இறைவனைச் சரணடைவோம்!

மார்கழி என்றாலே திருப்பாவை. "மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' என்ற பாடலை ஒலிக்காத வாயேது! அதிகாலை 4:00 மணிக்கு எழும் உயர்ந்த பழக்கம், இந்த மாதத்திலே தான் வருகிறது. மார்கழி மாதத்தில் பனிகொட்டும். கொட்டுகிற பனியிலே, குளிர்ந்த நீரில் நீராடுகிறோம். சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், வாழ்க்கையில் கஷ்டங்களைத் தாங்கும் பக்குவம், மனதுக்கு கிடைக்கிறது. இதைத்தான், "குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்' என்று பாடுகிறாள் ஆண்டாள்.
மார்கழியில் குளிர் நீரில், அதுவும், குளத்திலோ, ஆற்றிலோ குளித்தால், உடல் நடுங்கும். கைகள் தானாக மார்பை குறுக்காகக் கட்டிக் கொள்ளும். குளிர் தாளாமல் உடல் வளையும். "இப்படி குளிக்காமல், கட்டிலில் படுத்துக் கிடக்கிறாயே...' என்று தன் தோழியைக் கோபித்துக் கொள்கிறாள் ஆண்டாள்.
வெறும் குளியலுக்காகவா ஆண்டாள் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு திருப்பாவையை எழுதியிருப்பாள் என்றால்... இல்லை... இதில், ஏதோ உட்பொருள் இருக்கிறது. அந்த <உட்பொருள் தான் என்ன!
எம்பெருமான் நாராயணனை, குளிர்ந்த நீருள்ள குளத்துக்கு ஒப்பிடுகிறாள். அவனுக்குள், நாமெல்லாம் ஐக்கியமாக வேண்டும். அவனை சாதாரணமாக மனதில் நினைத்தால், ஏதோ குளத்துக்குள் இறங்கி, ஒன்றிரண்டு தடவை மூழ்கி, குளிர் தாளாமல் கரையேறியதற்கு சமம். இன்னும் கொஞ்சம் அதிகமாக தண்ணீரைக் குடைந்து குடைந்து கூடுதலாக இரண்டு மூன்று முறை மூழ்கி எழுந்தால், அவனை சிலை வடிவில் தரிசித்ததற்கு சமம்.
அவனது மகத்துவத்தை பாடியபடியே, அவனை நெஞ்சுக்குள்ளேயே கொண்டு வந்து நீராடினால், இன்னும் குளிர குளிரக் குளித்ததற்கு சமம். அவனை வைகுண்டத்திற்கே போய், தரிசித்து விட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால், அது தான் குள்ளக்குடைந்து குளிர நீராடுவதற்கு சமம். ஆக, பக்தியில் படிப்படியாக முன்னேற வேண்டும் என்பது ஆண்டாளின் விருப்பம்.
சரி... இறைவனுக்கு வழிபாடு நடக்கிற மாதமென்றால், அது சுபமான மாதம் தானே! ஆனால், மார்கழியை, "சூன்யமாதம்' என்று சொல்லி, சுபநிகழ்ச்சிகளை நடத்தாமல் விட்டுவிடுகின்றனரே... ஏன்? என்ற கேள்வி எழும்.
நம் முன்னோர்கள், ஆடி, புரட்டாசி, மார்கழி உள்ளிட்ட மாதங்களை, தெய்வ வழிபாட்டுக்கென்றே ஒதுக்கி வைத்தனர். 12 மாதமும் சுபநிகழ்ச்சிகள் நடத்துகிறோம் என்ற பெயரில், ஒரேயடியாக உலக வாழ்வில் மூழ்கிப் போனால், இறைவனை நினைப்பதற்கென்று நேரமே இருக்காது. அதனால், அவற்றை சூன்யமாக்கினர். "சூன்யம்' என்றால், "ஒன்றுமில்லாதது!' இந்தியில், "சூன்யம்' என்றால், "பூஜ்யம்' என்பது போல.
ஒன்றுமில்லாதது என்றால், "எந்த விருப்பமும் இல்லாதது!' எந்த விருப்பு, வெறுப்பும் அற்றவன் இறைவன். அந்த இறைவனை வழிபடும் மாதமாக மார்கழி உள்ளிட்டவைகளை ஏற்றனர். வைணவத்தில் திருப்பாவை என்றால், சைவத்தில் மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை பாடல்கள், மார்கழியில் தெருவெங்கும் ஒலிக்கும். திருவண்ணாமலை ஆவுடையார் கோவிலுக்கு, இம்மாதம் பக்தர்கள் அவசியம் சென்று வர வேண்டும்.
ஒருகாலத்தில், கன்னிப்பெண்கள், தங்களை திருமணம் செய்வதற்காக ஒழுக்கமான, ஆன்மிக எண்ணமுள்ள ஆண்களே கிடைக்க வேண்டும் என்று எண்ணினர். அதற்காக சிவபெருமானை வேண்டினர்.
"எங்கள் பெருமான் உனக்கொன்(று) உரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க' என்று, அவர்கள் சற்று வெளிப்படையாகவே சிவனிடம் கோரிக்கை வைத்தனர்.
மார்கழி மாதம் இனிய மாதம். "மார்கசீர்ஷம்' என்று சமஸ்கிருதத்தில் சொல்வர். மார்கம் என்றால் வழி. சீர்ஷம் என்றால் தலை. இறைவனை அடையும் வழிகளில், தலையாயது எது என்பதை பக்தர்களுக்கு உரைக்கும் மாதம். ஆண்டாளும், மாணிக்கவாசகரும் சரணாகதி தத்துவத்தை மக்களுக்கு போதித்த உன்னதமாதம். நாம், நம் பணிகளைச் செய்வோம். அவற்றின் பலனை இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து விடுவோம். அவனை சரணடைந்தவர்களுக்கு என்றும் நிம்மதியே!

Comments