பெருமாளும் பச்சைக் கல்லும்

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம், அழகிய தீவு நகரம். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதனை தவிர, வேறு தெய்வத்தை அறியாதவராக வாழ்ந்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார். இவரது பாடல்களை, 'திருமாலை' என்பர். 'திருமாலை தெரியாதவர்கள் திருமாலை அறியார்' என்று பெரிவர்கள் சிலேடையாகச் சொல்வதுண்டு!
சேது பாலம் அமைக்கும் பணியில், தங்களை இணைத்துக் கொண்ட மூவர்... சுக்ரீவன், விபீஷணன் மற்றும் அணில்! இவர்களில் மற்றவர்களை விட, அணில் செய்த தொண்டே உயர்வானது என்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். காரணம்?
அரசாட்சியைப் பெற்றதற்கு நன்றிக்கடனாக தொண்டு செய்தான் சுக்ரீவன். அரசாட்சியைப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டு செய்தான் விபீஷணன். ஆனால், லாப நோக்கம் எதுவும் இன்றி ஸ்ரீராமனுக்கு தொண்டு செய்தது அணில். ஆகவே, அதன் தொண்டே மகத்தானது என்கிறார் இந்த ஆழ்வார். இவர் பாடிய 'பச்சைமா மலைபோல் மேனி' என்ற பாடலைத் தெரியா தவர்களே இல்லை எனலாம்! இப்படி, ஆழ்வார்களால் பாடப்பட்ட ரங்கநாதனுக்கு சிறப்புகள் நிறைய உண்டு.
ஸ்ரீரங்கத்தில்... வருடத்தின் பெரும்பாலான நாட்கள் உற்ஸவம், திருவிழா என்று அமர்க்களப்படும். இங்கு, மாசி மாதத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில், ஸ்ரீரங்க நாதருக்கும் தாயாருக்கும் வேங்கடகிரி பாகவதர் சமர்ப்பித்த ஆபரணங்களை மட்டுமே சாற்றுவர்.
யார் இந்த வேங்கடகிரி பாகவதர்?
ஆந்திராவைச் சேர்ந்த இவர், சுமார் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். பரம பாகவதோத்தமரான வேங்கடகிரி பாகவதர், நாமகீர்த்தனம் பாடியே ஸ்ரீரங்கநாதனை தன்வசப்படுத்தியவர். அரங்கனே நேரில் வந்து இவரிடம் உரையாடுவாராம்!
இவர் ஒருமுறை, உஞ்சவிருத்தி எடுத்து ஆபரணங்கள் சிலவற்றை செய்து ஸ்ரீரங்கநாயகி தாயாருக்கு சமர்ப்பித்தாராம். அப்போது தாயாரிடம், ''என்ன...உனக்கு சந்தோஷம்தானே?'' என்று கேட்டார் பாகவதர். உடனே, ''பெருமாளுக்கு சமர்ப்பிக்காமல், எனக்கு மட்டும் ஆபரணங்கள் சமர்ப்பித்தது சற்று வருத்தம்தான்!'' என்றாளாம்!
வேங்கடகிரி பாகவதர், மீண்டும் உஞ்சவிருத்தி எடுத்து, ஆபரணங்கள் செய்து பெருமாளுக்கு சமர்ப்பித்தார். பிறகு பெருமாளிடம், ''உமக்கு திருப்திதானே?'' என்று கேட்டார். பெருமாளோ... ''தாயாருக்கு பச்சைக்கல் வைத்த ஆபரணத்தை சமர்ப்பித்தாய். அதுபோலவே எனக்கும் சமர்ப்பித்தால்தான் திருப்தி'' என்றார்!
பாவம் வேங்கடகிரி பாகவதர்! பல இடங்களில் தேடியும், தாயாருக்கு சமர்ப்பித்தது போன்ற பச்சைக் கல் அவருக்குக் கிடைக்கவே இல்லை. சோர்ந்து போனார். ''பச்சைக் கல் கிடைக்க நீர்தான் அருள வேண்டும்!'' என்று பெருமாளிடமே பிரார்த்தித்தார்.
பெருமாள்... மும்பையில் வசிக்கும் சேட்ஜி ஒருவரது முகவரியை தெரிவித்து, அவரிடம் பச்சைக் கல் இருப்பதாக அருளினார்.

