இறைவனே மான் உரு எடுத்து வந்த இடம் மாந்துறை.

துவொரு சின்னஞ்சிறு மான் கன்று. தாய் இறந்து போய் விட்டது. பெற்றவள் பிணமாகக் கிடக்க, அந்த வேறுபாடு கூட புரியாமல், சுற்றிச் சுற்றி வந்து தவியாய்த் தவித்தது மான் கன்று. ஆதரவின்றித் தவித்த அந்த உயிருக்கு யார் ஆதரவு தருவார்கள், இறைவனைத் தவிர! அநாதைகளுக்கான தனி உறவு, அனாதியான ஆண்டவன்தானே!
ஆமாம்! மான் கன்றுக்காக, இறைவனே மான் உரு எடுத்து வந்த இடம் மாந்துறை.
காவிரியின் வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணுக்கு, அவளது பிரசவ காலத்தில் உதவ தாயுமாகி வந்தவரல்லவா! மானுக்குத் தாயாக- மானுமாகியும் வந்தார்.

பல வகையான மலர்களைத் தனது நீரில் சேகரித்துத் தள்ளிக் கொண்டு வரும் காவிரியின் கரையில் உள்ளது மாந்துறை. என்னென்ன மலர்கள் தெரியுமா? இலவம், குங்குமப்பூ, ஈச்சம், சுரபுன்னை, இளமருது, இலவங்கம், கோங்கு, செண்பகம், குருந்தை, பாதிரி, குரவம், நறவ மல்லிகை (தேன் சிந்தும் மல்லிகை), முல்லை ஆகியவற்றுடன், மௌவல் (ஒரு வகை காட்டு மல்லிகை) மலர்களும் கலந்து வந்தனவாம்.
நறவ மல்லிகை முல்லையும்
மௌவலு(ம்)
நாள்மலர் அவை வாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
மாந்துறை இறை அன்று அங்கு
அறவனாகிய கூற்றினைச் சாடிய
அந்தணன் வரை வில்லால்
நிறைய வாங்கியே வலித்தெயில்
எய்தவ(ன்)
நிரைகழல் பணிவோமே
என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடித் துதிக்கும் மாந்துறை, 'வடகரை மாந்துறை' எனப்படுகிறது.
காவிரியின் வட கரையில் இருப்பதாலும், கும்பகோணத் துக்கு அருகே ஒரு மாந்துறை இருப்பதால் (அது 'தென் கரை மாந்துறை; தேவாரத் தலமன்று; தேவார வைப்புத் தலம்), அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் இந்தப் பெயர்!
திருச்சி- லால்குடி பாதையில், திருச்சியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். பிரதான சாலையில் இருந்து பார்க்கும்போதே கோயில் தெரியும்; சாலையை ஒட்டியே அமைந்துள்ளது. வயல்களும் தென்னந்தோப்புகளும் சூழ, இயற்கையின் எடுப்பு மாறாமல் துலங்குகிற கிராமத்துத் தலம்.
மிருகண்டு முனிவர் (சிறு வயதில்) பிள்ளைத் தவம் இருந்து வழிபட்ட தலம்; கௌதமர் கொடுத்த சாபம் நீங்கு வதற்காக இந்திரன் தொழுத தலம்; தன் கணவனான சூரியனின் வெப்பத்தைத் தாங்குவதற்காக சஞ்சனாதேவி (அல்லது சம்சயா அல்லது சன்சா தேவி) பூசித்த தலம்; பலவகை அழுக்குகளும் சேருவதால் மாசுபட்டுப் போகும் தனது மேனியைத் தூய்மைப்படுத்திக் கொள்ள சமுத்திரராஜன் வணங்கிய தலம்... தல புராணம் தரும் இந்த மேன்மைகளையெல்லாம் சிந்தித்துக் கொண்டே கோயிலை அடைகிறோம்.
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். எதிரிலேயே (கோயிலுக்கு வெளியில்) நந்தி மண்டபம், பலி பீடம். நந்தி மண்டபத்துக்கு முன்பாக, தரையில் காணப்படும் இரண்டு நந்தி சிலைகள். மண்ணுக்குள் புதைந்ததுபோல் கிடந்தாலும், சோழர் சிற்பக் கலைக்கு அழகான எடுத்துக்காட்டுகள்; கண்களோடு கருத்தையும் கவரும் கம்பீரங்கள்.
