வரம்

யர்ந்த செல்வந்தனாக வேண்டும் என்ற கனவில் மிதந்த 'பாகோம்' என்பவன், செழித்துக் கிடந்த ஒரு கிராமத்தில் நிலம் வாங்கப் பணத்துடன் புறப்பட்டான். கிராமத் தலைவரைச் சந்தித்து நிலத்தின் விலையைக் கூறும் படி வேண்டினான். 'ஒரு நாள் விலை ஆயிரம் ரூபிள்' என்றான் கிராமத் தலைவன். 'ஒரு நாள் விலையா?' என்று ஒன்றும் புரியாமல் விழித்தான் பாகோம். 'ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு நிலத்தில் நடக்கிறீர்களோ, அவ்வளவு நிலம் உங்களுடையது. அதன் விலை ஆயிரம் ரூபிள்' என்று விளக்கினான் கிராமத் தலைவன்.
மறு நாள், சூரியன் வானத்தில் மெள்ள வருகை தந்தபோது கிராமத் தலைவன் சொன்னபடி ஆயிரம் ரூபிளை எண்ணிக் கொடுத்துவிட்டு, நிலத்தின் ஒரு முனையிலிருந்து வேகமாய் நடைபோட்டான் பாகோம். பச்சைப் பசேலென பரந்து விரிந்த நிலம் முழுவதையும் தன் உடைமையாக்கிக் கொள்ளும் வெறியோடு, ஓய்வின்றி மாலை வரை நடந்தவன் உடல் தளர்ந்து உயிர் துறந்தான். கிராமத் தலைவன் ஆறடி மண் தோண்டிப் பாகோம் உடலைப் புதைக்கச் சொன்னான். முடிவில்லாத ஆசை தரும் முடிவை, இப்படிக் கதையாக எழுதியவர் ருஷ்யப் பேரறிஞர் டால்ஸ்டாய்.
அலைகள் இல்லாத கடல், விண்மீன்கள் இல்லாத இரவு வானம், மேடு- பள்ளம் இல்லாத மலை, பறவைகள் இல்லாத சோலை, முடிவற்ற ஆசைகள் இல்லாத மனித மனம் உலகில் எங்கும் இல்லை. எந்த ஆசையும் பேராசையாகப் பெருகக் கூடாது. நாம் நடந்தால் நம் நிழல் பின்தொடர்வது போல், ஒவ்வொரு ஆசைக்குப்
பின்னாலும் ஒரு துன்பம் தொடர்கிறது. எல்லா ஆசைகளிலும் மனிதனைப் பாடாய்ப் படுத்துவது பணத்தாசையே. காரணம், பணம் இருந்தால் எந்த உலக இன்பத்தையும் எளிதாக விலை கொடுத்து வாங்கிவிட முடியும் என்பது மனித நம்பிக்கை. அதனால்தான், எங்கும் நிலையாக நில்லாமல் செல்லும் இயல்புடைய செல்வத்தைத் தேடுவதே நம்மில் பலருக்கு ஒரே நோக்கமாக இருக்கிறது.
'வயோதிகம் அழகை அழிக்கிறது. ஆசை தைரியத்தை அழிக்கிறது. பொறாமை கர்மத்தை அழிக்கிறது. கோபம் செல்வத்தை அழிக்கிறது. காமம் வெட்கத்தை அழிக்கிறது. ஆனால், செல்வம் சேரச் சேர, எல்லா நல்ல பண்புகளையும் அழித்து விடுகிறது' என்பது அனுபவத்தில் கனிந்த ஆன்றோர் வாக்கு.
சாதாரண மனிதர்களால் எல்லா ஆசை களையும் துறந்து விட முடியாது. ஆனால், மனம் பண்பட்டால் ஆசைகளிலிருந்தும், பற்றுகளிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு விலகக் கூடும். பற்றை விடுவது துறவாகாது. நாம் யாரும் துறவியாக வேண்டாம். நம்மிடம் இருக்கும் வசதிகளை இன்பமாக அனுபவிப்போம். ஏதாவது இல்லை என்றால், அதற்காக ஏங்கித் தவிக்காமல் இருப்போம். இருப்பதை விட்டு விட்டு, பறப்பதைப் பார்த்து ஏங்கினால் மனதுக்கு நிம்மதியோ, நிறைவோ என்றும் வராது. ஒரு விவசாயி, தன் நிலத்தை உழும்போது அழகான தங்கச் சிலையைக் கண்டெடுத்தான். அது நல்ல விலைக்குப் போகும் என்ற மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான். 'இனி, வறுமையிலிருந்து விடுதலை' என்று குடும்பமே கூடி மகிழ்ந்தது! பதினெட்டு சிலைகள் ஒரு காலத்தில் பூமியில் புதைக்கப்பட்டதாக தகவல் ஒன்று அவனுக்குக் கிடைத்ததும், 'மற்ற சிலைகள் எங்கே புதையுண்டு கிடக்கின்றனவோ' என்று எண்ணி கண்ணீர் விட்டான். நம்மில் பலர் அந்த விவசாயியின் வாரிசுகள்தான்.
