பக்தனை எரித்து... ஆட்கொண்ட சிவனார்!

திக்கரைகளில் நாகரிகம் வளர்ந்ததாகச் சொல்வர். நாகரிகம் மட்டுமல்ல... பண்பாட்டையும் பக்தியையும் வளர்த்து வரும் பல திருக்கோயில்களும் நதிக் கரையை ஒட்டியே அமைந்துள்ளன. காஞ்சி பிரதேசத்தில் பாலாற்றை ஒட்டியும், சோழ நாட்டில் காவிரியை ஒட்டியும், மதுரையம்பதியில் வைகையாற்றை ஒட்டியும், நெல்லைச் சீமையிலே தாமிரபரணியை ஒட்டியும் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்து, பழம்பெருமைகளை இன்றைக்கும் பறை சாற்றி வருகின்றன. காலத்தின் கோலத்தால், சில ஆலயங்களின் அருமை பெருமைகள் இன்று பலராலும் அறியப்படாமலேயே இருக்கின்றன. திருவிழாக்களும், தினப்படி பூஜைகளும் தடை இன்றி நடந்தாலும் இத்தகைய ஆலயங்களுக்கு ஏது விளம்பரம்? பக்தர்கள் திரளாக வந்து போனால்தானே இறைவனின் இன்னருள் எல்லோருக்கும் தெரிய வரும்?!
இப்படி அறியப்படாத ஓர் ஆலயத்தைத் தரிசிக்கத் தாமிரபரணிக் கரைக்குச் செல்வோம், வாருங்கள்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊர்- அம்பா சமுத்திரம். பொதியமலைச் சாரலின் கிழக்குத் திசை யில் அமைந்துள்ளது. விவசாயம் செழித்து விளங்கும் பூமி. பழைமையில் இருந்து விலகாமல், பொலிவும் குன்றாமல் ஆன்மிகம் சிறந்து விளங்கும் திருத்தலம் இது. கல்வெட்டுக்கள் அம்பாசமுத்திரத்தை 'ராஜராஜ சதுர்வேதிமங்கலம்' என்று குறிக்கின்றன. ஆதி காலத்தில் பூலோக கயிலாயமாக விளங்கி வந்த அம்பாசமுத்திரம்- முள்ளிநாடு, இளங்கோக்குடி, போற்றீஸ்வரம், திருச்சாலைத்துறை என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது.

சிற்றரசன் ஒருவன் இந்த ஊரைத் தன் மகளுக்கு அன்புப் பரிசாக, ராஜ்ஜியத்தின் முத்திரையிட்டு அளித்ததால் 'அம்பா முத்திரை' என வழங்கப்பட்டது. 'அம்பா' என்ற சொல், தாய்மையைக் குறிக்கும். இந்த அம்பா முத்திரையே பின்னாளில் அம்பாசமுத்திரம் ஆனதாம். ஊர்ப்பெயரில் சமுத்திரம் என்று இருந்தாலும் ஊரில் கடல் இல்லை. நீர் நிலைகள் மிகுந்திருக்கும் பகுதியை அந்தக் காலத்தில் சமுத்திரம் என்றே அழைத்து வந்தனர்.
அம்பாசமுத்திரத்தில் சங்கரலிங்கர்- கோமதியம்மை திருக்கோயில், காசிநாதர் திருக்கோயில், திருமூலநாதர் திருக்கோயில், வீரமார்த்தாண்டர் திருக்கோயில், அம்மையப்பர் திருக்கோயில், கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயில் முதலான பல ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் ஊருக்குத் தெற்கே, தாமிரபரணி ஆற்றின் கரையில் ஸ்ரீகாசிநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயிலைத்தான் 'ஆலயம் தேடுவோம்' பகுதிக்காகத் தரிசிக்க இருக்கிறோம்.
ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்கோயில் இது. ராஜராஜ சோழன் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டு, பிற்பாடு வந்த மன்னர்களால் விரிவுபடுத்தப் பட்டிருப்பதாகக் கல்வெட்டுத் தகவல்கள் சொல்கின்றன. முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1070-ஆம் ஆண்டில் ஸ்ரீகாசிநாதரின் கருவறையை எழுப்பி உள்ளான். கி.பி. 1166-ஆம் ஆண்டில் குலசேகரபாண்டியன், அர்த்த மண்டபம் மற்றும் முன்மண்டபத்தை எழுப்பினான். பிறகு மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் தனிக் கோயில் எழுப்பினான் சுந்தர பாண்டியன்.
