மேடைகளில் அசத்தும் உபன்யாச சிறுவன்!

'நான் எவ்ளோ பெரிய ஆளானாலும், கை நிறைய எவ்ளோ சம்பாதிச்சாலும், அதையெல்லாம்விட எனக்கு எது அதிக சந்தோஷம் தரும்னா, பகவானுக்குக் கைங்கர்யம் செய்யறதுதான்'' என்று பெரிய மனுஷனைப்போல் பேசுகிற சடஜித்துக்கு வயது எட்டு. நெற்றி நிறைய திருமண், வாய் நிறைய ஸ்ரீநாராயண நாமம் என்று இருக்கிற சுட்டி சடஜித், எல்லாப் பிள்ளைகளையும்போல கிரிக்கெட், வீடியோ கேம்ஸ் என விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தாலும், கதை சொல்வதில் மன்னன்; குறிப்பாக, புராண உபன்யாசங்கள் செய்வதில் சூரன்!
 'அது என்ன சடஜித்... பெயரே வித்தியாசமாக இருக்கிறதே?’ என்றதும், ''நெல்லைச் சீமைல நவதிருப்பதி ஸ்தலங்கள் இருக்கு. அந்த ஒன்பதுல, ஆழ்வார்திருகரியும் ஒண்ணு. இதுதான் நம்மாழ்வார் அவதரிச்ச புண்ணிய பூமி. அவருக்குச் சடகோபன்னு ஒரு பேர் உண்டு. எங்களுக்குச் சொந்த ஊரு ஆழ்வார்திருகரிதான். அதனாலதான் நம்மாழ்வாரின் பெயரைச் சேர்த்து, சடஜித்னு வைச்சோம். தவிர, என் கணவரின் தாத்தா பேரும் சடகோபன்தான்'' என்றார் சடஜித்தின் அம்மா பத்மா. 
'சரி... உபன்யாசம் செய்வதில் சடஜித்துக்கு எப்படி ஈடுபாடு வந்ததாம்?’
''ஜீன்களுக்கும் குணங்களுக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லுவாங்களே... அதுமாதிரி உபன்யாசம் செய்யறதுங்கறது எங்க பரம்பரைக்கே உண்டான விஷயம்னுதான் தோணுது. ஏன்னா... எங்க தாத்தா சடகோபாச்சார்யர், நிறைய உபன்யாசங்கள், சொற்பொழிவுகள் பண்ணிட்டிருந்தார். அதேபோல, எங்க அப்பா ஸ்ரீநிவாச பூவராகாச்சார்யரும் மிகச் சிறந்த உபன்யாசகராகப் பேரெடுத்தார். அந்தக் காலத்துல சம்ஸ்கிருதப் படிப்புல, கோல்டுமெடல் வாங்கின பெருமைக்கு உரியவர் அவர். திருச்சி, பெங்களூர்ல செயின்ட் ஜோசப் காலேஜ்ல பேராசிரியரா பணியாற்றியிருக்கார் அப்பா'' என்றார் ஸ்ரீராம். சடஜித்தின் அப்பா.

