ஆன்மீக வினா -விடைகள்

'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பர். நானும் நூற்றுக்கணக்கான கோயில் கோபுரங்களை தரிசித்து விட்டேன். ஆனால், புண்ணியம்தான் கிடைத்ததாக தெரியவில்லை?!

வியாபாரமயமாகி விட்டது இன்றைய உலகம். இதில் ஆன்மிகம் மட்டும் விதிவிலக்கா என்ன? இந்த வழிபாட்டுக்கு இவ்வளவு புண்ணியம் என்கிற அட்டவணை எல்லாம் கிடையாது! மனம் சார்ந்த விஷயத்தில் அணுகுமுறை மாறுபாடும். தங்களின் மனம் புண்ணியத்தின் அளவை எதிர்பார்த்தே செயல்படுகிறது. இதுபோன்ற எதிர்பார்ப்புகள், பக்தியின் தரத்தைக் குறைத்து விடும். வெறும் செயல்பாடு பக்தியாகாது. ஆத்மார்த்தமான செயல்பாட்டில், பலன் குறித்த சிந்தனை இருக்காது.
பலனை மனதில் கொண்டு, லட்சக்கணக் கான... ஏன், கோடிக்கணக்கான கோபுரங் களை தரிசித்தாலும் புண்ணியம் கிடைக்காது. புண்ணியம் என்பது வியாபாரப் பொருள் அல்ல! நற்செயலில் ஆழ்ந்திருந்தால் நல்லதையே சந்திப்போம். இதைத்தான் புண்ணியம் என்கிறோம். 'மனதில் என்னை மட்டும் நினைத்து வழிபட்டால், நான் அருள் வேன்' என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இறைவனை நினைத்த மனம், வேறு எவரையும் எதையும் எண்ணாது. தாங்கள், புண்ணியத்தை மட்டுமே மனதில் கொண்டு, பகவானை மறந்து விட்டீர்கள்.
கடவுளின் நினைவை மனதில் தக்க வைப்பது, அவ் வளவு சுலபமல்ல. ஆனால், இந்த நிலையை அடைந்து விட்டால்... அதுவே உங்களுக்கு கோடி புண்ணியத்தை நிச்சயமாகத் தந்து விடும்.

குளக்கரை மற்றும் ஆற்றங்கரையில் திதி கொடுக்கலாமா? அல்லது வீட்டில் வைத்துதான் திதி கொடுக்க வேண்டுமா?

றை உருவ வழிபாடு, வேள்வி, ஜப ஹோமங்கள் மற்றும் முன்னோர் ஆராதனை ஆகியவற்றை மேற்கூரை உள்ள இடத்தில் செய்வதே சிறப்பு என்கிறது தர்மசாஸ்திரம். முதல் வேள்வியை அறிமுகம் செய்த வேதம், கூரையுடன் அமைந்த இடத்தையே பரிந்துரைத்தது (அந்தர்ஹி தோஹி தேவலோகோ...).
நாமும் கூரையின் கீழ்தானே வாழ்கிறோம்?! வெட்ட வெளியிலா வசிக்கிறோம்? எனவே, வீட்டில் கொடுக்கும் திதிக்குத் தனிச் சிறப்பு உண்டு. புண்ணிய நதிகள், புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று அங்கு நீராடி தீர்த்த சிராத்தங்கள் நிகழ்த்தலாம். இதற்கென தனியே நேரம்- காலம் இருப்பதால் அந்த இடங்களில் திதி கொடுப்பது தவறில்லை. ஆனால், வீட்டில் கொடுக்க வேண்டிய திதியை நதி மற்றும் குளக்கரைகளில் கொடுப்பது தவறு. அது வேறு; இது வேறு! அதாவது... ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் நதி- குளங்களில் நீராடி, அங்கு திதி கொடுப்பதில் தவறு இல்லை.
முன்னோர்களை வழிபட வீட்டைப் பயன் படுத்தலாம். வீடு சிறியது அல்லது பொருளாதார வசதியின்மை என்று இருப்பவர்கள், ஆற்றங் கரையில் திதி கொடுக்கலாம். இருப்பினும் கூடிய வரை வீட்டில் திதி கொடுக்க முயற்சியுங்கள். இதனால், அடுத்த தலைமுறையினருக்கும் திதி கொடுக்கும் முறை பரிச்சயமாகும்!

