திருவடி தரிசனம்......

பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் அந்தக் கானகம் நிறைந்திருக்க, சிறிது நேரத்தில் தன்னுணர்வு வரப்பெற்ற ஆறுமுக சுவாமிகள் மெள்ளக் கண் திறந்து பார்த்தார். அவ்வளவுதான். எதற்காகத் தவம் இருந்தாரோ அது நிறைவேறக் கண்டார். குகைக்குள், அன்னை காட்சி தந்தாள். அந்தக் கணமே அவருள் ஒரு பேரொளி கிளர்ந்து எழுந்தது. ஞான வைராக்கிய சித்தராக எழுந்து நின்றார் சுவாமிகள். ஆனந்தக் கூத்தாடினார். அவ்வளவில் அந்தக் காட்சி மறைந்தது. ஒரு ஞானியாக மலையில் ஏறியவர், ஞானச் சித்தராக இப்போது கீழிறங்கினார்.
இவருடைய நடவடிக்கைகள் வீட்டினருக்கு ஒரு புதிராகவே இருந்தது. சுவாமிகளின் தம்பி சீனியாப்பிள்ளை, இவருக்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டது என்று எண்ணி வீட்டில் ஓர் அறையில் கால் விலங்கிட்டு அடைக்கவும் செய்தார். ஒரு கட்டத்தில் சுவாமிகளின் மனம் நோக, அந்தக் கணத்தில் கால்விலங்குகள் தெறித்து விழுந்தன. அறைக்கதவு திறக்க, சிங்கமென கர்ஜித்து வெளியேறினார். இவருடைய பரிபாஷையைக் கேட்டு, இவரிடம் மகிமை இருப்பதாக உணர்ந்த குடும்பத்தினர், பிறகு மன்னிப்பு வேண்டினர்.
ஆறுமுக சுவாமிகளின் மகத்துவம் எங்கும் பரவியது. அன்பர்கள், பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து தரிசித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கைகாட்டி சுவாமிகள் வந்தார். மகான்களின் தொடர்பால், அந்தச் சாவடியே பரிபாஷைகளின் கூடாரமாக மாறியது. அன்னை பராசக்தி அருளால் முக்கால ஞானமும் அஷ்டமா சித்துகளும் கைவரப் பெற்றார் சுவாமிகள்.
சுவாமிகள், கடைவீதியில் நடந்துவரும்போது, வியாபாரிகள் கடையை விட்டு கீழே இறங்கி கைகட்டி நிற்பார்கள். சுவாமிகள் ஏதாவது ஒரு கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து யாருக்காவது கொடுப்பார். அன்று அந்தக் கடையில் வியாபாரம் அமோகம்தான்!
அநேகமாக யாரிடமும் பேசுவதில்லை சுவாமிகள்; பேசினாலும் மழலைச் சொல்தான்! கந்தல் துணிதான் உடுப்பு. சில நேரங்களில் அவதூதர் கோலம். எப்போதும் பாம்பு களுடன்தான் விளையாட்டு. 'டேய் சங்கரா' என்று அழைப்பார். எங்கிருந்தெல்லாமோ வரும் பாம்புகள், அவர் மேனியில் ஊர்ந்து விளையாடும். யாரேனும் வந்தால்... ''டேய் பாவிகள் வந்தாச்சு, கிளம்புங்க!'' என்பார். அவ்வளவில் அவை மறைந்துவிடும்.
சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் அதிக நாட்கள் தங்கியிருக்கிறார். அதனால் அங்கு இவருக்கு பக்தர்கள் அதிகம். மேலும், குற்றாலம்- செண்பகாதேவி அருவிக்கு அருகில் உள்ள அகத்தியர் குகை, தட்சிணாமூர்த்தி குகை, சித்தர் குகைகளில் அதிகம் தியானத்தில் இருந்திருக்கிறார். இங்கே சூட்சும ரூபமாக சித்தர்கள் இன்றும் வருகிறார்களாம்.
