மானூர் சுவாமிகள்

முருகப் பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகளுள் பிரதானமானது- பழநி. தந்தையான ஈசனார் அருளிய ஞானப்பழம், தனக்குக் கிடைக்கவில்லையே... என்று சினம் கொண்டு கயிலையில் இருந்து புறப்பட்ட முருகப் பெருமான், இங்கு வந்து குடி கொண்டதாகச் சொல்கிறது புராணம். தமிழ் மூதாட்டியான ஒளவையார், 'நீயே ஞானப் பழம். உனக்கு எதற்கப்பா வேறு பழம்?' என்று ஆறுதல் சொல்லி, 'பழம் நீ' என்று முருகனை சிறப்பித்த காரணத்தால், இந்த மலை பழநி என்றானது.
எண்ணற்ற சித்தர் பெருமக்களும் மகான்களும் வாழ்ந்த - வாழ்ந்து வரும் புண்ணியம் பதி இது. சித்த புருஷர்களில் ஒருவரான போகர் ஆராதித்த பெருமைக்கு உரியது பழநி மலை. இயற்கை வளமும் மலையும் சூழ அமைந்திருக்கும் இந்தப் பகுதியைத் தேடி, எண்ணற்ற சித்த புருஷர்கள் இங்கு குடி கொண்டதில் வியப்பேதும் இல்லை. எளிமையே வாழ்க்கையாக... தனிமையே தவமாக, இறை சிந்தனையில் லயித்தனர் சித்தர்கள். தியானத்தின் மூலம் தேகத்தைப் பராமரித்தனர். பச்சிலை மூலிகைகளின் மூலம் பசியை விரட்டினர்.
பழநியம்பதியில் படாடோபம் இல்லாமல் வாழ்ந்த மகான்களுள் ஒருவர் - மானூர் சுவாமிகள். இவர் யார்? எங்கு பிறந்தார்? இவருடைய பெற்றோர் யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு காலம் இன்னும் விடை சொல்லவில்லை. சாந்நித்யம் கொண்ட மகான்களின் சரித்திரம், சம காலத்தவர்களாலேயே சரிவர புரிந்து கொள்ள முடிவதில்லை. இதைத்தான் நதிமூலம், ரிஷிமூலம் பற்றி ஆராயக் கூடாது என்பார்களோ?
இருப்பினும்... பழநிக்கு வட திசையில் உள்ள மானூர் எனும் கிராமத்தில் சில காலம் தங்கி இருந்ததால் இவருக்கு மானூர் சுவாமிகள் என்ற பெயரே நிலைத்துப் போனது. இவர் மகா சமாதி ஆன தினம் மட்டும் பலராலும் இன்றைக்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. குரு பூஜைகள் நடந்து வருகின்றன. இவருடைய பக்தர்கள், திரளாக வந்து பூஜையில் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தி ஆராதித்து வருகின்றனர்.

மானூர் சுவாமிகள் மகா சமாதி ஆனது - 1945-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (பார்த்திப வருடம் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி: அமாவாசை சித்திரை). பழநிக்கு அருகில் உள்ள கோதைமங்கலத்தில்... மெயின் ரோட்டின் ஓரமாகவே அமைந்துள்ளது இவரது சமாதி திருக்கோயில். உள்ளே நுழைந்ததும், சுவாமிகளது வட்ட வடிவ மகா சமாதி; மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தரிசனம் தருகிறது. வலம் வருவதற்கு பிராகாரமும் உண்டு.
இருப்பினும், மானூர் சுவாமிகளின் அபிமானத்தைப் பெற்று இன்றைக்கும் அவரை வணங்கி வரும் பக்தர் ஒருவர், ''சுவாமிகள் ஆயிரத்தெட்டு இடங்களில் சமாதி ஆகி இருக்கிறார். கோதைமங்கலம் தவிர, கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நீலத்தநல்லூர், கேரளாவில் இரண்டு இடங்கள், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை அருகில்... என்று இவர் ஏற்கெனவே சமாதி ஆன இடங்களை பட்டியலிடு கின்றனர் அன்பர்கள் பலர்!
