அன்னை சரஸ்வதியை ஆராதியுங்கள்... அபாரமான எதிர்காலம் பெறுங்கள்!

தேர்வு காலம் இது! மாணவர்கள், கசடற கற்றுத் தெளிந்தாலும்... தேர்வு பயம் மற்றும் பதட்டத்தால், படித்தது மறவாமல் இருக்கவும், கடினமான பாடங்கள் எளிதில் மனதில் பதியவும், சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறவும் இறையருள் அவசியம்!
இதோ, மாணவச் செல்வங்களுக்காக... கல்விக் கடவுளாம் ஸ்ரீகலைவாணியின் அருளைப் பெற்றுத் தரும் அற்புத ஸ்லோகங்களும், குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலை பாடல்களும்!
கல்விச் செல்வம் எளிதில் கைகூட...
'சகலகலாவல்லியே! சரஸ்வதிதேவியே! வேதத்தால் போற்றப்படுபவளே! பஞ்சபூதங்களிலும் பரவி இருப்பவள் நீ! அன்பர்களின் கண்ணிலும் கருத்திலும் நிறைந்து இருப்பவளும் நீயே! நான் எண்ணும்போது, கல்விச் செல்வம் எளிதாக எனக்குக் கை கூடும்படியாக அருள் புரிவாயாக!' என்று பொருள் தரும் இந்தப் பாடலைப் பாடி சரஸ்வதிதேவியை வழிபட்டால், கடின பாடங்களையும் எளிதில் கற்கும் வல்லமை கிடைக்கும்.
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த
நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலா வல்லியே

பொருள் உணர்ந்து படிக்க...
'சகலகலா வல்லியே! வெண்மையான அன்னத்தைப் போன்றவளே! கல்வியும் அதன் பொருளும், அந்தக் கல்வியால் உண்டாகும் பயனும் எனக்குக் கிடைக்க வேண்டும். உன் கடைக் கண்ணால் எனக்கு அருள் புரிவாய்!' என்று கலைமகளை துதிக்கும்

இந்தப் பாடல், கல்வியின் பயனைக் குறைவின்றி பெற்றுத் தருவது!
பாட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும் என் பால்
கூட்டும் படி நின் கடைக் கண்
நல்காய்! உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத் தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே!
சகலகலா வல்லியே!

தேர்வில் நன்கு தேர்ச்சி பெற...
'சகலகலா வல்லியே! அழியாத செல்வமான கல்விச் செல்வத்தை அருள்பவளே! நா வன்மையும், கலைகள் பலவற்றில் நன்கு தேர்ச்சியும், அறிந்த கல்வியைத் தெளிவுற வெளிப்படுத்தும் ஆற்றலும் எனக்கு அருள்வாய்!' என்று பிரார்த்திக்கும் இந்தப் பாடல், கலைகளில் தேர்ச்சி பெறுவதற்கு கலைவாணியின் அருளைப் பெற்றுத் தரும். தேர்வில் நன்கு தேர்ச்சி பெறவும் இந்தப் பாடலை படித்து வழிபட்டு பயன் பெறலாம்.
சொல் விற்பனமும் அவதானமும்
கவி சொல்ல வல்ல
நல் வித்தையும் தந்து அடிமை
கொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு
காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே!
சகல கலா வல்லியே!

சகலகலாவல்லி மாலைப் பாடல்களைப் போன்று கல்வி முதலான கலைகள் அனைத்தையும் அள்ளி வழங்கும் வேறு சில ஸ்லோகங்களும் உண்டு.
ஸ்ரீமூக பஞ்ச சதி
ச்யாமா காசன சந்த்ரிகா
த்ரிபுவனே புண்யாத்ம நாமானனே
ஸீமா சூன்ய கவித்வ வர்ஷ ஜனனீ
யா காபி காதம்பினீ
மாராராதி மனோ விமோஹனவிதௌ
காசித்தம: கந்தலீ
காமாக்ஷ்யா: கருணா கடாக்ஷ லஹரீ
காமாய மே கல்பதாம்

கருத்து: ஸ்ரீகாமாட்சி தேவியின் கருணை நிறைந்த கடைக் கண்களின் வரிசையானது... இணையில்லாத கறுப்பு நிறம் கொண்ட சந்திரிகை போலவும்; மூவுலகங்களிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில், அளவில்லாத நூல் இயற்றும் திறமையைப் பொழியும் மேகக் கூட்டம் போலவும்; மன்மதனை எரித்த சிவபெருமானின் மனதை மோகம் கொள்ளச் செய்வதில், இணையில்லா இருள் குவியல் போலவும் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஸ்ரீகாமாட்சி தேவியின் அருள் வெள்ளமானது, என் மன விருப்பத்தை நிறை வேற்றட்டும்.
சௌந்தர்ய லஹரி
வி பஞ்ச்யா காயந் தீ
விவிதம ப தானம் பசுபதே-
ஸ்த்வயா ரப்தே வக்தும்
சலித சிரஸா ஸாது வசனே
ததீயைர் மாதுர்யை ரபலபித
தந்த்ரீகல ரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுளயதி
சோளேன நிப்ருதம்

கருத்து: அம்பிகையே! பரமேஸ்வரன் உன்னை மணந்தது, விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரைப் புத்திரர்களாக அடைந்தது முதலான சரித்திரங்களை, உனது சந்நிதியில் இருந்தபடி வீணையில் இசைத்துக் கொண்டிருந்தாள் சரஸ்வதிதேவி. அவளை, 'ஸாது' (மிகவும் நன்றாக இருக்கிறது) என்று பாராட்டுவதற்காக... 'ஸா' என்று ஆரம்பித்த உன் குரல் இனிமையைக் கண்டு, தனது வீணையை உறையில் வைத்துக் கட்டி விட்டு, அமைதியாக இருந்து விட்டாள் சரஸ்வதிதேவி.
அதாவது... 'சரஸ்வதிதேவியைக் குரல் இனிமையால் வெற்றி கொண்ட காமாட்சி தேவியே, எனக்குக் கல்வி உள்ளிட்ட கலைகளைத் தந்தருள்வாய்' என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

Comments