காசியில் பாதி கர்நாடகாவில் மீதி!

நேரம்: சூரியன் சுறுசுறுப்பு அடையாத காலையின் தொடக்கம்.
இடம்: பெங்களூரில் இருந்து 374 கி.மீ.யில் உள்ள பனவாசி எனும் ஊரில் இருக்கிற மதுகேஸ்வரர் எனும் சிவாலம்.
தேன்வண்ண சிவனை தரிசித்து அம்பிகையை ஆராதித்துவிட்டு ஆலயத்தை வலம் வந்து கொண்டிருந்தார்கள் சில பக்தர்கள். அவர்கள் அனைவருமே வேறு ஊரில் இருந்து வந்தவர்கள் என்பது பார்த்ததுமே தெரிந்தது.
வலம் வந்தவர்கள் ஓர் இடத்தில் இருந்த விநாயகர் சிலை முன் நின்றார்கள். பார்த்தார்கள். அடுத்த கணம்.
கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் பயம், கொஞ்சம் சந்தேகம், கொஞ்சம் நடுக்கம். கடவுளுக்கே இந்த நிலைமை என்ற ஆதங்கம். இப்படி எல்லாமே ஒரு சேர எழுந்தது அந்தப் பிள்ளையாரைப் பார்த்தவர்களுக்கு.
“அந்நியர் யாரோ ஒரே வெட்டில் இரண்டு துண்டாகப் போட்டு ஒரு பாதியை மட்டும் எடுத்து சுவரில் செருகி வைத்து விட்டார்களோ? அந்நியப்படை எடுப்பின் அவலத்திற்கு சாட்சியோ?’ இப்படியெல்லாமும் தோன்றியது.
காரணம், நெடுக்குவாட்டில் வெட்டுப் பட்டதில் ஒரு துண்டை மட்டும் எடுத்து மாடத்தில் பொருத்தி வைத்தது போல் பாதியாகக் காட்டியளித்தது அந்தப் பிள்ளையாரின் வடிவம்.
பதற்றமும் படபடப்பும் தொற்றிக் கொள்ள, அடுத்து இருந்த சன்னதிகள் எதன் முன்னும் நிற்காமல் வேகவேகமாக வந்து அர்ச்சகர் முன் நின்றார்கள்.
“ஏன் இப்படி மூச்சு இரைக்குது? எதனால படபடப்பு?’ என்று கேட்டார் அர்ச்சகர்.
“பிராகாரத்துல ஒரு பிள்ளையார் சிலையைப் பார்த்தோம்... அப்படியே குறுக்கா வெட்டினமாதிரி...!’
“ஓ அர்த்த கணபதியைச் சொல்றீர்களா? அவர் தானாகவே பாதியா வெட்டுண்டவர்...!’ அர்ச்சகர் சொல்ல, அவர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்தது.
“அவரே பாதி பாதியா ஆனாரா? அது ஏன்?’
அவர்கள் கேள்விக்கு பதிலாக அந்த விநாயகருக்கான தல புராணத்தைச் சொல்ல ஆரம்பித்தார் அர்ச்சகர்.
“ஆதியில காசியில முழுவடிவமா இருந்த விநாயகர் இவர். இங்கே மதுகேஸ்வரருக்கு கோயில் அமைக்கப்பட்டபோது, காசியில இருந்துதான் கல் எடுத்து வரப்பட்டதாகச் சொல்றாங்க. பொன்வண்ணத்துல இருந்த இவர் காலத்துக்கு ஏற்ற மாறுதல்கள் ஏற்பட்டு இப்போ தேன் நிறத்துல இருக்கார்னு சொல்லப்படுது.
இங்கே சிவாலயப் பணிகள் முழுமையடைஞ்ச சமயத்துல இது காசிக்கு நிகரான பெருமை உள்ள தலம்னு தெரிஞ்சுதாம் விநாயகருக்கு. கூடவே ஒரு குழப்பமும் ஏற்பட்டுச்சாம்.
காசியில இருக்கறதா? அல்லது இந்த கர்நாடகாவுல இருக்கறதா? இதுதான் கணபதிக்கு வந்த குழப்பம். ரொம்ப யோசித்தும் எந்த முடிவுக்கு வர இயலாமப் போனதால, விஸ்வநாதர் தலத்துல பாதி, மதுகேஸ்வரர் கோயில்ல மீதின்னு இரு பாதியாக இருக்கறதுனு ஒரு தீர்மானம் எடுத்தாராம். இருபாதியா உடையறதுன்னு இதுக்கு அர்த்தம் இல்லை. தன்னோட ம்சத்தை இரண்டாக்கி ஒரு வடிவாக இங்கேயும் மற்றவடிவாக காசியிலும் இருக்கறதுன்னு அர்த்தம்.
இந்தத் தீர்மானத்தை கணபதி இந்தத் திருத்தலத்துலதான் எடுத்தாராம். அதை உண்ர்த்தற விதமாத்தான் இங்கே விநாயகரோட திருவடிவை அமைக்கும்போதே இப்படிப் பாதியாக அமைஞ்சாராம்!
அர்த்தம்னா பாதின்னு ஒரு அர்த்தம் உண்டு. அதனால அர்த்த விநாயகர்னு சொல்வாங்க. அதே சமயம் வேதத்தின் அர்த்தம் இவரதான் அதனால இந்தப் பெயர் வந்திச்சுன்னும், காசிக்கு நிகரான தலம் இது அப்படிங்கற அர்த்தத்தை, தான் பாதிவடிவாக இருந்து உணர்த்தறதால இப்படி ஒரு பெயர் வந்ததுன்னும் செவிவழியாகக் கூறப்பட்டிருக்கு!’
சொன்ன அர்ச்சகர், பக்தர்களோடு அந்த சன்னதிக்குச் சென்று அர்த்த விநாயகருக்கு தீப ஆராதனை செய்ய, பதட்டம், பயம் எதுவும் இல்லாமல் பக்தியோடு அந்த தும்பிக்கையானைத் துதித்தார்கள் பக்தர்கள்.
காசியில் பதி, பனவாசியில் மீதி என்று காட்சிதரும் அர்த்த விநாகரை தரிசிக்க ஆசையா? அப்புறம் என்ன தாமதம் உடனே புறப்படுங்க!

Comments