ஸ்ரீ குரு ராமதாசர்

திருமணம் ஆனால் இப்படியெல்லாம் மனைவி மூலம் ஆன்மீக வாழ்வுக்குச் சங்கடங்கள் வரும் என்று உணர்ந்து திருமணம் புரிந்துகொள்ளாமலே துறவியானவர்கள் உண்டு. திருமண தினத்தன்று ஓர் உத்வேகம் பெற்றுத் துறவு பூண்டவர்களும் கூட உண்டு. அப்படித் துறவு பூண்டான் பன்னிரண்டு வயதுச் சிறுவன் நாராயணன். 

நாராயணனுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி தான் மணமகள். எப்போதும் ராம பக்தியில் திளைத்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று முதலில் சரிவரப் புரியவில்லை. தன்னை வைத்துக் கொண்டு ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நினைத்தான்.

திருமணம் என்கிறார்கள். சடங்கு என்கிறார்கள். நாதஸ்வர இசை காற்றில் கலக்கிறது. மேளம் முழங்குகிறது. எல்லோரும் தங்கள் மேனியில் சந்தனம் தடவிக் கொள்கிறார்கள். திருமணத்தால் எனக்கு நல்லதா, கெட்டதா? மணவாழ்வில் இந்தப் பெண் என் ராமபக்திக்கு, அனுசரணையாக இருப்பாளா? இல்லை சராசரிப் பெண்களைப் போல் அலுத்துக் கொள்வாளா?

ராம பக்தி ஒன்றே லட்சியம் எனக் கொண்டிருக்கும் எனக்கு ஆஞ்சநேயர் அல்லவோ வழிகாட்டி? அவர் திருமணமே புரிந்துகொள்ளாமல் அல்லவா ராமபக்தியில் ஈடுபட்டார்? அனுமானுக்கு இணையான ராம பக்தனாக ஆகவேண்டும் என்பதுதானே என் லட்சியம்? அப்படியிருக்கும்போது நான் திருமண பந்தத்திற்கு என்னை உட்படுத்திக் கொள்வது சரியா? குழப்பத்தில் ஆழ்ந்தது இறையுணர்வில் தோய்ந்த அந்தச் சிறுவனின் மனம்.

புரோகிதர் மந்திரங்களைச் சொல்லச் சொல்ல,அவற்றை உணர்வில்லாமலே திருப்பிச் சொல்லி, அக்னியில் நெய்யை வார்த்துக் கொண்டிருந்தது அவன் வலக்கரம். உள்ளத்தில் இனம்தெரியாத ஆயாசம்.
மணமக்களிடையே ஒரு திரை தொங்கவிடப் பட்டது. அது அவர்கள் சம்பிரதாயம். இனி முக்கியமான மந்திரத்தைச் சொல்லித் தாலியைக் கட்ட வேண்டியது மட்டும்தான் பாக்கி. புரோகிதர் மந்திரங்களைச் சொல்லலானார். ‘சாவ்தான் சாவ்தான்’ என்று அந்த மந்திரங்கள் முடியும். ‘சாவ்தான்’ என்ற சொல்லுக்கு ஜாக்கிரதை என்று பொருள்.

அந்தச் சொல்லைக் கேட்ட நாராயணன், அதில் அனுமன் குரல் ஒலிப்பதாக உணர்ந்தான். ‘திருமண பந்தத்தில் சிக்காதே, ஜாக்கிரதை’ என்று ராம பக்தனான அனுமன் இன்னொரு ராம பக்தனான தனக்கு புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் மூலம் அறிவுறுத்துவதாகவே அவனுக்குத் தோன்றியது.

உடனே துள்ளிக் குதித்து ஒரே ஓட்டமாக மணமேடையை விட்டு ஓடத் தொடங்கினான்.‘இதென்ன! மாப்பிள்ளை திடீரென இந்த ஓட்டம் ஓடுகிறார்?எங்கள் சின்ன மாப்பிள்ளைக்கு என்னதான் ஆயிற்று?’ பெண்வீட்டார் மாப்பிள்ளையைத் துரத்திப் பிடிக்கப் பின்னால் விறுவிறுவென்று ஓடினார்கள். மாப்பிள்ளை வீட்டாரும் தங்கள் வீட்டுச் சிறுவனுக்குப் பித்துப் பிடித்துவிட்டதா என்ன என்று திகைத்துத் தாங்களும் ஒரே ஓட்டமாய்ப் பின்தொடர்ந்து ஓடினார்கள்.