ஆலயத்தில் அமைந்திருக்கிற ராயகோபுரம் (மொட்டை கோபுரம்), கிருஷ்ணதேவ ராயர் காலத்தைச் சேர்ந்தது. அதாவது ராஜகோபுரம் எழுப்பும் பணிகளைத் துவக்கிய காலத்தில் போர் மற்றும் சில அசுப நிகழ்வுகளால், அந்தக் கோபுரம் பூர்த்தி அடையாமல் பாதியிலேயே நின்று போனதாம்.
தாமிரபரணி ஆற்று நீரில் கங்கையின் சாந்நித்தியம் கலந்திருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. காசி மாநகரில் கங்கைக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீவிஸ்வநாதரை நினைவூட்டும் வகையில் தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள இந்த இறைவன் 'ஸ்ரீகாசிநாதர்' என அழைக்கப்படுகிறார்.
காசியப முனிவர் வழிபட்ட லிங்கத் திருமேனி என்பதால் அம்பாசமுத்திரத்து இறைவன் காசிபநாதர், காசிபேசுரமூர்த்தி என்றெல்லாம் அழைக்கப்பட்டார் என திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. காசியப முனிவர் இந்தத் திருத்தலம் வந்து வெண்மணலைப் பிடித்து, லிங்கத் திருவுருவம் அமைத்து பூஜைகள் செய்தார். இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக ஒரு தீர்த்தம் அமைத்தார். அதுவே காசியப தீர்த்தம். தவிர எண்ணெய், கனிகள் மற்றும் செந்தேன், நெய், பால், தயிர் முதலான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்து ஈசனை ஆராதித்தார்.
திருப்போத்துடைய நாயனார், திருப்போத்துடைய தேவர், திருப்போத்துடைய ஆழ்வார், திருப்போத்துடைய மாதேவர், திருப்போத்துடைய பட்டாரகர் என ஸ்ரீகாசிநாதருக்கு எண்ணற்ற திருநாமங்கள் உண்டு. 'போத்து' எனும் சொல் காளையைக் குறிக்கும். இடபத்தை (காளையை) வாகனமாகக் கொண்ட இறைவனை இப்படி அழைப்பதில் வியப்பில்லை. நாயனார், தேவர், ஆழ்வார், பட்டாரகர் எனும் உயர்வுச் சொற்கள் அனைத்தும் இறைவனை விளிக்க அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தவிர, காசிநாதர் கோயிலை, ஆட்கொண்டார்கோயில், எரித்தாளுடையார் கோயில், எரிச்சாளுடையார் கோயில் என்றும் இன்றைக்கும் பலரும் அழைக்கின்றனர். அதென்ன ஆட்கொண்டார்? ஆலயப் பிராகாரத்தில் இவருக்கு தனி சந்நிதி இருக்கிறது. ஆட்கொண்டார் குறித்த கதை, தாமிரபரணி மகாத்மியம், அம்பை தல புராணம், திருநெல்வேலி தல புராணம் ஆகியவற்றில் காணப்படுகிறது. அந்தக் கதையை இங்கே காண்போம்.
சிவசர்மா என்பவர் வேதம் ஓதும் அந்தணர். பாரத தேசத்தில் உள்ள ஆலயங்களை யாத்திரையாகச் சென்று தரிசித்து வந்தார். பொதிய மலைச் சாரலில் மாமுனிவர் அகத்தியர் தவம் இருந்து வருகிறார் என்பதை அறிந்து, அவரைத் தரிசித்து ஆசி பெறுவதற்காக நெல்லைச் சீமைக்கு வந்தார். அங்கே... ஸ்ரீகாசிநாதரின் பெருமைகளை அறிந்து, அம்பாசமுத்திரத்துக்கு வந்தார். அம்பையின் ஆதித் தலமான இதைத் தரிசிக்கும் முன்னால், ஆலயத்தின் அருகில் ஓடும் தாமிரபரணி நதியில் நீராடினார். ஸ்ரீகாசிநாதரை மனமார வணங்கினார்.
