மாரியம்மன் காளியம்மன் கோயில்

“நல்லகாலம் பொறக்குது! நல்லகாலம் பொறுக்குது.! மலையாள பகவதி தேவி ஜக்கம்மா சொல்றா... நல்லகாலம் பொறக்குது. குகை காளியம்மன் மாரியம்மன் கோயிலுக்குப் போ தாயி. உன் வம்சம் செழிக்கும். வாழ்க்கை வளமாகும்!’“ஏம்பா குடுகுடுப்பை. அது என்னப்பத குகைக் கோயில்? எங்கே இருக்கு அது? அதோட பெருமை என்ன?’“சொல்றேன் தாயீ, சொல்றேன். கவனமா கேட்டுக்கோ!’

குகைன்னு சொன்னா, நீ நினைக்கிறாப்புல காடோ மலையோ மிருகமோ இருக்கற குகை இல்லை தாயீ... அது ஒரு இடம். அதுவும் இன்னிக்கு ரொம்ப பரபரப்பா இருக்கிற நகரங்கள்ல ஒண்ணான சேலத்துல இருக்கற இடம். அங்கே தான் இருக்கு, காளியம்மன் மாரியம்மன் கோயில். ஆனா ஆதிகாலத்துல வனாந்தரமாக் கெடந்த இந்தப் பகுதியில ஒரு குகை இருந்துச்சாம். அதுல மௌன சாமியார் ஒருத்தர் வசிச்சாராம். அவர் சித்தியடைஞ்சதும், அவரோட சமாதிமேல ஒரு முனீஸ்வரர் கோயிலைக் கட்டிட்டாங்களாம். அதுவும் சுத்துப் பகுதியிலதான் இருக்கும்.
மாரியம்மன் காளியம்மன் கோயில்னு ஒரே கோயிலா சொன்னாலும் ரெண்டும் தனித்தனி கோயிலா எதிரெதிரா இருக்கு. இந்த ரெண்டு கோயில்ல, ஒரு கோயிலுக்கு போனா, இன்னொரு கோயிலுக்கும் கண்டிப்பா போகணும். இந்த ரெண்டு கோயிலையும் அக்கா தங்கச்சி கோயில்னும் குறிப்பிடுறாங்க.