அந்த குகையை தரிசிக்கும் ஆவலில் நாமும் செண்பகாதேவி அருவிக்குச் செல்கிறோம். ஐப்பசி மாத மழையில் அருவியில் நிறையவே தண்ணீர். செண்பகாதேவி அருவியில் இருந்து தேனருவி செல்லும் கரடுமுரடான பாதையில் சிறிது தூரம் செல்கிறோம். ஒரு பாம்புப் புற்று. அதைக் கடந்து சற்று தூரம் மேலே ஏறினால், ஒரு செங்குத்தான பாறையின் அருகில் பாதை தெரிகிறது. அருகே விநாயகர் சந்நிதி ஒன்று. வணங்கி சற்று கீழே இறங்கிச் சென்றால், செண்பகாதேவி அருவிக்கு நீர் வரும் பாதை. மிகவும் ஆபத்தான பகுதி. இங்கிருந்துதான் மலையின் இரண்டு பெரிய பாறைகளுக்கு நடுவே நீர் ஓடி அருவியாக விழுகிறது. அதன் அருகில் குகையின் வாசல். தற்போது, 'இரும்பு கேட்' போட்டு பூட்டியிருக்கிறார்கள். செண்பகாதேவி கோயிலில் இருந்து சாவியை வாங்கி வந்திருந்தோம்.
குகைக்குள் ஒரே இருட்டு. குரங்கார் ஓரிருவர் நம்மைப் பின்தொடர, கையில் இருந்த செல்போன் டார்ச் வெளிச்சத்தில் உள்ளே செல்கிறோம். முகப்பில் சிவலிங்கம், அம்பிகை உருவங்கள்... சித்தர்கள் போன்ற சிலாரூபங்கள். உள்ளே அரைகுறை டார்ச் வெளிச்சத்தில், அகத்தியர், லோபமுத்திரை மற்றும் சிவலிங்கத் திருமேனிகளை தரிசிக்கிறோம். இன்னும் சற்று உள்ளே சென்றால், ஒரு மேடையில் தட்சிணாமூர்த்தி விக்கிரகம். என்றோ சாத்தப்பட்ட பூமாலை... வாடியிருந்தது. கற்பூரம் கொளுத்தி, வெளிச்சம் வர வழி ஏற்படுத்தி, அந்த வெளிச்சத்தில் தட்சிணாமூர்த்தி ஸ்வாமியையும் அகத்தியரையும் தரிசித்து, கொண்டு சென்ற பழத்தை நிவேதனம் செய்து, அமர்கிறோம். அங்கே சூட்சும ரூபமாக எழுந்தருளும் சித்தர் சுவாமிகளை தியானிக்கிறோம். கற்பூரம் எரிந்து முடிந்த சற்று நேரத்தில் இருளும் புகையும் சூழ, தட்டுத் தடுமாறி எழுந்து வெளியே வருகிறோம். வெளியேறும் இடத்தின் இடப்புறம், அந்த குகைக்குள்ளேயே ஒரு சிறிய குகை. அதனுள் கைத்தடி, சிறிய பாய், மாகாளி அன்னையின் விக்கிரகம் எல்லாம் இருக்கிறது. இங்குதான் குற்றாலம் மௌன சுவாமிகள் தவம் செய்தார். ஆறுமுக சுவாமிகள் உள்ளிட்ட சித்தர்கள் தவம் செய்த புனிதமான குகையில் இருந்து, சித்தர்களின் அருளால் எந்தவித ஆபத்தும் இன்றி வெளியே வருகிறோம். நைவேத்திய பழங்களை குரங்கார் சுற்றம் சூழ வந்து நம் கையில் இருந்து வாங்கிச் சென்றார். மனத்துள் ஆறுமுக சுவாமிகள் நிறைந்திருக்க, அவருடைய மகிமைகளை எண்ணியவாறே கீழிறங்கினோம்.
செங்கோட்டையில் கோர்ட் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம், கைலாசம் இருவரும் ஒரு பொது வேலையாக கொல்லத்துக்குச் சென்றார்கள். அதற்கு முன் சுவாமிகளை சந்தித்து, பிரச்னைகளைச் சொல்லி ஆசி வழங்கும்படி கேட்டார்கள். சுவாமிகளும் ''நல்லது நடக்கும். சென்று வாருங்கள்'' என்றார். பிறகு அவர்கள் சென்ற வழியில், ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொல்லம் என ஒவ்வோர் இடத்திலும் சுவாமிகளும் தென்பட்டார். அங்கெல்லாம் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினராம்.
