நெஞ்சுருகும் நேர்த்திக் கடன்!

கந்தனுக்கு அரோகரா! “பால் மணக்குது பழம் மணக்குது’ என்று தொடங்கும் பழநி முருகப் பெருமான் குறித்த ஒரு பாடலில் கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரரான பெங்களூரு ரமணியம்மாள் காவடியின் வகையை வரிசைப்படுத்துவார். உணர்ச்சிவேகமாகச் செல்லும் இந்தப் பாடலைக் கேட்டாலே நம்மை அறியாமல் ஆடத் தோன்றும்.
“தேன் இருக்குது... தினை இருக்குது தென்பழநியிலே... தெருவைச் சுற்றிக் காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்...’
(இதன் பிறகு பாட்டில் ஒரு வேகம் வந்து விடும்)
பால்காவடி பன்னீர்காவடி புஷ்பக் காவடியாம்.... சக்கரக்காவடி சந்தனக் காவடி சேவற்காவடியாம்... சர்ப்பக்காவடி மச்சக் காவடி புஷ்பக்காவடியாம்... மலையைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்!
வேலனுக்கு அரோகரா!
முருகனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா!
காவடியாட்டம் என்பது நம் நாடி நரம்புகளை எல்லாம் சுண்டி விட்டுப் பரவசத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்லும் தன்மை கொண்டது.
ஏதேனும் ஒரு கோயில் திருவிழாவின் போதே, நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக குழுவாகச் செல்லும்போதோ காவடி சுமந்து செல்லும் பக்தர்களைக் காணுகின்றபோது நம் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஆனந்தப் பரவசம் இருக்கின்றதே... ஆஹா... அதைச் சொல்லி மாளாது.
காவடி சுமந்து செல்லும்போது, “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... கந்தவேல் முருகனுக்கு அரோகரா’ என்று அவர்கள் அடித்தொண்டையில் இருந்து கிளம்புகிற ஆக்ரோஷ கோஷம், நம்மையும் பற்றிக் கொண்டு “அரோகரா’ சொல்ல வைக்கும்.
அலங்காரம் செய்ப்பட்ட சிறு சிறு காவடிகளை மஞ்சளாடை அணிந்து நண்டுகளும் சுண்டுகளும் சுமந்து செல்லும் அழகே தனி. முருகப் பெருமானே குழந்தை வடிவம் எடுத்து, இந்தக் காவடிகளை சுமந்து செல்கின்றானோ என்றெல்லாம் கூட சிந்திக்கத் தோன்றும்.
பெரும்பாலும் அனைவருமே மஞ்சள் வேட்டியும், அதே நிறத்தில் மேல்துண்டும் அணிந்திருப்பர். கழுத்தில் மலர் மாலையும், தேகத்தில் திருநீறும் பூசி இருப்பார்கள். விதவிதமான காவடிகளைச் சுமந்து செல்பவர்களுக்குத் துணையாக உற்றாரும் உறவினரும் “அரோகரா’ என பக்திபூர்வமாக முழங்கிக் கொண்டே சாலையில் ஓட்டமும் நடையுமாக - காவடி சுமந்து செல்பவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுத்துச் செல்வர்.
வெயில் கொளுத்தினாலும், தரை சுட்டெரித்தாலும் காவடி எடுத்துச் செல்பவர்கள் மற்றும் உடன் வருபவர்கள் - அனைவருமே வெறும் கால்களுடன் தான் நடப்பார்கள். நண்பகல் வேளையில், எல்லோரையும் சுட்டெரிக்கின்ற பகலவன், இவர்களின் பாதங்களுக்கு மட்டம் எப்படி பட்டு மெத்தையாக இரக்கின்றான்? எல்லாம் அந்த முருகப் பெருமானின் அருள்தான்! தன் பக்தர்களைக் காப்பதற்கு அவனுக்குச் சொல்லியா தர வேண்டும்!
சபரிமலைக்கு மாலை அணிந்த விரதம் இருந்து வரும் பக்தரை ஐயப்பன் சொரூபமாக எப்படிப் பார்க்கிறோமோ, அதுபோல் காவடி சுமந்து செல்லும் பக்தனும் முருகனின் அம்சமாகப் பார்க்கப் படுகின்றான். இத்தகையோரின் கால்களிலே குளிர்ந்த நீர் இறைப்பதும் விழுந்து வணங்குவதும் தமிழர் பண்பாடு.
இந்தக் காவடி பவனியின் போது வாத்தியக்காரர்கள் காவடிச் சிந்தை உருக்கமாக இசைக்க ஆரம்பித்தால் கேட்கவே வேண்டாம்... காவடி சுமந்து செல்பவரைக் கட்டுப்படுத்தவே முடியாது. தன்னை மறந்த, பரவசத்துடன் ஆடத் தொடங்கி விடுவார்.
காவடிச் சிந்துக்கும், ஸ்வாமி புறப்பாடு காலத்தில் வாசிக்கப்படும் மல்லாரிக்கும் மயங்காதவர்கள் இருக்கவே முடியாது.
முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக உலகெங்கும் உள்ள பக்தர்கள் காவடி எடுத்து, அவனருள் பெற்று வருகின்றனர். இந்தியா தவிர, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் காவடி நேர்த்திக் கடன் வெகுப் பிரபலம்.

