ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!


ஞ்ச பூத சிவத்தலங்களில் அப்பு (நீர்) தலமாகவும், சக்தி பீடங்களில்- வராகி பீட தலமாகவும் திகழ்வது திருவானைக்காவல். திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டத்தில் உள்ள இந்தத் தலம், திருச்சியில் இருந்து வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவிலும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் 1 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இந்தத் தலம் (சோழர் காலத்தில்) சோழ மண்டலத்தின் விழவறா வீதி நாட்டுக்கு உட்பட்டிருந்ததாம்.
யானை பூஜித்ததால் யானைக்காவல், கஜாரண்யம், கரிவனம் ஆகிய பெயர்களாலும் அம்பாள், ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் உபதேச ஸ்தலம் என்றும் சம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் சம்பு வனம் ஜம்புகேஸ்வரம் மற்றும் ஜம்புவீச்சுரம் என்றும் இந்தத் தலம் அழைக்கப்படுகிறது. மதகரிவனம், அத்தியாரண்யம், தானப் பொருப்புவனம், உலரடிவனம், மதமாதங்க வனம், வெண் நாவல் வனம், ஞான«க்ஷத்திரம், ஞானத் தலம், ஞான பூமி, காவை, தந்திபுகாவாயில், அமுதேசுவரம், தந்தி வனம், இபவனம் ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு.
காவேரி- கொள்ளிடம் நதிகளுக்கு இடையே, நாவல் மரங்கள் நிறைந்த- திருவானைக்காவல் அமைந்திருக்கும் தீவுக்கு 'ஜம்பு தீவு' (ஜம்பு மரம்- நாவல் மரம்) என்று பெயர். புராணங்கள் போற்றும் நான்கு மகா தீவுகளில் ஒன்றான நாவலந்தீவு என்பதும் இதுவே என்கிறார்கள்.
வேதங்களின் நான்கு தூண்களாக போற்றப் பெறும் தலங்களில் முதலிடம் பெறுவது திருவானைக்காவல். மற்றவை: திருவாரூர், மகேந்திரப்பள்ளி, திருவண்ணாமலை.
உலகம், விராட புருஷன் என்றால்... திருவாரூர்- அதன் மூலாதாரம். திருவானைக்கா- தொப்புள், திருவண்ணா மலை- மணிபூரகம், திருக்காளத்தி- கண்டம், காசி- புருவ மத்தி, சிதம்பரம்- இருதயம் என்பர்.
தேவாரப் பாடல் பெற்ற இந்தத் தலத்தின் சிறப்பை, திருஞானசம்பந்தர்- 21 பாடல்களாலும், திருநாவுக்கரசர்- 20 பாடல்களாலும், சுந்தரர்- 10 பாடல்களாலும் மாணிக்க வாசகர் ஓரடியும் கொண்டு பாடியுள்ளனர்.
திருவானைக்காவல் குறித்து அருணகிரி நாதர் 14 பாடல்கள் பாடியுள்ளார். தவிர, ஆதிசங்கர பகவத்பாதர் (அக்ஷரமாலிகை), அய்யடிகள் காடவர்கோன் (சேத்திர திரு வெண்பா) காளமேகப் புலவர் (திருவானைக்கா உலா), கச்சியப்பர் (திருவானைக்கா புராணம்), கமலை ஞானப்பிரகாசர் (தந்திவனப் புராணம்) மகா வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை (அகிலாண்ட நாயகி மாலை மற்றும் அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ்), வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (யமக நூல் ஒன்று), சுப்பையர் என்ற அடியார் (பதிற்றுப் பத்தந்தாதி) சைவ எல்லப்ப நாவலர் (செவ்வந்திப் புராணம்), மனோன்மணி அம்மையார் (திருவானைக்கா அகிலாண்ட அந்தாதி), சாம்பசிவ கவிராயர் (அகிலாண்டேசுவரி பதிகம்) ஆகியோரும் இந்தத் தலத்தைப் போற்றிப் பரவியுள்ளனர்.
வடமொழியிலான கஜராண்ய மகாத்மியம் எனும் தலப் புராணம், வல்லி பரிணயம் எனும் நாடக நூல், உறையூர் புராணம், திருவானைக்கா திருப்பணி மாலை, தாயுமான சுவாமிகள் பாடல்கள், சேக்கிழார் பாடல்கள் ஆகியனவும் இந்தத் தலத்தின் மகிமையைப் போற்றுகின்றன.
1752-ஆம் ஆண்டு இங்கு தங்கியிருந்த பிரெஞ்சு படைத் தளபதி ஒருவர், ஸ்ரீஜம்புகேஸ்வரர் குறித்து அரிய நூல் ஒன்றை பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார். இந்த நூலின் கையெழுத்துப் பிரதி- பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள வரலாற்று கருவூலத்தில் காணப்படுகிறது.
திருவரங்கநாதர், திருவானைக்காவல் ஸ்ரீஜம்புகேஸ்வரரை தரிசிக்கவே திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பதாக 'கஜாரண்ய «க்ஷத்திர மகாத்மியம்' கூறுகிறது.
ஸ்ரீராமபிரான் இங்கு வந்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. ராவணனை கொன்ற தோஷம் தீர ராமேஸ்வரத்தில் சிவலிங்க பூஜை செய்த ஸ்ரீராமன், கும்பகர்ணனை கொன்ற தோஷம் தீர திருவானைக்காவல் வந்து கோயிலின் மேற்குப் பகுதியில் குளம் அமைத்து லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு நிவர்த்திப் பெற்றாராம். இந்த லிங்கத் திருமேனி அமைந்திருக்கும் சந்நிதி ஸ்ரீ கரிய மாலீசுவரர் கோயில் எனப்படுகிறது.
அகலிகைக்கு சாபம் கொடுத்ததால் ஏற்பட்ட பாவம் தீர கௌதம முனிவரும் இங்கு வந்து வழிபட்டுள்ளார். வேத வியாசரின் தந்தையான பராசர முனிவரும் இங்கு வந்து வழிபட்டுள்ளார்.
காஞ்சி ஸ்ரீமடத்தின் பீடாதிபதியானதும், ஸ்ரீசந்திர சேகரேந்திர சங்கராச்சார்ய ஸ்வாமிகள், தான் திக் விஜயம் செய்ய தேர்ந்தெடுத்த முதல் «க்ஷத்திரம்- திருவானைக் காவல் கோயிலே.
இங்கு அருள் புரியும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரிக்கு புதிய தாடகப் பிரதிஷ்டை செய்ய ஆவல் கொண்ட காஞ்சிப் பெரியவர், 1923-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவானைக்காவலுக்கு வந்தார். ருத்ரோத்காரி வருடம் சித்திரை மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று காஞ்சிப் பெரியவர் அகிலாண்டேஸ்வரிக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
இதற்குப் பிறகு, 1.10.1963-ல் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலய மறு திருப்பணிக்கான ஜீரணோத்தாரணத் திருப்பணியைக் காஞ்சி மகாப் பெரியவாள் தொடங்கி வைத்தார். அதற்கான கமிட்டியின் தலைவர் டி.கே. நாராயண சுவாமி பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் காஞ்சி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் கலந்து கொண்டார்.