மதுரையில் செல்வந்த ரெட்டியார் ஒருவரின் மகனுக்கு திருமணம். அன்றிரவு அவன் பாம்பு தீண்டி இறந்தான். மிகுந்த துக்கத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று உடலை சிதையில் வைத்தனர். அப்போது அந்த வழியாக சுவாமிகள் சென்றதைப் பார்த்து, அன்பர் ஒருவர் இந்த விஷயத்தைச் சொல்லி ஆறுதல் அளிக்குமாறு வேண்டினார். சுவாமிகள் வந்து பார்த்து, சடலத்தின் மீது எச்சிலை உமிழ்ந்து, ''சீ போ... எழுந்திரு'' என்று சொல்லிச் சென்றார். அதிசயப் படும்படி சிதையிலிருந்து அவன் எழுந்தான். சுவாமிகளைத் தேடினால், அவரை எங்கும் காணமுடியவில்லை. பிறகு செங்கோட்டைக்கு வந்து அவரை வணங்கி மூட்டை நிறைய நாணயங்களை சமர்ப்பித்தார் ரெட்டியார். சுவாமிகளோ, ''நீ ஆட்கொல்லியுடன் அல்லவா வந்திருக்கிறாய். நில்லாதே போ...'' என்றார். அவர் வற்புறுத்தவே, ''சரி... நீயே இந்த நாணயங்களை தெருக்களில் எறிந்துவிட்டுப் போ'' என்றார். அவரும் மறு பேச்சின்றி அப்படியே செய்தாராம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகத்தில் இருந்த அந்தணர் ஒருவரின் மகன், தன்னுடைய மனைவியோடு மாடியில் உறங்கும்போது பாம்பு தீண்டி இறந்தான். தெருவே துக்கத்தில் இருந்தது. அப்போது ஓர் வேலையாக அப்பகுதிக்குச் சென்ற செங்கோட்டை கங்காதர ஐயர் (இசைமேதை எஸ்.ஜி.கிட்டப்பாவின் தந்தை), இதைக் கண்டு மிகவும் மனம் வருந்தி அருகே இருந்த கோயிலுக்கு வந்தார். அங்கே சுவாமிகள் இருப்பது கண்டு வணங்கி, விஷயத்தைச் சொல்லி ஏதாவது பரிகாரம் வேண்டினார். சுவாமிகள், ''அவன் அநியாயமாகப் போகிறான்...'' என்றாராம். உடனே கங்காதர ஐயர், ஓடிச் சென்று அவர்களிடம் சுவாமிகளின் மகிமையைக் கூறி, அவரை அழைக்குமாறு சொன்னார். சுற்றிலும் இருந்தவர் கள், 'மாண்டவனாவது... மீள்வதாவது?' என்று இவரை கேலி செய்தனர். சரி பார்ப்போமே என்று பையனின் மாமனார், ஆறுமுக சுவாமிகளை அழைத்து மன்றாட, சுவாமிகள் வந்து பார்த்துவிட்டு, எப்படி மனைவியுடன் மாடியில் படுத்திருந்தானோ அதே கோலத்தில் படுக்க வைக்கச் சொன்னார். சற்று நேரத்தில் எங்கிருந்தோ வந்த பெரிய பாம்பு ஒன்று படமெடுத்தபடி சுவாமிகள் முன் நின்றது. அவர் கையசைக்க, அது மாடிக்குச் சென்று அவனின் காலில் கடிபட்ட இடத்திலிருந்து விஷத்தை உறிஞ்சி சுவாமிகள் முன் வைக்கப்பட்ட பசும்பாலில் கக்கிச் சென்றது. அந்தப் பையனும் எழுந்து அமர்ந்தானாம்!
சேத்தூர் ஜமீனைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமிகளுக்கு ஒரு மகாபிஷேகம் செய்ய விரும்பினர். சுவாமிகள் சிரித்தார். இருப்பினும் அன்பர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார். ஜமீன் சங்கிலி வீரப்ப பாண்டியரும் உடனிருக்க அபிஷேகம் துவங்கியது. 107 குடம் நீரால் அபிஷேகம் செய்து, 108வது குடத்து நீரை அபிஷேகம் செய்யத் தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரம் அந்தக் குடத்தில் இருந்து தண்ணீர் விழுந்துகொண்டே இருந்தது. குடத்தைக் கையில் பிடித்தவர்களுக்கு கை வலி ஏற்பட்டு சுவாமிகளிடம் கெஞ்சினர். சுவாமிகள் ''தண்ணீர் போதும்'' என்றவுடன் குடத்து நீர் நின்றது. இறுதியில் சுவாமிகளை பல்லக்கில் தன் இல்லத்துக்கு வருமாறு ஜமீன்தார் வேண்டினார். ''எல்லாம் நீ போய்ச் சேரு'' என்றார் சுவாமிகள். மன விசனத்துடன் ஜமீன் தன் வீட்டுக்குச் செல்ல, அங்கே திண்ணையில் அமர்ந்திருந்தார் சுவாமிகள். அவருக்கு ஆச்சரியம். எப்படி இவ்வளவு விரைவாக அவரால் வரமுடிந்தது என்று!