பொதுவா, மாரியாத்தாளை, ரேணுமா பரமேஸ்வரி அம்சம். மழைக்குக் காரணமான ஆத்தா. கிராமத்து தேவதை. ஊர் எல்லைச் சாமி. இப்படியெல்லாம் சொல்வாங்க. மாரி திரிசூலி மணி மந்திரசேகரியே...! ஆயி உமை ஆனவளே... ஆஸ்தான மாரிமுத்தே...! அப்படின்னு மாரியாத்தாளை பார்வதி தேவி அம்சமுன்னும் சொல்வாங்க. ஆனா இங்கே மாரியம்மனையும் காளியம்மனையும் அக்கா தங்கச்சியா சொல்றதுக்கு ஒரு காரணக் கதை இருக்கு.
பரமேஸ்வரி பகவதி ஆத்தா அகம்பாவம் பிடிச்சு அலைஞ்ச அசுரர்களை அழிச்ச புராணம் உனக்குத் தெரியுமில்லையா? அப்படி அவ சூரசம்காரம் பண்ணினப்ப, நேரடியா அந்த உருவத்துலயே செய்யலை. தன்னோட அம்சமா காளிதேவியைப் படைச்சு, சுரர்களோட சண்டைபோட்டு அவங்களை அழிக்க வைச்சா. அதாவது தானே தன்னோட பிம்பமா அவதரிச்சு அசுரவதம் சொஞ்சா. அப்படி ஒரு அவதாரத்துக்கு அப்புறம் இன்னொண்ணா வந்ததால், மூத்தது அக்கா, இளையது தங்கச்சின்னு ஆச்சு. ரெண்டு வடிவத்துக்குமான கோயிலானதால் அக்கா தங்கச்சி கோயில்!
“அதெல்லாம் சரிப்பா, அந்தக் கோயிலுக்கு என்ன மகத்துவம்? அதைச் சொல்லேன்...!’
“ஆத்தா முதல்ல ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க ஜக்கம்மா உன்னை இந்தக் கோயிலுக்குப் போகச் சொல்றதே நீ செஞ்ச பாக்கியம்தான். ஏன்னா, குகை மாரியம்மன், காளியம்மன் கோயிலுக்குப்போயி வேண்டிக்கிட்டவங்களுக்கு கல்யாணம் ஆகிறதுலயிருந்து வம்சம் தழைக்கிறது. செல்வம் கொழிக்கிறது. சொத்துபத்து பிரச்னை, சொந்த பந்த பொல்லாப்பு தீருறதுன்னு கிடைக்காத வரம் இல்லே. தீராத பிரச்னை இல்லே... கோயிலுக்குப் போனா அங்கே கொட்டப்பட்டிருக்கற உப்பு, மிளகுலேயிருந்து, செய்யப்பட்டிருக்கற அலங்கார அர்ச்சனைகள், வேண்டிக்கிட்ட செய்யப்படற உருள் தண்டப் பிரார்த்தனைகள்னு எல்லாத்தையும் பார்த்தாலே இந்த தெய்வங்களோட அருள் என்னங்கறது உனக்கே புரிஞ்சுடும். அதுமட்டுமில்லே... ரொம்ப பழமையான கோயில்ங்கறதுனால இயல்பாகவே இங்கே பக்தி அதிர்வுகள் அதிகமா இருக்கு. ஆடி மாசத்துல இங்கே நடத்தப்படற வண்டி வேடிக்கை விழா கிட்டத்தட்ட நூறு வருஷத்துக்கும் முன்னால ஆரம்பிக்கப்பட்டதுன்னா இந்தக் கோயிலோட பழமை என்னன்னு பாரேன்...!’
“அது என்னப்பா வண்டி வேடிக்கை விழா? பேரே வித்தியாசமா இருக்கே...!’
“ஜக்க்மா மலையாள பகவதி, காளி, நீலி, சூலி... அம்மா, அது பேருல மட்டும் இல்லாம நிசத்துலயும் வித்தியாசமான விழாதான். ஆடிமாசத்துல பொதுவாவே அம்மன் கோயில்கள்ல திருவிழா நடக்கும். விதவிதமா அலங்காரம், பூமிதின்னு பூஜைகளும் இருக்கும். அது எல்லாமும் இங்கேயும் நடக்கும் தாயீ..! அதோட இங்கே வித்தியாசமா நடக்கற வண்டிவேடிக்கை ஒருவிதத்துல பிரார்த்தனை. இன்னொரு விதத்துல வேடிக்கை.
மாரியாத்தாகிட்டே எதையாவது வேண்டிக்கிட்டு அந்தக் கோரிக்கை ஈடேறினவங்க, வழக்கமா வண்டி வேடிக்கைல ஈடுபடறவங்க இப்படி பலரும் விதவிதமான சாமி வேஷங்கட்டி வண்ணவண்ணமா அலங்காரம் செஞ்ச வண்டிகள்ல உட்கார்ந்துகிட்டு அம்மன் கோயில் வீதியில சுத்திவருவாங்க. அவங்களுக்கு பிரார்த்தனை. பார்க்கறவங்களுக்கு வேடிக்கை. அதுமட்டுமில்லே இதுல பார்வதி, காளி, சீதை இப்படி அம்மன் சாமி உருவங்கள்லயும் பலர் வருவாங்க. ஆனா அப்படி வேஷம் கட்டற எல்லாருமே ஆம்பளைங்கதான். இன்னொரு விஷயம். அப்படி வர்ற அலங்கார வண்டிகள்ல ரொம்ப நல்லா இருக்கற வண்டிக்கு பரிசு கூட தருவாங்க.’
“ஆடிமாசத்துல மாரியம்மனுக்கு மட்டும்தான் விசேஷமாப்பா? காளியம்மனுக்கு இல்லையா?’“என்ன தாயே அப்படிக் கேட்டுட்டே..! ரெண்டு தெய்வக் கோயில்லயும் சேர்த்துதான் திருவிழாவே நடக்கும். அதுல இன்னொரு விஷயம் கேளு. எப்போதும் அன்பா காணப்படற காளியாத்தா, ஒருநாள் உக்ரரூபிணியா மாறுவா. அன்னிக்கு சூரசம்காரம் நடக்கும். அதாவது அசுரர்களை அழிச்சதைக் கொண்டாடற விழா!’
“கோயிலுக்குள்ள வேற சாமியெல்லாம் இருக்கா?’ “வகை தொகைக்கு வஞ்சனை இல்லாம இருக்கு... பிள்ளையாரு, முருகன், துர்க்கை, சரஸ்வதி, வாராகி, காயத்ரி, மகாலட்சுமி இப்படி ரெண்டு கோயில்லயும் இருக்கற சன்னதிகள் பெரிய பட்டியல். அதையெல்லாம் நான் சொல்றதைவிட நீயே போறப்ப பாத்துத் தெரிஞ்சுக்க...! என்ன மனக்குறை உனக்கிருக்கோ நானறியேன்...அது எதுவா இருந்தாலும் சேலம் குகை காளியம்மன்-மாரியம்மன் கோயிலுக்குப் போயிட்டு வா. ஆத்தா மனசு இரங்குவா. உன் பிரச்னை தீரும். போயிட்டு வந்ததும் என்னை மாதிரி ஏழைக்கு உன்னால முடிஞ்ச சோறு ஒருவேளை போடு, எங்க வயிறு குளிரும். நல்ல காலம் பொறக்குது. ஜக்கம்மா சொல்றா...!’ “கோயில் எங்கே இருக்குங்கறதை தெளிவா சொல்லிட்டுப் போப்பா, உனக்குப் புண்ணியமா போகும்...!’

“சேலம் புது பஸ் ஸ்டாண்டுல இருந்து சுமார் ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு குகை ஸ்டாப்பிங். அங்கே இருந்து அரை கிலோமீட்டர் தூரத்துல இருக்கு, இந்து அறநிலைத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்கற மாரியம்மன் காளியம்மன் கோயில்.’

Comments