தந்தங்கள் இல்லாத கணபதி

காபாரத காவியம் இயற்ற எண்ணிய வியாசர்... பாரதக் கதையை தாம் சொல்ல சொல்ல, எவரேனும் ஒருவர் விரைந்து எழுத வேண்டும் என்று விரும்பினார். இதற்குத் தகுந்த ஒரு நபரை வியாசர் தேடிவந்த தருணத்தில், விநாயகப் பெருமானைத் தரிசிக்க நேர்ந்தது.
வியாசரது விருப்பத்தை அறிந்த விநாயகர், ''முனிவரே... மகாபாரதம் எழுத என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்களேன்!'' என்றார். வியாசருக்கு மகிழ்ச்சி. ஆனால், கணேசமூர்த்தி நிபந்தனை ஒன்றும் விதித்தார்: ''பாரதத்தை நீங்கள் தங்குதடையில்லாமல் சொல்ல வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் இடையில் நிறுத்தக் கூடாது!'' என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட வேதவியாசர், தானும் ஒரு நிபந்தனை விதித்தார்: ''பெருமானே... தாங்களும், ஒரு விநாடி கூட நிறுத்தாமல் எழுத வேண்டும்!'' விநாயகரும் இதற்கு சம்மதித்தார்.

ஒரு நன்னாளில், விநாயகப் பெருமானை முறைப்படி பூஜித்து வணங்கி, பாரதக் கதையைக் கூறத் துவங்கினார் வியாசர். மடை திறந்த வெள்ளம் போல் வியாசர் சொல்லிக் கொண்டிருக்க, அவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எழுதினார் விநாயகர். ஒரு கட்டத்தில், எழுத்தாணியின் கூர் மழுங்கிப் போனது. உடனடியாக தனது வலக் கொம்பை (தந்தம்) ஒடித்து அதையே யாக உபயோகித்து, மகாபாரதத்தை எழுதி முடித்தார் விநாயகர். இதனால்தான் அவர் ஒற்றைக் கொம்புடன் திகழ்வதாக புராணங்கள் சொல்கின்றன.
இதேபோல், கணேச மூர்த்தியின் இடது தந்தமும் ஒரு முறை ஒடிந்தது! ஏன்?
பூலோக அரசர்கள் மீது கோபம் கொண்ட பரசு ராமர், தான் தவமிருந்து சிவனாரிடம் பெற்ற 'பரசு' எனும் ஆயுதத்தால், அவர்களைக் கொன்றொழித்த கதை நாமறிந்ததே!
ஒரு முறை, சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயத்துக்கு வந்தார் பரசுராமன். அவரை, வழியிலேயே தடுத்து நிறுத்திய விநாயகர், ''அம்மையும் அப்பனும் வேதங்கள் குறித்து விவா தித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, தாங்கள் இப்போது உள்ளே செல்ல முடியாது'' என்றார். இதனால் பரசுராமருக்கும் விநாயகருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
ஒரு கட்டத்தில் கோபம் கொண்ட பரசுராமர், 'பரசு' ஆயுதத்தை விநாயகர் மீது ஏவினார். இந்த ஆயுதத்தால், தனக்கு பாதிப்பு இல்லை என்பது விநாயகருக்குத் தெரியும். என்றாலும், 'தந்தை ஈசனால் அருளப்பட்ட அந்த ஆயுதத்துக்கு இழுக்கு நேர்ந்து விடக் கூடாது!' என்று எண்ணத்துடன், 'பரசு' ஆயுதத்தை, தனது இடது தந்தத்தால் தாங்கி னார். எனவே, அந்தத் தந்தம் உடைந்தது!
ஒரு தந்தம் இல்லாத விநாயகரை எல்லா தலங்களிலும் தரிசிக்கலாம். ஆனால், இரண்டு தந்தங்களும் இல்லாத கணபதியை தரிசிப்பது அரிது. இப்படியரு விநாயகரை திருவாரூர் தியாகேசர் கோயிலில், பாதிரி மரத்தடியில் தரிசிக்கலாம். இவரை வழிபட அறிவும், தைரியமும் பெருகும்.

Comments