விருத்திராசுரன் சொன்ன பாடம்

நம்பினார் கெடுவதில்லை! நம்பிக்கையுடன் இறைவனை நாடினால், பிறவிப் பயனை நிச்சயம் அடையலாம். இதற்கு உதாரணம் விருத்திராசுரனின் வரலாறு.
அசுர குலத்தில் பிறந்தாலும் இறைபக்தி மற்றும் மனத் தூய்மையால் வெற்றி கண்டவர்கள் - பிரகலாதனும் விபீஷணனும். இவர்களைப் போன்றே விருத்திராசுரனும் இறைபக்தியால் சிறப்பு பெற்றவன். முற்பிறவியில் சித்ரகேதுவாகப் பிறந்து ஸ்ரீமந் நாராயணனின் பக்தனாகத் திகழ்ந்தவன் இவன். எனினும், பார்வதிதேவியின் சாபத்தால், இந்தப் பிறவியில் அசுர குலத்தில் பிறக்க நேரிட்டது.
'பிறப்பின் இலக்கு என்ன' என்பதை உணர்த்தும் இவனது வாழ்க்கைக் கதையை விரிவாக அறிவோமா?
மனத் தூய்மையே ஆன்மிகக் கல்விக்கான நுழைவுத் தேர்வு. 'சாஸ்திரத்தின் அறிவுரையை ஏற்றுச் செயல்பட்டால் மனம் தூய்மை பெறும்' என்கிறார் ஆதிசங்கரர். சுக-போகங்களில் ஆர்வம் கொள்ளும் மனம் தனது தூய்மையை இழக்கும். இந்திரனின் நிலை அப்படித்தான் ஆனது; செல்வச் செழிப்பில் சட்டத்தை மீறிச் செயல்படத் துணிந்தான்!
இந்திரன் தவறான வழியில் செல்வதைக் கண்ட பிரகஸ்பதி தேவலோகத்தை விட்டு வெளியேறினார். குருதேவர் இல்லாமல் தேவலோகமே தவிப்பதை அறிந்த அசுரர்கள், 'இதுதான் தக்க தருணம்' என்று தேவர்களை தாக்கினர். தேவர்கள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தனர்.

பிரம்மதேவனிடம் ஓடோடிச் சென்றான் இந்திரன். அவரது ஆலோசனைப்படி துவஷ்டாவின் புதல்வனான விச்வரூபனை குருவாக ஏற்றான்.
நாராயண கவசம் அறிந்தவன் விச்வரூபன். இதன் மகிமையால் இந்திரன் பலம் பெற்றான். அசுரர்களை வென்று மீண்டும் அரியணை ஏறினான்.
விச்வரூபனின் தாய், அசுர குலத்தைச் சேர்ந்தவள். எனவே, இவனிடமும் அசுர குணம் இருந்ததில் வியப்பேதும் இல்லை. வேள்வியில் தேவர்களுக்குச் சேர வேண்டிய அவிர்பாகத்தை, அசுரர்களுக்குத் திருப்பி
விட்டான். இதையறிந்த இந்திரன் கோபம் கொண்டான்; தேவர்களது நலன் கருதி, விச்வரூபனை அழித்தான்.
புத்திரனை இழந்து தவித்த துவஷ்டா, இந்திரனைப் பழிவாங்கத் துடித்தான். எனவே, வேள்வியின் மூலம் ஒரு புதல்வனை தோற்றுவித்தான். அவன்தான் விருத்திராசுரன்... இந்திரனை வெல்லப் பிறந்தவன்.
ஆனால், துரதிருஷ்டவசமாக தேவர்களுடன் ஏற்பட்ட போரில் தோல்வியைத் தழுவினான். எனினும் மனம் கலங்கவில்லை. முன்ஜென்ம செயல்பாடுகள் இந்தப் பிறவியிலும் அவனிடம் தொடர்ந்தன. ஸ்ரீமந் நாராயணரிடம் விருத்திராசுரன் கொண்டிருந்த பக்தி... இன்ப- துன்பங்களை; வெற்றி- தோல்விகளை சமமாக பாவிக்கும் பக்குவத்தை அவனுக்குத் தந்திருந்தது.
