அருள்மிகு சோழீஸ்வரர்

தேனியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது பெரியகுளம். இங்குள்ள ஸ்ரீபாலசுப்ரமணியர் திருக்கோயில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். குழந்தை வரம் தரும் தெய்வமாக அருள்மிகு சோழீஸ்வரர் அருள்பாலிப்பது இந்த ஆலயத்தில்தான்.
முற்காலத்தில் குளந்தை மாநகர் எனப்பட்ட இந்தப் பகுதி, ராஜேந்திர சோழனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வந்தான் இந்த மன்னன். இந்த நிலையில், இமயத்தில் இருந்து ஜெயதேவ மகரிஷி வந்திருப்பதாகவும், அவரின் ஆசியால் பலரது இன்னல்கள் நீங்கியதாகவும் அறிந்தான் மன்னன்.
உடனே பரிவாரங்களுடன் சென்று, ஜெயதேவ மகரிஷியை தரிசித்து வணங்கி, தனது குறை தீர வழி கேட்டான் மன்னன். ''ஆற்றங்கரையில் ஆண் மருது, பெண் மருது என இரண்டு மருத மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. அந்த விருட்சங்களையும் அவற்றின் அடியில் எழுந்தருளி இருக்கும் ஈஸ்வரனையும் 48 நாட்கள் வலம் வந்து வழிபடு... உனது குறை தீரும்'' என்று அருளினார் மகரிஷி. அதன்படியே வழிபட்ட மன்னன், சிவனருளால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கப் பெற்றான். ராஜேந்திர சோழனுக்கு அருளியதால் இந்த ஈஸ்வரன், 'ராஜேந்திர சோழீஸ்வரர்' என்று திருநாமம் கொண்டார். 'காசியை அடுத்து, ஆண்-பெண் மருத மரங்கள் அமைந்திருப்பது இந்தத் தலத்தில் மட்டுமே' என்கிறார்கள்.

கார்த்திகை சோமவார நாட்களில் சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்துக்குப் பிறகு சர்வாலங்கார நாயகராகக் காட்சி தரும் இறைவனை தரிசிக்க கண்ணிரண்டு போதாது. இந்த தினங்களில் ஸ்ரீசோழீஸ்வரரை வழிபடுவோருக்கு நினைத்த காரியம் நிறைவேறும்; புத்திர பாக்கியம் உண்டாகும்; மனதில் நீங்காது இருந்த சங்கடங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிள்ளை வரம் வேண்டுவோர், வராக நதிக் கரையில் அமைந்துள்ள மருத மரங்களை வலம் வந்து வழிபடுகின்றனர். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற இந்தத் தலத்தில், ஸ்ரீபாலசுப்ரமணியரும் வரப் பிரசாதியாகத் திகழ்கிறார். மூன்று கொடிமரங்கள் அமைந்திருப்பது இந்தத் தலத்தின் சிறப்பம்சம்.

Comments