ஒரே நேரத்தில்... இரண்டு வெவ்வேறு இடங்களில் தரிசனம் தந்திருக்கிறார் சுவாமிகள். அவ்வளவு ஏன்... கோதைமங்கலத்தில் 1945-ஆம் ஆண்டு சமாதியானார். ஆனால், இதற்குப் பின்னர், பல ஊர்களில், பக்தர்கள் பலருக்கும் காட்சி தந்து, அவர்களுடன் உரையாடி, அவர்களுக்கு ஆசியும் தந்திருக்கிறார். தன்னை நம்பியவர்களுக்கு இன்றைக்கும் காட்சி தந்து அருள் வழங்கி வருகிறார் மானூர் சுவாமிகள்'' என்கிறார், சிலிர்ப்புடன்.
மானூர் சுவாமிகள் எப்படி இருப்பார்?
எளிமையான தோற்றம். கெச்சலான தேகம். வேட்டி- சட்டை, துண்டு என எந்த ஆடையையும் இவர் அணியமாட்டாராம்! திகம்பரர் (நிர்வாண சாது). சட்டென்று பார்ப்பவர்களுக்கு இவர் நிர்வாண சாது என்பது தெரியாது. ஒரு போர்வையை உடல் மேல் சுற்றி, கழுத்து வரை போர்த்தி இருப்பார். அதிகம் பேச மாட்டார். பழநி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் இவர் எங்கு சென்றாலும் இவரைப் பின்தொடர்ந்து பக்தர்களும் உடன் செல்வர். மானூரில் அவ்வப்போது தங்கி வந்தாலும் நரிக்கல்பட்டி, அக்கரைப்பட்டி, பழநி, கோதைமங்கலம் என்று பல இடங்களுக்கும் பயணித்தபடியே இருப்பார் சுவாமிகள். சில தருணங்களில்... தன்னை பலரும் பின்தொடர்வது பிடிக்காமல் போனால், அனைவரையும் விரட்டி விடும் மானூர் சுவாமிகள், மகா கோபக்காரர். எவரையும் 'ஏ கழுதை' என்றுதான் அழைப்பார்.
மானூர் சுவாமிகளின் கோபத்துக்கு உதாரணமாக, இவரது சீடரான தங்கவேல் சுவாமிகள், சிறுவனாக இருந்தபோது நிகழ்ந்த சம்பவத்தைச் சொல்லலாம்.
மானூர் சுவாமிகள் அருளால் பிறந்தவர் பழநி தங்கவேல் சுவாமிகள்  தங்கவேலுவுக்கு ஏழு வயது இருக்கும் போது, ஒரு நாள் வீட்டுக்கு அருகில் உள்ள சண்முக நதியில் குளித்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டில் இவனுடைய தந்தையார் பெருமாள்சாமியுடன் மானூர் சுவாமிகள் பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் போதே இட்லியையும் தோசையையும் சுவாமிகளுக்கு தன் கையால் ஊட்டி விட்டபடி இருந்தார் பெருமாள்சாமி. அப்போது தங்கவேல் வீட்டின் அருகே வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் 'என் மகன் வருகிறான்' என்றார் மானூர் சுவாமிகள். உடனே பெருமாள்சாமி, 'ஆமா சாமீ... அவன்தான் என்னோட அஞ்சாவது பையன்... கடைசி மகன்' என்றார் இயல்பாக.