ஒரு கிழவி எப்போதும் ஓயாமல் ஒப்பாரி வைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தாள். பெரியவர் ஒருவர், 'ஏனம்மா எப்போதும் அழுது கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டார். 'பெரியவரே! என் இரண்டு பெண்களில் ஒருத்தியைக் காலணி விற்பவனுக்கும், இன்னொருத்தியைக் குடை விற்பவனுக்கும் மணம் செய்து கொடுத்தேன். மழைக் காலத்தில் காலணி சரியாக விற்காததால் வறுமையில் வாடும் ஒரு மகளின் குடும்பத்துக்காக அழுகிறேன். மழை இல்லாதபோது குடை விற் காததால் மற்றொரு மகளின் துயரை நினைத்து அழுகிறேன்' என்றாள் அந்தக் கிழவி.
பெரியவர் புன்னகைத்தார். 'அம்மா, மழைக் காலத்தில் குடை வியாபாரம் செய்யும் குடும்பம் வளமாக இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள். வெயில் காலத்தில் காலணி விற்கும் குடும்பம் நலமாக இருக்கும் என்று நிம்மதி கொள். இப்படி நீ நினைக்கப் பழகினால் ஆண்டு முழுவதும் ஆனந்தமாக இருக்கலாமே' என்றார். இதைக் கேட்டவள், 'நீங்கள் சொல்வதே சரி. மகிழ்ச்சியாக வாழும் வழி இப்போதுதான் எனக்குத் தெளிவாகப் புரிந்தது' என்றாள். அந்தக் கிழவிக்குப்

புரிந்தது நமக்கும் புரிந்தால் நல்லது.
'ஒரு நிமிட அபத்தம்' என்ற நூலில் அந்தோணி டி மெல்லோ சொல்லும் செய்தி நம் சிந்தனைக்குரி யது. நிலங்களை மேலும் மேலும் வாங்கிக் குவிக்க விரும்பியவனிடம் பேசிக் கொண்டிருந்தார் குரு. 'எனக்கு எப்போதும் அதிக நிலங்களை வாங்கிப் போடுவதில் ஆசை' என்றான் அவன். 'ஏன் அப்படி? உன்னிடம்தான் போதிய நிலம் இருக்கிறதே?' என்றார் குரு. 'என்னிடம் அதிக நிலம் இருந்தால் அதிகமான பசுக்களை வாங்கி வளர்ப்பேன்' என்று அவன் பதிலளித்தான். 'சரி. அவற்றை வைத்துக் கொண்டு நீ மேலும் என்ன செய்வாய்?' என்று குரு கேட்டதும், 'அவை அனைத்தையும் விற்று, மேலும் பணம் சேர்ப்பேன்' என்றான். 'எதற்காக மேலும் பணம்?' என்றார் குரு. 'மேலும் நிலம் வாங்க; மேலும் பசுக்களை வளர்க்க' என்று பெருமிதத்துடன் சொன்னான் அந்த வாழத் தெரியாத பைத்தியக்காரன். நிலங்களை வாங்கிக் குவிக்கவும், பசுக்களை வாங்கி விற்கவுமா வாழ்க்கை? நம்மில் பலர் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம். அப்படிச் செய்பவர்கள் வாழ் வின் ருசி அறியாதவர்கள்.
'செல்வத்தைச் சேர்ப்பதிலும் துன்பம்; சேர்த்த தைக் காப்பதிலும் துன்பம்; சேர்ந்தது ஒரு நாளில் மறையும்போதும் துன்பம்; செல்வம் என்பதே என் றும் துன்பம் தருவதுதான்' என்று மகாபாரதம் அறிவுறுத்துகிறது. இதற்குச் சரியான சான்றாக 'புத்த ஜாதகக் கதை' ஒன்று உண்டு. காசியில் அந்தணன் ஒருவன் இருந்தான். சில குறிப்பிட்ட கிரகங்கள் ஒன்று சேரும்போது, வானத்தைப் பார்த்துக் குறிப்பிட்ட வார்த்தைகளை உச்சரித்தால் நவ ரத்தினங்களான வைடூரியம், மரகதம், தங்கம், வெள்ளி, முத்து, பவழம், கோமேதகம், மாணிக்கம், வைரம் ஆகியன மழையாகப் பொழியும், 'வேதபம்' என்னும் வித்தையை அவன் அறிந்திருந்தான்.
