பெண் இனத்துக்கே உதாரணமாக விளங்கிய குந்திதேவி!

திர்ஷ்டசாலியை ஈன்றெடு; வீரனோ அறிஞனோ வேண்டாம்!' - தன்னை வணங்கி, ஆசி தருமாறு வேண்டிய நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருத்திக்கு குந்திதேவி தந்த வாழ்த்து இது!

பாரதப் போரில் வீரர்களது சூரத்தனம் பயனளிக்கவில்லை. அகங்காரம் மேலிட, அண்ணன்- தம்பி என்று பார்க்காமல், வீரத்தை வீணடித்தார்கள். அறிஞர்களது செயல்பாடுகளும் திருப்தி அளிக்கவில்லை. கௌரவ அவையில் திரௌபதியின் துன்பத்தைக் கண்டும் பீஷ்மர், துரோணர், விதுரர் முதலான அறிஞர்கள் மௌனமா கவே இருந்தனர். இதுபோன்ற சம்பவங்களைக் கண்டு நொந்து போன குந்திதேவியின் மன ஆதங்கமே இப்படியரு வாழ்த்தாக வெளிப்பட்டது!

குந்திபோஜன் எனும் மன்னனுக்கு மகளாகப் பிறந் தவள் குந்திதேவி. தன் மகளுக்கு, 'பிருதா' என்று பெயரிட்டார் குந்திபோஜன். எனினும், 'குந்தி' என்ற பெயரே பிரசித்தம் ஆயிற்று. இளம் வயதிலேயே நன்னடத்தையுடன் திகழ்ந்தாள் குந்தி!ஒருமுறை, குந்திபோஜனின் அரண்மனைக்கு விஜயம் செய்தார் துர்வாச முனிவர். அவரை சிறப்புற வரவேற்று உபசரித்தார் குந்திபோஜன். அத்துடன், முனிவருக்குத் தங்கும் இடம் அளித்து, அவருக்குப் பணிவிடை செய்யும் பொறுப்பைத் தன் மகளிடம் ஒப்படைத்தார்.
சிறுமியாக இருந்தாலும் பக்தியுடன் உளப்பூர்வ மாகத் தனக்குப் பணிவிடை செய்த குந்தியின் செயல்பாடு, துர்வாசரை நெகிழச் செய்தது. ''என்ன வரம் வேண்டும்? கேள்!'' என்றார் முனிவர்.

அதற்கு, ''தாங்களும் என் தந்தையும் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தங்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்புக் கிடைத்ததையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். தவிர, எதுவும் கேட்காமலேயே எனது தேவைகள் அனைத்தும் நிறைவேறுகின்றன. தங்களிடம் பிரார்த்தித்துப் பெறுவதற்கு எதுவும் இல்லையே!'' என்று பதிலளித்தாள் சிறுமியான குந்தி. 'தேவைக்கு மேல் சேமிப்பவனை திருடன்' என்கிறது தர்மசாஸ்திரம். இதை, குந்தியும் அறிந்திருந்தாள். குந்தி மறுத்தாலும் அதையும் மீறி அவளுக்கு ஏதாவது தர வேண்டும் என்று முனிவர் விரும்பினார். எனவே, ''சரி... வரம் வேண்டாம். நினைத்தபோது தேவர்களை வரவழைத்து, அவர்களை உனது கட்டுப்பாட்டில் இயங்க வைக்கும் மந்திரத்தை உனக்கு ஓதுகிறேன்... அதையாவது பெற்றுக் கொள்!'' என்று வற்புறுத்தினார் துர்வாசர்.

எதிலும் பற்றற்றவள் குந்திதேவி. எனினும் தனது நலன் கருதி செயல்படும் முனிவரது உள்ளத்தை மகிழ்விக்க, அவரது உபதேசத்தை ஏற்றாள்.
காலங்கள் கடந்தன. பாண்டுவுக்கு மனைவியா னாள் குந்தி. ஒருமுறை கிந்தம முனிவரது சாபத்துக்கு ஆளானான் பாண்டு. இதனால் மனம் வருந்திய பாண்டு, அரசைத் துறந்து காட்டுக்குச் செல்ல ஆயத்தமானான். குந்தியும் அவனைப் பின்தொடர்ந்தாள்; கணவனைப் போல தானும் புலனடக்கத்தை மேற்கொண்டாள்.