அவ்வளவுதான்... மானூர் சுவாமிகளுக்கு வந்ததே கோபம்! பெருமாள்சாமியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு, 'அவனை என் மகன்னு சொல்றேன். நீ உன் மகன்னு சொல்றியே... ஓடுடா கழுதே இங்கிருந்து' என்று அடித்து விரட்டினார். பிறகு, தனியாக இருந்த சிறுவன் தங்கவேலை அருகே அழைத்து, தன் மடியில் அமர்த்திக் கொண்டார். தங்கவேலின் முதுகுத் தண்டு வடத்துக்குக்குக் கீழே மூலாதாரத்துக்கு அருகில் தன் விரலால் சுண்டினார் மானூர் சுவாமிகள். அவ்வளவுதான்... மறு நொடியே சிறுவனின் உடல் மரத்துப் போனது. மயங்கிப் போனான் தங்கவேல். (இது குறித்து பின்னர் விவரிக்கும் போது, 'என்னுடைய மூலாதாரத்தில் இருந்து ஒரு விசை அப்படியே மேலே எழும்பியது. தலையில் அது பட்டதும் மயங்கி, சுவாமிகளின் மேல் சாய்ந்து விட்டேன். என் உள்நாவில் அமிர்தம் விழுந்து இறங்கியது போல் உணர்ந்தேன். இதன் பின் சுவாமிகள் என்னை தன் தோளில் போட்டுக் கொண்டு முதுகை மெள்ள வருடிக் கொடுத்தார்' என்று கூறியுள்ளார் தங்கவேல் சுவாமிகள்).
'கணவரையும் விரட்டி விட்டார்; குழந்தை வேறு பேச்சு மூச்சற்று மயங்கிக் கிடக்கிறான். இந்த சாமியார் ஏதோ மந்திரம் செய்து விட்டார் போலிருக்கிறது' என்று பதைபதைத்த தங்கவேலின் தாயார் கருப்பம்மை, மானூர் சுவாமிகளைப் பார்த்து சபிக்கும் பாவனையில் சத்தம் போடவும், கையில் ஒரு கல்லை எடுத்து வீசி, அவரையும் அங்கிருந்து மிரட்டி விரட்டினார் மானூர் சுவாமிகள். சற்றுத் தள்ளி நின்றபடி தங்கவேலின் தாயார் அழுது கொண்டே இருந்தார். அரை மணி கழித்து, தங்கவேல் மெள்ள கண் விழித்த பிறகுதான் அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.
மானூர் சுவாமிகள் பலமாகச் சிரித்தார். பிறகு தங்கவேலிடம், 'எப்படியடா இருந்தது? இன்பத்தை அனுபவித்தாயா?' என்று கேட்டார். அதற்கு, 'மயக்க நிலையில் ஏதோ ஓர் இனம் புரியாத இன்பத்தை உணர்ந்தேன் சாமீ' என்றான் தங்கவேல். 'அதுதானடா அமிர்தம் உள்ளே போய்ச் செய்யும் வேலை. அதை உண்ணும் வாய்ப்புக் கிடைத்தவன் மட்டும்தான் பூரண ஞானியாக இருக்க முடியும். உனக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. நான் சொல்லப் போகும் யோகக் கலையைப் பின்பற்றி நட! நரை, திரை, மூப்பு, சாக்காடு (கடும் நோயால் படுத்தல்) என்று எதுவும் உன்னை நெருங்காது. இன்னும் பல விஷயங்களை, அனுபவத்தின் மூலம் நீயே புரிந்து கொள்வாய்' என்றார்.
எவரும் தன்னை அண்டி இருக்க அனுமதிக்க மாட்டார் மானூர் சுவாமிகள். எவரையேனும் சுவாமிகளுக்கு மிகவும் பிடித்து விட்டால், அவரை அருகே அழைத்து தனக்குப் பிடித்ததை, அருகில் உள்ள கடையில் இருந்து வாங்கி வரச் சொல்லுவார். 'கடவுளே நேரில் வந்து தனக்கு இட்ட கட்டளை' என்பது போல், சுவாமிகள் சொன்ன அந்த நிமிடமே , சம்பந்தப்பட்டவர் கடைக்கு ஓடுவார். சுவாமிகள் தன் கைப்பட சாப்பிட்டு எவரும் பார்த்தது இல்லை. எவரேனும் ஊட்டி விட்டால், ஓரிரு கவளங்கள் சாப்பிடுவார். இந்த பாக்கியத்தை, சுவாமிகளுக்கு மிகவும் பிரியமான பக்தர்கள் பெற்றிருந்தனர்.
