அனுமன் பிறந்த அஞ்சனை கிராமம்!


ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து வடகிழக்கில் சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது அஞ்சன் கிராம் (அஞ்சனை கிராமம்). ஊரைச் சுற்றி ஓடும் கட்வா நதியை, அனுமனின் அன்னையின் பெயரால் அஞ்சனை ஆறு என்றே அழைக்கின்றனர். ஆம், அஞ்சனாதேவி வாழ்ந்த இடம் இது என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!
இங்கே உள்ள குகைக்குள் (அஞ்சனை குகை என்கிறார்கள்), மடியில் குழந்தை அனுமனுடன் திகழும் அஞ்சனா தேவியின் புராதன சிலையை தரிசிக்க முடிகிறது. இதை 'பிராசீன் மூர்த்தி' என்கின்றனர். இந்தக் குகைக் கோயிலைப் புனரமைத்து... ஆறு தூண்கள், சுற்றிலும் இரும்புக் கிராதிகள் மற்றும் கான்கிரீட் கட்டடமாக கோயில் வளாகம் அமைத்து விரிவுபடுத்தியிருக்கிறார்கள். வட இந்திய பாணியிலான கருவறை கோபுரமும், கோயில் முகப்பில்- மூங்கில் கொம்பில் பட்டொளி வீசிப் பறக்கும் அனுமந்த கொடியும் மிக அழகு!
ஐந்து படிகளைக் கடந்து சென்று அஞ்சனா தேவியின் சந்நிதானத்தை அடையலாம். மடியில் அனுமனுடன் திகழும் அஞ்சனையின் புதிய பளிங்குச் சிலையையும் இங்கே தரிசிக்கலாம். இடப்புறம்- இடது கையில் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் 'பஜரங் பலி'யின் சிறிய விக்கிரகம். வலது கோடியில் அஞ்சனாதேவியின் புராதன விக்கிரகம் உள்ளது. பாலகன் அனுமனின் காதில் திகழும் குண்டலங்கள் நம் கருத்தைக் கவர்கின்றன.
வாலி, கிஷ்கிந்தாவின் இளவரசனாக இருந்த காலம். அஞ்சனையின் கருவில் உதிக்கப் போகும் அனுமனும் தனது மரணத்துக்குக் காரணமாகப் போகிறான் என்பதை ஜோதிடர்கள் மூலம் அறிந்தான் வாலி. கருவிலேயே அனுமனை அழிக்க திட்டமிட்டான். தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, வெள்ளீயம் ஆகிய உலோகக் கலவையால் அஸ்திரம் ஒன்றை தயாரித்தான். அஞ்சனை தூங்கும் நேரத்தில், அவள் மீது அஸ்திரத்தை ஏவினான். ஆனால், ஆஞ்சநேயன் ருத்ராம்சம் அல்லவா? சிவனருளால் அந்த அஸ்திரம் உருகி, குண்டலங்களாக மாறின; கருவிலேயே அனுமனுக்கு வெற்றிப் பரிசாக அமைந்தன என்று புராணங்கள் விவரிக்கின்றன.
மனம் சிலிர்க்க வாயு புத்திரனை வழிபடுகிறோம். இந்த அஞ்சனாதேவி பீடத்தின் கீழே உள்ள கல்வெட்டு அஞ்சனையின் நினைவாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டதை அறிவிக்கிறது. வேறு எந்த சிற்ப வேலைப்பாடுகளையும் இங்கே காண முடியவில்லை.
பிராகாரத்தை வலம் வந்து வெளியே வந்தால், அருகில் ஓடு வேயப்பட்ட சிறிய அறையில் சக்ரதாரியாகக் காட்சி தருகிறார் மகாவிஷ்ணு. தவிர வெட்டவெளியில் அருளும் ஆகாச லிங்கத்தையும் தரிசிக்கலாம்; எதிரில் நந்திதேவர்!
வைகாசி பௌர்ணமியின்போது அனுமன் ஜயந்தியும், ராமநவமி உற்சவங்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியின்போது இங்கே கிடைத்த பல அரிய பொருட்கள், பாட்னா மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், அஞ்சனை இங்கு வசித்ததற்கான சான்றுகள் உள்ளன என்பதை அறியமுடிகிறது!

Comments