21 படலங்களைக் கொண்ட கச்சியப்ப முனிவரது 'திருவானைக்கா புராணம்' இந்தத் தலத்தின் புராண பெருமைகளை அழகுற விளக்குகிறது:
ஒரு முறை அன்னை பார்வதிதேவிக்கு, 'தான் அருகில் இருக்கும்போதும் சிவனார் யோகத்தில் திளைக்கிறாரே... என்ன காரணம்?' என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதை இறைவனிடமே கேட்ட பார்வதி தேவி, போகம்- யோகம் குறித்து விளக்குமாறும் வேண்டினாள். அதற்கு, ''நீ பூலோகத்தில் காவிரிக் கரையில் உள்ள சம்புவனம் சென்று தவம் இயற்று. காலம் வரும்போது எல்லாவற்றையும் அறிவாய்!'' என்று அருளினார். அதன்படி பூலோகத்தில் சம்புவனமாகிய திருவானைக்காவல் பகுதியை அடைந்த பார்வதிதேவி, காவிரி நீரைத் திரட்டி லிங்கமாக ஸ்தாபித்து வழிபட்டு வந்தாள்.
இந்த நிலையில்... ஜம்புநாதர் என்ற முனிவர் ஒருவர் தமக்குக் கிடைத்த அரிய நாவல் பழம் ஒன்றை சிவபிரானிடம் சமர்ப்பித்தார். பழத்தை உண்ட சிவனார் அதன் விதையை உமிழ்ந்தார். அதைக் கையில் ஏந்திய ஜம்பு முனிவர் சிவ பிரசாதமாகக் கருதி உண்டார். முனிவரின் வயிற்றுக்குள் சென்ற நாவல் விதை சிவனருளால் முளை விட்டு சடுதியில் வளர்ந்து, மரமாகி முனி வரின் தலையைப் பிளந்து வெளிப்பட்டது! விநோத உருவம் கொண்ட ஜம்பு முனிவர், 'யாது செய்வது?' என இறைவனிடம் வேண்டினார்.
அவரிடம், ''காவிரிக்கரையில் தவம் புரியும் அன்னைக்கு நிழலாக நில். உரிய காலத்தில் அங்கு வந்து அருள் புரிவேன்!'' என்றார் சிவபெருமான். அதன்படியே சம்புவனம் வந்த ஜம்பு முனிவர் அங்கு நாவல் மரமாக- அம்பிகைக்கு நிழலாகி நின்றார்.
நாட்கள் நகர்ந்தன. அவர்கள் முன் தோன்றிய சிவ பெருமான் குரு வடிவாக அன்னைக்கு போக- யோக நிலை களை விளக்கினார். அப்போது அவர் அருகில் நின்றிருந்த ஜம்பு முனிவர் மற்றும் நந்திதேவர் ஆகியோரும் இந்த உபதேசத்தைக் கேட்டு மகிழ்ந்தனர். அதன்பின் அங்கேயே அப்புலிங்கமாக உறைந்தார் இறைவன். அவரிடம் ஞான உபதேசம் பெற்ற அம்பிகை, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியாக கோயில் கொண்டாள். சுவாமி கருவறை மீது கிளைவிட்டுப் படர்ந்து நிற்கும் வெண்ணாவல் மரமே, ஜம்பு முனிவரின் வயிற்றினின்று கிளர்ந்து எழுந்த மரம் என்பர். கருவறையின் வெளிப்புறம் முனிவரின் சிலையையும் தரிசிக்கலாம்.
வேத விளக்கம் எல்லையில்லாதது; குறிப்பிட்ட காலத்தில் கற்பிக்கவோ... கற்றுக் கொள்ளவோ முடியாதது. எனவே, இந்தத் தலத்தில் அம்பிகை கன்னி கோலத்திலேயே மாணவியாக அமர்ந்து சிவனாரிடம் உபதேசம் பெறுவதாக ஐதீகம். ஆதலால் இங்கு திருக்கல்யாண வைபவம் கிடையாது!
தமிழக சிவாலயங்களிலேயே பெரிய பரப்பளவு கொண்டதாகக் கருதப்படும் திருவானைக்காவல் திருக்கோயில், சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பே கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது. யானைகள் நுழைய முடியாதபடி அமைந்த ஆலயம் இது. ஏன் அப்படி?
புட்பதந்தன், மாலியவான் ஆகிய சிவகணங்கள் இருவருக்கு இடையே, 'தங்களில் பெரியவர் யார்?' என்ற சர்ச்சை எழுந்தது. ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டு யானையாகவும் சிலந்தியாகவும் பூலோகத்தில் பிறந்தனர். சுவேதகிரியில் வந்து பிறந்த யானை, நாவல் மரங்கள் அடர்ந்திருந்த காட்டில் சிவ லிங்கம் ஒன்றைக் கண்டு தினமும் பூஜித்து வந்தது.
அதே லிங்கத்தை சிலந்தியும் பூஜித்தது. நாவல் மரத்தின் இலைகள் லிங்கத்தின் மீது விழாத வண்ணம் வலை பின்னி விதானம் அமைத்து வழிபட்டுச் செல்லும் சிலந்தி. பிறகு வரும் யானை, வலையை பிய்த்தெறிந்து விட்டு, நீரால் லிங்கத்தை அபிஷேகித்து பூச்சூடி பூஜித்து செல்வது வாடிக்கையானது.
ஒரு நாள் யானையின் செயலைக் கண்டு சினம் கொண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்து கடித்துத் துன்புறுத்தியது. வலி பொறுக்காத யானை துதிக்கையை தரையில் அடித்து துடிதுடித்து இறந்தது.அதன் தாக்குதலால் சிலந்தியும் இறந்தது.
யானை செய்த தொண்டு 'நோன்பு' ஆதலால், அதற்கு முக்தி அருளினார் சிவனார். சிலந்தி செய்த தொண்டு 'சீலம்'. ஆதலால் அது, மன்னனாகப் பிறக்கும் படி அருளினார். அதன்படி சிலந்தி, சோழ அரசன் சுபதேவன்- கமலவதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தது. இவனே கோச்செங்கட் சோழன். இவன், 'பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும்' மற்றும் கோயில்கள் பல கட்டியதாக தேவாரம் கூறும். அவற்றுள் ஒன்று திருவானைக்கா திருக்கோயில்!
பிற்காலத்தில் சிவ பக்தி யால் நாயன்மார்களுள் ஒருவரான கோச்செங்கட் சோழனுக்கும் விமானத்துடன் கூடிய சந்நிதி ஒன்று இங்குண்டு.
கோயிலின் மேற்கு கோபுரம்- மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. கிழக்கு கோபுரம்- கி.பி.13-ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் திருப் பணி துவங்கப்பட்டு, போசள மன்னர் (ஹொய்சாளர்) வீர சோமேஸ்வரன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது என்பது கல்வெட்டு தகவல்.
கி.பி.14-ஆம் நூற்றாண்டில் சமயபுரம் பகுதியை (அப்போதைய கண்ணனூர்) ஆட்சி செய்த போசள மன்னர் வீரசோமேஸ்வரன் இங்கு- தன் பாட்டன், பாட்டி, தந்தை, அத்தை ஆகியோரது நினைவாக வல்லாளேஸ்வரம், பத்மாலீஸ்வரம், நரசிம்மேஸ்வரம், சோமளீஸ்வரம் ஆகிய சிறு கோயில்களை கட்டியதாகவும் தெரிகிறது.
கோச்செங்கட் சோழனுக்குப் பிறகு வந்த விஜயபால் அகளங்க வளவன், 2-ஆம் பிராகார மதில், கோபுரம் மற்றும் மண்டபம் ஆகியவற்றை உருவாக்கினாராம். மூன்றாம் திருச்சுற்று மதில், கோபுரம் மற்றும் சில மண்டபங்களைக் கட்டியது விக்கிரம சோழன்.