பழநி கடைத்தெருவில் 'குட்டியம்மா மடம்' என்று உள்ளது. பல தருணங்களில், சுவாமிகள் இங்குதான் இருப்பார். தவிர, பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மங்கள கவுண்டர் வீட்டு மாட்டு வண்டியில் சில வேளைகளில் அமர்ந்திருப்பார். சுவாமிகள் அடிக்கடி அமரும் வண்டி என்பதால், மங்கள கவுண்டர் குடும்பத்தார் இந்த மாட்டு வண்டியை பயன்படுத்துவதே இல்லை. சுவாமிகளின் நினைவாக, மாட்டு வண்டியை இன்னமும் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.
மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கும் போது, மங்கள கவுண்டர் குடும்பத்தாரை அழைத்து, சாப்பிடுவதற்கு ஏதேனும் கொண்டுவரச் சொல்லுவார் சுவாமிகள். சைவம்- அசைவம் என்று பேதம் பார்க்கமாட்டாராம் சுவாமிகள். மங்கள கவுண்டர் வீட்டில் இருந்து அசைவ உணவையும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கிறாராம் மானூர் சுவாமிகள்!
பொதுவாகவே... பசியைப் போக்குவதற்காக உணவு உண்பதில்லை மகான்கள். உடன் இருக்கின்ற பக்தர்களின் மனம் திருப்தி அடைய வேண்டும் என்பதற்காகவே சாப்பிடுகின்றனர்.
ஒரு நாள்! மாட்டு வண்டியில் அமர்ந்திருந்த சுவாமிகள், மங்கள கவுண்டர் வீட்டு அன்பர் ஒருவரை அழைத்து, ''சாப்பிடுறதுக்கு நாலு முட்டை எடுத்திட்டு வா'' என்றார். அதன்படி உள்ளே சென்று, கைகளில் நான்கு முட்டைகளுடன் திரும்பினார். இதை வாங்குவதற்கு முன்னரே... ''ஏ கழுதை.. இதுல ரெண்டு அழுகிப் போயிடுச்சே... நீ கவனிக்கலியா?'' என்று முட்டையின் நிலையை சொன்னார் சுவாமிகள்.
இதேபோல், தன்னைச் சந்திக்க வருபவர் களுக்குள் இருப்பது நல்லெண்ணமா... கெட்ட எண்ணமா என்பதையும் பளிச்சென சொல்லி விடுவாராம் சுவாமிகள்.
பழநியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரயில் பாதையில் பழநியை அடுத்து புஷ்பத்தூர் எனும் ரயில்வே ஸ்டேஷன் உண்டு. ஒரு முறை பொள்ளாச்சி மார்க்கமாகப் பயணிக்கும் நோக்கத்தில் இந்த ஸ்டேஷனில் காத்திருந்தார் மானூர் சுவாமிகள். ரயிலும் வந்தது; ஏறி அமர்ந்து கொண்டார் சுவாமிகள். வண்டி புறப்படவில்லை. அப்போது சுவாமிகளது வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு முகம் சுளித்த டிக்கெட் பரிசோதகர், சுவாமிகளை நெருங்கி, ''உன் டிக்கெட்டைக் கொடு'' என்று அலட்சியமாகக் கேட்டார். அப்போது சுவாமிகள் தியான நிலையில் இருந்தார்.
'டிக்கெட் எடுக்காததால்... தன்னை ஏமாற்றுவதற்கே கண் மூடி நடிக்கிறார் போல...' என்று நினைத்த பரிசோதகர், கோபத்துடன் சுவாமிகளது பிடரியில் கைவைத்து, அவரை ரயிலில் இருந்து இழுத்து கீழே தள்ளினார். பிளாட்பாரத்தில் வந்து விழுந்த சுவாமிகள், டிக்கெட் பரிசோதகரைப் பார்த்து புன்னகைத்தபடி, ''போடா... போ... உன் ட்ரெயினுக்கு பிரேக் போட்டுட்டேன். இனிமே, நீ பொள்ளாச்சி போய்ச் சேர்ந்த மாதிரிதான்'' என்று சத்தமாகச் சொல்லி விட்டு, ஓர் ஓரமாக அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்தார்.