தேரோட்டத்தின்போது வேண்டுதல் எனும் பெயரில் சிலர் பழம், மலர்கள், பிரசாதப் பொருட்கள் போன்றவற்றைத் தேருக்கு முன்பாக வாரி இறைக்கின்றனர். இதில் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மாறாக, இத்தகைய பொருட்களை, ஓரிடத்தில் இருந்தபடி அனை வருக்கும் வழங்கலாமே?


தாங்கள் விரும்பியதைச் செயல்படுத்தும்போதுதான் பக்தர்களின் மனம் நிறைவு பெறுகிறது. பக்தனின் மனப் போக்கு, சூழலையே மறக்கச் செய்யும். தேரையே கடவுளாக பாவிப்ப வன் பக்தன். சக்கரத்தைத் தொட்டு ஒற்றிக் கொள்வான். சக்கரம் பதிந்த மண்ணையும் நெற்றியில் இட்டுக் கொள்வான். தேர் இழுப்பவர்கள் வழுக்கி விழ மாட்டார்கள். சுதாரித்து விடுவர். அவர்களும் பக்தர்கள்தானே?!
ஆண்டவனை விட்டு விலகிய மனம், எதையும் வேறு விதமாகவே பார்க்கும். வீதியுலாவின்போது, 'ஸ்வாமிக்கு முன்னே எடுத்துச் செல்லப்படும் தீப்பந்தங்கள் மற்றும் வாணவேடிக்கைகளால் கூட ஆபத்து நேருமோ' என்று பயம் ஏற்படலாம். சிதறுகாய் உடைக்கும்போது, அருகில் நிற்பவர்களுக்கு விபத்து நேருமோ என்றும் புண்ணிய நதிகளில் நீராடும்போது, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்றும் எதிரிடையான எண்ணங்களும் நமக்குள் எழலாம்.எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கையுடன் இருங்கள். எந்த பாதிப்பும் நேராது!

அமாவாசையன்று நாள், நட்சத்திரம் சரியில்லை என்றாலும் நல்ல காரியங்களை ஆரம்பிக்கலாம் என்கின்றனர் சிலர். இது சரியா?


வறு. நாள்- நட்சத்திரம் பார்த்து தான் துவங்க வேண்டும். பொதுவாகவே நல்ல காரியங்களைத் துவங்குவதற்கு, அமாவாசையைத் தவிர்க்க வேண்டும். சுப காரியங்களை ஆரம்பிக்கும் நாள் நல்ல நாளாக, சுப வேளையாக (லக்னம்) இருக்க வேண்டும். தாரா பலன் பொருந்த வேண்டும். கூடவே, சந்திரனின் பலமும் (வளர்பிறை) வேண்டும் என்கிறது சாஸ்திரம் (ததேவ லக்னம் சுதினம் ததேவ...).
ஆனால், அமாவாசையன்று சந்திர பலம் இருக்காது. சந்திரனுக்கும் நம் மனதுக்கும் தொடர்பு உண்டு. மனம் ஒன்றிச் செயல்பட சந்திர பலம் உதவும். இதை இழப்பது தவறு. தவிர... தாரா பலம், யோகம் மற்றும் கரணம் ஆகியவற்றின் பங்கும் முக்கியம். இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு அமாவாசையன்று செயல்பட்டால், அதற்கு பலன் உண்டு என்பது சரியல்ல. அப்படி, அமாவாசையில் துவங்கி பலன் பெற்றவர்கள் உண்டு என்று எவரையேனும் உதாரணம் காட்டுவதால், பொய் உண்மையாகி விடுமா என்ன?

ஒரு பலனுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். காரணத்தை வைத்து பலனைச் சொல்ல வேண்டும். அதுவே முழு நம்பிக்கையை அளிக்கும். அத்துடன் ஜோதிடச் சான்றும் அவசியம். முன்னோர்களை வழிபடும் நாளான அமாவாசையில், அவர்களது வாழ்த்துகளைப் பெற்று விட்டுக் காரியத்தைத் துவக்கினால், வெற்றி கிடைக்கும் என நினைப்பது நம்பிக்கை. அதே நேரம்... சாஸ்திரத்தை ஒதுக்கி விட்டு, ஒருசில அனுபவங்களை மட்டும் முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படுவது தவறு.

பக்தி என்பது உடல் சம்பந்தப்பட்டதா? மனம் சம்பந்தப் பட்டதா? அலகு குத்திக் கொள்வது, தீ மிதிப்பது, முடி காணிக்கை ஆகியவை உடல் சம்பந்தப் பட்டதுதானே?


