செல்வத்தில் செழிக்கும்போது நிலை தவறாமை வேண்டும்!

ளமை, செல்வம், செல்வாக்கு, அறியாமை- இவை ஒவ்வொன்றும் மனதை நிலைகுலையச் செய்து வழி தவறி செயல்பட வைக்கும். இந்த நான்கும் ஒன்றாகச் சேர்ந்திருந்தால் கேட்க வேண்டுமா? என்கிறது தர்மசாஸ்திரம் (யௌவனம் தனஸம்த்தி:...). இந்த நான்கும் கம்சனிடம் இருந்தது. அவன் செயல்பாடே அவனை அழித்தது.
திருதராஷ்டிரரிடம் அறியாமை குடிகொண்டிருந்தது. அனைத்தையும் இழந்து தனி மரமானார்.
செல்வாக்கு, ராவணனை செயலிழக்கச் செய்தது.
இளமையின் செழிப்பு, அக்னிவர்ணன் என்ற அரசிளங்குமரனை அல்பாயுஸாக்கியது. அளவு கடந்த பெண்ணினச் சேர்க்கை. போகத்தை அளிக்காமல் தாபத்தையே அளித்தது அவனுக்கு! பலவீனமான மனம் தாபத்தை சடுதியில் ஏற்றுக் கொள்ளும். மனதைத் தளர விடாமல் தடுக்க, தர்மசாஸ்திரக் கோட்பாடுகள் உதவும்.
சாஸ்திரக் கோட்பாடுகளை கோட்டை விட்ட ஒருவனது மனம் தளர்ந்தது; வழி தவறினான்; துயரத்தை சந்தித்தான். அவனை அவனது பூர்வ ஜன்ம வினை தட்டி எழுப்பியது. பிறகே தெளிவு பெற்றான். கண்ணனை அடைந்து மகிழ்ந்தான். அவன் பெயர் வில்வமங்களன். நதியோர கிராமம் ஒன்றில் பிறந்தவனின் தகப்பனார் ராமதாசர்.
பிறக்கும் போதே கோடீஸ்வரனாக பிறந்தவன் இவன். சிறு வயதிலேயே தந்தையிடம் கல்வி பயின்று, அனைவரும் போற்றும் அளவுக்கு பெருமையுடன் வளர்ந்தான். தந்தையின் அரவணைப்பு அவனது கல்விக்கு ஆக்கம் கொடுத்து அவனை நல்லவனாக்கியது. சாஸ்திரக் கோட்பாடுகளை மதித்து, கடமைகளை முறையே செய்து வந்தான். துரதிர்ஷ்டவசமாக அவனது தாய்-தந்தையர் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர்.
செல்வச் செழிப்பு, இளமையின் துடிப்பு, கெட்டவர்கள் சகவாசம், தட்டிக்கேட்க ஆளில்லாத நிலை.. எனவே, தவறான வழியில் சென்றான் வில்வமங்களன். கடமைகளை மறந்தான்; முற்பிறவியின் கர்மவினை அவனைத் திசை திருப்பியது. அவன் மனதில் தவறான எண்ணங்கள் மெள்ள மெள்ள குடி கொண்டன. கெட்ட எண்ணங்களின் மொத்த உருவமாக மாறிப் போனான் வில்வமங்களன். செல்வச் செழிப்பு செருக்கை உண்டுபண்ணும். இளமை, பயத்தை மறந்துவிடும். அழகினால் ஏற்பட்ட மிதப்பு... கண்களையே மறைத்து விடும்.

'மனிதனை மிஞ்சிய திறமையை அடைந்தவனிடம் அகங்காரம் தோன்றும்' என்கிறார் பாணபட்டர் (கர்பேச்வரத்வம்...). இந்த துர் குணங்கள் அனைத்தும் வில்வமங்களனிடம் குடிபுகுந்தது. ஒரு நாள் நண்பர்களுடன் நாட்டிய அரங்கேற்றத்தைக் காணச் சென்றான். அப்போது, சிந்தாமணி என்னும் விலைமாது ஒருத்தி, நடனம் ஆடினாள். அவளையும் அவளது நடனத்தையும் கண்ட வில்வமங்களனின் மனம் சஞ்சலம் கொண்டது. அவளை அடைய ஏங்கினான். இதன் பொருட்டு எதைச் செய்யவும் துணிந்தான். அவளை அடைந்தவன், ஒருகட்டத்தில் அவளிடம் அடிமையானான். உடல், உள்ளம், செல்வம், குலம், மானம், மரியாதை, அறம்- அனைத்தையும் இழந்தான். அவளது நினைவு மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது.
