மன்னனுக்கு உதவிய நச்சாடை தவிர்த்த நாயகர்!

விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையத்தில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் தெற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது தேவதானம். இங்கிருந்து மேற்கில் சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால், ஸ்ரீநச்சாடை தவிர்த்த நாயகர் திருக்கோயிலை அடையலாம். 'பாண்டிய நாட்டின் பெரிய கோயில்' எனச் சிறப்பிக்கப்படும் இந்த ஆலயம் இங்கு அமைந்தது எப்படி?
வீரபாகுபாண்டிய மன்னனின் எல்லைக்கு உட்பட்ட வனம் ஒன்றில் சுயம்பு லிங்கம் ஒன்று இருந்தது. இங்கு மேய்ச்சலுக்கு வரும் பசு ஒன்று, தினமும் லிங்கத்தின் மேல் பால் சொரிந்து அபிஷேகித்தது. ஒரு நாள்... 'சிருங்கம்' எனப்படும் கலைமான் ஒன்று, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதைப் பார்த்துக் கோபம் கொண்டது பசு. உடனே மானின் மீது பாய்ந்து, தனது கொம்பினாலேயே மானைக் கொன்றது. பிறிதொரு நாளில் இந்த வழியே வீரபாகுபாண்டியன், புதருக்குள் மறைந்திருந்த சிவலிங்கத்தைக் கண்டான்; லிங்க மூர்த்தத்தின் மகிமையை அறிந்து, இங்கு ஆலயம் எழுப்பினானாம். சரி... இறைவன், 'ஸ்ரீநச்சாடை தவிர்த்த நாயகர்' எனும் திருநாமம் பெற்றது ஏன்?