பிறகு, சாந்தவேதன் (பிரமோதனன் என்றும் சொல்வர்) எனும் உள்ளூர் அந்தணனைச் சந்தித்தார். இவர் ஸ்ரீகாசிநாதர் ஆலயத்தில் அர்ச்சகராக இருந்தவர். தீவிர இறை பக்தி கொண்ட இருவரும் ஆன்மிகம் குறித்து மனம் விட்டுப் பேசினர். சாந்தவேதனின் அழைப்பின்பேரில் அவனது இல்லத்துக்கு விஜயம் செய்து விருந்து உண்டார் சிவசர்மா. திடீரென உருவான பழக்கம்தான் என்றாலும் சாந்தவேதன் மேல் சிவசர்மாவுக்கு அபரிமிதமான பிரியமும் நம்பிக்கையும் பிறந்தது. எனவே தன்னிடம் இருந்த பொன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை சாந்தவேதனிடம் கொடுத்து விட்டு, ''அன்பரே! அகத்திய மாமுனிவரை தரிசிக்கவே இந்த யாத்திரையை மேற்கொண்டேன். வழியில் மேலும் பல தலங்களை தரிசிக்க விரும்புகிறேன். காடு- மலைகளில் பயணிப்பதால் பாதுகாப்பு இருக்காது. எனவே, எனது இந்த பொக்கிஷங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வையுங்கள். திரும்பும்போது இவற்றைப் பெற்றுக் கொள்கிறேன்'' என்று கொடுத்து விட்டுக் கிளம்பினார் சிவசர்மா.
இதையடுத்து, அடர்ந்த வனப் பகுதிகளில் தன் பயணத்தைத் தொடர்ந்தார் சிவசர்மா. நாட்கள் ஓடின. ஆனாலும், அகத்தியரின் தரிசனம் கிடைக்கவில்லை. தனது பக்தியைத் தீவிரப்படுத்தினால்தான் அகத்தியரது தரிசனம் கிடைக்கும் என்று எண்ணியவர், உண்ணாநோன்பு மேற்கொண்டார். ஆனாலும் அகத்தியரின் தரிசனம் கிடைக்கவே இல்லை. இறுதியாக ஒரு நாள், 'அகத்தியரின் தரிசனம் சில நாட்களுக்குள் கிடைக்க வேண்டும். இல்லையெனில் இங்கேயே உயிர் துறப்பேன்' என்று உறுதி பூண்டார்.
நெடும் பயணம்... உண்ணாநோன்பு... ஆகிய வற்றால் வனத்தில் அதிக சோர்வுடன் திரிந்து கொண்டிருந்தார் சிவசர்மா. இவர் படும் பாட்டை அகத்திய முனி அறியாமல் இருப்பாரா என்ன? இவனுக்கு அருள் புரிய வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்தார்.
ஒரு நாள், வயதான அந்தணர் உருவில் சிவசர்மாவின் எதிரே தோன்றிய அகத்தியர், ''ஏனய்யா பெரியவரே! இந்த வனத்தில் யாரைத் தேடி அலைகிறீர்கள்? துஷ்ட மிருகங்கள் அலையும் ஆபத்தான வனமாயிற்றே இது?'' என்றார்.
''ஐயா... தங்களைப் பார்த்தால் பெரிய பண்டிதர் போல் தெரிகிறீர்கள். கும்ப முனியான அகத்தியரை தரிசிக்கவே இங்கு வந்தேன். பல காலமாக அலைகிறேன். அவரது தரிசனம் இன்னும் கிடைக்கவில்லை'' என்று வருந்தினார் சிவசர்மா.
அந்தணர் புன்னகைத்தார். பிறகு, ''பெரியவரே... கும்ப முனியான அகத்தியர் எங்கே இருப்பார் என்பது உமக்குத் தெரியுமா? இந்தக் காட்டில் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தரிசிப்பது என்பது இயலாத காரியம். பேசாமல் வந்த வழியே திரும்பி, உங்கள் ஊருக்குப் போய்ச் சேருங்கள்'' என்றார்.
