அன்புள்ள நண்பனைத் தேடுங்கள்.

ளம் வயதில் ஒருவனுக்கு, வீட்டை விட வெளி உலகம் கவர்ச்சியாக இருக்கிறது. உறவுகளை விட, நண்பர்கள் மிக நெருக்கமானவர்களாகத் தோன்றுகின்றனர்.
தன்னையும் தனது உணர்ச்சிகளையும் மூத்த தலை முறை கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் உள்ளிருந்து புகைய ஆரம்பிக்கிறது. ஆதலால், நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும், கண்ணைக் கரிக்கும் கனாக்களை வளர்ப்பதும், வீணே பொழுது போக்குவதுமாக இளமை தடுமாறுகிறது. இந்தப் பருவத்தில் நல்ல நண்பர்களைத் தேர்வு செய்ய பலருக்கும் முடிவது இல்லை.
ஒரே தெருவில் வசிப்பவர்கள், ஒரே வகுப்பில் படிப்பவர்கள் எளிதில் நண்பர்களாக மாறுகிறார்கள். இப்படி நட்புக்கரம் நீட்டி வருபவர்களது உறவுகளுக்குப் பின்னே, என்னென்ன விளைவுகள் அணிவகுத்து வரும் என்பதை எவரும் கணிப்பதில்லை.
தாமரை பூத்த தடாகத்துக்குள்ளேயே முதலைகளும் வசிப்பது போல், சிரித்துப் பழகும் அந்த நண்பர்களுக்குள்ளேயே சீரழிவுகளும் இருந்து விடுகின்றன. ஆதலால்... நிலத்தியல்பால் நீர் திரிவது போல், சேர்க்கைகளின் தொடர்பால் வாழ்க்கை திரிவதும் நிகழ்கிறது.

புகை பிடிக்கும் இளைஞனை கேட்டுப் பாருங்கள். அவனது முதல் சிகரெட், அவனது நண்பனால் பற்ற வைக்கப்பட்டதைச் சொல்வான். ஒவ்வொரு குடிகாரனின் மதுக் கோப்பையும், அவனது நண்பனால் நிரப்பப் பட்டிருக்கும் என்பதே நிதர்சனம். ஏதோ ஓர் அரசியல் கட்சி அல்லது ரசிகர் மன்றத்தின் கட்டுத்தறியில் ஒருவன் கட்டப்படுவதற்கு காரணமாக- கயிறாக இருப்பவனும் நண்பனே!
இப்படி நண்பனாக வந்து, வாழ்க்கைக்கே பகையாக நம்மை மாற்றும் ஒருவனிடம் எச்சரிக்கை தேவையா? இல்லையா?
இந்த எச்சரிக்கை உணர்ச்சியை மழுங்கடித்து விடுகிறது இளமையின் உணர்ச்சி! ஆதலால், தரம் கெட்ட நண்பர்களது தொடர்பால், எதிர்காலம் இருட்டில் தள்ளப்படும் அபாயம் உண்டு. எனவே, நட்பில் எச்சரிக்கை தேவை.
பொதுவாக, நம் நண்பர்களை வைத்தே நம்மையும் ஊர் எடைபோடும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். பனை மரத்தடியில் நின்று பால் குடித்தாலும், கள் குடித்ததாகவே ஊர் பேசும். இந்தப் பேச்சுக்கு ஏன் இடம் தர வேண்டும்? தீயவர்களது நட்பை அறவே துடைத்து விட வேண்டும். இவர்களுடன் பழகுவதால் நாமும் தீயவர்கள் ஆகி விடுவோமா? வேப்பிலைகளால் மூடப்பட்டு, பழுத்தாலும் வாழைப்பழம் இனிப்பாகத்தானே இருக்கிறது. அதுபோல், கெட்ட சகவாசத்திலும் நான் நானாகவே இருப்பேன் என்று சிலர் எண்ணுகிறார்கள். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில்... நண்பர்கள், நமது பழக்க வழக்கங்களில்- பண்பில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துபவர் களாகவே இருக்கிறார்கள்.