மானூர் சுவாமிகளை அலட்சியமாகப் பார்த்து விட்டு, எதையோ சாதித்த திருப்தியுடன் ரயிலில் ஏறிக் கொண்டார் பரிசோதகர். ரயில் கிளம்புவதற்கான கொடி அசைக்கப்பட்டது; விசிலும் ஊதப்பட்டது; ரயிலை இயக்குபவர் ஹார்ன் ஒலி எழுப்பினார். ஆனால், இம்மியும் நகராமல் அப்படியே நின்றது ரயில். என்னென்னவோ செய்து பார்த்தனர்; ம்ஹ§ம்.. பலன் இல்லை.
பயணிகள் உட்பட பலருக்கும் குழப்பம். புஷ்பத்தூர் ரயில் நிலைய அதிகாரிகள் பலரும் 'ரயில் நகராமல் இருக்க என்ன காரணம்?' என்று குழம்பித் தவித்தனர். அப்போதுதான்... டிக்கெட் பரிசோதகருக்கு மெள்ள புரிந்தது. அவரை (சுவாமிகளை) கீழே தள்ளி விட்ட பின், கோபத்துடன் அவர் சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தார். 'ரயில் இப்போது கிளம்பாமல் இருப்பதற்கு ஒருவேளை இவர்தான் காரணமோ? இவரது வாக்கு பலித்து விட்டதோ...' என்று சந்தேகித்தவர், சற்று முன் நடந்த சம்பவத்தை நிலைய அதிகாரியிடம் விரிவாகச் சொன்னார்.
''நீங்கள் சொல்கிற ஆசாமி, மானூர் சுவாமிகளாக இருந்தால் அவர் சொன்னதுபடியே நடக்கும். காரணம்... எனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் நடந்தது உண்டு. வேறு எவராவது என்றால், என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி, வாருங்கள்... அவரைக் காட்டுங்கள்'' என்று டிக்கெட் பரிசோதகரின் பின்னே வேகவேகமாக நடந்தார் நிலைய அதிகாரி. இதற்குள், ரயிலை இயக்கும் டிரைவரும் வந்து விட்டார். மூவரும் நடந்தனர். டிக்கெட் பரிசோதகரும் சுவாமிகளை அடையாளம் காட்டினார்.
சுவாமிகளைப் பார்த்ததும் அவரது திருப்பாதங்களில் தடாலென விழுந்தார் நிலைய அதிகாரி. அடுத்ததாக... சம்பவத்தின் விபரீதத்தை உணர்ந்த இருவரும் நமஸ்கரித்தனர். பிறகு நிலைய அதிகாரி, ''மன்னிக்க வேண்டும் சுவாமிகளே! தங்களை அறியாததால் தவறாக நடந்து கொண்டு விட்டார் பரிசோதகர். இவரை மன்னித்து அருளுவதுடன், ரயிலைப் புறப்படச் செய்யுங்கள்'' என்றார். ''போடா போ... நான் போட்ட பிரேக்கை எடுத்துட்டேன். இனி வண்டி ஓடும். போங்கடா'' என்றார் மானூர் சுவாமிகள்.
இதையடுத்து, இன்ஜினை இயக்கினார் டிரைவர். எந்த சிக்கலும் இன்றி இயல்பாகக் கிளம்பியது ரயில். அனைவரின் முகத்திலும் சந்தோஷம்.
இஸ்லாமிய அன்பர் ஒருவர், சுவாமிகளின் தீவிர பக்தர். இவர், புனிதத் தலமான மெக்காவுக்கு ஒரு முறை சென்றிருந்தார். அங்கே... தன்னுடைய நண்பர் ஒருவரிடம், மானூர் சுவாமிகளது மகிமையை உணர்ச்சிப் பெருக்குடன் விவரித்தார். அந்த நண்பரும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது... இவர்கள் பேசிக் கொண்டிருந்த மெக்கா வீதியின் வழியே நடந்து சென்றாராம் சுவாமிகள். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற இஸ்லாமிய அன்பர், உடனே தன் நண்பரிடம், ''அதோ, அதோ பார்.... அவர்தான் மானூர் சுவாமிகள். இப்போதுதானே அவரைப் பற்றி உன்னிடம் சொல்லி வந்தேன்? சுவாமிகள் குறித்து உணர்வுபூர்வமாக யார் பேசினாலும், அங்கே... அப்போதே வந்து தரிசனம் தருவார் சுவாமிகள்'' என்று ஆச்சரியம் பொங்க கூறினார். மறுவிநாடி... அங்கே சுவாமிகளைக் காணோம்!