அந்தணனும் சீடனும் ஒரு நாள் காட்டு வழியில் நடந்தபோது திருடர்கள் வழிமறித்தனர். இருவரிட மும் ஒன்றும் இல்லாததால், அந்தணனைப் பிடித்து வைத்துக் கொண்டு, சீடனைப் பணத்துடன் வந்து குருவை விடுவித்துச் செல்லும்படி கட்டளையிட்ட னர். சீடன் சென்றதும் அந்தணன் வானத்தைப் பார்த்தான். குறிப்பிட்ட கிரகங்கள் கூடியிருந்தன. 'உங்களுக்குப் பணம்தானே வேண்டும்? இப்போது நவரத்தின மழையையே பொழியச் செய்கிறேன். எடுத்துக்கொண்டு என்னை விட்டு விடுங்கள்' என்று, வேதப வித்தையைப் பிரயோகித்தான் அந்தணன். மறுநிமிடம், நவரத்தினங்கள் விண்ணிலிருந்து விழுந்தன. திருடர்கள் மகிழ்ச்சியுடன் அந்த விலை மதிப்பற்ற மணிகளை மூட்டை கட்டியபோது, வேறொரு திருடர் கூட்டம் அங்கு திரண்டு வந்து சுற்றி வளைத்தது. 'உங்களிடம் இருக்கும் நவரத்தின மூட்டையைக் கொடுத்து விடுங்கள்' என்று புதிதாக வந்து வழிமறித்த திருடர் தலைவன் கேட்டான்.
'இந்த அந்தணரைக் கேளுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் வானத்திலிருந்து வரவழைத்துக் கொடுப்பார்' என்று அவர்கள் கூறினர். அந்தணன் வானத்தைப் பார்த்தான். கிரகங்கள் விலகி விட்டன. 'இப்போது என்னால் இயலாது' என்றான். கோபத்தில் திருடர் கூட்டம் அந்தணனைக் கொன் றது. நவரத்தினங்களை உடைமையாக்கிக் கொள்ள இரண்டு திருடர் கூட்டமும் ஒன்றோடொன்று மோதி யதில் இருவர் மட்டும் உயிர் பிழைத்தனர்.
இருவருக்கும் பசி எடுத்தது. ஒருவன் நவரத்தின மூட்டையைப் பாதுகாப்பது என்றும், மற்றவன் உணவு தேடி வருவதென்றும் முடிவானது. உண வில் விஷம் கலந்துவிட ஒருவனும், வாளால் வெட்டிவிட, மற்றவனும் மனதில் சதி செய்தனர். உணவோடு வந்தவனை வெட்டிக் கொன்று, தன் பசி தீர விஷம் கலந்த உணவை உண்டவனும் உயிர் துறந்தான். செல்வம் சீரழிவையே தரும் என்கிறது இந்தக் கதை.
ஏழைக்கும் பணக்காரனுக்கும் வேற்றுமை அவரவர் வைத்திருக்கும் பொருள்களில் இல்லை. குடிசையில் இருப்பதால், ஒருவன் ஏழை இல்லை. மாளிகையில் வசிப்பதால், ஒருவன் பணக்காரனும் இல்லை. நிறைவான மனம் எவருக்கு வாய்க்கிறதோ, அவன் கூரையின் கீழ் இருந்தாலும் அவனே செல் வந்தன். வாழ்க்கை, பணம் சம்பந்தப்பட்டது அன்று; மனம் சம்பந்தப்பட்டது.
ஒருவனுக்கு மூன்று வரங்கள் கொடுத்தார் கடவுள். மூன்று முறை அவன் எதை விரும்பினாலும் அது உடனே நடக்கும் என்பதுதான் அவன் பெற்ற வரம். ஒரு நாள் அவனுக்கும், மனைவிக்கும் கடுமை யான கருத்து வேற்றுமை உருவானது. அவள் இருப்பதைவிட இறப்பதே மேலானது என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினான். உடனே, அவன் மனைவி பிணமானாள். ஊர் கூடி அவளது நற் பண்புகளைச் சொல்லிச் சொல்லி நெகிழ்ந்தது.
ஆத்திரத்தில் அறிவிழந்ததாக வருந்தியவன், 'மனைவி உயிர் பிழைத்தால் போதும்!' என்றான். மறு கணம் மனைவி கண் விழித்தாள். இனி, ஒரு முறைதான் வரம் கேட்க முடியும். எதைக் கேட்பது என்று புரியவில்லை. 'ஆண்டவா! எந்த வரத்தைக் கேட்டால் என் வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் கிடைக்குமோ அதை கேட்க விரும்புகிறேன். எதைக் கேட்பது?' என்றான். ஆண்டவன் சொன்னான்: 'இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழும் மனம் வேண்டும் என்று கேள்!'

Comments