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலையில் பெருமாள் கோயில் உள்ளது. அந்த மலையின் அடிவார ஊருக்கு சுவாமிகள் சென்றார். ஊர் மக்கள் சுவாமிகளை வணங்கி, மூன்று வருடங்களாக மழை பொய்த்துப் போய் வறட்சி தாண்டவமாடுவதைச் சொல்லி, ஏதாவது செய்யும்படி கோரினர். மனம் இரங்கிய சுவாமிகள், சுனையில் இருந்து சேற்றை எடுத்து உடல் முழுதும் பூசிக்கொண்டு, ஒரு பாறையில் அமர்ந்து தியானித்தார். சுட்டெரித்தது வெயில். இதெல்லாம் பகல் இரண்டு மணிவரைதான். அடுத்து எங்கிருந்தோ சேர்ந்தது மேகக் கூட்டம். நல்ல மழை பெய்தது. சுவாமிகளின் உடலில் பூசிய சேறு கரைந்து ஓடியது. அருகில் இருந்த குளங்கள் நிரம்பும் வரை தொடர்ந்து தியானத்தில் இருந்த சுவாமிகள் ஓரிரு நாட்கள் கழித்தே பழைய நிலைக்கு வந்தாராம்.
ன்பர்கள் யாரேனும் வறுமையால் வாடினால் சுவாமிகளுக்குப் பொறுக்காது. ஏதாவது வழிசெய்வார். ஸ்ரீவில்லிபுத்தூர் சாலியர் தெரு கீழப்பட்டியில் பேச்சியம்மாள் என்ற மூதாட்டி இருந்தாள். சுவாமிகளுக்குப் பணிவிடை செய்வதை பாக்கியமாகக் கருதினாள். நாளாக நாளாக வேலை செய்து சம்பாதிக்க உடல்நிலை இடம் கொடுக்காமல் தவித்தாள். சுவாமிகளை வணங்கி தன் இயலாமையைச் சொன்னாள். அவரும், ''நீ கடைக்குச் சென்று வாங்கும் பொருள்களுக்குத் தேவையான பணம் உன் வீட்டில் இருக்கும், போ'' என்றார். அதன்படியே இருக்க, அவள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் திடீரென, ஒரு விபரீத ஆசை அவளுக்கு! சுவாமிகளிடம் சென்று, ''சுவாமி இப்படி தினந்தோறும் நாலணா தருவதற்கு பதில், ஒரு மாதத்துக்குத் தேவையானதை மொத்தமாக அருளுங்களேன்...'' என்றாள். மௌனமாகச் சென்ற சுவாமிகள், வெளியே மண்ணில் சிறுநீர் கழித்தார். அந்த மண் தங்கமாக மின்னியது. சுவாமிகள் சொன்னார்... ''பார்த்தாயா..! அவ்வளவும் தங்கம். போதுமா?'' என்று சொல்ல, அவள் ஒன்றும் பேசாது நின்றாள். பிறகு சுவாமிகள், ''இது ஆட்கொல்லி. இதை நீ வைத்திருந்தால் உன் உறவினர்களே உன்னைக் கொன்றுவிடுவார்கள். பேசாமல் கிடைப்பதை வைத்து நிம்மதியாக இரு'' என்று சொல்லிச் சென்றாராம்!
திருவனந்தபுரத்தில், அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்கும் இடமான ஊட்டுப்புரை இருந்தது. ஆறுமுக சுவாமிகள், அய்யம்பட்டர், ஹரிஹர சுவாமிகள் மூவரும் அங்கே செல்வது வழக்கம். அப்போது, இவர்கள் கையில் ஒரு சாராய பாட்டிலும் இருக்குமாம். இது ஊட்டுப்புரை விதிமுறைகளுக்கு முரணானது. எனவே இவர்களைப் பற்றிய புகார் சமஸ்தானத்துக்குச் சென்றது. அன்று திருவாங்கூரை ஆண்ட இசைமேதையான ஸ்வாதித் திருநாள் மகாராஜா ராமவர்மா, இவர்களை அழைத்தார். அப்போதும் அய்யம் பட்டர் கையில் சாராய பாட்டில். மன்னர் விசாரித்தபோது, ஆறுமுக சுவாமிகள் ஒரு பாத்திரம் எடுத்துவரச் சொன்னார். அதில் சாராயத்தை ஊற்றி, மன்னரிடம் கொடுத்தார். பாத்திரத்தில் பால் இருந்தது கண்டு வியந்த மன்னர், சுவாமிகளின் உன்னதத்தை அறிந்து, எப்போது இவர்கள் வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் உணவு வழங்க கட்டளையிட்டாராம்!