ராககேசரிவர்மன் எனும் 3-ஆம் ராஜராஜ சோழதேவன் (கி.பி.1245), ராஜசேகரி வர்மன், முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1127), திருபுவனச் சக்கரவர்த்தி, 3-ஆம் குலோத்துங்க சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய சோழ அரசர்களும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியதேவன் (கி.பி.1251-64), மாறவர்மன் குலசேகர தேவன் (கி.பி.1278), காகத்திய மன்னன் பிரதாப ருத்திரதேவன், சுந்தர பாண்டியன், ஹொய் சாள மன்னன் வீரகோமேசுவர தேவன் (கி.பி.1253), இவன் மகன் பிரதாபச் சக்கரவர்த்தி வீராமநாததேவன் (கி.பி.1271), சாளுவ மன்னனான கோப்பராஜன் மகன் திருமலைராயன் (கி.பி.1450-80), சோழமன்னன் வாலக காமயர் என்னும் அலக்கராஜன் (1432) ஆகியோர் இந்தக் கோயிலுக்கு அளித்த நிலக் கொடைகள் மற்றும் திருப்பணிகள் செய்த விபரங்களும் இங்குள்ள 156 கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.
தவிர... விஜயபாலன், அகளங்கவன், ஸ்ரீராமர், சிவமுனிச்சித்தர், ஸ்ரீசங்கராச்சார்யர், அழகனருள் முதலியப்பன், வரிசைப் பெருமாளையன், சொக்கப்பய்யன், சம்புநாத செட்டி, சுப்ரமணிய மகாமுனி, மாணிக்கவாசகன், தெய்வ ராயன், ரெங்க ஜயதுங்கன், பேரம்பலத்துறைவர் சைவமுனி, சிலந்திநாதன், மந்திரிப் பெருமாள், கச்சியப்ப செட்டியப்ப நாயக்கர், கனகய்யன் (மறைவல்லோன்) ஆகியோரும் இந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்தது குறித்த தகவலை 'திருப்பணி மாலை' என்ற நூல் விவரிக்கிறது.
6.4.1960, 5.7.1970, 26.1.1983, 12.7.2000 ஆகிய தேதிகளில் இக்கோயிலில் திருக்குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன.
கி.பி 1900-ஆம் ஆண்டில் கானாடுகாத்தான் சா.ராம.சித. சிதம்பரம் செட்டியார் செய்த திருப்பணி மிகவும் போற்றத் தக்கது.
1908-ஆம் ஆண்டு இந்த ஆலயத் திருப்பணி வேலைகளை மேற்கொண்ட கானாடுகாத்தான் என்ற ஊரைச் சேர்ந்த சா. ராம குடும்பத்தினர், காஞ்சிப் பெரியவர் நேரில் வந்து இந்த ஆலயக் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று விண்ணப்பித்தனர். அதற்கு இசைந்த காஞ்சிப் பெரியவர் 7 நாட்களுக்கு முன்னதாகவே இங்கு வந்து, பிலவங்க வருடம்- தைத் திருநாள் ஒன்றில் (1908- பிப்ரவரி மாதம்) ஸ்ரீஜம்புகேசுவரர் ஆலய மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி அருளினார்கள்.
புராணப் பெருமைகள் மட்டு மல்ல சரித்திரப் பின்னணியும் நிறைந்தது திருவானைக்காவல் திருக்கோயில். கி.பி.1752-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருச்சிக் கோட்டையில் தோற்று பின்வாங்கிய பிரெஞ்சு படைகளுக்கு புகலிடம் தந்தது திருவானைக்கா ஆகும்.
சுமார் 18 ஏக்கர் பரப்பளவுடன் 5 பிராகாரங் கள், 7 கோபுரங்கள் மற்றும் 9 தீர்த்தங்களுடன் திகழ்கிறது திருவானைக்காவல் திருக்கோயில்.
இங்குள்ள நவதீர்த்தங்களும் புனிதமானவை. பிரம்ம தீர்த்தம்: 4-ஆம் பிராகாரத்தில் சாலைக்குத் தென்புறம் உள்ளது. இந்திர தீர்த்தம்: 3-ஆம் பிராகாரத்தில் தென்மேற்கில் காசி விஸ்வநாதர் சந்நிதிக்கு அருகில் உள்ளது. சம்பு தீர்த்தம்: 3-ஆம் பிராகாரத்துக்குக் கிழக்கில் பழைய ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது. ராம தீர்த்தம்: 5-ஆம் பிராகாரத்துக்கு வெளியே உள்ளது. இதில் தை மாதம் புனர்வசு நட்சத்திரத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறும். ஸ்ரீமத் தீர்த்தம்: கருவறையில் மூலவரைச் சுற்றி சிற்றூறலாக உள்ளது. அக்னி தீர்த்தம்: 3-ஆம் பிராகாரத்தில் தென்கிழக்கில் வசந்த மண்டபம் அருகில் பெரியதொரு கிணறாக உள்ளது. அகத்திய தீர்த்தம்: அம்மன் கோயிலில் பள்ளியறைக்குப் பக்கத்தில் உள்ள சிறிய கேணி. சோம தீர்த்தம்: இது ஸ்ரீரங்கத்தில் உள்ள சந்திர புஷ்கரணி என்று சொல்கிறார்கள். சூரிய தீர்த்தம்: 4-ஆம் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் ஆயிரங்கால் மண்டபத்துக்கு முன் உள்ள தெப்பக்குளம். இதில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று தெப்போற்சவம் நடைபெறும்.
வருடம் தோறும் தை மாதம் பௌர்ணமி தினத்தில் மேற்சொன்ன நவ தீர்த்தங்களிலும் நவ தீர்த்தவாரி பூஜை நடைபெறுகிறது. பிறகு, உத்தர காவிரியாகிய கொள்ளிடத்திலும் தீர்த்தவாரி பூஜை நடைபெறுகிறது.
நம் உடம்பின் அடிப்படை ஏழு தாதுக்கள். அதன்படியே இந்த ஆலயத்துக்கும் ஏழு கோபுரங்கள். அவை: ராஜகோபுரம் (88.5 அடி உயரம்), மல்லப்பகட்ட கோபுரம் (60.5 அடி), கார்த்திகை கோபுரம் (98.5 அடி), ஆரவிட்டான் கோபுரம் (68 அடி), மணிமண்டப கோபுரம்- (46.5 அடி), சங்கமேச்வரர் கோபுரம் (77 அடி) மற்றும் சுந்தரபாண்டியன் கோபுரம் (110 அடி). இவற்றுள் கிழக்குக் கோபுரம் 7 நிலைகளுடனும் மேற்குக் கோபுரம் 9 நிலைகளுடனும் அமைந்துள்ளன. கிழக்குக் கோபுரத்தில் சங்கீதத்தைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன.
இங்கு கிழக்கு கோபுரத்தின் அருகே ஏகாட்சர கோயில் உள்ளது (தற்போது கருப்புக் கோயில் என்பர்). 'ஓம்' என்பதையே ஏகாட்சரம் என்பர்.
திருவானைக்காவல் திருக்கோயிலின்
பஞ்ச பிராகாரங்கள் (5 திருச்சுற்றுகள்)- ஆனந்தமய கோசம், விஞ்ஞானமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், அன்னமய கோசம்... ஆகிய உயிர்களின் ஐவகை தேகத்தைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளன என்பர். கோட்டை போன்ற பிராகார மதில்களின் மொத்த நீளம் 7,864 அடியாக உள்ளது.
