க... எதற்காக அழைத்தீர்கள்? என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?''
மெள்ள புன்னகைத்த பாபா, ''இந்த உலகில் லட்சக்கணக்கான பேர் இருந்தும் உன்னை அழைக்கக் காரணம்...
நான்கு ஜென்மங்களாக நாம் இருவரும் இணைந்து வாழ்ந்திருக்கிறோம். ஆனால், அது உனக்குத் தெரியாது. இப்போது உன்னை பார்க்கத் தோன்றியதால் வரச் சொன்னேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கு வா!'' என்றார்.
தரிசனம் முடிந்ததும் அகமத் நகருக்குத் திரும்பினார் நாநா. பாபாவை தரிசித்தது முதல் ஒரு வித பரவசம் தன்னைத் தொற்றிக் கொண்டதாக உணர்ந்தார் அவர்.
சில மாதங்கள் கழிந்தன. அகமத் மாவட்டம் முழுவதும் 'பிளேக்' நோய் பரவியது. அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தது அரசாங்கம். ஆனால், 'தடுப்பூசி போட்டால் ஏதேனும் தீங்கு நேருமோ' என்ற பயத்தில், ஊசி போட்டுக் கொள்ள எவரும் முன்வரவில்லை! பிளேக் நோயின் பாதிப்புகள் அதிகமாயின.
'என்ன செய்யலாம்?' என்று யோசித்த கலெக்டர்... 'அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால், மக்களும் பயமின்றி போட்டுக் கொள்வர்' என்று முடிவெடுத்தார். எனவே, நாநா உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி உத்தரவிட்டார்.
'தடுப்பூசி போடவில்லையெனில், உயிர்ச்சேதம் அதிகரிக்கும். மேலதிகாரிகள் கேள்வி கேட்பார்கள். அதே நேரம்... இந்த தடுப்பூசியால் பின்விளைவுகள் ஏற்படும் என்று பலரும் பயமுறுத்துகிறார்கள். டாக்டர்களோ, 'எந்த பயமும் வேண்டாம்' என்கிறார்கள். எதை நம்புவது?' _ குழம்பித் தவித்தார் நாநா! முடிவில், பாபாவிடமே தீர்வு கேட்க, ஷீர்டிக்குச் சென்றார்.
''தைரியமா தடுப்பூசியைக் குத்திக்கோ. மத்தவங்களுக்கும் தைரியம் ஊட்டு. வியாதியில் இருந்து மக்களைக் காப்பாற்று. நான் உன்னுடன் இருக்கும் வரை எதுக்கு பயப்படுறே?'' என்று ஆசிர்வதித்தார் ஸ்ரீசாயிபாபா!
மனதில் தெளிவுடன் ஊருக்குத் திரும்பிய நாநா, தடுப்பூசி போட்டுக் கொண்டார். இவரைத் தொடர்ந்து அதிகாரிகளும் பொதுமக்களும் பயமின்றி தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பிளேக் நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. நாநாவை கலெக்டர் உள்ளிட்டோர் பாராட்டினர். இதையடுத்து, நாநாவுக்குள்... பாபாவின் மீதான பற்றுதல், பக்தியாக பரிணமித்தது. தன் தந்தையின் சொல்லை வேதவாக்காகக் கருதிச் செயல்படுபவர் நாநா. இப்படியிருக்க... 'பெயரிலும் தோற்றத்திலும் இஸ்லாமியர் போல் திகழும் ஷீர்டி பாபாவை, தான் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பதை, தன் தந்தை அனுமதிப்பாரா?' என்ற கேள்வி அவருக்குள்!
ஒரு நாள்... 'தந்தை மறுப்பேதும் சொல்லக் கூடாது' என்று மனதுக்குள் சாயிபாபாவைப் பிரார்த்தித்தபடி தன் தந்தையிடம் சென்று, தான் பாபாவை குருவாக ஏற்றிருக்கும் விஷயத்தைக் கூறினார். அவரின் தந்தை, ''இந்துவோ... இஸ்லாமியரோ... அவரை குருவாக ஏற்றது நல்ல விஷயம்'' என்றார். நாநாவுக்கு ஆச்சரியம்! 'எல்லாம் சாயியின் அருள்' என்று மெய்சிலிர்த்தார்.