னதில் ஆண்டவனை நினைத்து, அதில் மூழ்குவதே பக்தி. இறைவனை அடைவதில் மனமானது அலாதி ஆனந்தத்தை அடையும்.
ஆனால் மனதில் இருக்கும் இறைப் பற்று உடலுறுப்புகள் வாயிலாகவே வெளிப்படும். கைகள் புஷ்பத்தை அள்ளி அர்ச்சித்து, மனதின் விருப்பத்தை பூர்த்தி செய்கின்றன. கால்கள் ஆலயத்துக்கு அழைத் துச் செல்கின்றன. ஆக, மனதின் விருப்பத்தையும் அதை நிறைவேற்றுவதற்கான ஆணையையும் உடல் உறுப்புகளே நிறைவேற்றுகின்றன. 'உடல், பொருள், ஆவி- அனைத்தும் உனக்கே அர்ப்பணம்' என்கிறோமே?! தீ மிதித்தலும் முடி இறக்குதலும் மன எண்ணத்தையே புரிய வைக்கின்றன. கடவுள் மீதான பக்தனது விருப்பங்கள் ஒருபோதும் வெறுக்கத் தக்கவை ஆகாது!

வெளியில் கிளம்பும்போது, 'எங்கே போகிறாய்?' என கேட்பது அபசகுனமா?


குறிக்கோளுடன் செயல்படத் துவங்கும் வேளையில், எதிரிடையான கேள்விகள் மனதை பாதிக்கும். இந்த பாதிப்பு, செயலில் சுணக்கத்தை ஏற்படுத்தி, வெற்றியை நழுவச் செய்யும். ஆகவே, எதிரிடையான விஷயத்தை காதில் கேட்பது அபசகுனம்தான்!
தவிர, மனம் சம்பந்தப்பட்டது சகுனம்! நல்ல காரியம் செய்யக் கிளம்பும் வேளையில், எதிரே விறகு கட்டையும் மண்ணெண்ணெயும் ஏந்தியபடி ஒருவர் தென்பட்டால்... சம்பந்தப்பட்டவரின் மனம், எதிரிடையான விளைவுகளை சிந்திக்கும்; இதனால் கலக்கமுற்று, நற்காரியத்தில் ஈடுபட மறுக்கும்.
திடமான மனம் எந்தச் சொல்லையும் தாங்கிக் கொள்ளும். பலவீனமான மனம் பாதிப்புக்கு உள்ளாகும்!

ச்ரவண விரதம்' என்றால் என்ன? இந்த விரதத்தை அனுஷ்டிப்பது எவ்விதம்?


திருவோணம் நட்சத் திரத்தை, 'ச்ரவணம்' என்பர். இதன் தேவதை விஷ்ணு என்கிறது வேதம் (ச்ரோணா நட்சத்திரம் விஷ்ணுர் தேவதா).
எனவே விஷ்ணுவை வழிபடு வது சிறப்பு. ஆவணி மாதம் வளர்பிறை துவாதசியுடன் வரும் திருவோணம் விசேஷமானது! இந்த நாளை, 'ச்ரவண த்வாதசீ' என்றும் அழைப்பர். இந்த நன்னாளில் உண்ணா நோன்பு இருந்து வாசுதேவனை வழிபட்டால், நமக்குள் இருக்கும் தவறுகள் முழுவதும் நம்மை விட்டு அகன்று விடும் (கருடபுராணம்- 141-வது அத்தியாயம்). இந்த வழிபாட்டு முறையை கருட புராணம் விவரித்துள்ளது. எனவே, எளிய முறையைக் கொண்ட ச்ரவண விரதத்தை அனுஷ்டித்து, வாசுதேவனை வழிபட்டுப் பயன் பெறுங்கள்.

ஆனி மாதத்தில் வேறு வீட்டுக்குக் குடி புகுவது தவறாமே? இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?

'இந்த வீடு தற்காலிகம்தான். பின்னர் வேறு வீட்டுக்குக் குடி போய்விடுவோம்' என்று மாறுகிறீர்களா? எனில், ஆனி மாதத்தில் தாராளமாகக் குடிபோகலாம். 'இல்லையில்லை... சொந்த வீடு கட்டி இருக்கிறோம். அதில் குடிபுகப் போகிறோம்' என்றால்... ஆனி மாதத்தைத் தவிர்க்கப் பாருங்கள். கிரகப்பிரவேசம் எனப்படும் புதுமனைப் புகுவிழா நடத்தி, சொந்த வீட்டில் குடியிருக்க எண்ணுபவர்கள் மாதம், நாள், திதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு குடி புக வேண்டும். அதுவே சிறப்பு தரும்; வளமையைப் பெருக்கும். 'வேறு ஊருக்கு டிரான்ஸ்பர். எனவே, அந்த ஊரில் வீடு பார்த்துக் குடியேற வேண்டும்' எனும் நிலையில், பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு ஆனியைக் கவனிக்கத் தேவை இல்லை.

