'கண்டேன் சீதையை..!

'கண்டேன் சீதையை..!’
- இந்த வார்த்தையைக் கேட்டதுமே எல்லோரின் நினைவுக்கும் வருவது, ராம காவியத்தில் சுந்தரகாண்ட முடிவில் ஹனுமனும் ஸ்ரீராமனும் கட்டித் தழுவிக்கொண்டு ஆனந்தப்படும் காட்சிதான். ஆனால், சீதையைக் கண்டுவிட்டு கிஷ்கிந்தைக்கு ஹனுமன் திரும்பியபோது, ஸ்ரீராமர் உண்மையில் மகிழ்ச்சியாக இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
சீதையைத் தேடி இலங்கை வந்த ஹனுமன், ராவணனால் சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் அவளைக் கண்டு ஆறுதல் கூறி, ஸ்ரீராமன் கொடுத்த கணையாழியை அன்னையிடம் தந்து, பதிலுக்கு அன்னையின் சூடாமணியைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் ராமனிடம் வந்து அந்த நற்செய்தியைத் தெரிவித்த சம்பவங்களை விளக்கும் ராமாயணக் காவியப் பகுதி 'சுந்தரகாண்டம்’ எனப்படும். இதனைப் பாராயணம் செய்பவர்கள் கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, சகல சௌபாக்கியங்களும் பெறுவர் என்பது ஐதீகம்.
ஆம்! ராம காவியத்தில் சுந்தரகாண்டம், சிறைப்பிடிக்கப்பட்ட சீதைக்கு ஆறுதல் தந்த படலம். தர்ம பத்தினியைப் பிரிந்து தவித்த ஸ்ரீராமனுக்கு, அவள் இருக்குமிடம் தெரிந்ததால் மன அமைதியைத் தந்த படலம்.
ஆனால், இலங்கையில் வாழ்ந்த மக்களைப் பொறுத்தவரையில் இந்தச் சுந்தரகாண்டம் ஒரு துயரமான காண்டம்தான்.
'என் தங்கை சூர்ப்பணகைக்கு லட்சுமணனால் ஏற்பட்ட அவமானத்துக்குப் பழி வாங்குவேன்’ என்று சூளுரைத்தான் ராவணன். பஞ்சவடி வந்தான். ஆனால், சீதையைக் கண்டு மயங்கி, தன் நியாய உணர்வுகளையும் பகுத்தறிவையும் சிதைத்துவிட்டு, அவளைச் சிறையெடுத்தான். அசோக வனத்தில் சிறைவைக்கப்பட்ட அவளை அனுதினமும் அணுகி, தன்னை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடினான்.
பதிவிரதையான சீதையின் கற்புக்கனலால் ராவணன் அவளை அணுக முடியவில்லை. அவன் எண்ணமும் எள்ளவும் நிறைவேற வாய்ப்பு ஏற்படவில்லை. நல்ல மந்திரிகளும், விபீஷணன், கும்பகர்ணன் முதலான சகோதரர்களும் அவன் தவற்றை எடுத்துக்கூறியும் ராவணன் எதற்கும் செவிசாய்க்கவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான், ஹனுமன் இலங்கைக்கு வந்தான். அன்னை சீதையைக் கண்டு, ஆறுதல் கூறினான்.
அதன்பின், ராவணனுக்கு ராமனின் பலத்தை வெளிப்படுத்த, ஹனுமன் சில வீர தீரச் செயல்கள் புரிந்தான். அசோக வனத்தை அழித்தான். தடுக்க வந்த அசுரர்களை எதிர்த்து நாசமாக்கினான். ராவணனின் புதல்வன் அக்ஷயகுமாரனைக் கொன்றான். முடிவில், ராவணனின் தவப் புதல்வனான மேகநாதன் எனும் இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டு, ராவணனின் தர்பாரை அடைந்தான்.
தனக்கு ஆசனம் தராமல் அவமதித்த ராவணனின் கர்வம் அடக்க, தன் வாலினாலேயே ஆசனம் ஒன்றை அமைத்துக்கொண்டு, ராவணனைவிட உயர்ந்த இடத்தில் அமர்ந்து, ராமனின் பெருமையை அவனுக்கு எடுத்துக் கூறினான். சீதையை ராமனிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கோர அறிவுரை கூறினான்.