இதேபோல், சென்னை, பழநி முதலான பல இடங்களிலும்... தான் சமாதியாகி விட்ட பிறகும் கூட, பலருக்கும் தரிசனம் தந்திருக்கிறார் மானூர் சுவாமிகள்.
மானூர் சுவாமிகள் ஒருமுறை கோவைக்குச் சென்றிருந்தார். சுவாமிகளது வளர்ச்சியையும் புகழையும் பிடிக்காத கோவையைச் சேர்ந்த சிலர், அப்போது அவரைத் தீர்த்துக் கட்ட திட்டமிட்டனர்.
கோவையில் உள்ள தெரு ஒன்றில் நடந்து வந்து கொண்டிருந்தார் சுவாமிகள். அங்கே... தெருமுனையில் ஒரு டிரான்ஸ்பார்மர் இருந்தது. கூலியாட்கள் சிலரை அழைத்து அவர்களுக்கு கை நிறைய பணம் கொடுத்த சதிகாரர்கள், சுவாமிகளை அடையாளம் காட்டி, ''அந்த ஆளை அலேக்கா தூக்கி டிரான்ஸ்பார்மர்ல போடுங்க. மத்ததை நாங்க பாத்துக்கறோம்'' என்றனர்.
இவர் எவ்வளவு பெரிய மகான் என்பதை அறியாததாலும் சதிகாரர்கள் கொடுத்த பணம் கண்ணை மறைத்ததாலும்... இந்த கொடூரச் செயலை அரங்கேற்றுவதற்காக கூலியாட்கள் காத்திருந்தனர்.
இதையெல்லாம் அறியாதவரா சுவாமிகள்?
தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த சுவாமிகளை நெருங்கியவர்கள், சரட்டென்று பாய்ந்து அவரை அப்படியே அலேக்காகத் தூக்கி, டிரான்ஸ்பர் மேல் வீசினர்.
அவ்வளவுதான்... சுவாமிகளது உடல் டிரான்ஸ்பார்மர் மேல் பட்டதும், அது சுக்குநூறாக வெடித்துச் சிதறியது. மறு விநாடியே அங்கு பெரும் புகை சூழ்ந்தது. ஆனால், சுவாமிகளுக்கு சின்ன காயம் கூட ஏற்படவிலை. கீழே ஓரிடத்தில் பொத்தென விழுந்த சுவாமிகள், தன் மேல் ஒட்டிய தூசியை தட்டி விட்டபடியே, ''மடப் பசங்க... அந்த கரண்ட்டுக்கும் இந்த கரண்ட்டுக்கும் எப்பவுமே ஒத்துக்காதுடா... அதான் இது (தன் உடல்) பட்டதும் வெடிச்சு நொறுங்கிடுச்சு'' என்று, அந்த கூலியாட்களைப் பார்த்து சுவாமிகள் சொல்ல... திகைத்துப் போனவர்கள் இவரை வணங்கி விட்டு, தலை தெறிக்க ஓடினார்கள். சுவாமிகளை அழிக்க நினைத்தவர்களும் நிர்கதி ஆனார்கள். பிறகு டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்பட்டது. கோவையில் உள்ள திருச்சி சாலையில்... அகில இந்திய வானொலி நிலையத்துக்கு அருகே இந்த டிரான்ஸ்பார்மர் இன்றும் உள்ளது. வயது முதிர்ந்த பலரும், இதனை 'சாமியார் டிரான்ஸ்பார்மர்' என்றே இப்போதும் அழைக்கின்றனர்.