சிவசர்மா கலங்கவில்லை. ''ஐயா... நீர் யாரோ எவரோ... தெரியாது. ஆனாலும், என் மனதில் உள்ளதைச் சொல்கிறேன். அகத்தியரைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காக இங்கே வந்துள்ளேன். நான் எண்ணிய காரியம் பூர்த்தி ஆகாமல் இந்த வனத்தை விட்டுத் திரும்ப மாட்டேன். ஒருவேளை... அவரை தரிசிக்க முடியவில்லை யெனில் இந்தக் காட்டிலேயே உயிர் துறப்பேன்'' என்றார் உறுதியாக!
இதைக் கேட்ட அந்தணர் வியந்தார். சிவசர்மாவிடம் 'தாமே அகத்தியர்' என்பதை கூறி, அந்தணர் வடிவம் கலைந்து, தரிசனம் தந்தார். கண்கள் பனிக்க சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சிவசர்மா. அகத்தியர் திருவாய் மலர்ந்தார். ''என்னை தரிசித்ததால் சிவ தரிசனம் கிடைத்த பேறு பெற்று விட்டீர்கள். இதோ, இங்குள்ள அகத்திய தீர்த்தத்தில் நீராடுங்கள். ஆனந்தம் பெறுங்கள்'' என்று சிவசர்மாவுக்கு விடை கொடுத்தார்.
அதன்படி, அகத்திய தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தார் சிவசர்மா. என்னே ஆச்சரியம்... இதுவரை அவர் செய்த பாவங்கள் தொலைந்தன; நரை- திரையுடன் கூடிய மூப்பு விலகியது. வயோதிகம் நிறைந்த அவரது சரீரம், இளமைத் துள்ளல் மிக்கதாக மாறியது. பதினான்கு வயது சிறுவனாக மிளிர்ந்தார் சிவசர்மா. பின்னர், அம்பாசமுத்திரத்தை அடைந்தார். உற்சாகம் பொங்க, அர்ச்சகர் சாந்தவேதனின் வீட்டை அடைந்தார். தான் அகத்தியரைக் கண்டு தரிசித்த கதையைக் கூறி, பொக்கிஷ மூட்டையைத் தருமாறு கேட்டார்.
இதற்கு சாந்தவேதன், ''ஏய்... நீ யார் என்றே எனக்குத் தெரியவில்லை. பொக்கிஷ மூட்டையை நீ கொடுத்தாயா? என்னிடம் பொருளைக் கொடுத்து விட்டு, அகத்தியரைத் தரிசிக்கச் சென்றவர் நரைமுடி ஓடிய முதியவர். ஏமாற்றப் பார்க்கிறாயா? ஓடிப் போ இங்கிருந்து'' என்றார் ஆத்திரத்துடன்.
சிவசர்மா கலங்கிப் போனார். ''ஐயா... உம்மிடம் பொருளைக் கொடுத்த முதியவனும் நான்தான். இப்போது அதைக் கேட்டுப் பெற்றுச் செல்ல வந்த சிறுவனும் நான்தான். அகத்தியரின் திருவிளையாடலால் எனக்கு இளமை கிடைத்துள்ளது. தயவுசெய்து எனது பொருளைக் கொடுத்து விடுங்கள்'' என்றார் கலக்கத்துடன்.
''உன்னிடம் இருந்து நான் எந்தப் பொருளையும் வாங்க வில்லை. காசிநாதரின் சந்நிதி முன்னால் வேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேன். நாளை காலை கோயிலுக்கு வா'' என்றான் சாந்தவேதன். 'அப்படியே ஆகட்டும்' என்று சிவசர்மாவும் அங்கிருந்து புறப்பட்டுப் போனார்.
இந்த நேரத்தில் சாந்தவேதனுக்குத் தவறான ஒரு எண்ணம் உதித்தது. 'வந்திருப்பவன் ஒருவேளை சிவசர்மாவோ? இருந்தால்தான் என்ன... நான் பொக்கிஷங்களை வாங்கியது ஒரு முதியவரிடம். இருந்தாலும் நாளை சத்தியம் செய்யும்போது ஸ்ரீகாசிநாதரை, ஆலயத்தின் ஒரு மூலையில் உள்ள புளிய மரத்தில் எழுந்தருளச் செய்வோம். வெற்றுச் சந்நிதியில் சத்தியம் செய்து சிவசர்மாவை அனுப்பி விடுவோம்' என்று திட்டமிட்டான் சாந்தவேதன். அன்றிரவே ஆலயத்துக்குச் சென்று ஸ்ரீகாசிநாதர் சந்நிதி முன் நின்று உருக்கமாகப் பிரார்த்தனை செய்து, அவரை புளிய மரத்தின் அடியில் வீற்றிருக்குமாறு செய்தான்.