தொடர்ந்து, ''மூணாவது தலைமுறைல வந்த நான், சென்னைல அட்வர்டைசிங் கம்பெனில வேலைக்குச் சேர்ந்தேன். அப்பா பெங்களூர்ல வேலை பாத்துட்டிருந்தார். அப்ப... ஆழ்வார்திருநகரி கோயில்ல நித்தியப்படி பூஜைகள் பண்றதுக்கு ஆளில்லைன்னு தெரிஞ்சு, ரொம்பவே வேதனைப்பட்டார் அப்பா. ரிட்டையர்ட் ஆன பிறகு ஆழ்வார்திருநகரிக்கு வந்துட்டார். அப்புறம் வயசாயிட்டதால, பார்வை மங்கலாகி, அப்பாவால புத்தகங்கள் படிக்க முடியலை. புத்தகங்களைப் படிச்சு நான் சொல்லச் சொல்ல, அதைக் கேட்டு அப்பா பிறகு உபன்யாசம் பண்ணினார். ஒருகட்டத்துல, 'பகவானுக்குக் கைங்கர்யம் பண்றதைவிட, வேற பெரிய வேலை எதுவுமில்லை’ன்னு நானும் வேலையை விட்டுட்டு, உபன்யாசம் பண்றதுல இறங்கிட்டேன். இது என் வாழ்க்கைல மட்டுமில்லாம, என் பையன் சடஜித் வாழ்க்கையிலும் திருப்புமுனையா அமைஞ்சுது. உபன்யாசத்துல ஸ்ரீமந் நாராயண சரிதத்தை எப்படிச் சொன்னா நல்லாருக்கும், எதைச் சொன்னா எல்லாருக்கும் புரியும்னு கதை கதையா பல விஷயங்களை அப்பாகிட்டக் கேட்டுத் தெரிஞ்சுக்குறது என் வழக்கம். அதையெல்லாம் அருகில் இருந்து உன்னிப்பா கேட்டுக்கிட்டிருந்த சடஜித், பிறகு மெள்ள மெள்ள அந்தக் கதையை வரி விடாம, வார்த்தை மாறாம அப்படியே திருப்பிச் சொன்னப்ப, ஆச்சரியமாகிட்டோம். எதையும் சட்டுன்னு புரிஞ்சுக்கற அவனோட சாமர்த்தியமும் சாதுர்யமும்தான் அவனை மேடையில ஏத்தி, உபன்யாசம் செய்யற அளவுக்கு உசத்தியிருக்குன்னு நினைக்கிறேன்'' என்று விவரமாகச் சொல்லி முடித்தார் ஸ்ரீராம்.
''அப்புறம்... தினமும் தூங்கப் போகும்போது அவனுக்குக் கதைகள் சொல்ல ஆரம்பிச்சோம். பகவானோட கதைகளையே சொல்ல ஆரம்பிச்சோம். எல்லாத்தையும் ரசிச்சுக் கேட்டு உள்வாங்கிக்கிட்டான் சடஜித். ராமாயணம், ஆழ்வார்கள், ஆண்டாள், கஜேந்திர மோட்சம், திருப்பாவைப் பாடல்கள், நாலாயிர திவ்வியப் பிரபந்தம்னு கேட்டு உள்வாங்கிக்கிட்டப்ப அவனுக்கு மூணு வயசு!'' என்றார் பத்மா. 
''சேலத்துலதான், முதன்முதலா என்னோடு கூடவே மேடையேறினான். திருப்பாவை பத்தி அவன் உபன்யாசம் பண்ணினான். மூணு நாலு மணி நேர உபன்யாசத்தின் நடுநடுவே அவனும் ஒரு பத்து நிமிஷம் பேசுவான். அன்னிக்குக் கைத்தட்டல் மொத்தமும் அவனுக்குத்தான் கிடைச்சுது. அப்புறம் தினமும் ஆழ்வார்கள் பத்தி, ஒரு பத்து இருபது நிமிஷம் அவனே தனியா மழலைக் குரல்ல முழுக்கதையையும் சொல்லச் சொல்ல, மக்கள்கிட்டேருந்து ஏகப்பட்ட பாராட்டுக்கள்'' என்று சொல்லும்போதே தெரிந்தது, அந்தத் தந்தையின் பூரிப்பு! 
''ஊர்ல உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சொல்லிக்கொடுக்கறார் அவர். அதுல அவனும் சேர்ந்து கத்துக்கறான். மத்தபடி, உபன்யாசத்தன்னிக்கி, 'இதெல்லாம் சொன்னா நல்லாருக்கும்’னு அவர் கதையைச் சொல்வார். அப்பக்கூட அவன் விளையாட்டாதான் கேட்டுக்குவான். ஆனா, சாயந்திரம் உபன்யாசத்துல அப்பா சொல்லிக் கொடுத்த அத்தனையையும் ஒண்ணு விடாம, ஏத்த இறக்கங்களோட அவன் சொல்றதைப் பார்க்கும்போது, எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கும்.
ஒருமுறை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப் பக்கத்துல அவனோட உபன்யாசம். நல்ல கூட்டம். ஒரு அம்மா வந்து, 'பிரமாதமா உபன்யாசம் பண்றேடா கண்ணா. நன்னா இருப்பே!’னு சொல்லிட்டுப் போய், மறுநாள் மயிலாப்பூர்லேருந்து அம்பது நூறு பேரைக் கூட்டிட்டு வந்திருந்தாங்க. அசந்து போயிட்டோம். அதேபோல, ஆசிரியை ஒருத்தங்க சடஜித்தோட உபன்யாசத்தைக் கேட்டுட்டு, 'கட்டிப்போட்டு வைக்கிற மாதிரியான பேச்சுன்னு சொல்லுவாங்களே... அப்படிப் பேசி, எங்களையெல்லாம் கட்டிப்போட்டுட்டான் உங்க பையன்’ன்னு சொன்னப்ப, பெத்த வயிறு குளிர்ந்து போச்சு!'' என்று ஆனந்தக் கண்ணீர் பொங்கச் சொன்னார் பத்மா.
ஆழ்வார்திருநகரியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சடஜித், படிப்பிலும் கெட்டி! தவிர, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி என எதிலும் தூள்பரத்துகிறான். ''படிப்பு கெட்டுப் போயிடப் போறதுடா கண்ணா! உபன்யாசமெல்லாம் இப்ப வேணாம். படிப்புல கவனம் செலுத்தினாத்தான் எதிர்காலத்துல நல்ல உத்தியோகத்துல, காசும் பணமுமா, வீடும் வாசலுமா இருக்கலாம்னு சொன்னா, பாவம் குழந்தை, முகம் வாடிப் போயிடுறான். 'கடவுள் பத்திப் பேசுறதை நிறுத்தமாட்டேன்’னு அழறான். அது அவன் ஆசை மட்டுமே இல்லை போலிருக்கு; பகவானோட சங்கல்பமும் அதான்போல!'' என்று கைகுவித்து, திருமாலுக்கு நன்றி தெரிவிக்கின்றனர் பத்மாவும் ஸ்ரீராமும்.
தமிழ்கூறும் நல்லுலகுக்கு, அற்புதமான உபன்யாசகர் கிடைத்துவிட்டார்.

Comments