இரண்டு வெளிப் பிராகாரங்கள் தெருக் களையும், வீடுகளையும் கொண்டது. மூன்றாம் பிராகாரத்திலிருந்தே கோயில் மண்டபங்கள் ஆரம்பமாகின்றன. வெளிப் பிராகாரத்தில் சுமார் 6 அடி உயரத்துடன் திகழும் வீரபத்திரருக்கு தனிக் கோயில் ஒன்று உள்ளது. பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடந்த இந்தக் கோயில், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் பராமரிப்புக்கு உட்பட்டதாம்.
வெளிப்பிராகாரத்தைத் தாண்டி கீழ் வாசலையட்டி கிழக்கு நோக்கிய குபேரலிங்கம் சந்நிதி உள்ளது. அன்னாபிஷேகம் அன்று இவரது அலங்காரம் கண்கொள்ளா காட்சி யாக இருக்கும்.
4-ஆம் பிராகாரத்தில் (வடக்கு உள் வீதியில்) ராஜராஜேஸ்வரி திருக்கோயில் ஒன்று உள்ளது. இது, காஞ்சி காமகோடி பீடம் நிர்வாகத்திலுள்ளது. இந்த பிராகாரத்தில் சங்கராலயம் எனப்படும் ஸ்ரீசங்கரேஸ்வரர் திருக்கோயிலும் இதற்கு அருகில் ஸ்ரீராஜராஜேஸ்வரம் ஆலயமும் (மூன்றாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது), அதன் மதிலையட்டி அமைந்துள்ள பசுபதீஸ்வரம் கோயிலும் தரிசிக்க வேண்டியன. போசள மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த பசுபதீஸ்வரம் கோயிலில் உள்ள பஞ்சமுக லிங்கம் அற்புதமானது!
இந்த நான்காம் பிராகாரத்து மதிலையே 'திரு நீறிட் டான் மதில்' என்பர். கோச்செங்கட் சோழன் இந்தக் கோயிலை கட்டியபோது சிவபெருமான், சித்தராக எழுந்தருளி வந்து மேற்பார்வை செய்து திருநீற்றையே கூலியாகக் கொடுத்து (சிவனார் தரும் விபூதி கூலியாட் களது வேலைக்குத் தக்கவாறு தங்கமாக மாறுமாம்!) இந்த மதிலைக் கட்டுவித்தார் என்கிறது தலப் புராணம். இதை, ''ஆழித் தேர் மறுநிற்பயில் மெய்த்திரு நீறிட்டான்மதில் சுற்றிய பொற்றிரு ஆனைக்கா' _ எனப் போற்றுகிறது தேவாரம். இந்த மதில் சுமார் 8,000அடி சுற்றளவு, 6 அடி அகலம் மற்றும் 35 அடி உயரத்துடன் திகழ்கிறது. இந்த பிராகாரத்தை வலம் வந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். ஐந்தாவது பிராகாரம் 'விபூதி சுற்று' எனப்படுகிறது.
3-ஆம் பிராகாரத்தில் உள்ள பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒருங்கிணைந்த 'ஏகபாத திரிமூர்த்தி' சிற்பமும் காணத் தக்கது.
இந்தப் பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் குறத்தி மண்டபம் எனப்படும் 'குறை தீர்த்த மண்டபம்' உள்ளது. வசந்த மண்டபம் என்றும் சொல்வர். முற்காலத்தில் அரசர்கள் இந்த மண்டபத்தில் அமர்ந்தே மக்களது குறைகளைக் கேட்டறிவார்களாம். இங்குள்ள நடன மங்கையர் மற்றும் குறிசொல்லும் குறத்தியின் சிற்பங்கள் கலை நயம் மிக்கவை.
மூன்றாம் பிராகாரத்தின் தென்பகுதியில் 19 தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து கிழக்குத் திசையில் இரு கோபுரங்களையும், மேற்குத் திசையில் மூன்று கோபுரங்களையும் தரிசிக்கலாம். இப்படி தரிசிப்பது, சிவபிரானின் ஐந்து முகங்களை தரிசிப்பதற்குச் சமம் என்கிறார்கள்.
இந்த பிராகாரத்தில் பிருங்கி முனிவர் சிலையும் உண்டு. அடுத்து முருகன் சந்நிதி. இந்த சந்நிதிக்கு முன்பாக வாயில், உருண்டைக் கல்லுடன் காணப்படும் சிங்கத்தின் சிலை ஒன்று தென்படுகிறது. சிங்கத்தின் வாய்க்குள்ளேயே வைத்து உருட்ட இயலும் அந்தக் கல்லை வெளியே எடுக்க முடியாது!
2-ஆம் பிராகாரத்தில் சிவகாமசுந்தரி, இரண்ணி அம்மன், ஜுரதேவர், பைரவர், தட்சிணாமூர்த்தி மற்றும் கோச்செங்கட் சோழன் ஆகியோரை தரிசிக்கலாம். இங்குள்ள ஜுரதேவருக்கு சந்தன அபிஷேகம் செய்தால் ஜுரம் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த பிராகாரத்தில் நாகதோஷம் நீக்க வல்ல அதிவிசேஷமான தம்பதி சமேத நாகர் சந்நிதியும் உள்ளது.
முதல் பிராகாரத்தில் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீகல்யாண சுந்தர மூர்த்தி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநடராஜர், அறுபத்து மூவர்களின் உற்சவர் விக்கிரகங்கள், சகஸ்ர லிங் கம் (1008 லிங்கங்கள் கொண்டது) நவக்கிரகங்கள், ஸ்ரீகால பைரவர், ஸ்ரீவசந்தராய பிள்ளையார், சூரியன், ஸ்ரீஅன்னபூரணி, சப்தகன்னியர், தட்சிணா மூர்த்தி, ஓங்கார கணபதி, சண்டிகேஸ்வரர் மற்றும் அறுபத்து மூவரின் மூலவர் விக்கிரகங்களை தரிசிக்கலாம்.
திருவானைக்கா கோயிலுக்குள் (மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ளது போல்) 108 இடங்களில் பிள்ளையார் காட்சி தருகிறார். இவர்களில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சந்நிதியில் உள்ள பிரசன்ன விநாயகரும், தனி சந்நிதி கொண்டிருக்கும் வல்லப விநாயகரும் குறிப்பிடத் தக்கவர்கள். கோயிலில் சுவாமி புறப்பாட்டின்போது வல்லப கணபதியே முதலில் செல்கிறார். இவர், தமது 10 திருக்கரங்களிலும் பத்துவித ஆயுதங்கள் தரித்து, சித்தி தேவியுடன் காட்சி தருகிறார்.
அம்மன் சந்நிதிக்கு பின் பக்கம் உள்ள ஆயிரங்கால் மண்டபத் தூண் ஒன்றில் தொந்தியில்லாத- புலி வாலுடன் கூடிய வியாக்ர (புலி) பாத விநாயகரை தரிசிக்கலாம்.
திருவானைக்காவல் கோயிலின் ஊஞ்சல் மண்டபத் தூண் ஒன்றில் ஒரே சிற்பத்தில் காளை மற்றும் யானையின் உருவங்களைக் (ரிஷப குஞ்சர சிற்பம்) காண முடிகிறது. காளை யைக் காணும்போது யானையும்; யானையைக் காணும்போது காளையும் தெரியாது என்பது இதன் சிறப்பு!