ஏதாவது ஒரு காரியத்தை நீங்கள் செய்ய நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, உங்கள் நண்பர்கள் அதைப் பற்றி விதவிதமாக விமர்சிப்பார்கள். உதாரணமாக... நீங்கள், பெரிய மகான் ஒருவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். உங்கள் நண்பர்களில் சிலர், 'மரியாதை மனதில் இருக்க வேண்டும். காலில் விழும் கலாசாரம் கூடாது' என்று உங்களுக்கு உபதேசிப்பார்கள்.
விவேகானந்தர், நரேந்திரனாக இருந்தபோது, 'ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்திக்காதே. அவர் ஆபத்தான ஆள்!' என்று பயமுறுத்திய நண்பர்கள் உண்டு.
உங்களுக்கு கோழைத்தனம் மிக்க நண்பன் ஒருவன் இருந்தால், உங்களது வீரத்தையும் அவன் பலவீனப்படுத்தி விடுவான். ஒழுக்கம் கெட்ட ஒருவன் நண்பனாக இருந்தால், உங்களது ஒழுக்கத்தையும் கறைப்படுத்தி விடுவான்.
இதனால்தான், நமது மனத் தூய்மையும் நாம் செய்யும் வினையின் தூய்மையும்கூட இனத்தின் தூய்மைக்கு ஏற்ப மாறும் என்கிறார் வள்ளுவர்.
நண்பர்களால், நம் மனம் திரிபடையும்; நமது செயல்கள் மாற்றம் அடையும் என்பதை அறிந்தால், கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்போம்.
சிறுமையும், சுயநலமும் நிறைந்த ஒருவனை நண்பனாகக் கொண்டிருந்தால், ஆயிரம் எதிரிகளை அடைந்த தற்குச் சமமான துன்பத்தை அவன் ஒருவனே தருவான்! ஒரு கதை...
ஒருவன் கேட்டான்: ''நண்பா, பெரிய பணக்காரர் ஒருவர், தன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரச் சம்மதித்திருக்கிறார். பெண் ரொம்ப அழகு. ஆனாலும் என் தகுதிக்கு அவ்வளவு பெரிய இடம் சரிப்படுமா என்று எனக்குள் ஒரு நெருடல்! நீ என்ன நினைக்கிறாய்?''
நண்பன் பதில் சொன்னான்: ''நீ யோசிப்பது ரொம்பவும் சரி. என்னைக் கேட்டால், இந்தச் சம்பந்தம் வேண்டாம் என்றே சொல்வேன். நீ ஏழை! அவர்களோ பணக்காரர்கள். அதனால் உனக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அப்புறம்... அவளை அழகானவள் என்கிறாய். அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறாய்தானே? பேசாமல் வேறொரு சம்பந்தம் வந்தால்... தகுதிக்கு ஏற்ற
இடத்தில் கல்யாணம் செய்து கொள், அதுதான் சரி! அப்புறம் ஒரு விஷயம்... அந்த பணக்காரரது விலாசத்தை என்னிடம் கொடு!''
_ இப்படியும் சில நண்பர்கள் இருப்பார்கள், உடனிருந்துகொண்டே உங்களை உயர விடாமல் தடுப்பதற்கு!
இன்னும் சிலரிடம், உங்களது அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது. பகிர்ந்து கொள்ளவும் கூடாது. இன்று இரவு உங்கள் ரகசியத்தை அவருடன் பகிர்ந்து கொண்டால், நாளை அந்த ரகசியம் ஊரெங்கும் சுவரொட்டியாக ஒட்டப்பட்டுவிடும்!
அன்பர் ஒருவர் சொன்ன தகவல்... ''என் நண்பர் ஒருவர், எனது மோதிரத்தை இரவலாக வாங்கிச் சென்றார். சில நாட்களில், திருப்பிக் கொடுத்தார். ஆனால், அவர் தந்தது எனது மோதிரம் அல்ல; எனது மோதிரத்தைப் போலவே இருந்த கவரிங் மோதிரம். இந்த உண்மை தெரியவே எனக்கு ஒரு வருடம் ஆயிற்று!'' என்றார்.