வீரபாகுபாண்டியன், இரவில் தலைநகரைக் காவல் காக்கும் தலைமைப் பொறுப்பையும் தானே ஏற்றிருந்தான். வெளியூர் சென்றிருப்பவர்களது வீடுகளைக் கூடுதலாக கவனித்து வந்தான். வெளியூர் சென்றிருந்த அந்தணர் ஒருவர், ஒரு நள்ளிரவில் வீடு திரும்பினார். ஆனால் மன்னன், அவரைத் திருடன் என்று கருதி கொன்று விட்டான். இதனால், பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானான். இந்த நிலையில் சோழ அரசன் விக்கிரமன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான்.
இதையறிந்த பாண்டிய மன்னன் பெரும் கவலை அடைந்தான். அன்று இரவு அவன் கனவில் தோன்றிய சிவனார், 'சோழனை எதிர்த்து போரிடு; நான் உனக்குத் துணை இருப்பேன்!' என்று அருளினார். அதன்படி படை நடத்திச் சென்ற பாண்டியன், போரில் வெற்றி பெற்றான். ஆனாலும் சோழ மன்னன், பாண்டிய மன்னனுக்கு மேலும் பல இன்னல்களை விளைவித்தான். அடியவருக்கு ஒன்றென்றால் ஆண்டவன் சும்மா இருப்பானா... சோழ மன்னனின் பார்வை பறிபோனது. பரிதவித்த அரசன், சிவ வழிபாடு செய்து மீண்டும் பார்வை பெற்றான் (இதனால் மகிழ்ந்த சோழ மன்னன், தேவதானத்துக்கு அருகே சேத்தூரில் திருக்கண்ணீசர் ஆலயத்தை எழுப்பியதாகக் கூறுவர்).
ஆனாலும் அவனது வஞ்சக குணம் மாறவில்லை. பாண்டிய மன்னனை எப்படியேனும் அழிக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டினான். நஞ்சு தோய்ந்த ஆடையை பாண்டிய மன்னனுக்குப் போர்த்துமாறு தூதுவன் ஒருவனை ஏற்பாடு செய்தான்.
ஆனால் பரமேஸ்வரன், மன்னனது கனவில் மீண்டும் தோன்றினார். 'நஞ்சு கலந்த பொன்னாடையை தூதுவன் உன் மீது போர்த்த வருவான். அதை ஒரு கோலால் வாங்கி, தூதுவன் மேலேயே போர்த்தி விடு!' என்று எச்சரித்தார். அதன்படியே செய்து உயிர் தப்பினான் பாண்டிய மன்னன். இதனால் இறைவனுக்கு ஸ்ரீநச்சாடை தவிர்த்த நாயகர் என்று பெயர் வந்ததாம்!
இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீதவம் பெற்றாள் நாயகியின் மூல விக்கிரகம், அமைந்த கதையும் சுவாரஸ்யமானது! தான் இந்த ஆலயத்தில் குடி கொள்ள விரும்பியதை, சிவகிரி மற்றும் சேத்தூர் ஜமீன்தார்களது கனவில் தோன்றி தெரிவித்தாளாம் தேவி. இதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள் இருவரும் அன்னையைக் காண ஆற்றங்கரைக்கு ஓடினர்! ஆற்றில், மிதந்து வந்த மரப் பெட்டியை மலைப் பாம்பு ஒன்று சுற்றி வளைத்திருந்தது! ஜமீன் ஆட்களால் பெட்டியை நெருங்க முடியவில்லை. இந்த நிலையில், குறவர் இனத்தைச் சார்ந்த ஒருவர், தன் உடல் முழுவதும் முள்ளை சுற்றிக் கொண்டு, நீந்திச் சென்று மரப்பெட்டியைக் கைப்பற்றினார்.
இதன் பிறகு, சேத்தூர் ஜமீனுக்கு உட்பட்ட தேவதானம் கோயிலில் அம்மனை எழுந்தருளச் செய்தனர். ஆனால், சிவகிரி ஜமீன்தாருக்கு வருத்தம்! அம்மனை வெளிக்கொண்டு வந்ததில் தனக்கும் பங்கு இருப்பதாகவும், தன் ஜமீனுக்கும் அம்மனின் அருள் வேண்டும் என்றும் கேட்க.... அதன்படி, சிவகிரி அமைந்துள்ள திசை நோக்கி (தெற்கு) அம்மன் பிரதிஷ்டை ஆனாள்.
இரண்டு பிராகாரங்களுடன் அற்புதமாக திகழ்கிறது ஆலயம்; கோபுரம் இல்லை! உள்ளே நுழைந்ததும் கன்னிமார் சிலைகள், திருமலைக் கொழுந்தீஸ்வரர் சந்நிதி, ஸ்தல விருட்சமான சரக்கொன்றை! இங்கு, சேத்தூர் ஜமீன் ஒருவருக்குக் காட்சி தந்த கோலத்தில்- காளை வாகனத்துடன் அருளும் சிவனாரை தரிசிக்கலாம்.
இவரை தரிசித்து விட்டு மூலவர் சந்நிதிக்குச் செல்கிறோம். ஒரே கல்லால் ஆன ஆமை; கொடிமரம்; பலிபீடம். இடப் புறம் ஸ்ரீவிநாயகர்; வலப் புறம் ஸ்ரீமுருகப் பெருமான். சந்திரன், சூரியன், பைரவர், அடுத்து நந்தி. எதிரே கருவறை. ஆகாய ஸ்தலம் என்பதால், கருவறையில் ஆவுடையார் மட்டுமே காட்சி தருகிறார் (லிங்க மூர்த்தத்துக்கு அருகில் பசுவின் கால் தடத்தை இன்றும் காணலாம்). ஸ்வாமி சந்நிதிக்கு இடப்புறம் தெற்கு நோக்கி தவம்பெற்றாள் நாயகியின் சந்நிதி.இந்த ஆலயத்தில் ஜுரதேவர், 63 நாயன்மார்கள், விஷ்ணு துர்கை, வீரபத்திரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீவிநாயகர், சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, பஞ்ச லிங்கங்கள், மகா விஷ்ணு, ஸ்ரீமுருகப்பெருமான், சரஸ்வதிதேவி, சனி பகவான் சந்நிதிகளுடன் நவக்கிரக சந்நிதியும் உண்டு.
கோயிலுக்கு எதிரே உள்ள நாகலிங்க மரத்தில் இருந்து பூவை எடுத்து, பாலில் கலந்து மூன்று வேளை அருந்தினால், குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை!

Comments