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சந்நிதி பிராகாரத்தில், வீணை இல்லாமல் இடக் கரத்தில் சுவடி, வலக் கரத்தில் சின் முத்திரையுடன் நின்ற திருக்கோலத்தில் அருளும் ஸ்ரீசரஸ்வதிதேவி, உட்பிராகாரத்தில் காட்சி தரும் மேதா தட்சிணாமூர்த்தி மற்றும் ஸ்ரீபஞ்சமுக விநாயகர் ஆகியோர் இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பு மூர்த்திகள் ஆவர்.
ஸ்ரீஜம்புகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் உள்ள மகாலட்சுமியும் நின்ற திருக்கோலத்தில் விஸ்வரூப தரிசனம் தருகிறாள். மேலும் இங்கு தமது தேவியர் இருவருடன் சந்திரன், இரண்டு நந்திதேவர்கள் ஆகியோரையும் தரிசிக் கலாம். இங்கு இசைத் தூண்களும் உண்டு.
இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீசனீஸ்வரர், குழந்தை வடிவில்- குதிரை முகத்துடன் தன் அன்னை சாயா தேவி மற்றும் மனைவி சகிதம் காட்சி தருகிறார். இப்படி குடும்ப அம்சத்தினராக சனிபகவானை வேறெங்கும் காண்பது அரிது! சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த சனிபக வானை வழிபட, சிறந்த பலன் உண்டு என்பது ஐதீகம்.
சுவாமி சந்நிதிக்குப் போகும் முகப்பில் உள்ள நாலு கால் மண்டபத்தை சதுர் வேத மண்டபம் என்பர். இங்கு கொடிமரம் இருப்பதால் கொடிமர மண்டபம் என்றும் கூறுவர். இங்குள்ள தூண்கள் நான்கும் வேதங்களைக் குறிக்கும். தூண் ஒவ்வொன்றின் மேல் உள்ள எட்டெட்டு சிங்கங்கள் மண்டபத்தைத் தாங்குவது போல் உள்ளன. கீழே குறுகலான தண்டுடன், மேலே கிளை படர்வது போல காணப்படும் சிற்ப விருட்ச வேலைப்பாடுகளும் இங்குள்ள கல்லால் ஆன சங்கிலிகளும் சிற்பத் திறனுக்கு உதாரணம்!
கோயிலின் உற்சவ மூர்த்திகள் உள்ள மண்டபமே சோமாஸ்கந்தர் மண்டபம் ஆகும். கல்லால் ஆன இந்த மண்டபத்தின் மேல் பகுதியில் வளைந்திருக்கும் கொடுங்கைகள் மரத்தால் ஆனவை போல் காட்சி தருகின் றன. இந்த மண்டபத்தை அமைத்தது ஸ்ரீராமர் என்பது ஐதீகம்.
மூலவர் ஸ்ரீஜம்புகேஸ்வரர் சந்நிதி முழுக்க கருங்கல்லால் ஆன வேலைப்பாடுகள் உடையது. ஸ்தல விருட்சமே நிழற் குடையாக அமையப் பெற்ற விமானம். கருவறை அருகிலேயே வெள்ளை நாவல் பழம் கொண்ட வெண்ணாவல் மரம் ஸ்தல விருட்சமாக உள்ளது.
இதன் அடியினிலேயே ஜம்பு முனிவர் ஜீவ ஸித்தி அடைந்தார்.
இந்த விருட்சம் குறித்து காஞ்சி மகாபெரியவர் கூறிய தகவல்:
'திருவானைக்காவலில் திருப் பணி நடந்த பொழுது ஜம்பூ விருக்ஷத்தின் ஒரே ஒரு பட்டை மாத்திரம் பாக்கி இருந்தது. திருப்பணி செய்த கானாடுகாத்தான் செட்டியார்கள், அதுவும் போய் விடுமோ என்று கவலைப்பட்டு அதற்கு ஏகாதச ருத்திராபிஷேகம் செய்வித்தார்கள். அந்த மந்திர சக்தியால் அப்பொழுதே அது தளிர்த்து மரமாகக் கிளைத்திருக்கிறது. இப்பொழுதும் திருவானைக்காவல் பக்கத்தில் வெண்ணாவல் என்ற ஊர் இருக்கிறது.'
இந்த விருட்சத்தையும் மூலவர் விமானத் தையும் திருக்கோயிலின் நான்கு திசைகளில் இருந்தும் தரிசிக்கலாம். இவற்றை தரிசித்தாலே ஸ்ரீஜம்புகேஸ்வரரை தரிசித்த பலன் உண்டு என்று «க்ஷத்ர புராணமும், பத்ம புராண(130- 135 அத்தியாயங்கள் வரை)மும் கூறுகிறது.
20 கோஷ்ட தேவதைகளைக் கொண்ட சிவன் சந்நிதி இருப்பது இங்கு மட்டுமே! அவை: மேற்கு கோஷ்டத்தில்- ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீகணபதி, ஸ்ரீசரஸ்வதி மற்றும் ஸ்ரீகிருஷ்ணர். வடக்கு கோஷ்டத்தில்: ஸ்ரீதத்தாத்ரேயர், ஸ்ரீஹரிஹரர், ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர், ஸ்ரீஏகபாதர் மற்றும் ஸ்ரீசண்டேச அனுக்கிரகர். கிழக்கு கோஷ்டத்தில்- ஸ்ரீசக்ரவரதர், ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீகௌரி சங்கர், ஸ்ரீசோமாஸ்கந்தர் மற்றும் ஸ்ரீசுகாஸன சந்திரசேகரர். தெற்கு கோஷ்டத்தில்- ஸ்ரீபைரவர், ஸ்ரீஜுரஹர தேவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீநடராஜர், மற்றும் ஸ்ரீவீரபத்திரர்.
இது, ஜல «க்ஷத்திரம் என்பதால்... சுவாமி சந்நிதி கோயில் மையத்துக்கு சற்று மேற்காகவும், வருண திசையாகிய மேற்குப் பார்த்தவாறும் உள்ளது. கருவறைக்குள் சில படிகள் இறங்கி பக்கவாட்டில் உள்ள சிறிய வாயில் வழியாகக் குனிந்தே செல்ல வேண்டும்.
மூலவர் ஸ்ரீஜம்புகேஸ்வரர் சுயம்பு லிங்கம்; தரை மட்டத்துக்கும் கீழே இருக்கிறார். சுயம்பு லிங்க சாஸ்திரத்துக்கு உட்பட்டு ஒன்றரை அடி உயரத்துடன் திகழ்கிறார். சதுர பீட ஆவுடையார். லிங்கம் ஒரு ஒழுங்கான அமைப்புடன் கூடியது அல்ல. மேடுபள்ளங்கள் உடையது. இதை அபி ஷேகத்தின்போது பார்க்கலாம்.
ஸ்ரீஜம்புகேசுவரருக்கு- ஜம்புநாதர், சம்பு நாயகர், வெண்ணாவலீசர், ஜம்பு லிங்கம், அப்பு லிங்கம், அமுத லிங்கம், அமுதேஸ்வரர், பிரம்ம லிங்கம், பிரமீசர், கஜாரண்யநாதர், பச்சாதாபேசுவரர், ஆதிப்பெருஞ்செல்வர், சங்கரேசுவரர், செழுநீர்த்திரள், ஜலகண்டேஸ்வரர், பிரம்ம லிங்கம் ஆகிய பெயர்களும் உண்டு. கல்வெட்டுகளில்- திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர் எனும் பெயர்களால் மூலவர் குறிக்கப்படுகிறார். இவரை வழிபடுவோர்க்கு எமபயம் இல்லை என்கின்றன புராணங்கள்.
