குதிரை முகத்துடன் நந்திதேவர்!


ராமபிரான், பரமேஸ்வரனை வழிபட்ட புண்ணிய தலம்; அகத்தியரின் சீடர் ரோமச முனிவருக்கு, சிவ பெருமான் குருவாக காட்சி தந்த திருத்தலம்; மிருகண்டு முனிவரின் பாதம் பட்டதும், மார்க்கண்டேயரின் வம்சத்தினர் வழிபட்டதுமான பெருமைமிகு சிவத் தலம்; குதிரை முகத்துடன் நந்தி தேவர் அருள் பாலிக்கும் திருத்தலம்!
என்ன... 'இவ்வளவு சிறப்பு மிக்க இந்தத் தலம் எங்கிருக்கிறது?' என்று அறியும் ஆர்வம் உங்களைத் தொற்றிக் கொண்டு விட்டதா? புறப்படுங்கள், முறப்பநாட்டுக்கு!
நெல்லை- தூத்துக்குடி சாலையில், நெல்லையில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் முறப்ப நாடு. இங்குள்ள ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலுக்குத்தான் மேலே சொன்ன பெருமைகள் அனைத்தும்! தாமிரபரணி கரையில் உள்ள நவ கயிலாய திருத்தலங்களுள் 5-வது தலமாகவும் இது திகழ்கிறது.
பொதிகை மலையில், அகத்திய மாமுனிவர் தவம் செய்து வந்த காலம். அவரின் பிரதான சீடரான ரோமச முனிவர், தம் குருவின் ஆசியுடன் சிவ தரிசனம் பெற்று முக்தியடைய விரும்பினார். இதை அறிந்த அகத்தியர், தாமிரபரணி நதிக் கரையில் உள்ள ஒன்பது சிவாலயங்களை தரிசித்து வழிபடுமாறு தம் சீடரைப் பணித்தார். அத்துடன், அந்தத் தலங்களை ரோமசர் அடையாளம் காணும் விதம் தாமிரபரணியில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார் அகத்தியர். அந்த மலர்கள் கரை ஒதுங்கிய இடங்களே நவகயிலாய திருத்தலங்கள் எனப்படுகின்றன. இந்த தலங்களில் நவ கோள்களும் அருளாட்சி புரிவதாக ஐதீகம். அப்படி குரு பகவானின் ஆட்சி பெற்று அருள் புரியும் திருத்தலமே முறப்பநாடு ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில்.
இங்கு தாமிரபரணி ஆறு, கங்கையைப் போன்று தெற்கு முகமாக (வடக்கில் இருந்து தெற்கு நோக்கி) பாய்வதால், இதை தட்சிண கங்கை என்கிறார்கள். இதில் நீராடி, குருவாகக் காட்சி அளிக்கும் ஸ்ரீகயிலாசநாதரை தரிசித்து வழிபட்டால், கங்கையில் நீராடி, வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பர்.
சரி, இந்த ஊருக்கு முறப்பநாடு என்ற பெயர் வந்தது எப்படி? அசுரர்களின் தொல்லையைப் பொறுக்க முடியாத முனிவர்கள், இறைவனிடம் 'முறைப்பாடு' (முறையீடு) செய்த இடம் என்பதால், இந்த ஊருக்கு முறப்பநாடு எனும் பெயர் வந்ததாகச் சொல்வர்.
தாமிரபரணியின் மேற்குக் கரையில் அழகுற அமைந்துள்ளது திருக்கோயில். ஸ்வாமி ஸ்ரீகயிலாசநாதர் கிழக்கு நோக்கி காட்சி தர... தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள் ஸ்ரீசிவகாமி அம்பாள்.
ஸ்வாமி கருவறைக்கு எதிரே தாமிர தகடுகள் வேய்ந்த கொடி மரம். குதிரை முகத்துடன் நந்திதேவர்!
ஒரு முறை, சோழ மன்னன் ஒருவனுக்குக் குதிரை முகத்துடன் கூடிய பெண் குழந்தை பிறந்ததாம். மனம் வருந்திய மன்னன், தன் குழந்தைக்கு மனித முகம் வாய்க்க வேண்டி சிவபெருமானை தியானித்து தவம் இருந்தான். அவன் முன் தோன்றிய சிவனார், ''தாமிர பரணியின் மேற்குக் கரையில் உள்ள ஆலயத்துக்கு வந்து வழிபடு. நினைத்தது நடக்கும்!' என்று அருளி மறைந்தார்.
அதன்படி இங்கு வந்த சோழ மன்னன் தாமிரபரணியில் நீராடி, கயிலாசநாதரை மனமுருக வழிபட்டான். அப்போது குழந்தையின் குதிரை முகத்தை நீக்கி மனித முகம் தந்து அருளினார் ஈசன். ஆனால், அந்தப் பெண் குழந்தையின் பூர்வ ஜன்ம பாவம் நந்தி தேவரை தாக்க... அவரின் திருமுகம் குதிரை முகமாக மாறிப் போனது என்கிறது தல புராணம்.
இங்கிருந்து பிராகார வலம் துவங்குகிறது. முதலில் உற்சவர் ஸ்ரீகயிலாசநாதர் ரிஷப வாகனத்தில் வீற்றிருக்கிறார். தெற்குப் பிராகாரத்தில் 63 நாயன்மார்கள் காட்சி தருகின்றனர். இங்குள்ள சுற்றுச் சுவரில் ஸ்ரீஆஞ்சநேயர், கண்ணப்ப நாயனார், கஜேந்திரர், கோமாதா மற்றும் மயில் ஆகிய வடிவங்கள், பஞ்ச லிங்கங்களை வணங்கும் சிற்பம் அழகுற செதுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மூலையில் கன்னி விநாயகர் உட்பட மூன்று விநாயகர்கள் தரிசனம் தருகிறார்கள். வட மேற்கு மூலையில் வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர். வடக்குப் பிராகாரத்தில் ஸ்ரீசனீஸ்வரர் மற்றும் ஸ்ரீசண்டேஸ்வரர் சந்நிதி. வடகிழக்கில் கால பைரவரும் வீர பைரவரும் சேர்ந்து காட்சி தருகின்றனர். கோயிலின் தல விருட்சம் பலா மரம். தற்போது, கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீராமபிரான், இந்தக் கோயிலுக்கு வந்து ஸ்ரீகயிலாச நாதரை வழிபட்ட பிறகே, சீதாதேவியை ராவணன் சிறை வைத்திருந்த இடம் தெரிய வந்ததாம்! கோயிலுக்கு எதிரே, ஆற்றின் மறு கரையில் தசாவதார தீர்த்த கட்டம் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருமாலின் தசாவதாரக் காட்சியை தரிசிக்கலாம்.
'குரு பார்க்க கோடி நன்மை' என்பர். ஆகவே, சிவ பெருமானே குருவாக அருள் பாலிக்கும் இந்தத் தலம் வந்து அவரை வழிபடுவோம்; அவரது திருவருளால் கல்வி- ஞானம் உட்பட கோடானகோடி நன்மை அடைவோம்!

Comments