விருத்திராசுரனின் விருப்பு வெறுப்பற்ற இந்த நிலையைக் கண்டு அசுரகுருவான சுக்ராச்சாரியர் வியந்தார். "தோல்வியுற்றும் உன் முகத்தில் வாட்டம் இல்லையே?'' என்று அவனிடமே வினவினார்.
"வாய்மை, புலனடக்கம் மற்றும் தவம் ஆகியவற்றைக் கையாண்டதால், என் மனம் தெளிவு பெற்றிருப்பதை உணர்கிறேன். உயிரினங்களின் தோற்றம்- மறைவு, இன்ப- துன்பம் ஆகியவற்றுக்குக் கர்மவினைகளே காரணம் என்பதையும் புரிந்து கொண்டேன். இந்தப் பக்குவம் மனிதனுக்கு வேண்டும். அதைத்தான் என்னுள் காண்கிறீர்கள்'' என்று தன்னடகத்துடன் பதிலளித்த விருத்திராசுரன், "பரம்பொருளுடன் இணைவதே எனது விருப்பம். அதற்குத் தாங்களே வழிகாட்ட வேண்டும்!'' என்று சுக்ராச்சாரியரிடம் வேண்டினான்.
இதைக் கேட்ட சுக்ராச்சாரியர், "உலகத்தை உள்ளடக்கிய பரம்பொருளின் பெருமையைக் கூறுகிறேன், கேள்...'' என்று ஆரம்பித்தார். அப்போது, மகாமுனிவரான சனத்குமாரர் அங்கு விஜயம் செய்தார்.
இருவரும் அவரை வரவேற்று உபசரித்தனர். பிறகு அவரிடம், "பரம்பொருளின் மகிமையை தாங்களே இவனுக்கு உபதேசிக்க வேண்டும்'' என்று சுக்ராச்சார்யர் கேட்டுக் கொண்டார். அதன்படி ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை விளக்க ஆரம்பித்தார் சனத்குமாரர்:
"பிரபஞ்சம் முழுவதும் ஸ்ரீமந் நாராயணனில் அடக்கம். உயிர்களின் தோற்றம், பாதுகாப்பு, மறைவு அனைத்தும் அவரிடமே நிகழ்கிறது. வேள்வி, தவம், சாஸ்திர அறிவு ஆகியவை மட்டுமே அவரை அடைவதற்குப் போதுமானது அல்ல!
புலனடக்கத்துடன், அவரைப் பற்றிய சிந்தனைகளில் மட்டுமே மனதை நிலை நிறுத்தினால், ஸ்ரீமந் நாராயணர் நிச்சயம் நமக்குப் புலப்படுவார். எல்லா உயிரினங்களிலும் ஒளியாக ஊடுருவி, அவற்றை இயங்க வைக்கும் அந்தப் பரம்பொருளுடன் இணைவதே ஆன்ம லாபம்!'' என்று போதித்தார். பெருமாளின் பெருமைகளைக் கேட்டு மெய்ம்மறந்தான் விருத்திராசுரன்.
இதைத் தொடர்ந்து, இறைவன் மேல் அவன் கொண்ட ஈடுபாடு அதிகரித்தது. அரசாள விருப்பம் இல்லை
என்றாலும், இந்திரனை எதிர்க்கும் எண்ணத்தை அவன் கைவிடவில்லை!
இந்த நிலையில், பல வழிகளில் விருத்திராசுரனை அழிக்க முயன்றான் இந்திரன். ஆனால், பலன் இல்லை. எனவே, தேவர்கள் ஒன்று கூடி ஸ்ரீமந் நாராயணனை பிரார்த்தித்தார்கள்.
"தேவர்களே! இன்னமும் நீங்கள் நிலையற்ற இன்பத்தையே சுவைக்க விரும்புகிறீர்கள். ஆகவே, விருத்திரனின் அழிவை விரும்புகிறீர்கள். அவனோ, அனைத்தையும் துறந்து என்னை அடைய முயற்சிக்கிறான். இதை நீங்களும் பின்பற்றினால் எல்லாம் நலமாகும்!'' என்று அருளினார் திருமால்.
