ஜெயவீர ஆஞ்சநேயர்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இன்றளவும் தினசரி பூஜைகள் நடந்து வரும் கோயில் என்றால் அதன் சிறப்பு சொல்லாமலே விளங்கும்.
அப்படிப்பட்ட ஆலயமாக விளங்குகிறது. பேரூரில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் ஆலயம்.
மூலவர் முசுகுந்த சக்ரவர்த்தியின் விருப்பப்படி மத்வகுரு வியாசராய சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இது குறித்து ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
ஒரு சமயம் கயிலாய மலையில் சிவ பெருமானும் பர்வாதிதேவியும் வில்வமரத்தடியில் அமர்ந்து உரையாடி கொண்டிருந்தனர். அங்கிருந்த வில்வ மரங்களில் குரங்குகள் கூட்டமாக தங்கி இருந்தன. சிவபெருமான் அமர்ந்திருந்த மரத்தின் மீது இருந்த வயது முதிர்ந்த முசு (குரங்கு) ஒன்று வில்வ இலைகளை பறித்து அவர்கள் மீது போட்டு கொண்டே இருந்தது.க்ஷ
பார்வதிதேவி இச்செயலை கண்டு கோபிக்க, பரமன் அந்த முசுவுக்கு அஞ்ஞானத்தை அகற்றி மெஞ்ஞானத்தை அருளினார். ஞானம் பெற்ற குரங்கு கீழே இறங்கி வந்து அம்மை அப்பர் தாள் வணஙகி நின்றது.
உடனே ஈசன் நீ சிறந்த வில்வ பத்திரங்களால் என்னை அர்ச்சித்தாய். யாம் அகம் மகிழ்ந்து போனோம். நீ மனுவம்சத்தில் பிறந்து உலகை அரசாள்வாயாக என அருளினார்.
அதற்கு தலை வணங்கியபடி முசு ஐயனே, நான் மானிடப்பிறவி எடுத்தாலும் உலக மாயையில் மயங்காதபடி இந்த குரங்கு முகத்துடன் பிறக்கும்படி அருள்வீர்களாக என்றது. பரமனும் அவ்வாறே அருள் புரிந்தார். சிறிது காலத்தில் அரிச்சந்திர மகாராஜா வம்சத்தில் குரங்கு முகத்துடன் மானிடப்பிறவு எடுத்த முசுவுக்கு முசுகுந்தன் எனப்பெயரிட்டனர். அவரது பெற்றோர். வளர்ந்த பிறகு முசுகுந்த சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டு ராஜராஜ சோழன் பிரதிநிதியாக கோவை பகுதியில் அரசாட்சி புரிந்து வந்தார்.
குரங்கு முகத்துடன் இருக்கும் முசுகுந்தரை உடலில் குறைபாடு நாட்டிலும் குறைப்பாடு என சிலர் விமர்ச்சித்தது மிகவும் பாதித்தது.மனம் நொந்து பிருகு மாமுனியை தரிசித்து தனது குறைகளை விளக்கினார்.
பிருகு மாமுனிவர் காஞ்சிமா நதிக்கரையில் ஒரு கோயில் எழுப்பி, அதில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தால் உனது உடல் குறைபாடு நீங்கும். நீ அரசாட்சிபுரியும் நாடும் சுபிட்சம் பெரும் என்றார்.
அதன்படி காஞ்சிமா நதிக்கரையில் (தற்போது நொய்யல் ஆறு) சிறிய கோயில் எழுப்பி அதில் முசுகுந்த சக்ரவர்த்தியின் விருப்பப்படி மத்வகுரு வியாசாரய சுவாமிகளால் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ஆதியில் அனுமந்தராய சுவாமி என்ற திருநாமத்தில் விளங்கியவர் தற்போது ஜெயவீர ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார். இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரின் திருமேனி ஒரே கல்லால் உருவானது. அஷ்டாம்சம் பொருந்திய அவரது திருஉருவம் தனிப்பெருமை சிறப்பாகும்.
வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஜெய வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதானைகள் நடைபெறுகிறது. வார நாட்களில் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும் தரிசன நேரங்கள்.
இக்கோயிலின் தலையாய திருவிழா, மார்கழி மாதம் மூல நட்சத்திர தினத்தில் கொண்டாடப்படும்.அனுமன் ஜெயந்தி ஆகும். அதில் திருவீதி உலா முக்கிய நிகழ்வாகும். அன்று நடைபெறும் ஆராதனைகளில் கலந்த கொண்டு அனுமனை தொழுது ஜெயத்தோடு திரும்புங்களேன்.
கோவை மாநகரில் பட்டீஸ்வரர் கோயிலிருந்து நொய்யல் நதிக்கு செல்லும் பாதையில் நதிக்கரையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் உள்ளன.

Comments