முதற்கடவுள் உணர்த்திய பாடம்

வெளிநாட்டவர் ஒருவர், நம் நாட்டிற்கு வந்தபோது, கோயில்களில் வலம் வரும் பக்தர்களைக் கண்டார்.
வேறு வேலை எதுவும் இல்லாமல் அவர்கள் அப்படிச் சுற்றிக் கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. தமது  சந்தேகத்தை, சுவாமிஜி ஒருவரிடம் கேட்டார்.

“மனிதர்களின் மனம் இயந்திரத்தனமானது. அதனை அடக்குவது சுலபம் அல்ல. இயந்திரத்தை இயந்திரத்தனமாக  இயக்குவதுதான் முறை. அப்படி மனதை இயந்திரத்தனமாக இயக்கும் வழிதான் வலம் வருவது. அதாவது, ஓர்  இயந்திரம் எப்படி எதைப்பற்றியும் சிந்திக்காமல், செயல்படுவதை மட்டுமே செய்கிறதோ, அப்படி இறைவனை வலம்  வரும்போது வேறு எந்த சிந்தனையும் எழாது. அதனால் மனம் ஒருமைப்படும். அதுவே ஆரோக்கியத்திற்கும்  ஆனந்தத்திற்கும் வழியாக அமையும்’’ என்றார் சுவாமிஜி.

நம் மனதில் எத்தனையோ தடைகள் இருக்கின்றன. அவையே நம் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. கோயிலை  வலம் வரும்போது அந்தத் தடைகள் தகர்ந்து அவையே படிக்கற்களாகும் என்கின்றன பக்தி நூல்கள். ஆலய வலம்  வருவதில் பல வகைகள் உண்டு. அங்கப் பிரதட்சணமும், அடிப் பிரதட்சணமும் முக்கியமானவை. சோம சூக்தப்  பிரதட்சணம் பிரதோஷ காலத்தில் வருவது.

எந்தவகையான பிரதட்சணமாக இருந்தாலும் அவசர அவசரமாக ஓடுவதுபோல் இல்லாமல், மெதுவாகவே வலம்  வரவேண்டும். தண்ணீர்க் குடத்தினை தலையில் சுமந்து நடப்பதுபோலவும், நிறைமாத கர்ப்பிணி போன்றும் மெதுவாக  நடப்பதே சிறப்பானது.

வலம் வரும்போது இறைநாமம் சொல்வதும், இறை துதிகளைப் பாடுவதும் நல்லது. மௌனமாக வலம் வருவதும்  சிறப்பானதே. பிறருடன் பேசியபடியே வருவதோ, கண்களை அலைபாய விட்டவாறே நடப்பதோ கூடாது. ஒரு மைப்பட்ட மனதுடன் கோயிலை வலம் வருவதால் கோடானகோடி ஆண்டுகள் தவம்புரிந்த பலன் கிடைக்கும்.  வலம் வருவதன் பெருமையை, பெற்றோரை பிரதட்சணம் செய்து  உலகிற்கு முதலில் உணர்த்தியவர் பிள்ளையாரே.

கோயிலை வலம் வர எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பலஜன்ம பாவங்களைப் போக்குவதாக பூஜா விதிகள்  கூறுகின்றன.

முதற்கடவுளே உணர்த்திய பாடத்தைக் கடைப்பிடித்து நீங்களும் முழுமையான நன்மைகளைப் பெறலாமே!

Comments