எமனுக்குப் பிடித்த தீபாவளி!

'அஞ்ஞான இருள் அகற்றி, நம்முள் ஞான தீபம் ஏற்றும் தீபாவளித் திருநாள்... நமக்கு மட்டுமல்ல, எமதர்மனுக்கும் பிடித்த பண்டிகை!' எனப் போற்று கின்றன ஞான நூல்கள். காரணம் என்ன... விரிவாகத் தெரிந்து கொள்வோமா?!

வட இந்தியாவில், தீபாவளித் திருநாள் ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

திரயோதசி திருநாள்: தீபாவளிக்கு முதல் நாள்- திரயோதசி அன்று நம் இல்லங்களுக்கு திருமகள் வருவதாக ஐதீகம். அவளை, வரவேற்கும் விதமாக இல்லம் தோறும் தீபங்கள் ஏற்றி வழிபடுவர்.

இந்தத் திருநாளை ஒரிஸ்ஸாவில், 'தன திரயோ தசி'யாக அனுஷ்டிக்கிறார்கள். அன்று, தங்களது வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பர்.   மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மஹா ளய பட்ச அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில்   இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி வருபவர்கள், தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்கு திரும்புகின்றனர். அவர்களை வழியனுப் பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம்.சாஸ்திரங்களும், 'தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதி அன்று மாலை நேரத்தில் எம தீபம் ஏற்ற வேண்டும்!' என்கின்றன. எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள்... வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழி படலாம். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவானாம்; விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது; நோய்
நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்!

தீபாவளித் திருநாள் (தேய்பிறை சதுர்த்தசி): இந்த நாளில், வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகள் ஏற்றி வைத்து, அதிகாலை நீராடி, புத்தாடைகள் அணிந்து தங்கள் குல வழக்கப்படி பூஜைகள் செய்வர். சில இடங்களில் இந்த நாள், விரத    நாளாகவும் அனுஷ்டிக்கப்படும்.

3-ஆம் நாள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசரஸ் வதிதேவி மற்றும் ஸ்ரீமகாலட்சுமி ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதுடன், வணிகர்கள் புதுக் கணக்கும் எழுதுவர். சில இடங் களில், கேதார கௌரி விரதமும் லட்சுமி குபேர பூஜையும் நடை பெறுகிறது.
4-ஆம் நாள்: இந்திரன் பெய்வித்த பேய்மழையில் இருந்து கோகுலவாசிகளை, பகவான் கிருஷ்ணர் காப்பாற்றிய திருநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. சிலர் இந்த தினத்தை, புதுவருடப் பிறப்பாகக் கொண்டாடுவர்.

5-ஆம் நாள்: இந்த நாளையே (ஐப்பசி மாதம் வளர்பிறை துவிதியை), 'எம துவிதா'வாக வட மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். 'பால்பிஜி' என்றும், 'பையாதுஜ்' என்றும் போற்றப்படுகிறது இந்தத் திருநாள். மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
ஒரு முறை... ஐப்பசி மாத வளர் பிறை துவிதியை அன்று தன் சகோதரி 'எமி'யின் வீட்டுக்குச் சென்றார் எமதர்மன். அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை சூடி, திலகம் இட்டு அன்புடன் வரவேற்றாள் எமி. இருவரும், ஒருவருக்கு ஒருவர்... பரிசுகள், இனிப்புகள் வழங்கி தங்கள் பாசத்தைப் பகிர்ந்து கொண் டனர் அப்போது எமதர்மன், ''இந்த தினத்தில், தன் சகோதரியின் கைகளால்
திலகம் இட்டுக் கொள்பவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு எமவாதனை கிடையாது!'' என்று வரம் தந்தாராம். எனவே... எம துவிதியைத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள்! சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, 'எமனுக்குப் பிடித்த விழா' என்று புராணங்களும் போற்றுகின்றன!
ஆக, தீபாவளியை ஒட்டி வரும் எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய தினங்கள் தனக்கு உகந்தவை ஆதலால், தீபாவளிப் பண்டி கையை எமதர்மன் விரும்புவதாக ஆன் றோர்கள் கூறுவர்.


எண்ணெய் குளியல் எப்போது?
சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் எண்ணெய் ஸ்நானம் பண்ணக் கூடாது என்பது சாஸ்திர நியதி. ஆனால், 'தீபாவளி அன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்வதன் மூலம் தன் பிள்ளையான நரகனை நினைவுகூர வேண்டும்' என்று பகவானிடம் வேண்டினாள் பூமாதேவி.
அதுமட்டுமா? சாஸ்திரம் தவிர்க்கும் ஒரு காரியத்தைச் செய்யுமாறு சாதாரணமாக கூறினால், எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால், 'தீபாவளி திருநாளில் மட்டும்... எண்ணெயில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் வசிக்க வேண்டும்!' என்றும் வரம் வேண்டினாள் பூமித்தாய். பகவானும் அவ்வாறே அனுக்கிரகித்தார்.
எனவே தீபாவளி திருநாளில், அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம். அதாவது, சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் வரை உள்ள காலம். 6:00 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5:15-மணிக்கு நீராட வேண்டும்.

Comments