மானூர் சுவாமிகள் கோதைமங்கலத்தில் மகா சமாதி அடைந்த பின், அவரது பக்தர்கள் இங்கு வந்து அவ்வப்போது வணங்கிச் சென்றனர். இதேபோல், பழநி கல்லூரியில் அப்போது பணி புரிந்த பேராசிரியர்கள் கண்ணன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரும் சுவாமிகளது சமாதியை வணங்கிச் செல்வர்.
சுமார் 16 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது!
பௌர்ணமி தினம்! நள்ளிரவு வேளையில் மானூர் சுவாமிகளது சமாதிக்குச் சென்று தரிசித்து வர கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் முடிவெடுத்தனர். அன்று இரவு, சுமார் 11.30 மணிக்கு பழநியில் இருந்து கோதைமங்கலத்துக்கு சைக்கிளில் சென்றனர். 25 நிமிடத்தில் கோதைமங்கலம் சமாதியை அடைந்த போது, சமாதி பூட்டப்பட்டிருந்தது.
அது பௌர்ணமி பூஜை பிரபலமாகாத காலம்! எனவே, இரண்டு பேரையும் தவிர, சமாதி வளாகத்துக்குள் வேறு எவரும் இல்லை. 'சரி, வெளியே இருந்தபடியே சுவாமிகளை வணங்கிச் செல்வோம்' என்று கிரில் கம்பிகளுக்கு இடையே பார்வையை செலுத்தினர். சுவாமிகளது சமாதியில் சுடர் விட்டுப் பிரகாசித்தது விளக்கு! இதையடுத்து அவர்கள் கண்ட காட்சி இரண்டு பேரையும் பதறச் செய்தது.
உள்ளே - 'நவகண்டயோகம்' எனும் முறைப்படி ஒன்பது துண்டுகளாகக் கிடந்தார் மானூர் சுவாமிகள். தலை, கைகள், கால்கள், தொடைகள், மார்பு, வயிறு... என்று ஒன்பது துண்டங்களாகக் கிடந்தார் மானூர் சுவாமிகள்.
இதுவொன்றும் சுவாமிகளுக்கு புதிதல்ல! சமாதி ஆவதற்கு முன் இப்படி பல முறை இருந்துள்ளாராம் சுவாமிகள். தனியே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், மெள்ள நடந்து, எட்டிப் பார்த்தால் இந்த நவகண்டயோகக் காட்சியைக் காணலாம். எவரேனும் புதிய நபர்கள் இந்தக் காட்சியைக் கண்டால் அவ்வளவுதான்... கூச்சலிட்டு ஊரையே கூட்டி விடுவார்கள். அப்படி எவரேனும் கூச்சலிடும் போது, கண்ணிமைக்கும் நேரத்தில், சட்சட்டென்று அனைத்து உறுப்புகளும் ஒன்றாக இணைந்து விடுமாம்! எதுவுமே அறியாதவர் போல் எழுந்து செல்லும் சுவாமிகள், 'இந்தப் பயலுகளை எல்லாம் கண்டமேனிக்கு உதைக்கணும். எங்கே போனாலும், தொந்தரவு செய்யறதுக்குன்னே வந்துடறாங்க' என்று சொல்லுவாராம்!
மானூர் சுவாமிகளது சமாதியில், அந்த நள்ளிரவு வேளையில்... தனித்தனியே கிடக்கும் உடல் பாகங்களைக் கண்டதும் கண்ணனுக்கும் ராமச்சந்திரனுக்கும் உடல் நடுங்கின. வெள்ளமென வியர்த்துக் கொட்டியது. இரண்டு பேரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். 'குருநாதா... உங்களைத் தொந்தரவு பண்ணிட்டோம். எங்களை மன்னிச்சிடுங்க' என்று சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தனர்.
பழநியில் குதிரை வண்டிகள் நிற்கும் ரவுண்டானா அருகே, ஒரு நாள் அமைதியாக அமர்ந்திருந்தார் சுவாமிகள். அப்போது திடீரென 'அடிபட்டுப் போச்சு... பஸ்சு அடிபட்டுப் போச்சு. ஆட்களுக்குக் கொஞ்சம் சேதம்' என்று சுவாமிகள் சொன்னாராம். அங்கு இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தனர். அலங்கியத்துக்கு அருகே பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி, அதில் பாதிக்கப்பட்டவர்கள் பழநி மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கும் விவரம் சுமார் ஒரு மணி நேரம் கழித்துதான் தெரிந்தது!