அவர்கள் ஓடியது மாப்பிள்ளையைப் பிடிக்க. ஆனால் மாப்பிள்ளை ஓடியதோ முக்தியைப் பிடிக்க! எல்லா ஜீவன்களும் இறுதியில் அடைய வேண்டிய முக்தி என்ற லட்சியத்தைப் பிடிக்க ஓடுபவனை,சராசரி மனிதர்களால் எட்டிப் பிடிக்க முடியுமா என்ன? எட்ட முடியாத தூரத்திற்கு அந்தச் சிறுவன் ஓடியே போய்விட்டான்.

கோதாவரி நதியில் குதித்து நீந்திச் சென்று பஞ்சவடியை அடைந்தான். ஸ்ரீராமபிரான் வனவாச காலத்தில் தங்கியதாய்ச் சொல்லப்படும் அதே பஞ்சவடி. இங்கேயிருந்துதானே சீதை பொன்மானுக்கு ஆசைப்பட்டாள்? இங்கேயிருந்துதானே ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான்?என் அன்னை சீதாதேவிக்கே மானைப் பார்த்து ஆசை வருமானால் நான் மணம்புரிந்து கொள்ளவிருந்த சராசரிப் பெண்ணுக்குப் பலவித ஆசைகள் வராதா என்ன? எல்லாவற்றையும் ஓயாது உழைத்து உழைத்துப் பணம் சேர்த்து நிறைவேற்றிக் கொண்டிருந்தால் என் ராமபக்தி என்னாவது? திருமண பந்தத்திலிருந்து தப்பித்தது சரியான முடிவுதான்.

நினைத்தவாறே சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே ஓர் அழகான மாருதி ஆலயம் தென்பட்டது. உள்ளே சென்றான். `ஸ்ரீராமா! மாருதிக்குக் காட்சி தந்த பிரபுவே!எனக்கு இல்வாழ்க்கை வேண்டாம்.உன் சரணாரவிந்தங்கள்தான் வேண்டும்!` என்று கண்மூடிப் பிரார்த்தித்தான். பின்னாளில் எந்த ராமநாமம் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு மகாத்மா காந்தி மூலம் பாரதத்திற்கு சுதந்திரத்தையே வாங்கித் தரப் போகிறதோ அந்த ராமநாமத்தை மறுபடி மறுபடி சொல்லலானான். நெடுநேரம் கழித்து கண்ணில் பக்திக் கண்ணீர் வழிந்தோட... கண்ணைத் திறந்தான். 

என்ன ஆச்சரியம்! முகத்தில் கனிவு பொங்க நீலவண்ண மேனியுடன் அருளே வடிவாக அவன் முன் உண்மையிலேயே ராமபிரான் நின்று கொண்டிருந்தார். அவன் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தார் அவர். பின் விக்கிரகத்தில் கலந்து மறைந்துவிட்டார்.

ராமதரிசனம் கிடைத்த அன்று முதல், மாபெரும் ராமபக்தனாக மாறி, வாழ்க்கை முழுவதையும் ராமனுக்கே அர்ப்பணித்தான் நாராயணன். அந்த மகானை அவன் என்று இனிச் சொல்லலாமோ? அவர்தான் இந்திய சரித்திரத்தில் பெரும் சாதனை புரிந்து இந்து மதத்திற்குப் புத்துயிர் ஊட்டிய ஒரு மாமன்னனின் குருவாக விளங்கிய பெருமைக்குரியவர்.

அவரது சீடனான அகில இந்தியப் புகழ்பெற்ற அந்த மாமன்னன் சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து வழிபட்டு காளியின் அருள்பெற்ற பெருமை உடையவன். தமிழ்த் திரையுலகில் ஒரு மாபெரும் நடிகர் அந்த மன்னனைப் போல் நடித்துத்தான் `பெயர்` பெற்றார். அந்த மன்னன் யார்? திருமணத்தன்று துறவு பூண்ட அவரது குருநாதர் யார்?


.

Comments