முருகனுக்கு முதல் காவடி எடுத்தவன்!

தமிழகத்தைப் பொறுத்தவரை காவடி எடுத்து நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்கு எத்தனையோ முருகன் கோயில்கள் இருந்தாலும், பழநிதான் பிரசித்தம். இங்கு அனுதினமும் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிற திரளான பக்தர்களே இதற்கு சாட்சி.
பழநி திருத்தலத்தில் காவடி பிரசித்தமாக இருப்பதற்கு காரணம். முதல் முதலில் காவடி எடுத்த நிகழ்வு நடந்த திருத்தலம் இதுதான்.
முருகப் பெருமானுக்கு முதன் முதலில் காவடி எடுத்து வணங்கியவன் இடும்பன் என்கின்றன புராணங்கள். ஆனால், காவடியாக இடும்பன் சுமந்து வந்தது பாலையோ தேனையோ அல்ல. இரு மலைகளை!
பழநி மலையும் இடும்பன் மலையும் சிவகிரி, சக்திகிரி என்ற பெயர்களில் கயிலாயத்தில் இருந்தன. இந்த இரு மலைகளையும் அகத்தியருக்குக் கொடுத்தார் சிவபெருமான். “இவற்றைத் தென் பொதிகைக்கு சுமந்து வா’ என்று இடும்பனுக்கு உத்தரவிட்ட அகத்தியர் அஷ்ட நாகங்களைக் கயிறாகவும், பிரம்ம தேவனின் தண்டத்தைத் தடியாகவும் தந்தார். அஷ்ட நாகங்களைக் கயிராகப் பயன்படுத்தி இருமலைகளையும் பிரம்ம தண்டத்தில் கட்டி, (ஒரு காவடி போல்) தோளில் சுமந்தான் இடும்பன். முருகப் பெருமானது திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே சென்றான்.
பயண வழியில் ஓரிடத்தில் ஓய்வெடுப்பதற்காக இரு மலைகளையும் கீழே இறக்கி வைத்தான் இடும்பன். முருகன் கருணையினாலும் கனுக்ரஹத்தாலும் அந்த இரண்டு மலைகளும் அங்கேயே பொருந்திவிட்டன. ஆனால், “அகத்தியரின் ஆணைக்கு பங்கம் ஏற்பட்டு விட்டதே’ என்று இடும்பனுக்குக் கோபம் தலைதூக்கியது. இந்த இரு மலைகளும் இங்கே சட்டென்று நிலை கொள்ள என்ன காரணம்? என்று யோசித்தபடியே இடும்பன் அண்ணாந்து பார்த்தபோது சிவகிரியின் மீது முருகப் பெருமான் ஒரு சிறுவனாக - சிரித்த வண்ணம் காட்சி தந்தான்.
இரு மலைகளும் இங்கே நிலை கொள்ள இந்தச் சிறுவன்தானா (முருகன் என்பதை அவன் அப்போது அறியவில்லை) காரணம்? என்று வெகுண்ட இடும்பன், அவனுடன் போரிடத் துவங்கினான். போரின் இறுதியில் இடும்பன் அழிந்தான். இதனால் சோகமான இடும்பி (இடும்பனின் மனைவி), தன் கணவனை உயிர்ப்பித்துத் தருமாறு சிறுவனிடம் வேண்ட... இடும்பன் உயிர் பெற்றான்.
குழந்தையாக வந்து அருளாடல் நிகழ்த்தியது யார் என்பதைப் பிறகு புரிந்துகொண்ட இடும்பனும் இடும்பியும் அவனை வணங்கி நின்றனர். அப்போது இரு வரங்களை கேட்டுப் பெற்றான் இடும்பன். முதல் வரம் - பழநி மலைக் கோயிலின் துவக்கத்தில் தனக்கு ஒரு சன்னதி அமைய வேண்டும்; இரண்டாவது வரம் - இரு மலைகளைக் காவடி போல்தான் சுமந்து வநதது மாதிரி, காவடி எடுத்து வரும் பக்தரகளின் கோரிக்கைகளை முருகப் பெருமான் நிறைவேற்றி, அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்.
இரு வரங்களையும் கேட்ட முருகப் பெருமான், “அப்படியே ஆகட்டும்’ என அருளினார். எனவேதான், காவடிப் பிரார்த்தனைக்குப் பழநியில் பக்தியும் அதிகம்; சக்தியும் அதிகம்.
ஸ்ரீதண்டாயுதபாணி மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளைச் சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறான் இடும்பன்.
இடும்பனுக்கு பூஜை செய்த பின்பே மலைக் கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கிறது. காவடி சுமந்து செல்லும் பக்தர்கள் முதலில் இடும்பனது சன்னிதியில் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

Comments