துர்வாசரது மந்திரோபதேசம், தெய்வாம்சம் பொருந்திய புதல்வர் களை குந்திதேவிக்குப் பெற்றுத் தந்தது. மாத்ரியின் (பாண்டுவின் மற்றொரு மனைவி) புதல்வர்களையும் சேர்த்து ஐந்து குழந்தைகளுக்கும் தானே தாயானாள். பாண்டுவின் மறைவுக்குப் பிறகு புதல்வர்கள் ஐவரையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றாள். ஆம், 'கணவன் இறந்து போனால், அவரது பொறுப்பையும் ஏற்று மனைவியானவள் செயல்பட வேண்டும்' என்ற தர்மசாஸ்திர அறிவுரைக்கு ஏற்ப, குடும்பப் பாரத்தை ஏற்றாள் குந்திதேவி.

பிற்காலத்தில், துரியோதனனால் ஏற்பட்ட அனைத்து இன்னல்களையும் பொறுத்துக் கொண்டாள். மௌனம் கலகத்தை அகற்றும் என்பது தர்மசாஸ்திரத்தின் கூற்று. அரக்கு மாளிகைக்குத் தீயிட்ட துரியோதனனின் சதித் திட்டத்தில் இருந்து புதல்வர்களுடன் தப்பித்த குந்தி, 'ஏகசக்ரா' எனும் நகரில் வசிக்கலானாள். அங்கு வாழ்ந்த மக்கள், பகாசுரன் எனும் அசுரனது கொடுமைகளால் அவதிப்பட்டு வந்தனர்.

தினமும் வீட்டுக்கு ஒருவர், அசுரனுக்கு உணவு பதார்த்தங்களை வண்டியில் சுமந்து செல்ல வேண்டும். உணவுப் பதார்த்தங்களுடன், அதைக் கொண்டு செல்லும் நபரையும் விழுங்கி விடுவான் அசுரன். ஒருவரும் அவனது இருப்பிடத்துக்குச் செல்லவில்லை எனில், அவன் ஊருக்குள் புகுந்து விடுவான்!

இந்த அப்பாவி மக்களை, பகாசுரனிடமிருந்து காப்பாற்ற விரும்பினாள் குந்தி. மகாத்மாக்கள் தங்களது துயரத்தை மறந்து, மற்றவர்களது துயரை துடைப்பார்கள் என்று சாஸ்திரம் சொல்லும். குந்தி யும் அப்படித்தான்!
அவளும் அவளின் மைந்தர்களும் பிக்ஷை எடுத்து உண்ணும் அவல நிலை! ஒரு நாள், அந்த ணர் ஒருவரது வீட்டுக்குச் சென்று பிக்ஷை கேட்டனர் பாண்டவர்கள். ஆனால், அந்தணரது வீடே சோகத்தில் ஆழ்ந்திருந்தது. அன்று அவர்களது வீட்டில் ஒருவர், பகாசுரனுக்கு உணவு கொண்டு செல்ல வேண்டிய முறை. இதையறிந்த குந்தி வருந்தினாள். அந்தணரை அணுகியவள், ''தங்களின் ஒரே மகனை பகாசுரனிடம் அனுப்பினால் உங்களின் வம்சம் அழிந்து போகும். எனவே, உங்கள் வீட்டு சார்பாக என் புதல்வர்களில் ஒருவனை அனுப்புகி றேன்!'' என்றாள். கண்ணீரோடு ஒப்புக் கொண்டார் அந்தணர். இதையடுத்து, தன் மகன் பீமனை அனுப்பி வைத்தாள் குந்திதேவி.

'அரச போகமோ, மறு பிறவியற்ற மோட்சமோ வேண்டாம். துன்பப்படுவோரது துயரத்தை நான் ஏற்று, அவர்களை விடுவிக்கும் வாய்ப்புக் கிடைத்தால்... அதுவே எனக்கு மகிழ்ச்சி' என்பது நந்திதேவனின் வாக்கு (ப்ராணினாம்... ஆர்த்தினாசனம்). இந்த உயரிய பண்பை குந்திதேவி யிடமும் காண முடிந்தது. உணவுப் பதார்த்தங்களுடன் சென்ற பீமன், அசுரனை அழித்தான். ஏகசக்ரா நகரவாசிகள் துன்பத்தில் இருந்து மீண்டனர்.
சுயம்வரத்தில் அர்ஜுனன் வெற்றி பெற்றுவிட... திரௌபதி யுடன் பாண்டவ சகோதரர்கள் ஐவரும் அன்னையைச் சந்திக்க வந்தனர். வாயிலில் நின்றபடி, ''இன்று ஒரு பிக்ஷை எடுத்து வந்திருக்கிறோம்!'' என்றனர். திரும்பிப் பார்க்காமலேயே... ''ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்!'' என்றாள் குந்திதேவி.