_ நண்பர்களில் சிலர் இப்படியும் இருப்பார்கள். ஆகவே, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழக வேண்டும். போலி நண்பர்கள் நிறைய பேர் இருப்பதை விட, நல்ல நண்பர்கள் சிலர் இருந்தாலே போதும்.
நல்ல நண்பன் என்பவன், நமது நடத்தைகளைச் சீர்படுத்துகிறவனாக இருக்க வேண்டும். நமது துன்பத்தில் அவன் விழிகள் கலங்க வேண்டும். நமது வாழ்க்கைச் சக்கரத்துக்கு அவன் அச்சாணியாக இருக்க வேண்டும்; முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. நட்பில், கொடுக்கல்- வாங்கல் இருக்கலாம். ஆனால், கொடுக்கல்- வாங்கலுக்காகவே நட்பு இருந்தால் அவ்வளவு நல்லதில்லை.
நட்பு எனும் அழகிய, இனிய உறவைக் காப்பாற்றும் தகுதி பலரிடம் இல்லை. சிலரால் மட்டுமே நல்ல நட்புடன் இருக்க முடிகிறது. அதனால் சுயநலம் மிகுந்த உறவுகளை டீக்கடை வாசலுடன் அனுப்பி வைத்து விட்டு, நல்ல உறவுகளையும் நட்புகளையும் கல்லறை வரை தொடர வேண்டும்.
மகாபாரதத்தில், ஸ்ரீகிருஷ்ண பகவான் தூதுவராக வந்த நேரம். பலர் சொல்லியும் துரியோதனன் சமாதானப் பேச்சை கேட்கவே இல்லை. அவன் நண்பனான கர்ணன், நல்லறத்தையும், நன்னெறிகளையும் துரியோதனனுக்கு போதித்திருக்க வேண்டும். ஆனால் சமாதானத்துக்குப் பதிலாக சண்டை இழுப்பதிலேயே குறியாக இருந்தான் கர்ணன். இடித்துரைத்து, தன் நண்பனைத் திருத்தவில்லை. இதனால் அவனும் அழிந்து, துரியோதனன் அழிவுக்கும் வழிவகுத்தான். இப்படியும் சில நண்பர்கள்!
'யூ டூ புரூட்டஸ்!' என்ற வாசகம் பிரபலம்!
தன் நண்பனின் துரோகத்தைக் கண்டு, 'நீயுமா புரூட்டஸ்!' என்றபடி உயிரைவிட்டானாம் சீசர்! புரூட்டஸ் மாதிரியும் ஆட்கள் இருக்கிறார்கள். அதாவது, எதிர்பாராத நேரத்தில் முதுகில் குத்துவார்கள்!
நல்ல நண்பர்கள் அபூர்வமாகவே வாய்ப்பார்கள். அவர்களையும், அவர்களது நட்பையும் காப்பாற்றத் தெரிந்திருக்க வேண்டும். குசேலன் பணக்காரர் ஆன பிறகு, கண்ணனிடம் வந்து கண்கலங்கினாராம்... ''கிருஷ்ணா! என்னைப் பணக்காரன் ஆக்கிவிட்டாய். பணம் இருந்தால் உன்னை மறக்க நேருமோ என்று பயமாக இருக்கிறது. ஒன்று... உன்னை மறக்காத வரம் கொடு. இல்லையெனில், இந்த செல்வத்தை எடுத்துக் கொள். ஏழ்மையில் இருந்தால் உன்னை அடிக்கடி நினைப்பேன். என் மனைவியும் உன்னை நினைவூட்டிக் கொண்டே இருப்பாள்!''
_ எப்படி பார்த்தீர்களா? அன்பு, பணத்தைவிட வலியது. அன்புள்ள நண்பனைத் தேடுங்கள்.

Comments