தொலைபேசி அறிமுகமான காலம் அது! மும்பை சேட்ஜியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட வேங்கடகிரி பாகவதர், முழு விவரத்தையும் கூறி பச்சைக் கல்லை தந்து உதவும்படி வேண்டினார். பாகவதர் கூறியதைக் கேட்டு அதிசயித்துப் போன சேட்ஜி, பச்சைக் கல்லைத் தருவதற்கு சம்மதித்தார். ஆனால், பச்சைக் கல்லை பாகவதரிடம் தருவதற்கு முன் சேட்ஜி இறந்து போனார்!
இதையடுத்து சேட்ஜியின் மகனை தொடர்பு கொண்ட பாகவதர், அவரிடம் எல்லாவற்றையும் தெரிவித்தார். தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, வீடு முழுக்க பச்சைக் கல்லைத் தேடினார் சேட்ஜியின் மகன். சேட்ஜியின் மனைவியும் தேடிப் பார்த்தாள். ஆனால் பச்சைக் கல் கிடைக்கவே இல்லை! இந்தத் தகவலை வேங்கடகிரி பாகவதரிடம் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
மனம் கலங்கிய பாகவதர், பச்சைக் கல் கிடைக்காத விஷயத்தை பெருமாளிடம் கூறி வருந்தினார். உடனே, சேட்ஜியின் வீட்டில் ரகசிய அறை ஒன்று இருப்பதாகவும் அந்த அறையில் உள்ள பெட்டியின் மேல் பாகத்தில் பச்சைக்கல் இருப்பதாகவும் தெரிவித்தாராம் பெருமாள். இதை, சேட்ஜியின் மகனிடம் தெரிவித்தார் பாகவதர். உடனடியாக ரகசிய அறைக்குச் சென்று, பெட்டியில் இருந்த பச்சைக் கல்லை எடுத்த சேட்ஜியின் மகன், நேராக ஸ்ரீரங்கத்துக்கே வந்து, வேங்கடகிரி பாகவதரின் உஞ்சவிருத்தி சொம்பில் அந்த பச்சைக்கல்லை போட்டாராம்!
மகிழ்ச்சியில் திளைத்த பாகவதர், பச்சைக் கல் பதித்து ஆபரணம் செய்து அரங்கனுக்குச் சமர்ப்பித்து வணங்கினார். ''இப்போதேனும் திருப்தி வந்ததா உமக்கு?'' என்று பெருமிதத்துடன் கேட்டார். 'இல்லை' என்றார் பெருமாள். அதிர்ந்து போனார் வேங்கடகிரி பாகவதர்!
''நீர் கொடுத்த கல் அபூர்வமானது; விலை உயர்ந்தது. ஆபரணம் செய்தவர், அதை தன்னிடம் பதுக்கிக் கொண்டு அற்பமான கல்லில் ஆபரணம் செய்து கொடுத்திருக்கிறார். உடனே அவரது வீட்டுக்குச் செல். அங்கு... ஓரிடத்தில் சாணம் தட்டி வைத்திருப்பர். அந்த சாணத்தில்தான் பச்சைக் கல் உள்ளது'' என்று அருளினார் அரங்கன்.
அதன்படியே ஆபரணம் செய்தவரின் வீட்டுக்குச் சென்ற பாகவதர், சாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பச்சைக்கல்லை எடுத்து வந்து, ஆபரணம் செய்து அரங்கனுக்குச் சமர்ப்பித்து மகிழ்ந்தார்.
இறைவன் மீது பக்தி செலுத்துவது பெரிதல்ல. அவனுக்கு விருப்பமான பக்தனாக இருப்பதே முக்கியம். அப்படி, கடவுளின் விருப்பத்துக்கு உரிய பக்தனாக இருந்து விட்டால்... தினம் தினம் திருநாள்தான்!

Comments