ராவணனின் கோபம் எல்லை மீறியது. தனது அழகிய அசோக வனத்தை அழித்து, தன் மகனையும் கொன்று, சபையில் வந்து அமர்ந்து, தன்னையும் அவமானப்படுத்திய வானரனான ஹனுமனைக் கொல்ல ஆணையிட்டான். விபீஷணன் முதலானவர்கள் 'தூதுவனைக் கொல்வது ராஜதர்மம் ஆகாது’ என்று எடுத்துரைத்ததால், ஹனுமனுக்கு அவமானம் ஏற்படுத்த, அவன் வாலுக்குத் தீயிட ஆணையிட்டான் ராவணன். ஹனுமன் வாலில் பெரிய பெரிய துணிகள் தீப்பந்தங்கள் போல் சுற்றப்பட்டு தீ வைக்கப்பட்டது.
ஹனுமன் தன் வாலைப் பெரிதாக வளர்த்துக் கொண்டான். அவன் வாலில் வைக்கப்பட்ட நெருப்பு, எரிமலையின் ஜ்வாலை போல் எரிந்தது. விரும்பிய இடம் எல்லாம் தாவினான் ஹனுமன். மாடமாளிகை, கூடகோபுரங்கள் என்று ஹனுமனின் நெருப்பு வால் பட்ட இடமெல்லாம் தீப்பிழம்பாகப் பற்றி எரிந்தது. ராமன் வரும் முன்பே அரக்கர் சேனைகளையும், ராவணன் நாட்டில் பாதியையும் அழித்துவிட்ட பெருமிதத்துடன், தன் வாலை கடலில் நனைத்துவிட்டு, அன்னையிடம் பெற்ற சூடாமணியுடன் கிஷ்கிந்தை வந்து சேர்ந்தான் ஹனுமன்.

வானர சேனைகள் கடற்கரையில் ஹனுமனை ராஜமரியாதையுடன் வரவேற்று வாழ்த்தின. ஹனுமன் இலங்கைக்கு சென்றது... அங்கு அன்னையைக் கண்டது... இலங்கையைத் தீயிட்டு அழித்து வெற்றிவீரனாகத் திரும்பியது... அனைத்தையும் சுக்ரீவனின் ஒற்றர்கள் மூலம் முன்னதாகவே ராமனும், லட்சுமணனும் அறிந்தனர்.

தனது பிரபுவுக்கு மிகப் பெரிய சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த ஹனுமன், கடற்கரையில் இருந்து வாயு வேகத்தில் கிளம்பி, ஸ்ரீராமபிரானைக் காண வந்தான். 'கண்டேன் சீதையை’ என்று கூறி, ராமனின் திருவடிகளில் விழுந்து, சூடாமணியைக் கொடுத்தான். அகமும் முகமும் மலர, தன் பிரபு தன்னை அணைத்து ஆசி கூறுவார் என்று எதிர்பார்த்த ஹனுமனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
சூடாமணியைக் கண்களில் ஒற்றிக்கொண்ட ராமனின் கண்கள் கலங்கின. அவர் முகத்தில் எந்தப் பேரானந்தமும் தென்படவில்லை. மாறாக, கவலையின் சாயல் கருமேகம் போல அவர் முகமண்டலத்தை வியாபித்திருந்தது.
ஹனுமனுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. சீதையைக் கண்டுவந்த பின்பும், தன் பிரபு ஏன் துக்கமாக இருக்கிறார்? ஒருவேளை... தான் சீதையைப் பார்த்து வந்ததில் பூரண நம்பிக்கை ஏற்படவில்லையா என்று கலங்கினான்.
''தங்கள் அருளினால் நான் சென்ற காரியம் வெற்றியாக முடிந்தது. அன்னையைக் கண்டேன். அசோகவனத்தில் அன்னை சீதாபிராட்டி துயரமே உருவாக, 'தாங்கள் சிறைமீட்டுச் செல்வீர்கள்’ என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். இது, அவர்கள் தந்த சூடாமணி. அவர்களின் கற்புக்கனல் அவர்களுக்கு ஒரு தீங்கும் நேராமல் அவர்களைக் காத்துக்கொண்டிருக்கிறது. தாங்கள் கவலையை விட்டொழியுங்கள். விரைவில் சென்று அன்னையை மீட்போம்!'' என்றான் ஹனுமன்.
அப்போதும் ராமன் முகத்தில் எந்தவித மாற்றமும் தோன்றவில்லை. அதேநேரம், அவ்வளவு நேரமும் மௌனமாக இருந்த ராமன் பேசினார்.