மந்திரத்தில் உள்ள 'ஸ்ரீம்' எனும் சொல்லின் சிறப்பு என்ன?


ஸ்ரீ (ச்ரீ) என்றால் லட்சுமி தேவி என்று பொருள். தவிர களை (பொலிவு), செல்வம், வில்வம், புகழ், தாமரைப்பூ.... இப்படி நிறைய அர்த்தங்களும் உண்டு. அழியாப் புகழ்பெற்ற மறையின் 'களை'யை, ஸ்ரீ என்று குறிப்பிடுகிறது வேதம். தேவர்கள், குருமார்கள், பெரியோர்கள், கோயிலில் உறைந்திருக்கும் இறை மூர்த்திகள்- ஆகியோரது பெயருக்கு முன்னால், 'ஸ்ரீ' சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது தர்மசாஸ்திரம். எதனுடன் 'ஸ்ரீ' சேருகிறதோ... அதனை, அதைச் சார்ந்தவற்றை செழிக்கச் செய்யும் வல்லமை இதற்கு உண்டு. ஸ்ரீமான், ஸ்ரீமதி என்றும், தமிழில் திரு, திருமதி என்றும் பெயருக்கு முன்னே சேர்ப்பதன் நோக்கமும் இதுவே! செல்வம் என்பதில் காசு-பணம் மட்டுமின்றி வாழ்க்கைக்கான சகல வளங்களும் அடங்கும்! 'ஸ்ரீ'யுடன் சேர்ந்தவை, அனைத்து வளங்களும் பெற்றுச் செழிக்கும்.பகவான் ஸ்ரீரமணர் காட்டிய வழி என்ன?

