குகைக்குள் அதிசயம்!

பரசுராம சேத்திரம் என்று போற்றப் படுவதும், ஆதி சங்கரர் அவதரித்த புண்ணியபூமியுமான கேரளம்... எண்ணற்ற ஆலயங்களை தன்னகத்தே கொண்டது. அவற்றுள்... அற்புதங்களின் உறை விடமாக திகழ்கிறது நாராம்பட்டி சிவாலயம்!

கேரள மாநிலம், காசர்கோட் தாலுகாவில் அமைந்துள்ள சிற்றூர் நாராம்பட்டி. எந்நாட்டவருக்கும் இறைவனாம் ஈசன், ஸ்ரீஉமாமகேஸ்வரராகக் கோயில் கொண்டிருக்கும் அற்புத திருத்தலம். தற்போது, சற்று சிதிலமடைந்து காணப்பட்டாலும்... ஸ்ரீஉமாமகேஸ்வரர் ஆலயத்தின் தல புராணமும் வழிபாட்டு நியதிகளும் விசேஷமானவை!

இங்குள்ள சிவலிங்க மூர்த்தம், கராசுரனால் பூஜிக்கப் பட்டது என்கிறார்கள். ஒரு கட்டத்தில் சிவலிங்கத் திருமேனி மண்ணில் புதையுண்டு போனதாம்.

இந்த நிலையில் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர், தனது கோடரியைக் கூர்படுத்துவதற்காக, இங்கிருந்த ஒரு கல்லில் வைத்து தேய்த்தாராம். அப்போது, கல்லில் இருந்து ரத்தம் பீறிட்டது. பதறிப் போனவர் ஓடோடிச் சென்று ஊர்ப் பிரமுகர்கள் சிலரை அழைத்து வந்தார். அனைவரும் சேர்ந்து கல்லைப் பெயர்த்து வெளியே எடுத்தனர். அது... அழகிய சிவலிங்கம்!

பிறகு, அந்த இடத்தில் திருக்கோயில் எழுப்பப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கோயிலுக்கு அருகே ஒரு வனத்தில், குகை ஒன்றையும் கண்டறிந்தனராம். இது, பாண்டவர்களால் அமைக்கப் பட்டது என்கிறார்கள். இந்த குகைக்குள் பெரிய குளம் ஒன்றும் அதனுள் ஆறு கிணறுகளும் உள்ளனவாம்!

லிங்கத்தைக் கண்டுபிடித்த 'நிட்டோளி' என்பவரின் வம்சாவளியைச் சேர்ந்த இருவர், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சித்திரை மாதம் 20-ஆம் நாள், கடும் விரதம் மேற்கொண்டு இந்த குகைக்குள் சென்று பூஜைகள் செய்து விட்டு வருவார்களாம். அதன் பிறகு, கோயில்
நம்பூதிரிகள் இருவர் கலசம் மற்றும் கைவிளக்குடன் குகைக்குள் சென்று பூஜைகளை முடித்து விட்டு, மூலஸ்தானத்தில் இருந்து எடுத்து வரும் மண்ணை பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருவர்.
குகைக்குள் செல்பவர்கள் உள்ளே எந்த தெய்வத்தை வணங்கினர்; எத்தகைய பூஜைகளை செய்தனர் என்பது போன்ற விவரங்கள் வேறு எவருக்கும் தெரியாது. 'இது குறித்த தகவலை எவரிடமும் கூற மாட்டோம்!' என்று சத்தியம் செய்த பிறகே இவர்கள் விரதத்தைத் துவங்கு வார்களாம். தற்போது, இந்தக் குகை பழுதடைந்து உள்ளது. குறிப்பிட்ட விசேஷ நாட்களில்- இரவு வேளையில் இந்த குகைக்குள் பூஜைகள், மணியோசை, தெய்வீக கானம் மற்றும் திருநடனம் ஆகியன நடைபெறு வது போன்ற ஓசை கேட்குமாம்! உமாதேவியும் மகேஸ்வரருமே இங்கிருந்து தங்களுக்கு ஆசி வழங்குகிறார்கள் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!

இங்கு படையெடுத்து வந்த திப்புசுல்தான் இந்தக் கோயிலை அழிக்க முற்பட்டானாம். இதையறிந்த ஊர்ப் பெரியவர்கள் ஸ்வாமி விக்கிரகங்கள், ஆபரணங்கள் மற்றும் பூஜை பாத்திரங்களை எடுத்துச் சென்று பாண்டவர் கிணற்றில் பத்திரப்படுத்தினராம். பிறகு, கோயிலுக்குத் தீவைத்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.
பல வருடங்களுக்கு பிறகு, மாயாபட்டியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் இந்த இடத்தில் கோயில் எழுப்பி, வழிபாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்தாராம்.

தற்போது ஊர்ப் பெரியவர்களின் முயற்சியில், தினமும் ஒருகால பூஜை நடைபெறுகிறது. காலை 10:00 மணிக்கு திறக்கப்படும் கோயில், 12:00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

Comments