பகருவறைக்கு முன்பாக ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரம் ஒன்று உண்டு. இதன் வழியாக மூலவரை தரிசிப்பதே சிறப்பு! இதை, 'சேவிக்கும் எல்லைத் திருக்கால் கதவமும்' என்று போற்றுகிறது திருவானைக்கா புராணம். கருவறையில்- லிங்கத்தின் வெகு அருகில் சென்று வழிபட கட்டணம் உண்டு. மூலவர் அருகில் உள்ள மற்றுமொரு சிவலிங்கம் ஜம்பு லிங்கம். இவருக்கே அபிஷேக- அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
மூலஸ்தானத்தில் இருந்து ஊற்றெடுக்கும் தீர்த்தத்தை ஸ்ரீமத் தீர்த்தம் என்பர். இந்த நீரை, சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாதாள வடிகால் மூலம் அரை மைல் தொலைவில் உள்ள நந்தவனம் மற்றும் விவசாய நிலங்களது பாசனத்துக்குப் பயன்படும்படி செய்துள்ளனர்.
ஸ்வாமி சந்நிதியிலிருந்து அன்னையின் சந்நிதிக்குச் செல்லும் வழியில் உள்ள மகாலட்சுமி சந்நிதியில் மகாலட்சுமியின் மீது அகத்தியர் பாடிய பாடலை பொறித்துள்ளனர். ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் சந்நிதி சுவர்களில் அபிராமி அந்தாதி பாடல்களை பளிங்குக் கற்களில் பதித்திருக்கிறார்கள்.
அம்பாள் சந்நிதியின் தென்மேற்கு மூலையில் ஸ்ரீபஞ்சமுக விநாயகர் தரிசனம் தருகிறார். திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் மேலே ஒரு முகமும் கொண்டு திகழ்கிறார்.
நுழைவாயிலில் துவாரபாலகியர் காவல் புரிய... தனிக் கோயிலாகவே திகழ்கிறது அம்பாள் சந்நிதி; முழுக்க பளிங்கு போன்ற கிரானைட் கற்களால் ஆனது.
அம்பிகை கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். நான்கு திருக்கரங்கள். நின்ற திருக்கோலம். மேலிரு கரங்களில் தாமரை மலர்கள். கவசம் அணிவித்து அலங்கரிக்கும்போது வலது மேல் கரத்தில் கிளியும், இடது மேல் கரத்தில் தாமரையும் கொண்டு அலங்கரிப்பதும் வழக்கம். கீழ்க் கரங்கள் இரண்டும் அபய- வரத முத்திரையுடன் திகழ்கின்றன. சந்நிதியின் எதிரில் உள்ள ஸ்ரீபிரசன்ன விநாயகரை வணங்கிய பிறகே சந்நிதிக்குள் நுழைந்து அம்பாளை வழிபட வேண்டும்.
முற்காலத்தில் இந்த அம்பாள் மிக உக்கிரமாக திகழ்ந்தாளாம். அப்போது இங்கு வந்த ஆதிசங்கரர், அம்பாளது உக்கிரத்தை தணிக்க விழைந்தார். ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்ய எண்ணினார். ஆனால் இது நீர் தலம். தரையில் பிரதிஷ்டிக்க முடியாது. ஆதலால்... சிவ சக்ரம், ஸ்ரீசக்ரம் என இரண்டு சக்ரங்களை உருவாக்கியவர், அவற்றை அம்பாளின் காதுகளில் தாடகங்களாக அணிவித்தார். அம்பாளின் உக்கிரம் சற்று தணிந்து ஸ்ரீசக்ர ரூபிணியாக விளங்கினாள். மேலும் ஸ்ரீஆதிசங்கரர், அம்பாள் சந்நிதிக்கு எதிரில் ஸ்ரீபிரசன்ன விநாயகரையும், சந்நிதிக்கு பின்புறம் ஸ்ரீமுருகனையும் பிரதிஷ்டை செய்தார். அதன் பின் அம்பாள் சாந்த சொரூபிணியானாள் என்கின்றன புராணங்கள். பிற்காலத்தில் ஸ்ரீபிரசன்ன விநாயகர் சந்நிதியில் ஸ்ரீசங்கரரின் சிலையை வைத்துள்ளனர்.
இந்த அம்பிகையை வழிபட்டு உய்வடைந்தவர்கள் பலர். 'அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்' என்று த்விஜா வந்தி ராகத்தில் பாடிய ஸ்ரீமுத்துசாமி தீட்சதர், 'லம்போதர (விநாயகர்) குருகுக (முருகா) பூஜிதே' என்று மைந்தர்கள் வணங்கும் இந்த மங்கை நல்லாளை போற்றுகிறார்.
பிரசன்ன விநாயகர் சந்நிதி சேர்த்து ஸ்ரீஅகிலாண் டேஸ்வரி சந்நிதி 'ஓம்' வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்நிதியை தினமும் 12 முறை (48 நாட்களுக்கு) வலம் வந்தால் இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி- காலையில் லட்சுமி சொரூபமாகவும், உச்சிக் காலத்தில் பார்வதி தேவியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் திகழ்வ தாக ஐதீகம். எனவே, பகல் நேரத்தில் பல வண்ண ஆடைகளை அணிவித்தாலும், இரவில் வெண்ணிற ஆடையை மட்டுமே அணிவிப்பது வழக்கம். இந்த தேவிக்கு, அகிலாண்டேஸ்வரி, அகிலாண்ட நாயகி, அகிலாண்டவல்லி, தண்டனி, தண்டநாயகி, சிதானந்தரூபிணி ஆகிய பெயர்களும் உண்டு. அருண கிரியார்- ஞானமுதல்வி, இமயம் பயந்த மின், கவுரி, பராபரை, மங்கை, குண்டலி, திரிபுர ஆயி, நாத வடிவி, அகிலம்புரந்தவள், ஆலின் உதரம் உளள் என பலவாறு வர்ணிக்கிறார்.
அம்பாள் சந்நிதிக்கு முன்பு ஸ்ரீநர்த்தன விநாயகர் சந்நிதி ஒன்றும் உள்ளது. சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்: அப்போது அம்பாள் உக்கிரமாக இருந்தாளாம். தினமும் விஸ்வரூப பூஜை வேளையில்... சிவாச்சார்யர் பெரிய நிலைக் கண்ணாடியால் தன்னை மறைத்துக் கொண்டு அம்பாளின் முன் இருக்கும் திரையை விலக்குவார். அப் போது அம்பாளின் பார்வை பட்டு கண்ணாடி நொறுங்கி விடும். இதற்குப் பரிகாரம் தேடிய அன்பர்கள், அப்போது திருச்சியில் முகாமிட்டிருந்த காஞ்சி ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் சென்று முறையிட்டனர்.
சிறிது நேரம் மௌனமான ஸ்வாமிகள் பிறகு கண் விழித்து ஸ்தபதி ஒருவரை அழைத்து வரச் செய்து நர்த்தன விநாயகர் விக்கிரகம் ஒன்று செய்யும்படி பணித்தார். விக்கிரகம் தயாரானது. திருப்தியடைந்த மகா பெரியவர், அம்பாளுக்கு முன்னால் அந்த விக்கிரகத்தை பிரதி ஷ்டை செய்யச் சொன்னார். அப்படியே செய்தனர். அதன்பின் அம்பாள் சாந்தமானதாகவும் கூறுவர்.