'நான்' என்பது எங்கே இருந்து புறப்படுகிறதோ... அதைக் கவனித்தால், மனம் அங்கே அடங்கும். அதுவே தவம்!
ஒரு மந்திரத்தை மீண்டும் மீண்டும் கூறும்போது, மந்திர ஒலி எங்கிருந்து புறப்படுகிறது என்பதைக் கவனித்தால், மனம் அங்கே அடங்கும். அதுவே- தவம்!
வெட்டியான் எரிக்கும்போது தசைகள் இழுபட்டு, பிணம் எழும். அப்போது, தடியால் அந்தப் பிணத்தை ஓங்கி அடிப்பான் வெட்டியான். உடல் எரியும் வரை இது தொடர்கிறது. கடைசியில் உடல் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிறது. பிறகு, 'தடிக்கு வேலை இல்லை' என்று வெட்டியான் அதைத் தீயிலேயே போட்டு விடுகிறான். இந்த வெட்டியானைப் போல்தான் நாமும்! 'ஆத்ம விசாரணை' எனும் தீயில் வேகும் பிணம்தான் மனம்! எழ எத்தனிக்கும் பிணத்தை அடிக்கும் 'தடி'யாக 'நான் யார்?' என்ற கேள்வி இருக்கட்டும். இறுதியில் பிணத்துடன் தடியும் எரிந்து முடியும்போது, ஆத்ம தரிசனம் கிடைக்கிறது.
இதை எப்படிச் செய்வது?
பிற எண்ணங்கள் எழுந்தால்... அவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு முயலாமல், அவை யாருக்கு உண்டாயின என விசாரிக்க வேண்டும். அப்படி 'நான் யார்' என்று விசாரித்தால், மனம் தன் பிறப்பிடத்துக்குத் திரும்பி வரும்!
ஒவ்வொரு எண்ணமும் எழும்போது, அதைத் தொடரக் கூடாது. மாறாக, 'இந்த எண்ணம் யாருக்கு உண்டாயிற்று?' என்று கேட்க வேண்டும். 'எனக்கு' என்று சொல்லும். அந்த ''நான் யார்?' என்று மீண்டும் கேட்டால், அது எண்ணம் உற்பத்தியான இடத்துக்குக் கொண்டு போய் விடும். அந்த இடத்திலேயே மனமும் ஒடுங்கும். இதுவே உண்மையான 'நான்'.
மனம் சூட்சுமமானது. 'நான்' எனும் நினைவு கொஞ்சமும் இல்லாத இடம் சொரூபமாகும். அதுவே மவுனம் எனப்படும். இப்படி சும்மா இருப்பதற்குத்தான், 'ஞான திருஷ்டி' என்று பெயர். சும்மா இருப்பது என்பது, மனதை ஆன்ம ரூபத்தில் லயிக்கச் செய்வது ஆகும். ரமணரின் பார்வையில்... மனத்தை ஆன்ம ரூபத்தில் லயிக்கச் செய்வதே 'ஞான திருஷ்டி!'
எண்ணங்கள் தோன்றத் தோன்ற, அதிகமான சொற்கள் மனதில் தோன்றுகின்றன. இறைவன் பெயரை அல்லது மந்திரத்தை மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்ல, வேறு சொற்கள் அல்லது எண்ணங்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. பல எண்ணங்கள் இருந்த இடத்தில் இறைவனின் பெயர் மட்டுமே உச்சரிக்கப்படுவதால், மனம் ஒருமுகப்படுத்தப்படுகிறது.
இதற்கு ரமணர் கூறும் உதாரணம் மிகச் சிறந்தது.''சதா அசைந்து கொண்டிருக்கும் ஒரு யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால், அந்த யானை எப்படி வேறொன்றையும் பற்றாமல் அதையே பற்றிக் கொண்டு செல்லுமோ, அவ்வாறே சதா அசைந்து கொண்டிருக்கும் மனமும், அதனை ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்துக்கு பழக்கினால், அதனையே பற்றிக் கொண்டிருக்கும்.''
பகவான் ரமணரை விருபாட்சி குகையில் சந்தித்த எப்.எச். ஹம்பரீஸ் என்பவர், ''ரமணரின் புன்முறுவலை விட, வேறு எதுவும் அழகு மிகுந்திருப்பதாக என்னால் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
பகவானிடம் அவர் கேட்ட முதல் கேள்வியே ''என்னால் உலகத்துக்கு உதவ முடியுமா?'' என்பதே.
''உனக்கு உதவிக் கொள்; அது உலகத்துக்கும் உதவியாகும்''
பகவான் சொன்னதின் உட்பொருள், 'நீதான் உலகம்- உலகம்தான் நீ' என்பதாகும் (நன்றி: ஒரு மகானின் அவதாரம்- ரமணா).


யோகிகள், ஆறு சக்கரங்களையும் மலரச் செய்வதன் மூலம் கடவுளாகி விடுகிறார்களா?