பிறகு இந்திரனை அழைத்தவர், "ததீசி முனிவரின் அனுமதியுடன் அவரது முதுகெலும்பைப் பெற்று வா. அதைக் கொண்டு விஸ்வகர்மாவின் உதவியுடன் வஜ்ராயுதத்தை உருவாக்கினால், விருத்திரனை அழிக்கலாம்!'' என்று அறிவுறுத்தினார்.
தேவர்களது விருப்பம் விருத்ராசுரனின் அழிவு; விருத்திரனின் விருப்பமோ பெருமாளை அடைவது! இரண்டையும் பூர்த்தி செய்யும் விதம் அருள் புரிந்தார் திருமால்!
அதன்படியே, ததீசி முனிவரிடம் சென்று, அவரது முதுகெலும்பை யாசித்தான் இந்திரன். உலக நன்மைக்காக உயிரைத் துறந்தார் ததீசி முனிவர். அவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக மாற்றி, போருக்கு ஆயத்தமானான் இந்திரன்.
பெரும் வல்லமையுடன் தன்னை எதிர் கொண்ட இந்திரனைக் கண்டு விருத்திரன் கலங்கவில்லை. நம்பிக்கையுடன் போர் புரிந்தான். அவனது போர்த் திறனை தாக்குப்பிடிக்க முடியாமல், இந்திரன் பின்வாங்கினான்!
நம்பிக்கை இழந்த இந்திரனைத் தேற்றி, உற்சாகப் படுத்தினார் வசிஷ்ட முனிவர். இந்த நிலையில், இந்திரனின் உடலில் புகுந்து அவனது பலத்தைப் பெருக்கினார் திருமால். சம்ஹார மூர்த்தியான சங்கரர், தனது வெப்பத்தை விருத்திரனின் உடலில் செலுத்தி, அவனை பலவீனப்படுத்தினார்.
ஆனாலும், மனம் தளராமல் செயல்பட்டான் விருத்திராசுரன். போர்க் களத்தில் இந்திரனுக்கே நம்பிக்கை ஊட்டினான்: "பயப்படாதே! பலம் பொருந்திய வஜ்ராயுதம் உன்னிடம் உள்ளது. நானும் மரணத்தை ஏற்க தயாராகவே உள்ளேன். என் உடலை ஸ்ரீமந் நாராயணனுக்கு சமர்ப்பித்து, கர்ம பந்தத்தில் இருந்து விடுபட்டு பரமபதத்தை அடைய விரும்புகிறேன்.
உனது வஜ்ராயுதத்தில், ஸ்ரீமந் நாராயணனின் ஒளியும் ததீசி முனிவரின் வலிமையும் ஒருங்கே உள்ளது. ஸ்ரீமந் நாராயணன் இருக்கும் இடத்திலேயே வெற்றித் திருமகளும் வசிப்பாள். எனவே, உனக்கே வெற்றி கிட்டும்.
இந்த வெற்றியால் நீ அடைவது... நிலையில்லாத சுகபோகமும் சிம்மாசனமும்தான்! எனக்கோ நித்தியமான பரமானந்தத்தை அளிப்பார் ஸ்ரீமந் நாராயணன். ஆம்... இந்தப் போரில் வெல்பவன் துக்கத்தில் தள்ளப்படுவான்; தோற்பவனோ பரமபதம் எனும் பேரானந்தத்தைப் பெறுவான். வா... என்னுடன் போரிடு!''
_ பரம்பொருளுடன் இணைய விரும்பிய விருத்திராசுரன், மரணத்தையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றான். போரின் முடிவில்... வஜ்ராயுதம், அவனது விருப்பத்தை பூர்த்தி செய்தது. ஸ்ரீமந் நாராயணன், அவனை ஆட் கொண்டார். ஆம், விருத்திராசுரனின் இறைபக்தி, முனிவர்களுக்கும் எட்டாத இடத்தை அவனுக்குப் பெற்று தந்தது.
உலகவியலில் உழன்றாலும் இறை சிந்தனையுடன் வாழ வேண்டும். அப்போது, துன்பமும் இன்பமாகும்; வாழ்க்கையே நமக்கு வரமாகும்!

Comments