இறைவன் சாதாரணமானவரா? அதே இரவில் சிவசர்மாவின் கனவில் தோன்றி, 'சாந்தவேதன் என்னை புளிய மரத்தின் அடியில் இருக்குமாறு செய்துள்ளான். எனவே, நாளை காலை அவன் என் சந்நிதி முன்னால் சத்தியம் செய்யும்போது, புளிய மரத்தின் அடியில் வந்து சத்தியம் செய்யச் சொல்' எனச் சொல்லி மறைந்தார்.
மறுநாள்! ஸ்ரீகாசிநாதர் சந்நிதி முன் சத்தியம் செய்ய வந்த சாந்தவேதனை, ''இங்கே வேண்டாம். புளிய மரத்தின் அடியில் வந்து சத்தியம் செய்'' என்றார் சிவசர்மா. அதிர்ந்து போன சாந்தவேதன் வேறு வழியின்றி, புளிய மரத்தடியை நெருங்கியபோது, அந்த சம்பவம் நிகழ்ந்தது. பொய் சத்தியம் செய்வதற்குத் துணிவுடன் நெருங்கும் சாந்தவேதனை உக்கிரக் கண்ணால் பார்த்த ஸ்ரீகாசிநாதர், புளிய மரத்தையும் அவனையும் ஒரு சேர எரித்தார்.
இந்த நிகழ்வைக் கண்டு சிவசர்மா அதிர்ந்து போனார். ''அர்ச்சகரை உயிரோடு மீட்டுத் தர வேண்டும்'' என்று இறைவனிடம் வேண்ட... தீயில் இருந்து மீண்டும் உருப்பெற்று வந்தான் சாந்தவேதன். அந்த இடத்தில் ஒரு லிங்கம் உருவானது. அந்த லிங்கத்துக்கு எரித்தாட்கொண்டார் (அர்ச்சகரை எரித்துப் பிறகு ஆட்கொண்டதால்) என்று பெயர் வந்தது. பிறகு, அந்தப் பொன்னையும் பொருளையும், ஸ்ரீகாசிநாதரின் ஆலயத் திருப்பணிக்கு சிவசர்மா பயன்படுத்தினார் (இதே கதையை கன்னடியராஜாவை வைத்து வேறு விதமாகவும் சொல்வது உண்டு).
இனி, ஆலயத்தை தரிசிப்போம்.
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் நிர்வாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிற திருக்கோயில் இது. கிழக்கு மற்றும் தெற்குத் திசைகளில் நுழைவாயில்கள். கிழக்குத் திசையில் நுழைவாயிலில் இருக்கும் பிரமாண்ட கதவில் அழகிய சிற்பங்கள் தரிசிக்கக் கிடைக்கின்றன. அன்னபூரணி, புன்னைமர கிருஷ்ணன், மகாவிஷ்ணு, சபாபதி, உக்ர நரசிம்மர், பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் என்று ஏராளமான சிற்பங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது. தெற்கு நுழைவாயில் அருகே தாமிரபரணி, பிரவாகம் எடுத்து ஓடுகிறது. இங்குதான் மொட்டைக் கோபுரம் அமைந்துள்ளது.
கல் வேலைப்பாடுகளுடன் கூடிய பிரமாண்டமான ஆலயம். தூண்கள் நிறைந்த மண்டபங்கள்; கண்களையும் கருத்தையும் கவரும் சிலா விக்கிரகங்கள்; திருமாளிகைப் பத்தியுடன் கூடிய பிராகாரங்கள் என்று பிரமிக்க வைக்கிறது ஆலயம். பலிபீடம், கொடிமரம், நந்திதேவர். இந்த மண்டபத்தில் பூரணை- புஷ்கலை சமேத ஸ்ரீசாஸ்தா மற்றும் நவக்கிரகங்களுக்குத் தனிச் சந்நிதிகள்.