டலிலுள்ள சக்கரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை) ஒவ்வொன்றும் பல வித ஆற்றல்களைக் கொண்டுள்ளன. சாதாரண வாழ்க்கையில் சிறிதளவே ஆற்றலை வெளிப்படுத்தும் சக்கரங்கள், யோக சாதனையின்போது பல உன்னத சக்திகளை வெளிப்படுத்துகின்றன. புலன்களைக் கடந்த நிலையில் அடையப்படும் இந்த சக்திகள், 'ஸித்திகள்' எனப்படுகின்றன!
குண்டலினி, ஒரே நேரத்தில் மூலாதாரத்தில் இருந்து சஹஸ்ராரத்தை அடைந்து விடுவதில்லை. மீண்டும் மீண்டும் தியானம் செய்யும்போது, சிறிது சிறிதாக மேலே ஏறிச் செல்லும்.
குண்டலினி ஒவ்வொரு சக்கரத்தைக் கடக்கும்போதும், மீண்டும் வந்த வழியாகவே கீழே இறங்கி வரும்போதும் அந்தச் சக்கரத்தின் ஆற்றலை வளர்க்கிறது.
மூலாதார சக்கரம் நன்கு விழிப்பு அடைந்து ஆற்றல் அதிகரிக்கும் போது, குண்டலினி பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. உடல், மூச்சு மற்றும் மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆகியவை உண்டாகும். நோயற்ற உடல் வாய்க்கும். தியான வேளையில் ஸ்தூல உடல் புவி ஈர்ப்பில் இருந்து விடுபட்டு, அந்தரத்தில் மிதக்கும். பூமியால்
எந்தவித பாதிப்பும் உண்டாகாது.
சுவாதிட்டானம் நன்கு விழிப்படைந்து ஆற்றல் அதிகரிக்கும் போது, ஸ்தூல- சூட்சும மன உணர்வுகளை உடனடியாக அறியும் ஆற்றல் உண்டாகும். நீரினால் எந்த பாதிப்பும் உண்டாகாது.
மணிபூரக சக்கரம் நன்கு விழிப்படைந்து ஆற்றல் அதிகரிக்கும் போது, மனித உடல் அமைப்பு பற்றிய முழு அறிவு உண்டாகும். நோயற்ற உடல் வாய்க்கும். மணிபூரகத்தில் இருந்து சஹஸ்ராரத்தை நோக்கி அதிக அளவு பிராண சக்தி செல்லும். அக்னியினால் எந்த பாதிப்பும் உண்டாகாது.
அனாகத சக்கரம் நன்கு விழிப்புற்று ஆற்றல் அதிகரிக்கும் போது பிராணனைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் மற்றவர்களது நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலும் உண்டாகும். தெய்வீக அன்பு, கவிபாடும் திறன் ஆகியன உண்டாகும். அனைவரையும் ஊக்குவிக்கும் பேச்சாற்றலும் ஆழ்ந்த மன ஒருநிலைப்பாடும் வாய்க்கும். புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
விசுத்தி சக்கரம் நன்கு விழிப்புற்று ஆற்றல் அதிகரிக்கும் போது, வேதங்கள் பற்றிய முழு அறிவு உண்டாகும். இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி அறியும் ஆற்றல் வாய்க்கும். பிறரது எண்ணங்களை அறிய முடியும்.
உண்ணாமல் உயிர் வாழ்வதற்கான ஆற்றல் கிடைக்கும். சோம சக்கரத்தில் இருந்து அமிர்தம் கீழிறங்கி வருவதை அறியலாம்.
ஆக்ஞா சக்கரம் நன்கு விழிப்புற்று ஆற்றல் அதிகரிக்கும் போது கூடு விட்டு கூடு பாயும் திறன் உள்ளிட்ட அனைத்து ஆற்றல்களும், ஸித்திகளும் வாய்க்கும். மனம், ஆத்மாவுடன் இணையும் ஆற்றல் உண்டாகும்.
சஹஸ்ராரம் நன்கு விழிப்புறும்போது ஆன்மாவைப் பற்றிய முழு உணர்வு உண்டாகும். சமாதி நிலை கைகூடும். பந்தங்களில் இருந்து மனிதன் விடுதலை அடைவான் (நன்றி: பிராண வித்யா; யோகி சிவானந்த பரமஹம்சா,

Comments

 1. புது வீடு வாங்கியுள்ளோம். கிரகப்பிரவேசம் இன்னும் செய்யவில்லை. அதற்குள் ஆனி மாதம் வந்துவிட்டது. தற்போதுள்ள வாடகை வீட்டு உரிமையாளர் ஒரு மாதத்திற்கு கட்டாயம் வீடு வேண்டும் என்கிறார். இந்த ஒரு மாதத்திற்கு புது வீட்டில் பால் காய்த்துவிட்டு செல்லலாமா? பின் பழைய வீட்டிற்கு வந்துவிட்டு பிறகு நல்ல நாள் நேரம் பார்த்து கிரகப்பிரவேசம் செய்யலாமா? ஒரே குழப்பமாக உள்ளது. தக்க ஆலோசனை வழங்கவும்.

  ReplyDelete
 2. புதுவீடு வாங்கி உள்ளோம். இன்னும் கிரகப்பிரவேசம் செய்யவில்லை. அதற்குள் ஆனி மாதம் வந்துவிட்டது. தற்போதுள்ள வாடகை வீட்டு உரிமையாளர் ஒரு மாதத்திற்கு வீடு வேண்டும் என்கிறார். ஆனி மாதத்தில் புது வீட்டில் பால் காய்த்துவிட்டு செல்லலாமா? பிறகு பழைய வீட்டிற்கு வந்து பிறகு நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து கிரகப்பிரவேசம் செய்யல்லாமா? ஒரே குழப்பமாக இருக்கிறது. நல்ல ஆலோசனை வழங்கவும்.

  ReplyDelete
 3. வாடகை வீட்டுக்கு எந்த மாதங்களில் குடி போகலாம் குருங்களேன

  ReplyDelete
 4. என் மனைவி கர்ப்பமாக இருக்கும்பொழுது எனது தந்தைக்கு திதி கொடுக்கலாமா?

  ReplyDelete

Post a Comment