பின்னர்... தன் மைந்தர்கள், 'பிக்ஷை' என்று சொன்னது திரௌபதியையே என்பதை அறிந்ததும் மனம் கலங்கினாள். கூறிய வார்த்தையைத் திரும்பப் பெறுவது ஸனாதன தர்மத்துக்கு எதிரானது. அதே நேரம்... 'பெண்ணைப் பகிர்ந்து கொள்ள கூடாது' என்கிறது தர்மசாஸ்திரம். செய்வதறியாமல் திகைத்தாள் குந்திதேவி! தருமரிடம் ஆலோசித்தாள். சத்தியத்தைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்தினார் தருமர். ஆனால், திரௌபதியின் தந்தையான துருபத மன்னனோ தர்மசாஸ்திரப்படி நடக்குமாறு நிர்பந்தித்தார்.இந்த நிலையில், அங்கு வந்த வியாச முனிவர், திரௌபதியின் முற்பிறவிக் கதையை விவரித்தார். அத்துடன், ''ஈசன், 'ஐந்து பேர் உன்னை மணப்பார் கள்' என்று திரௌபதிக்குத் தந்த வரம், குந்திதேவி யின் மூலம் பலித்தது; குந்தியின் வாக்கும் உண்மை என்பது நிரூபணமானது!'' என்று குந்தியை ஆறுதல்படுத்தினார் வியாசர்.
பாண்டவர்களது அஞ்ஞாதவாச காலத்தில், குந்திதேவி அஸ்தினாபுரத்தில் இருந்தாள். க்ஷத்திரிய தர்மத்தில் நிலைத்து நிற்கும்படி ஸ்ரீகிருஷ்ணர் மூலம் தன் புதல்வர்களுக்கு அறிவுரை வழங்கினாள். 'க்ஷத்திரிய குலப்பெண்கள் எதற்காக புதல்வர்களை ஈன்றெடுக்கிறார்களோ... அதை செயல்படுத்தும் தருணம் வந்து விட்டது!' என்று வரப்போகும் போர் குறித்து சூசகமாகத் தெரிவித்தாள் (யதர்த்தம் க்ஷத்ரியா சூதெ தஸ்ய காலோயமாகத:). ஆம், அரசியல் அறிவும் தீர்க்க தரிசனமும் ஒருங்கே குடியிருந்தன குந்திதேவியிடம்!

பாரதப் போர் முடிந்து, தர்மருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. ராஜ மாதாவாக இருக்க வாய்ப்பு கிடைத்தும் குந்திதேவி ஏற்கவில்லை. புத்திர சோகத்தில் தவிக்கும் காந்தாரி போன்றவர்களை ஆறுதல்படுத்தி, சேர்ந்து வாழுமாறு அவர்களை வற்புறுத்தினாள். இறுதியாக வனவாசம் ஏற்கவும் தயாரானாள் குந்திதேவி.''தங்களது முடிவு இதுவானால்... எங்களை எதற்காக போரில் ஈடுபடத் தூண்டினீர்கள்? இப்படியரு பேரழிவை நிகழ்த்தாமல் இருந்திருக்க லாமே? இத்தனை சிரமங்களும் எதற்காக... உயிரினும் மேலான உங்களைப் பிரிவதற்காகவா?'' என்று பீமன் வினவினான்.


அதற்கு, ''நீங்கள் க்ஷத்திரிய தர்மத்தில் ஊன்றி இருக்கவும். அறத்தை நிலைநாட்டி நல்லாட்சியை அமைப்பதற்காகவும்தான் இத்தனை சிரமங்களும்! எனக்கு அரச போகங்களில் பற்று இல்லை. தவத்தில் ஆழ்ந்து கணவனுடன் இணைய விரும்புகிறேன்!'' என்றாள் குந்திதேவி.
பொறுப்பு, பொறுமை, வாய்மை, பிறரது துன்பத்தைத் தீர்க்க துடிக்கும் நல்ல மனம், இக்கட்டான தருணங்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் சாமர்த்தியம், தீர்க்கதரிசனத்துடன் கூடிய அறிவுரைகள் வழங்கும் திறன்... என்று பெண்ணினத்துக்கே முன்னுதாரணமாகத் திகழும் குந்திதேவியின் சரிதம், நம் அனைவருக்கும் வாழ்க்கைப் பாடம்!

இல்லறத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும் ஆசையையும் அகங்காரத்தையும் விலக்கி வாழ்வில் நலம் பெற, இன்றைய பெண்களுக்கு குந்திதேவியின் கதை நிச்சயம் உதவும்!

Comments