அருள்மிகு வீரவரநாதஸ்வாமி ஆலயம்

காஞ்சி மாவட்டம்,மதுராந்தகம் வட்டத்தில் உள்ளது திருக்கண்ணார் என்ற அழகிய கிராமம்.தற்போது மருவி கிணார் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த ஊருக்கு மதுராந்தகத்திலிருந்து கருங்குழி வழியாக பஸ்ஸில் செல்லலாம்.மதுராந்தகத்திலிருந்து கைகோளர்ப்பேட்டை என்ற ஊர் வழியாகவும் செல்லலாம்.
தண்ணார் திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்

பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத

கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம்

நண்ணாவாகுந் நல்வினையாய நணுகும்மே

என்று இவ்வுரைப் போற்றிப் பாடியுள்ளார் திருஞானசம்பந்தர்.

இக்கிராமத்தில் அருள்மிகு வீரவரநாதஸ்வாமி ஆலயம் என்ற மிகப் பழைமைமிக்க திருக்கோயில் உள்ளது.

தலவரலாறு : கௌதம மகரிஷியின் பத்தினி அகலிகை. அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் நயவஞ்சமாக அவளை அடைந்தான். இதனை அறிந்த மகரிஷி கௌதமர் அகலிகையைக் கல்லாகுமாறு சபித்தார். இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் கண்களாகும்படி சபித்துவிட்டார். ‘அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண்ணோய்க்கும் பல் பொரி’ என்கிறது கலித்தொகை. இந்திரன் இந்த சாபத்தால் மிகவும் வருந்தினான்.
கல்லாகிப்போன அகலிகை ராமனின் திருபாதங்கள் பட்டு சாபம் நீங்கப் பெற்று எழுந்தாள்.

இந்திரன் வீரவநாதஸ்வாமியை வணங்கி கௌதமரின் சாபம் நீங்கப் பெற்று மீண்டும் புனிதம் பெற்றான்.

கௌதமரின் சாபத்தால் உடம்பெல்லாம் ‘கண்ணாக’ப் பெற்ற இந்திரனின் கடும் சாபம் நீங்கிய ஊரே ‘திருக்கண்ணார்’ என்று அழைக்கப்படலாயிற்று. இந்திரன் இத்தல இறைவனை வழிபட்டதை உறுதி செய்யும் வகையில் இக்கோயில் மூலவருக்கும் நந்தியெம்பெருமானுக்கும் இடையே ஐராவதத்தின்மீது அமர்ந்து சாப விமோசனம் பெற்ற இந்திரன் இத்தல இறைவனைத் தரிசித்து மகிழ்கிறான்.வேறு எந்தக் கோயிலிலும் நந்திக்கும், இறைவனுக்கும் இடையே எந்தச் சிலையும் குறுக்கிடாது.

கருவறையில் பல்லவர் கால புடைப்புச் சிற்பமாக சோமஸ்கந்தர் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோமஸ்கந்தர் மற்ற எல்லா கோயில் புடைப்புச் சிற்பங்களிலிருந்தும் வேறுபட்டு, கருவறைச் சுவர் முழுவதும் வியாபித்து நிற்கிறது.காலவெள்ளத்தில் இச்சிற்பம் மிகவும் தேய்ந்து விட்டது. ஒரு பெரிய ஆசனம். அதன்மீது சிவன். வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து, வஸ்திர யக்ஞோபவீதம், மகுடம், ஆடை, மகர குண்டலம், ஹாரம் ஆகியவை துலங்க, அருகில் உமையவள் ஒருக்களித்து வலது கால் தொங்க, இடது கால் மடக்கி ஆசனத்தில் ஊன்றிய பாவத்துடன் காட்சி தருகிறார்.

இத்திருத்தல அம்பிகையின் திருநாமம் அம்பாநாயகி.

கிணார் என்ற இத்திருத்தலத்திலும் பல்லவ மன்னன் வீரவர்மன் பெயரால் கோயிலெப்பி இறைவனுக்கு வீரவர்ம ஈஸ்வரர் என்று பெயரிட்டிருக்கலாம். காலப் போக்கில் இறைவன் வீரவரநாதராகிவிட்டார்.

இந்திரனை காப்பாற்றியருளியதால் இத்தல இறைவனை நேத்திர-புரீஸ்வரர் என்று அழைக்கின்றனர்.வீரவர்மநாதர் வீரவரநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

இக்கோயிலை நிர்மாணித்த வீரகூர்ச்சவர்மன் என்ற வீரவர்மன் ஆட்சிக்காலம் கி.பி.375 முதல் 400 வரை. காஞ்சியையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வசப்படுத்தியதன் நினைவாக வீரவர்ம ஈஸ்வரர் என்ற பெயரில் 1600ஆண்டுகளுக்குமுன் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

இக்கோயில் பிராகாரத்தில் விநாயகர், தென்முகக்கடவுள், திருமால், நான்முகன், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் உள்ளன.

இக்கோயிலில் தினமும் சிறப்பாக பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தில் சிறப்பு விழா,வீதி உலா,பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறு-கின்றன. பாடல்பெற்ற இத்திருத்தலத்தைப் பிறவியில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டும்.

Comments