பௌர்ணமி தோறும் ஸ்ரீஅகிலாண்டேஸ் வரி சந்நிதியில் உள்ள மஹாமேருவுக்கு நவாவரண பூஜை செய்யப்படுகிறது. ஆடி மற்றும் தை மாத வெள்ளிக் கிழமைகள் மற்றும் நவராத்திரி தினங்களில் அம்மனுக்கு தாழம்பூ முதலான பூக்களால் ஆன புஷ்ப பாவாடை, சாகம்பரி (காய்-கனிகளால் செய்யப்படும்) அலங்காரம் ஆகியன செய்யப்படுகின்றன.
அம்பாள் சந்நிதியை ஒட்டியுள்ளது நாச்சியார் தோப்பு. இந்த ஈஸ்வரியை நாச்சியார் என்றும் சொல்வர்.இவளின் சகோதரனான திருமால், அம்பிகைக்கு இந்த தோப்பை சீதனமாக வழங்கினாராம்!
மார்கழி மாதம் முதல் தேதியில், இந்தத் தோப்பிலிருந்து கிடைக்கும் தேங்காய் வருமானத்தை தாம்பூலத் தட்டில் வைத்து, அரிசி-பருப்பு-வெல்லம் ஆகியவற்றுடன் யானை மீது ஏற்றி அரங்கநாதரது சீதனமாக அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்குக் கொண்டு வருவது வழக்கம். காலப் போக்கில் இந்த வைபவம் நின்று விட்டது.
அதேபோல திருவானைக்காவலின் எல்லை திருவரங்கம் வரை இருந்தபோது... ஸ்ரீரெங்கநாதர் கோயிலில் உள்ள சூரிய- சந்திர புஷ்கரணியிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து தை மாதம் பௌர்ணமி அன்று ஸ்ரீஜம்புகேஸ்வரருக்கு நவதீர்த்த பூஜை கோலாகலமாக நடைபெறுவதும் உண்டாம். ஆனால் தற்பொழுது அந்த விமரிசையெல்லாம் இல்லை. தீர்த்தவாரி பூஜை மட்டுமே நடைபெறுகிறது.
இங்கு அம்மன் கன்னியாக இருப்பதாக ஐதீகம். எனவே பள்ளியறையில் மீனாட்சி அம்மன் நிரந்தரமாக உள்ளார். இவளை 'படி தாண்டா பத்தினி' என்பர். இரவில் இங்கு எழுந்தருளும் ஸ்வாமி, 'சொக்கர்' எனப்படுகிறார். இரவு பள்ளி யறை பிரசாதமாக வெல்லம், நெய் கலந்த 'சொக்கர் அப்பம்' வழங்கப்படுகிறது. காலையில் பள்ளி யெழுச்சி பிரசாதமாக பால் வழங்கப்படுகிறது.
இத்தலத்தில் வழிபாடு செய்பவர்கள் 'அமுத ராகு' எனும் நித்திய பதவி அடைவர் என்று நம்பப்படுகிறது.
ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீஅகிலாண்டேஸ் வரியை வழிபட்டால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
இந்தக் கோயிலில் 5 மணி நேரம் தங்கி அகிலாண்டேஸ்வரியின் மந்திரங்களை உச்சரித்து வந்தால் எடுத்த காரியம் வெற்றி அடையும் என்பது சித்தர்கள் வாக்கு.ப இங்கு ஒரு காலத்தில் 'தலை காணிக்கை' அளிக்கும் வழக்கம் உண்டு என்கின்றன கல்வெட்டுகள். தனக்காக அல்லது தனது மன்னருக்காக வேண்டிக் கொள்ளும் வீரன் ஒருவன், பலி பீடத்தின் முன் நின்று, தனது தலையை தானே வெட்டி சமர்ப்பிக்கும் சிற்பக் காட்சிகள் இங்கு காணப்படுகின்றன.
பஞ்சம் ஏற்படும்போது ஜம்புகேஸ்வரர் சந்நிதிக்கு முன் உள்ள நந்திதேவரை, தினமும் 12 குடம் வீதம் ஒரு மண்டலத்துக்கு நீரால் அபிஷேகித்தால் மழை பொழிந்து பஞ்சம் நீங்கும் என்பது நம்பிக்கை.
குழந்தை இல்லாதவர்கள் அகிலாண்டேஸ்வரியை வணங்கி நெய் காணிக்கை செலுத்த வேண்டும். அதை கோயில் அர்ச்சகர் மந்திரம் ஜபித்து அம்பிகை காலடியில் சமர்ப்பித்துத் தருவார். இந்த நெய்யை தொடர்ந்து 48 நாட்கள், இரவு படுக்கும் முன் உண்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வெள்ளியில் மயில் மற்றும் இடப வாகனங்கள், விமானங்கள், கேடயம், தங்கத் திருவாசி ஆகியவை இங்குண்டு.
இந்தத் திருக்கோயிலில் சுவாமியும் அம்பாளும் சேர்ந்தே தங்கரதத்தில் பவனி வருகின்றனர். மற்ற கோயில்களில் சுவாமி அல்லது அம்மன் மட்டுமே தனியே வருவர். தங்கத் தேரிலும் கோஷ்ட தேவதைகள் உண்டு என்பது விசேஷம். கட்டண மாக ரூ.1,600/-ஐ செலுத்தி தங்கத் தேரை இழுக்கலாம்.
இந்த ஆலயத்தில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை 'பண்டிதர்' எனும் அடைமொழியுடன் அழைப்பர்.
இந்தத் திருக்கோயிலில் காலை 6:00 முதல் பிற்பகல் 1:00 மணி வரையிலும், மாலை 3:00 முதல் இரவு 9:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேஷ காலங்களில் காலை 6:00 முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து நடை திறக்கப்பட்டிருக்கும்.
நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடை பெறும் இந்தக் கோயிலின் உச்சிகால பூஜை சிறப்பானது.அப்போது, கோயில் அர்ச்சகர் அம்பிகை சந்நிதியில் இருந்து ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியாகவே தன்னை பாவித்து புடவை தரித்து, முடி சூடி, பூஜை பொருட்களுடன் மேள- தாளங்கள் முழங்க 3-ஆம் பிராகாரம் வழியே வலம் வந்து சுவாமி சந்நிதிக்குச் சென்று அபிஷேக ஆராதனை, கோ பூஜை மற்றும் இதர நித்ய காமியங்களைச் செய்கிறார். இதன் தாத்பர்யம் அம்பாளே, சர்வேசுவரனை பூஜிப்பது என்பதாம். அந்தந்த மாதங்களுக்குரிய பழங்கள் படைத்து வழிபடுவது இந்தத் தலத்தின் சிறப்பு.
இங்கு, வைகாசி மாதத்தில்- வசந்த விழா (10 நாட்கள்); ஆடி- பூர விழா, தெப்பத் திருவிழா (12 நாட்கள்); புரட்டாசி- நவராத்திரி விழா(10 நாட்களும்); தை- தெப்பத் திருவிழா (12 நாட்கள்) பங்குனி- பிரமோற்சவம் (40 நாட்கள்) மாசி- தேர்த் திருவிழா ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன.
இவற்றுள், மாசி மாதம்- மிருகசீரிட நட்சத்திரத்தன்று கொடியேறி... பங்குனி மாதம்- சித்திரை நட்சத்திரம் வரை 40 நாட்கள் நடைபெறும் பஞ்சப் பிராகார திரு விழா பிரசித்தி பெற்றது.