பள்ளியறை தாண்டியதும் தெற்குத் திசை நோக்கிய ஸ்ரீமரகதாம்பிகை சந்நிதி. இரண்டு திருக்கரங்களுடன் அருளும் அன்னை. சிறந்த வரப்ரசாதி. அடுத்து, ஸ்ரீகாசிநாதரின் மகா மண்டபம். இங்கு துவாரபாலகர்கள், ஸ்ரீவிநாயகர், நந்திதேவர் ஆகியோரின் விக்கிரகங்கள் உள்ளன.
சற்றே நடந்தால், அர்த்த மண்டபம் தாண்டி ஸ்ரீகாசிநாதரின் கருவறை. சிறிது சாய்ந்த லிங்கத் திருமேனி. சுயம்பு வடிவம். காசியப முனிவர் தொழுத ஈசன். நமசிவாயனை உளமார வணங்கி, அவன் அருள் பெற்றுத் திரும்புகிறோம்.
பிராகாரமெங்கும் நிறைய சந்நிதிகள். அதிகார நந்தி, ஜுரதேவர், சூரிய பகவான், சந்திர பகவான், அறுபத்துமூவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, சப்தமாதாக்கள், அகத்திய மாமுனி, மூஷிக வாகனத்துடன் கன்னி விநாயகர், காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்யர், அண்ணாமலையார், ஸ்ரீசொக்கநாதர்- மீனாட்சி என்று தரிசிக்கலாம்.
பிராகார வலத்தின்போது ஸ்ரீஎரித்தாட் கொண்டார், லிங்கத் திருமேனியில் தரிசனம் தருகிறார். இவருக்கு முன்னால், ஆலய அர்ச்சகர் சாந்தவேதனை புளிய மரத்துடன் எரித்த சம்பவத்தை நினைவுபடுத்தும் மரம் போன்ற ஓர் அமைப்பு. இதன் ஒரு முகப்பில் ஈசனால் ஆட்கொள்ளப்பட்ட அர்ச்சகரின் திருவுருவம். சாந்தவேதனது பரம்பரையினர், வெளியூர்களில் இன்றும் வசித்து வருகிறார்களாம். அருகே ஸ்ரீமகாவிஷ்ணு.
நந்திதேவர், துவாரபாலகர்கள் அமைப்புடன் எரித்தாட்கொண்டார் சந்நிதி அமைந்துள்ளது. சதுர வடிவ சுயம்புத் திருமேனி. பல நூறு குடும்பங்களுக்கு இவர் குலதெய்வமாக விளங்கி வருகிறார். ஆட்கொள்ளும் இறைவனை வணங்கி நடந்தால்- சண்டிகேஸ்வரர், சனி பகவான், ஸ்ரீபைரவர் என்று தரிசிக்கிறோம்.
பிரதோஷம், நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், சிவராத்திரி, கந்தர் சஷ்டி, திருவாதிரை, தைப்பூசம், பங்குனி பிரம்மோற்ஸவம் என்று அனைத்து விசேஷங்களும் குறைவின்றி நடைபெறுகின்றன.
சுமார் 46 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூன்றிலும் சிறப்புப் பெற்ற இந்த புராதன ஆலயத்தைத் தரிசித்து ஸ்ரீமரகதாம்பிகை சமேத காசிநாத ஸ்வாமி மற்றும் ஸ்ரீஎரித்தாட்கொண்டாரின் அருளைப் பெறுவோம்.
தகவல் பலகை
தலம் : அம்பை என்கிற அம்பாசமுத்திரம்
மூலவர் : அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீகாசிநாதர் மற்றும் ஸ்ரீஎரித்தாட்கொண்டார் (எரித்தாளுடையார் என்றும் அழைக்கப்படுகிறார்).
எங்கே இருக்கிறது?: திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கிறது அம்பாசமுத்திரம். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆலயம். நடந்தும் செல்லலாம்; ஆட்டோவிலும் செல்லலாம்.
எப்படிப் போவது?: தென் மாவட்டத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் அம்பாசமுத்திரத்தை அடைவது எளிது.
ஆலய முகவரி: செயல் அலுவலர்
அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோயில்,
அம்பாசமுத்திரம் 627 401.
திருநெல்வேலி மாவட்டம்.
போன் : 04634-253921
மொபைல் : 94436 79339
அர்ச்சகர்: கேதீஸ்வர பட்டர்
15, அம்மையப்பர் தெரு,
அம்பாசமுத்திரம் 627 401.
மொபைல் : 93658 41179

Comments