நல்லாத்தூர் - ஆங்கிலேய கலெக்டர் அளித்த ஆலயமணி!

தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு இம்மையில் போகமும் மறுமையில் முக்தியும் அளிக்கும் எல்லாம் வல்ல ஈசன் எழுந்தருளியுள்ள தலங்களுள் ஒன்று, நல்லாத்தூர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் இவ்வாலயம் பல்லவர் கால கட்டமைப்புக் கொண்டு விளங்குகிறது. இத்தல எம்பெருமானை திருநாவுக்கரசு சுவாமிகள் 6-ம் திருமுறை 77ம் பதிகம் 4வது பாடலில் வைப்புத் தலமாகப் பாடியுள்ளார்.


அழகான வண்ண சுதைச் சிற்பங்கள் அலங்கரிக்க மூன்று நிலை, ஐந்து கலசங்களுடன் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறது ராஜகோபுரம்.
முன்மண்டபத்தில் பலிபீடம், நந்தியை வணங்கி மகா மண்டபம் அடைகிறோம். பத்துத் தூண்கள் கொண்ட இந்த மண்டபத்தை சொக்கட்டான் மண்டபம் என்றும் அழைப்பர். ராஜகோபுரத்திற்கு எதிரில் இறைவி திரிபுர சுந்தரி தெற்கு நோக்கி தரிசனம் தர, கருவறையில் மூலவர் சொர்ணபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சுயம்பு மூர்த்தம், அவருக்கு கீழே நவகிரக யந்திரமும் அம்பாளுக்குக் கீழே மகாமேருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சாளரக்கோயில் வகையைச் சேர்ந்தது என்பதால் மூலவருக்கு எதிரே வாசல் இல்லை. பிராகார வலமாக கிழக்குப் புறம் சென்று பலகணி எனப்படும் கல் ஜன்னல் வழியாக வெளியே இருந்தும் இறைவனை தரிசிக்கலாம். அங்கே பலிபீடமும் பிராகார நந்தியும் உள்ளன. இங்கேதான் பிரதோஷ கால பூஜைகள் நடைபெறுகின்றன.மகாமண்டபத்திலிருந்து இங்குள்ள தெய்வங்களை ஒருசேர வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கஷ்டங்களும் விலகி, குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை.
பார்வை, சுவாசம், வயிறு உட்பட உடல் உறுப்புகளில் பிரச்னை உள்ளவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இறைவனை வேண்டிக் கொண்டால், நற்பலன் கிட்டுவது நிச்சயம் என்கிறார்கள். பிதுர் தோஷங்களும் இத்தல இறைவனை வணங்கினால் விலகுகிறதாம். பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் சுவாமி, அம்பாளுக்கு புது வஸ்திரம் சாத்தி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


மகாமண்டபத்தில் கண்ணை கவரும் பல சிற்பங்களைக் காணலாம். அதில் எமனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயனைக் காப்பாற்றும் காலசம்ஹார மூர்த்தி, கர்ண விதாயிணி என்னும் பெயரில் வீணை இசைக்கும் சரஸ்வதி, பசுக்கூட்டங்களுக்கு நடுவில் பாமா-ருக்மணி சமேதராக புல்லாங்குழல் இசைக்கும் அமிர்த வேணுகோபால சுவாமி, பதங்க முனிவர், புலிக்கால் முனிவர், புஷ்ப கந்தர்வ கன்னிகை, 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்குத் தாமரை சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.
இங்குள்ள கரண் விதாயிணியை வழிபட்டால், படிப்பில் மந்தநிலையில் இருக்கும் மாணவர்களும் கல்வியில் உயர் நிலையை அடையலாம்.
காலசம்ஹாரமூர்த்தி இங்கு காட்சி தருவதால் ஆயுள் விருத்திக்காக திருவாதிரை நட்சத்திரத்தில் மகாமிருத்யுஞ்ஜய ஹோமம் நடத்தப்படுகிறது. அன்று சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் உண்டு. சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி போன்றவையும் இங்கு செய்யப்படுகின்றன. திருக்கடையூருக்குச் செல்ல இயலாதோர் இத்தலத்தில் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதனால் இத்தலம் வடதிருக்கடையூர் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
கோஷ்ட தெய்வங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, ஆஞ்சநேயர்
அருள்கின்றனர்.

பிராகார வலம் வருகையில் சாய் முனிவர், சங்கு முனிவர், நால்வர், சுந்த விநாயகர், ஆறுமுக சுப்பிரமணியர், சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவகிரகங்களுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. தல விநாயகரான சுந்தர விநாயகருக்கு சந்தனக் காப்பு செய்து வேண்டிக்கொண்டால் முகப்பருக்கள், வடுக்கள் மறைந்துபோகுமாம்.சிவாலயமாக இருந்தாலும் ஆறுமுக சுப்பிரமணியருக்கு மட்டும்தான் கொடிமரம் தனியாக அமைந்துள்ளது. பலிபீடமும் மயில்வாகனமும் உள்ளது. சிவாலயத்திற்கான அனைத்த விழாக்களும் கொண்டாடப்பட்டாலும், சூரசம்ஹார உற்சவமே இத்தலத்தின் பிரமோற்சவ விழாவாகும். காலை 6 - 10.30; மாலை 5 - இரவு 8 மணி வரை தரிசன நேரங்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கடலூரில் கலெக்டராக பணிபுரிந்தவர் பகோட என்ற ஆங்கிலேய அதிகாரி. அவருடைய மகள் பார்வையற்றிருந்தாள். சொர்ணபுரீஸ்வரரைப் பற்றிக் கேள்விப்பட்டு இத்தலம் வந்து அவர்கள் சிவபெருமானை வழிபட, மகள் பார்வை பெற்ற அதிசயம் நடந்தது.மகிழ்ச்சியடைந்த அவர் இவ்வாலயத்திக்கு நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக அளித்து, அந்த நிலங்களுக்கு வரி வசூலிக்க வேண்டாம் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் 1907ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து பெரிய மணி ஒன்றை வாங்கி வந்து ஆலயத்திற்கு வழங்கினார். அந்த மணியை இப்போதும் காணலாம். பூஜை நேரங்களில் அடிக்கப்படும் இந்த மணியின் ஓசை மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்குக் கேட்குமாம்.

பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில், கடலூர் மாவட்டத்தில் நல்லாத்தூர் உள்ளது.

Comments