அன்று- மறைந்த முன்னோர்களின் ஆராதனை நாள். நிகழ்வை நடத்தி வைக்கும் புரோகிதர் தயாராக இருந்தார். சிரத்தையாகச் செயல்பட வேண்டிய ஆராதனையில் அவனுக்கு நாட்டமில்லை. அவன் மனம் சிந்தாமணியை அசை போட்டபடியே இருந்தது. புரோகிதரின் ஆழ்ந்த செயல்பாட்டைத் தாண்டி, அவன் யந்திரம் போல் செயல்பட்டான். ஆராதனை சீக்கிரமே நிறைவுற்றது.
ஆராதனை முடிந்ததும் சிந்தாமணியின் வீட்டுக்குச் செல்லத் தயாரானான். 'இன்று அங்கு செல்வது தவறு' என்று உறவினர்கள் அறிவுறுத்தினர். ஆனால், எதையும் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் வில்வமங்களன் இல்லை.
இருட்டிய வேளை! ஆற்றின் மறு கரையில் அவளது வீடு இருந்தது. வேகவேகமாக வந்தவன் ஆற்றைக் கடக்க முற்பட்டான். அப்போது, திடீரென மழை வெளுத்து வாங்கியது. இடி- மின்னலுடன் புயலும் சேர்ந்து வலுக்கத் துவங்கியது. கிராமமே இருளில் மூழ்கியது. படகுத் துறை வெறிச்சோடிக் கிடந்தது. படகை கரையில் கட்டிய படகோட்டிகள், மழைக்குப் பயந்து வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். வில்வமங்களனோ... ஆற்றில் குதித்தான். நடு ஆற்றில் மிதந்து வந்த பிணம் அவனுக்கு உதவியது. இருட்டில் அதை மரக்கட்டையாக எண்ணி, பிடித்தபடி கரை சேர்ந்தான். வெள்ளப் பெருக்கில் அவனது இடுப்பு வஸ்திரமும் நழுவிப் போனது.
'முன்னோர் ஆராதனையில் ஈடுபட்ட வில்வமங்களன் இன்று வர மாட்டான்' என்று நினைத்து கதவு மற்றும் ஜன்னல்களைத் தாளிட்டு உறங்கினாள் சிந்தாமணி. வாசலில் நின்று அழைத்த வில்வமங்களனின் குரல், அவள் காதில் விழவே இல்லை. கதவு திறக்கப்படாதது கண்டு அவனது தவிப்பு கூடியது. அந்த வேளையில், மரத்தில் கயிறு ஒன்று தொங்குவதை மின்னல் ஒளியில் கண்டான். சட்டென அந்தக் கயிறைப் பிடித்தபடி ஏறியவன், உப்பரிகையை அடைந்தான். அவளின் படுக்கையறைக் கதவைத் தட்டினான்.
சத்தம் கேட்டு, பயத்துடன் எழுந்து கதவைத் திறந்தாள் சிந்தாமணி. உடலில் ஆடையின்றி நிற்கும் வில்வமங்களனைக் கண்டு நடுங்கியே விட்டாள். அவனது ஈரமான உடலும் அவனிடம் இருந்து வீசிய துர்வாசனையும் சிந்தாமணிக்கு அருவருப்பாக இருந்தது. 'இருட்டு வேளையில், மழை வெள்ளத்தில், ஆற்றைக் கடந்ததுடன் சாத்திய வீட்டுக்குள் எப்படி நுழைந்தாய்?' என்று கேட்டாள். 'மரக்கட்டையின் உதவியுடன் ஆற்றைக் கடந்தேன். கயிறின் உதவியுடன் உள்ளே நுழைந்தேன்' என்று விவரித்தான் வில்வமங்களன்.
மழை ஓய்ந்திருந்தது. சிந்தாமணி விளக்கை எடுத்தபடி வெளியே வந்தாள். அங்கு தொங்கிக் கொண்டிருந்த சர்ப்பத்தையும் ஆற்றங்கரையில் உள்ள பிணத்தையும் கண்டாள். பிணத்தை மரக்கட்டை என்றும் சர்ப்பத்தைக் கயிறு என்றும் எண்ணி செயல்பட்ட அவனது சாகசத்தை நினைத்து ஆடிப்போனாள். இதை அறிந்த வில்வமங்களனது உடலும் நடுங்கியது.