''ஹனுமான்... என் சீதாதேவி இருக்கும் இடத்தை அறிந்து வரத்தான் உன்னை அனுப்பினேன். ஆனால் நீயோ இலங்கையைத் தீக்கிரையாக்கி, பாதி இலங்கையையும் ராவணனின் குடிமக்களையும் அழித்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இதற்கு ஏன் என்னிடம் அனுமதி கேட்கவில்லை?'' என்றார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹனுமன் ஒரு கணம் அதிர்ச்சியால் திக்குமுக்காடினான். ''பிரபு! என் வாலுக்கு ராவணன் தீயிட்டான். அந்த வாலை அங்கும் இங்கும் சுழற்றி ஆட்டினேன். பட்ட இடமெல்லாம் தீப்பற்றியது. இது ராவணன் செய்த தவற்றினால்தான் ஏற்பட்டது, பிரபு! இதில் என் பிழை ஏதுமில்லையே?'' என்றான் ஹனுமன்.
''இல்லை ஹனுமான்! ராவணன் உன் வாலில் தீ வைத்தபோது, உன்னை அந்த நெருப்பு சுட்டதா? உனது வால் எரிந்ததா?'' என்று அடுத்ததாகக் கேட்டார் ராமன்.
''இல்லை பிரபு. நான் தங்கள் திருநாமமான 'ராம’ மந்திரத்தை விடாமல் ஜபம் செய்துகொண்டிருந்தேன். தங்கள் நாம மகிமையால் எனக்கு ஒரு தீங்கும் ஏற்படவில்லை. நெருப்பு என்னைச் சுடவில்லை'' என்று பெருமிதமாகப் பதில் கூறினான் ஹனுமன்.
''உன்னைக் காப்பாற்றிக்கொள்ள நீ ஜபித்த மந்திரத்தை, இலங்கை மக்களுக்கும் சொல்லிக் கொடுத்த பின்பு அல்லவா நீ இலங்கையை எரித்திருக்க வேண்டும்? உன்னைக் காப்பாற்றிக்கொண்டாய். ஆனால், ஒரு பிழையும் செய்யாத
இலங்கை மக்களை அல்லலுக்கும் மரணத்துக்கும் ஆளாக்கிவிட்டாயே..! இந்த லங்கா தகனம் நியாயமான செயலா? இது பாவம் அல்லவா? இந்தப் பாவம் என்னையும் அல்லவா சேரும்!'' என்று கேட்டார் ஸ்ரீராமன். ஹனுமன் நெடுஞ்சாணாக ஸ்ரீராமன் காலில் விழுந்தான்.
''பிரபு! என்னை அறியாமல் இது நிகழ்ந்துவிட்டது. வேடிக்கையாக நான் வைத்த தீ இத்தனை வினையை உண்டாக்கிவிட்டதை உணரும்போது என் நெஞ்சம் பதைக்கிறது நான் பெரும் பாவி. என்னை மன்னித்தருளுங்கள்'' என்று கதறினான்.
''ஒருவேளை ராவணன் மனம் மாறி, சீதாதேவியை அழைத்து வந்து என்னிடம் ஒப்படைத்தாலும், நான் கண்டிப்பாக இலங்கைக்குச் சென்றே ஆகவேண்டும். அக்னியால் அழிந்த இலங்கையை மீண்டும் உருவாக்கித் தந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் உதவியும் செய்து, இந்தப் பாவத்துக்கு நான் பிராயச்சித்தம் தேடவேண்டும்'' என்றார் ஸ்ரீராமன். ஹனுமன் இப்போது உள்ளம் பூரித்தான்.
தர்மத்தின் ஸ்வரூபமாகவும், நியாயத்தின் வடிவமாகவும், கருணையின் உருவமாகவும், அன்பின் சின்னமாகவும் திகழும் ஸ்ரீராமனுக்குச் சேவகனாகத் தொண்டாற்றும் வாய்ப்பு தனக்குக் கிட்டியிருப்பதை எண்ணி, அவன் மனம் பூரித்தது. மீண்டும் ஸ்ரீராமனின் திருவடிகளை வணங்கி, ''ராம்... ராம்'' என்று ஜபிக்க ஆரம்பித்தான் ஹனுமன்.
இப்போது ஹனுமன் ஜபித்தது தனக்காக அல்ல; தன்னால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக. ஆம்! இப்போது ஹனுமனை மனமாரக் கட்டித் தழுவினார் ஸ்ரீராமன்.

Comments