பிரம்மதேவன், தான் படைத்த திலோத்தமையின் பேரழகில் மயங்கினான். 'தான் அவளுக்கு தந்தை!' என்பதையும் மறந்து அவள் மீது மோகம் கொண்டான். இதன் விளைவு விபரீதமாகும் என்பதை உணர்ந்த தேவர்கள் பிரம்மதேவரை தடுத்து, சுயநிலை உணரச் செய்தனர்.தவறுணர்ந்த பிரம்மன், பாவத்துக்குப் பரிகாரமாக பல தலங்களுக்கும் சென்று சிவவழிபாடு செய்தார். அப்படி அவர் திருவானைக்காவல் வந்து வழிபடும்போது, சிவ பெருமான் பெண்ணாகவும்; அம்பிகை ஆணாகவும் காட்சி தந்தனர். அவர்கள் இருவரும் அம்மை-அப்பனே என்றுணர்ந்த பிரம்ம தேவன் அவர்களை வணங்கி வழிபட்டு அருள் பெற்றான். மேலும் தனது விருப்பப்படி இந்தத் தலத்தில் உற்சவம் நடத்தவும் அனுமதி வேண்டிப் பெற்றான்.
அதன்படி கொண்டாடப்படுவதே பஞ்ச பிராகார திருவிழா. பங்குனி மாத பஞ்ச பிராகார உற்சவத்தன்று இரவு சுவாமி- அம்பிகையாகவும்; அம்பிகை- ஈஸ்வரனாகவும் காட்சி தரும் வைபவம் நிகழும். இருவரும் ஐந்து சுற்றுகளிலும் வலம் வருவர்.
இந்தக் கோயிலில் இருந்த மரக்கால் (அளவு)... இறைவனின் பெயரால், 'திருவெண்ணாவல் தேவன் கால்' என அழைக்கப்பட்டதாம்.
கோயிலின் கிழக்கில். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நெல் சேமிப்புக் களஞ்சியம் ஒன்று உள்ளது.
ஜம்புகேஸ்வரர் ஆலயத்துக்குப் பின்புறம் பழைய அம்மன் ஆலயம் உள்ளது. அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஜம்புகேஸ்வரர் உள்ளனர். இங்குள்ள குபேர லிங்கம் பிரசித்தி பெற்றவர்.
ஸ்ரீலோபாமுத்ரா சமேத ஸ்ரீஅகஸ்திய முனிவர் தம்பதிகள், தீர்த்தம் நிறுவி, மன நிறைவுடன் செய்த சிவசக்தி பூஜைக்காக இன்றும் ஆதி ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் மூலஸ்தானத்தில் நமக்கெல்லாம் கௌரிசங்கர் ரூபமாக கல்யாண காட்சி தருகிறார்.
இந்தக் கோயிலுக்கு வள்ளல் பச்சையப்பர் அளித்த நிவந்தங்கள் பற்றிய தகவல்கள் பொறித்த கல்வெட்டு ஒன்று கோயிலுக்கு வெளியே ராஜ கோபுரத்தையட்டி நடப்பட்டுள்ளது. இதைப் பாதுகாப்பது அவசியம்.
சோழ பரம்பரையினர் தங்களிடம் உள்ளவற்றை சிவார்ப்பணமாக அளித்து, 'சிவபாத சேகரர்'களாக வாழ்பவர்கள். இந்த வழக்கத்துக்கு மாறாக சோழ அரசன் ஒருவன் விலையுயர்ந்த முத்து மாலையை சிவார்ப்பணம் செய்யாமல், மனைவிக்கு அணிவித்து மகிழ்ந்தான்.
ஒரு நாள் அரசி காவிரியில் நீராடும் போது, முத்துமாலை ஆற்றுக்குள் விழுந்து விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. இரண்டொரு நாட்கள் கழித்து அரசனும், அரசியும் உச்சிகால வழிபாட்டுக்காக ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். திருமஞ்சன நீராட்டின்போது, குடத்து நீரிலிருந்த முத்து மாலை சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. இதைக் கண்டு மெய்சிலிர்த்த மன்னன், தனது பிழை பொறுக்க வேண்டியதுடன் முத்துமாலையை இறைவனுக்கே காணிக்கையாக்கினான்.
இதை ஆரம் நீரோடேந்தினான் ஆனைக்காவில் அண்ணலே - என்று மூன்றாந் திருமுறை, 7-ஆம் பாடலில் விளக்குகிறார் திருஞானசம்பந்தர்.
ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் மடைப்பள்ளியில் பணி புரிந்தவர் வரதன் என்ற அன்பர். இவர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோயிலில் கணிகையாக பணி செய்த நாட்டியப் பெண்ணை நேசித்து மணந்தார்.
இருவரும் ஆலயப் பணிகளில் ஈடுபட்டனர். ஒரு நாள் வரதனின் மனைவி, சுவாமி சந்நிதியில் அர்த்த ஜாமம் வரை நடனமாட வேண்டி இருந்தது. அதுவரை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சந்நிதி மண்டபத்தில் காத்திருக்குமாறு கணவனிடம் வேண்டினாள். அதன்படி மண்டபத்தில் அமர்ந்த வரதன், களைப்பு மிகுதியால் கண்ணயர்ந்தான். அதே மண்டபத்தில் பண்டிதர் ஒருவர் ஞானவாணியை வேண்டி தவம் இருந்தார். அவருக்கு அருள் புரிய திருவுளம் கொண்ட ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சிறுமி வடிவில் வாயில் தாம்பூலத்தைக் குதப்பியபடி அங்கு வந்தாள். பண்டிதரிடம் சென்றவள், தன் வாயில் இருந்த தாம்பூலத்தை எடுத்து அவருக்குத் தருவதற்காக வாயை திறக்கச் சொன்னாள். வந்திருப்பது அம்பாள் என்பதை அறியாத அந்த பண்டிதர், அவளை திட்டி அனுப்பி விட்டார்.
பிறகு வரதனை நெருங்கினாள். அவளது காற்சிலம்பு ஒலி கேட்டு கண் விழித்தான் வரதன். அவன் வாயைத் திறக்கச் சொல்லி தாம்பூலம் தந்தாள் அன்னை. அதை ஏற்ற வரதன் அம்பிகையின் அருளால் கவிபாடும் திறன் பெற்று, கார் மேகமாக கவி பொழியும் காள மேகப் புலவரானார். இவர், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியையும், ஜம்புநாதரையும் பலவாறு போற்றிப் பாடினார். அகிலாண்டேஸ்வரியையே சரஸ்வதியாக பாவித்து 'சரஸ்வதி மாலை' எனும் நூலையும் இயற்றினார்.
திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த விஜயரங்க சொக்க நாத நாயக்கர் ஆட்சியின்போது நிகழ்ந்த சம்பவம்: அப்போது அமைச்சராக இருந்தவர் தாயுமானவ சுவாமிகள். ஒரு முறை விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றை தாயுமானவருக்குப் பரிசளித்தார் மன்னர். அதை பெற்றுக் கொண்ட தாயுமானவ சுவாமிகள், அரண்மனை வாயிலில் பிச்சைக்காரப் பெண் ஒருத்தி குளிர் தாங்காது நடுங்குவது கண்டு சால்வையை அவளிடம் கொடுத்தார். அரசருக்கு கடுங்கோபம். எனினும் தாயுமானவரை ஒன்றும் கேட்கவில்லை. மறு நாள் ஆனைக்கா கோயிலுக்கு மனைவியுடன் சென்றார் அரசர். அங்கு, தாயுமானவருக்கு தான் அளித்த சால்வை அம்பாளின் மேல் இருந்ததைக் கண்டு வியந்தார். அம்பாள் அகிலாண்ட நாயகியே பிச்சைக்காரியாக வந்ததை உணர்ந்து தாயுமானவரிடம் சென்று மன்னிக்க வேண்டினார்.

Comments