அருகில், சந்திரமலையில் அருள்பாலிக்கும் தேவியை தரிசிக்க வேண்டும் என்பது நாநாவின் ஆசை. ஆனால், நெடிதுயர்ந்த அந்த மலை மீது தனது கனத்த தேகத்தைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியுமா என்ற தயக்கம் அவருக்கு!
எனினும், தன் ஊழியர்களுடன் ஒரு நாள் மலையேற ஆரம்பித்தார். மலைப்பாதையில் மரங்களோ, தண்ணீரோ கிடையாது. நாநாவுக்குப் பாதி வழியிலேயே நா வறண்டது; தாகத்தால் தவித்தார். மேலும் நடக்கத் தெம்பு இல்லாமல், அருகிலிருந்த பாறையில் அமர்ந்தார். உடன் வந்தவர்களும் துவண்டு போனார்கள். இந்த தருணத்தில் பாபாவே துணை என்று கருதிய நாநா, மனம் உருக ஸ்ரீசாயிநாதனை பிரார்த்தித்தார்.
அப்போது, ஷீர்டி-துவாரகாமயியில் இருந்தார் பாபா. எதிரில் பக்தர்கள் கூட்டம். அவர்களிடையே பேசிக் கொண்டிருந்த பாபா திடீரென, ''நாநா தாகத்தால் தவிக்கிறான். குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டும்!'' என்று உரத்த குரலில் கூறினார். அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபாவின் நெருங்கிய பக்தர்களான மகல்சபதி மற்றும் சாமா ஆகிய இருவரும், 'எவருக்காக பாபா தண்ணீர் கேட்கிறார்?' என்று சிந்தித்தனர். இதுகுறித்து அவரிடமே கேட்கலாம் என்றால் தயக்கம் அவர்களைத் தடுத்தது. சாயிபாபாவோ... எதையோ முணுமுணுத்தபடியும் அருகில் இருந்த நெருப்புக் குண்டத்தில் சுள்ளிகளைப் போட்டுக் கொண்டே ஆகாயத்தை வெறித்தபடியும் இருந்தார்!
அதே நேரம்... மலைப் பாதையில்... பாறையில் சுருண்டு படுத்திருந்த நாநாவும் அவரின் சகாக்களும், பீல் இனத்தைச் சேர்ந்த மலைவாசி ஒருவன் மலையேறி வருவதைக் கண்டனர். அவனை அருகில் அழைத்த நாநா, ''தாகத்தால் தவிக்கிறோம் இங்கு தண்ணீர் கிடைக்குமா?'' என்று கேட்டார்.
இதைக் கேட்டுச் சிரித்த அந்த ஆசாமி, ''ஐயா! நீங்கள் அமர்ந்திருக்கும் பாறையை புரட்டுங்கள்; வேண்டும் அளவுக்குத் தண்ணீர் கிடைக்கும்!'' என்று கூறிவிட்டு நடையைக் கட்டினான். மறுகணம், நாநாவும் அவரின் ஊழியர்களும் அந்தப் பாறையைப் புரட்ட... ஊற்று நீர் பீரிட்டது. அனைவரும் தாகம் தீர அருந்தினர். பிறகு, மலையுச்சி சென்று தேவியை தரிசித்துத் திரும்பினர்.
நாட்கள் கழிந்தன! ஒரு நாள் ஷீர்டிக்குச் சென்ற நாநா, துவாரகாமயியில் பக்தர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த பாபாவை நமஸ்கரித்தார்.
உடனே, ''அடடா... நாநாவா? சந்திர மலை பயணம் எப்படி இருந்தது. வழியில் தாகத்தில் தவித்தபோது என்னை நினைத்தாயே? நானும் பாறைக்கு அடியில் ஊற்று நீரை வெளிப்படுத்தியதுடன், அந்த விஷயத்தை உனக்குத் தெரியப்படுத்தினேனே... என்ன புரியவில்லையா? பீலன் வடிவில் வந்தது யார்? யோசித்துப் பார்!'' என்றார் புன்னகையுடன்.
நாநா ஆடிப் போனார்! மலையில் நிகழ்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. 'பீலனாக வந்து, தாகம் தீர்த்தது ஸ்ரீசாயிபாபாவே' என்பதை உணர்ந்தவர், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீசாயிபாபாவை நமஸ்கரித்தார். அவரையும் அறியாமல் அவரின் வாய் முணுமுணுத்தது:

Comments