இவனது செயல்பாடு கண்டு கோபமுற்றாள் சிந்தாமணி. 'நீயரு மனுஷனா? வெட்கக்கேடு! இன்று உன்னுடைய முன்னோர்களுக்கான ஆராதனை நாள். அன்பு, பண்பு, அறம் ஆகிய குணங்களுடன் அவர்களை நீ வழிபட வேண்டும். அவர்களது நினைவுடன் இந்த நாளைக் கழிக்க வேண்டும். ஆனால், எலும்பும், தோலும், மாமிசமும் நிறைந்த உடலுறவைப் பெரிதாக எண்ணி ஓடி வந்திருக்கிறாயே? உன் அறியாமையை எண்ணி வருந்துகிறேன். அழகு, அடைய வேண்டிய சுகம் என்று எதற்காக கண்மண் தெரியாமல் வந்தாயோ... அந்த உடல் ஒரு நாள் இதோ, இப்படித்தான் பிணமாகும்!
என்னிடம் உள்ள கட்டுக் கடங்காத ஈர்ப்பை, கண்ண பிரானிடம் வை. இதுவே உண்மையான ஆனந்தத்தை உனக்கு அளிக்கும். ஆன்ம லாபம் பெறுவாய். என்னை அடைய நீ மேற்கொண்ட சாகசச் செயலை, கண்ணனிடம் மேற்கொண்டிருந்தால் நீ அவனிடம் ஒன்றியிருப்பாய்' என்று சொல்லி முடித்தாள் சிந்தாமணி.
அவளது சொல்லம்பு வில்வமங்களனது மனதைத் தாக்கியது. மௌனமாக இருந்தவன், சிந்தனையில் ஆழ்ந்தான். சிறு வயது கல்வி, தந்தையின் அறிவுரை, அறத்தில் இருந்த பிடிப்பு ஆகிய அனைத்தும் நினைவில் வந்தது. அவளது நல்லுரை, அவனது அறியாமையை அகற்றியது. அவளது காலில் விழுந்து வணங்கினான்; வெளியேறினான். மனம் திருந்தியவன், பகவான் கண்ணனது ஆராதனையில் ஈடுபட்டான்.
கண்கள் முதலில் சந்திக்கும்; பிறகு மனம் ஒன்றிவிடும்; மனம் ஆசையை வளர்க்கும்; அதை அடைவதற்கு ஏங்கும்; கிடைக்கும் வரை தவிக்கும். ஆகவே, அழகைக் காட்டிக் கொடுப்பதே கண்கள்தான் என்று எண்ணியவன், குச்சி ஒன்றை எடுத்து, தன் இரு கண்களையும் குத்திக் கொண்டான்; குருடானான். இப்போது வெளியுலகப் பார்வை மறைந்து, உள்ளுக்குள் தடுமாற்றம் இன்றி கண்ணனை நினைத்துக் கதறினான். பாலகன் வடிவில் வந்த கோபாலன் அவனிடம் பேச்சு கொடுத்தான். 'பெரியவரே! தங்களுக்கு என்ன வேண்டும்? நான் உதவுகிறேன்' என்றான் கண்ணன்.
'கண்ணனைப் பார்க்க வேண்டும்' என்றான். 'பிருந்தாவனம் செல்லுங்கள். பார்க்கலாம்' என்றான் பாலகன். 'எனக்குப் பார்வை இல்லையே... எப்படிச் செல்வது?' என்றான் அவன். 'நான் அழைத்துச் செல்கிறேன்' என்று கோபாலன் அவனுக்கு கை கொடுத்து ஆட்கொண்டார்.
விலைமாது என்று விலக்க வேண்டியவள் அல்ல சிந்தாமணி. நெறி கெட்டவனை நல்வழிப்படுத்தும் திறன் அவளிடம் இருந்தது. குலத் தொழிலை ஏற்ற நிர்ப்பந்தம் இருப்பினும் குணத்தில் அவள் குன்று. உலகில், மாறுபட்ட தோற்றம்-செயல்பாடு என்று இருப்பினும் இன்ப - துன்பங்களை சந்தித்த போதும் ஆன்மிக அறிவு நீறு பூத்த நெருப்பாய் ஒளிந்திருக்கும். புராணங்களும் இதிகாசங்களும் இதை தெளிவுற உணர்த்துகின்றன.
கல்வி, செல்வம், அழகு, ஆற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு கடிவாளம் மிக அவசியம். கடிவாளமிடும் வேலையை புராணங்கள் செய்கின்றன.

Comments