ருநாள், சுவாமிகள் செங்கோட்டை குண்டாற் றுப் பாலத்தில் அமர்ந்திருந்தார். நீராடிவிட்டு வந்த பெண்கள், சுவாமிகளைக் கண்டதும், தங்களுக்கு குழந்தையில்லாத குறையைக் கூறி, விமோசனம் வேண்டினர். சுவாமிகள், தன் உணவில் இருந்து ஒரு பிடி எல்லோருக்கும் எடுத்துக் கொடுத்து, வீட்டு உணவில் சேர்த்து உண்ணும்படி கூறினார். அந்தக் கூட்டத்தில் ஆறுமுகம் செட்டியார் என்பாரின் இரண்டாவது மனைவி சிதம்பரத்தம்மாளும் இருந்தார். எல்லோரும் சுவாமிகள் சொன்னபடி செய்ய, சிதம்பரத்தம்மாளுக்கு மட்டும் அதை உண்ணத் தோன்றவில்லை. அப்படியே கழுநீர்ப் பானையில் போட்டார். காலம் கழிந்தது. சிதம்பரத் தம்மாளைத் தவிர, மற்ற அனைவருக்கும் குழந்தை பிறந்தது. சுவாமிகளிடம் மீண்டும் சென்ற அம்மாள், குழந்தைப் பேறு வேண்டிக் கேட்டபோது, ''அதற்கு ஏன் இங்கு வந்தாய்? உன் வீட்டு கழுநீர் பானையிடம் கேள்.'' என்றாராம் சுவாமிகள்.
சுவாமிகள் நூறு வயதை எட்டியதும்(கி.பி.1884), தாம் வந்த பணி நிறைந்துவிட்டதை உணர்ந்து, சமாதிக்கு தயாரானார். ஆனி மாதம் அனுஷம் கூடிய பௌர்ணமி நாளில், தான் எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்தவாறே, சமாதி நிலை அடைந்தார். அவருடைய சமாதி தங்கள் இடத்தில் அமைய வேண்டும் என்று பலரும் போட்டியிட்டனர். இறுதியில் திருவுளச்சீட்டில், குண்டாற்றங்கரைத் தோப்பு என்று முடிவானது. அங்கே சுவாமிகளின் சமாதி அமைக்கப்பட்டு, சிவலிங்கப் பிரதிஷ்டையும் ஆனது. தற்போது சமாதிக் கோயிலாகக் காட்சி தருகிறது. சுவாமிகள் சமாதியாகி தற்போது, 125 ஆண்டுகள் ஆகிறது.
சுவாமிகளின் வம்சாவளியைச் சேர்ந்த ஆறுமுகம் (98940 90863) மற்றும் இசக்கி (90424 44156) இருவரும் சமாதிக் கோயிலில் தவறாமல் பூஜைகளைச் செய்து வருகிறார்கள். செங்கோட்டையில் வீட்டு உபயோகப் பொருள்கள் வியாபாரத்தில் பெரிய அளவில் வளர்ந்துள்ள செல்வகணபதி (96552 08204), ''கையில் ஒன்றுமேயில்லாமல், சுவாமிகள் மீது நம்பிக்கை வைத்து இந்தத் துறையில் இறங்கினேன். இன்று சொல்லும்படியாக வளர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையின் வெளிச்சப் பாதையைக் காட்டியவர் ஆறுமுக சுவாமிகளே'' என்கிறார். சுவாமிகளின் குருபூஜையை தன் செலவில் செய்து, அன்னதானம் செய்கிறார் இவர். இன்றும் சுவாமிகள் தன் அருளால் அன்பர்களை வாழ்வித்து வருகிறார் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்!
சுவாமிகளின் சரிதத்தை நமக்குச் சொன்ன நல்லாசிரியர் வி.ஜனார்த்தனனுக்கு நன்றி கூறி, சுவாமிகளின் கோயிலை வலம் வந்தோம்.

Comments