தேர் தரிசனம்

பொதுவாகவே பல ஆலயங்களில் ஐந்து பிராகாரங்கள் இருக்கும். இவை, நமது ஐந்து கோசங்களைக் குறிப்பன. உணவால் ஆன அன்னமய கோசம், பிராணனால் ஆன பிராணமய கோசம், அறிவால் ஆன விஞ்ஞானமய கோசம், மனதால் ஆன மனோமய கோசம் மற்றும் ஆனந்த மய கோசம் ஆகியவையே அந்த ஐந்து கோசங்கள்.
பெருமாள், மூன்றரை சுற்று கொண்ட பாம்பில் படுத்தபடி அல்லது அமர்ந்தபடி இருப்பார். இதில், பாம்பின் மூன்றரை சுற்று என்பது முதுகு தண்டு வடத்தின் அடியில் உறங்கும் 'குண்டலினி சக்தி'யைக் குறிக்கிறது.
நடராஜரின் உடலில் ஐந்து பாம்புகள் உள்ளன. இவை பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன் என்று நம் உடலில் ஓடும் ஐந்து விதமான காற்றுகளைக் குறிக்கின்றன. மரண நேரத்தில் ஜீவனானது, பிராணனைப் பற்றிக் கொண்டுதான் சரீரத்தை விட்டுச் செல்கிறது.
நம் உடலில் உள்ள ஒன்பது ஓட்டைகளில் ஏதேனும் ஒன்றின் வழியாக, பிராணன் வெளியேறும். எந்த வழியாக பிராணன் வெளியேறுகிறதோ, அதைப் பொறுத்தே மறுபிறவி அமையும்! யோகிகளுக்கு தலையில் பத்தாவதாக ஓர் ஓட்டை ஏற்பட்டு, அதன் வழியே ஜீவன் வெளியேறி, உயர்ந்த லோகங்களை அடையும். இதற்கு, 'அர்ச்சிராதி மார்க்கம்' என்று பெயர். ஜீவன் முக்தர்களான ஞானிகளது பிராணன், பத்து ஓட்டைகளில் எதன் வழியாகவும் செல்லாமல் ஆத்மாவிலேயே ஒடுங்கி விடும்.
பார்வதி- பரமேஸ்வரன் எழுந்தருளியிருக்க, அவர்களது மடியில் ஸ்கந்தன் அமர்ந்திருக்கும் அமைப்பை, சோமாஸ்கந்த வடிவம் என்பார்கள். ஆனால், காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள சிவாஸ்தான ஆலயத்தில் (தேனம்பாக்கம்) மட்டும் சோமகணபதியை காணலாம். அதாவது, பார்வதி- பரமேஸ்வரன் மடியில் ஸ்கந்தனுக்குப் பதில் கணபதி அமர்ந்திருப்பார்.

காஞ்சிப் பெரியவாள், இங்கு சில காலம் தங்கி இருந்தார். ஒரு நாள் இரவு... தர்ப்பையை பாய் போல் விரித்து, அதில் படுத்திருந்தார் பெரியவாள். அவருடன் பக்தர்கள் சிலரும் இருந்தனர். அப்போது வேட்டுச் சத்தம் கேட்டது.
''என்ன வேட்டுச் சத்தம்?'' என்று ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார் பெரியவாள்.
அதற்கு அவர்கள், ''காமாட்சியம்மன் தேரில் பவனி வருகிறாள். அதுதான் வேட்டுச் சத்தம்'' என்றனர்.
உடனே, ''அம்பாள் தேரில் பவனி வருகிறாள். நாம் தரிசிக்க வேண்டாமா?'' என்றபடி சட்டென எழுந்து கிளம்புவதற்கு ஆயத்தமானார் பெரியவாள்.
உடன் இருந்தவர்கள், ''இப்போதே பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. பெரியவாளுக்கும் உடம்புக்கு முடியாமல் உள்ளது. தவிர, இங்கிருந்து பெரிய காஞ்சிபுரம் போக நேரமாகி விடும். இந்நேரம் அம்பாள், கச்சபேஸ்வரர் கோயில் அருகே வந்திருப்பாள். அங்குதான் அதிக அளவில் வாணவேடிக்கையும் வேட்டுகளும் நடப்பது வழக்கம். இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாள் கோயிலுக்குள் சென்று விடுவாள்'' என்றனர்.
பெரியவாள், எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அங்கிருந்து கிளம்புமுன், அந்த சிவாஸ்தானம் என்ற தேனம்பாக்கத்தில் உள்ள குட்டி பிள்ளையாரிடம் சென்றார். ஒரு கையை தன் கண்களுக்கு மேலே வைத்தபடி குனிந்து, பிள்ளையாரிடம் ஏதோ ரகசியம் பேசினார். பிறகு கிளம்பிச் சென்றார்.
பெரியவாள் மௌனமாகவே நடந்து கொண்டிருந்தார். ஆனால், உடன் வந்தவர் களோ பேசிக் கொண்டே இருந்தனர். ஒருவர், ''இன்று நமக்கு நல்ல நடை பயிற்சி'' என்றார். மற்றொருவர், ''மூடிய கோயிலைத்தான் பார்த்து வரப் போகிறோம்'' என்றார் சிரித்தபடி!
பெரிய காஞ்சிபுரத்தை அடைந்ததும் பெரியவாளுடன் வந்தவர்களுக்கு ஆச்சரியம்! காமாட்சி அம்மனின் தேர், கச்சபேஸ்வரர் கோயில் அருகிலேயே பல மணி நேரமாக நின்று கொண்டிருக்கிறதாம்!
பெரியவாளைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்து நமஸ்கரித்தனர். ''என்னவோ தெரியவில்லை. இவ்வளவு தூரம் ஒழுங்காக வந்த யானை, இங்கு வந்ததும் முரண்டு பிடிக்கிறது. தேரை இழுத்தால் மதம் பிடித்தாற் போல் அலறுகிறது. தேரை நகர்த்தாமல் இருந்தால் சமர்த்தாக இருக்கிறது!'' என்று தெரிவித்தனர்.
பெரியவாள், அம்பாளை தரிசித்து விட்டு யானைக்கு அருகே வந்தார். பிறகு, அதன் உடலில் கையை வைத்து, 'போகலாம்' என்றார். அவ்வளவுதான்! யானை தனக்கே உரிய கம்பீரத்துடன் காதுகளை அசைத்தபடி நகர ஆரம்பித்தது. இதைக் கண்ட எல்லோரும் வியந்தனர்.
சிவாஸ்தானம் சின்னப் பிள்ளையாரிடம் பெரியவாள் ரகசியம் பேசியது ஏன் என்பதை, உடன் வந்தவர்கள் இப்போதுதான் புரிந்து கொண்டனர்.
மகான்களின் மகிமையை உணர்ந்து, அவர்களின் அருளைப் பெற்று வாழ்வை தினம் தினம் திருநாளாக்குவோம்!

Comments