தன்னுடைய குருநாதரான மானூர் சுவாமிகளுக்குக் கொடைக்கானலில் 'பிரம்ம வித்யா பீடம்' எனும் ஆசிரமத்தை நிறுவினார் பழநி தங்கவேல் சுவாமிகள். பக்தர்கள் வழிபடுவதற்காக இங்கு சுவாமிகளது வெண்கலச் சிலை ஒன்று உள்ளது. (தீபாவளி தினத்துக்கு முதல் நாள், தங்கவேல் சுவாமிகள் சமாதி ஆனார். தீபாவளி தினத்துக்கு அடுத்த நாள் மானூர் சுவாமிகள் சமாதி ஆனார். வருடங்கள்தான் வேறு வேறு).
மானூர் சுவாமிகளின் குருபூஜை கோதைமங்கலத்தில் உள்ள அவரது சமாதியில், மங்கள கவுண்டர் மற்றும் பல கவுண்டர் குடும்பங்களால் சிறப்பாக நடைபெறுகிறது. அதே நாள்... கொடைக்கானலில் உள்ள ஆசிரமத்தில், சுவாமிகளது குருபூஜையை தங்கவேல் சுவாமிகளது குடும்பத்தார் நடத்துகின்றனர். இதேபோல் பல இடங்களிலும் சுவாமிகளது குருபூஜை நடைபெறுவதாகச் சொல்வர்.
சமாதி ஆவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, தான் சமாதியாகும் நாளை... நட்சத்திரம், தேதி, நேரம் முதலான விவரங்களுடன் துல்லியமாகச் சொல்லி இருந்தார் மானூர் சுவாமிகள். அதன்படியே சமாதியும் ஆனார். சுவாமிகளது உத்தரவுப்படி மூன்று நாட்கள் வரை அவரது உடலை அப்படியே வைத்திருந்தனர். அப்போது, நாற்காலியில் உட்கார வைத்தால் உயிருடன் இருப்பவர் போலவே அமர்ந்திருப்பாராம்; சுவாமிகளை நிற்க வைத்தால், எவரது தயவும் இன்றி நின்றதாம் உடல்; பத்மாசனமாக அமர வைத்தால் அப்படியே இருந்தாராம் சுவாமிகள்!
மகா சமாதி ஆவதற்குச் சில நாட்களுக்கு முன் தன்னை வணங்கி வந்த அன்பர்களிடம் சுவாமிகள் சொன்னது இதுதான்: ''எனது மறைவை எண்ணி எவரும் அழக் கூடாது. இந்த உலகுக்கு, எப்போது வேண்டுமானாலும் வருவேன்; போவேன். என்னை உண்மையாக நினைத்திருங்கள்; உங்களுக்கு காட்சி தருவேன்.''
இந்த திருவாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் நடைபெற்ற சம்பவங்கள் பல உண்டு! இதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளும் சுவாமிகளது பக்தர்களே இதற்குச் சாட்சி!
தகவல் பலகை
தலம் : கோதைமங்கலம்
சிறப்பு : மானூர் சுவாமிகள் மகா சமாதி.
எங்கே இருக்கிறது?: பழநியில் இருந்து பழைய தாராபுரம் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோதைமங்கலம். இங்கு பிரதான சாலையில் அமைந்துள்ளது மானூர் சுவாமிகள் சமாதி.
எப்படிப் போவது?: தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் பழநியை அடைவது எளிது. பழநி பேருந்து நிலையத்தில் இருந்து 3, 3ஙி, 23, 26 உள்ளிட்ட பல நகரப் பேருந்துகள் கோதைமங்கலம் வழியாகச் செல்லும். 'சாமியார் மடம்' என்று கேட்டு இறங்கவும். அருகிலேயே மானூர் சுவாமிகளின் சமாதி. பழநியில் இருந்து ஆட்டோ மூலம் இந்த இடத்தை அடையலாம்.

Comments