நந்தி மண்டபத்துக்குச் சற்று வடக்காக, ஊரின் காவல் தெய்வங்கள். பிரதான காவல் தெய்வம் கருப்பசாமி. பக்கத்திலேயே பண்டிதர்சாமி மற்றும் மதுரை வீரன். கருப்பசாமிக்குச் சிறப்பு பூஜைகள் உண்டு. இங்கிருக்கும் ஆல மரத்து மண்ணை, பிரசாத மாகத் தரும் வழக்கம் இருக் கிறது. சிவன் கோயில் திருநீறு- குங்குமத்துடன், இந்த மண்ணையும் சிறிய பொட்டலத்தில் தருகிறார்கள்.
கோபுரத்தை வணங்கிக் கொண்டே உள்ளே நுழை கிறோம். ஒற்றைப் பிராகாரம் கொண்ட கோயில்! வலம் வருவோமா?
பிராகாரத்தின் தெற்குப் பகுதியில் தல மரமான மா. 'ஆம்ரம்' என்பது வடமொழிப் பெயர். ஒரு காலத்தில் மாமரங்கள் நிறைந்த பகுதியாக விளங்கியதால், இந்தப் பகுதிக்கு, 'ஆம்ர வனம்' என்றும் பெயர் உண்டு. பொய் சொன்னதால் தண்டனைக்குள்ளான பிரம்மா, தனது பாவம் தீர வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. எனவே, பிரம்மதீர்த்தபுரம், பிரம்மானந்தபுரம் என்றும் பெயர்கள் உள்ளன. தவிர, மிருகண்டு வழிபட்டதால், மிருகண்டீஸ்வரம்; துன்பம் போக்கும் தலம் என்பதால் அகாபஹாரி என்றும் வழங்குவர்.
தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதி. வடமேற்கில் வள்ளி- தெய்வானையுடன் மயிலேறும் முருகன். அடுத்து தண்டபாணி. தொடர்ந்து கஜலட்சுமி சந்நிதி. வடக்குச் சுற்றில் வில்வ மரம். வடகிழக்கு மூலை யில் நவக்கிரகச் சந்நிதி. இந்தத் தலத்தில், சூரியன் சிறப்பானவர்; தேவியர் இருவருடன் மேற்கு நோக்கியுள்ளார். பிற கிரகங்கள், சூரியனை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளனர். பைரவர் சந்நிதியும் உண்டு.
வலத்தை நிறைவு செய்து, உள் வாயிலைக் கடந்து செல்ல முற்படுகிறோம். வாயிலின் மேல்பகுதியில், மான் கன்றுக்குத் தாயாக- மானாக இறைவன் வந்த வரலாறு சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. வாயிலைத் தாண்டியதும் மிருகண்டு முனிவர் வழிபடும் ஓவியக் காட்சிகள். கடந்து இன்னும் உள்ளே செல்ல, அருள்மிகு ஆம்ரவனேஸ்வரரான மாமரநாதர். அழகான சுயம்புநாதர். ஆதிரத்னேஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர், மிருகண்டீசர் ஆகிய பெயர்களும் காணப்படுகின்றன.
சுயம்பு மூர்த்தமாக மாமரத்தடியில் வெளிப்பட்ட இவரை, 'மருத்துகள்' எனப்படும் தவசீலர்களும் (இவர்களே மருதவானவர் என்றும் அழைக்கப்பட்டனர். வேதங்களின்படி, பூலோக வாழ்க்கையை முறையாக வாழ்ந்து, அதனால் வானுலக வாழ்க்கையைப் பெற்ற வர்கள் மருத்துகள் ஆவர்), கண்வ மகரிஷியும் வழிபட்ட தாக செவிவழிச் செய்திகள் உலவுகின்றன. சுவாமி சந்நிதியிலேயே உற்சவ மூர்த்தங்களும் உள்ளன.
மாமரநாதரை நோக்கிய படியே நிற்கிறோம்.
கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமும்
கூந்தலின் குலைவாரி
ஓடுநீர் வரு காவிரி வடகரை
மாந்துறை உறை நம்பன்
வாடினார் தலையில் பலி கொள்பவன்
வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடிலா மணியைத் தொழல் அல்லது
கெழு முதல் அறியோமே
என்று நெக்குருகிப் பாடுகிறார் ஞானசம்பந்தப் பெருமான். இந்தப் பெருமானைத் துதிக்கத் துதிக்க, எம பயம் இல்லையென்றும் சொல்கிறார்- 'ஆடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே'.
விளைவு தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துத்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை உரைவானைத்
துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச்
சுடவிழித்தவன் நெற்றி
அளக வாள் நுதல் அரிவை தன் பங்கனை
அன்றி மற்று அறியோமே
மூலவர் சந்நிதியை மீண்டும் வலம் வர, கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா மற்றும் துர்கை. தெற்குப் பகுதியில் ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற கோல நாயகியான அம்பாளுக்கு, அழகம்மை என்றும் பாலாம்பிகை என்றும் திருநாமங்கள். பாலாம்பாள் என்பதே வாலாம்பிகை என்றும் வழங்கப்படுகிறது.
தட்ச யாகத்தின்போது, அந்த யாகத்தில் கலந்து கொண்ட பாவத்துக்காகச் சூரியன் ஒளி மங்கியது நமக்குத் தெரிந்த கதை. தனது ஒளியைத் திரும்பப் பெறுவதற்காகக் கதிரவன் பூஜை செய்ததான கர்ண பரம்பரைக் கதைகள் பல ஊர்களிலும் தலங்களிலும் உண்டு. மாந்துறையிலும் அப்படியே நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது.
மூலவர் திருவடிவின்மீது, குறிப்பிட்ட சில நாட்களில் சூரியக் கதிர்கள் விழுவதே, சூரியன் வழிபட்டதற்கான அத்தாட்சியாகவும் சொல்லப்படுகிறது. பங்குனி மாதத்தின் முதல் மூன்று நாட்களில், சூரியக் கிரணங்கள், மூலவர் ஆம்ரவனேஸ்வரர் மீது விழுகின்றன.
சூரியன் இத்தலத்தில் வழிபட்டதை ஞானசம்பந்தரும் பாடுகிறார். அது மட்டுமா? சந்திரனும் இங்கு வழிபட்டாராம்.
பெருகு சந்தனம் காரகில் பீலியும்
பெருமர நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதன் எம் பெருமானைப்
பரிவினால் இருந்து இரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே
இரவியும் மதியமும்- சூரியனும் சந்திரனும். பார் மன்னர் பணிந்தேத்த- உலக மன்னர்கள் பலரும் பணிந்தார்கள்
மருத வானவர் வழிபடு மலரடி- மருத வானவர் என்பதை, முன்னரே நாம் பார்த்த மருத்துகள் என்பாரும் உண்டு; மருத நிலத்தின் அடியார்கள்... எனவே, மருத நிலப்பகுதியான இப்பகுதியின் அடியார்கள் என்பாரும் உண்டு!
காவிரி நதியையே தீர்த்தமாகக் கொண்ட மாந்துறைக்குச் சோழ மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். ராஜராஜ சோழ மன்னர் காலத்துக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில், சிறப்பான- சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. மக்கள் வரி கட்ட முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். வரி தர முடியாத நிலையில் இருந்தவர்கள், நகரை விட்டு வெளியேறத் தலைப்பட்டுள்ளனர். இதையறிந்த மன்னர், உடனடியாக வரியைத் தள்ளுபடி செய்து, அவர்களை மீண்டும் நகருக்குள் வரும்படிக்கு வேண்டியுள்ளார்.
மக்களின் பெருமிதமும் மன்னரின் பெருமையும் ஒருசேர விளங்கும் இந்தத் தகவலுடன், நந்தவனப் பராமரிப்பு நிலம் விடப்பட்ட செய்திகளும், பல்வேறு திருப்பணி நிவந்தங்களும் காணப்படுகின்றன.
எளிமையாகவும் எழிலார்ந்தும் காட்சி தரும் மாந்துறை திருக்கோயிலை வணங்கி நிமிரும்போது, உள்ளம் முழுவதும் பேரமைதி. அந்த அமைதியை விட்டு அகல மனமில்லாமல் விடைபெறுகிறோம்.

Comments