நீங்கள் குபேரன் ஆகவேண்டுமா?

நம் அனைவருக்குமே எல்லா வளங்களும் பெற்ற நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆசை எல்லாம் உண்டு. அதற்காக பலவிதமான பூஜைகள், வழிபாடுகள், ஹோமங்கள் செய்கிறோம்.
இவ்வாறு செல்வ வளம் வேண்டிச் செய்யப்படும் வழிபாடுகள் எல்லாம் மகாலட்சுமியை மையமாக வைத்தே இயங்குகின்றன. அவள் அருளைப் பெறுவதற்காக மக்கள் ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படித்தும், மகாலட்சுமி அஷ்டகத்தை பாராயணம் செய்தும், அவளது திவ்ய நாமாவளியைச் சொல்லி அர்ச்சனைகள் செய்தும் அவளது கருணையை வேண்டி நிற்கின்றனர்.
பரந்து விரிந்த நம் பாரத நாட்டில் ஜகத் ஜனனி என்று அழைக்கப்படும். செல்வ திருமகள் வழிபாடானது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஆனால் நம் எல்லா இதிகாசப் பராணங்களிலும் அன்னையின் பிறப்பைப் பற்றி ஒன்றுபோல பேசுகின்றன. அதாவது அன்னை மகாலட்சுமி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை அமுதம் நாடிக் கடைந்தபோது வெளி வந்ததாகக் கூறுகின்றன.
உலகம் தோன்றிய நாள் முதல் செல்வமும் இருந்திருக்கிறது. செல்வம் என்பது வெறும் பணம், பொருள் என்பது மட்டுமல்ல; நல்ல மனது, உடல் ஆரோக்கியம், நிம்மதி, நன்மக்கட்பேறு என 16 பேறுகளும் சேர்ந்ததுதான்! வெறுமே பொருளை மட்டுமே வேண்டி மகாலட்சுமியை துதிப்போர்க்கு அவள் அருள் கிட்டாது.
ஆதி காலம் தொட்டே மகாலட்சுமி இருந்திருக்கிறாள். பின்னர் எப்படி பாற்கடலில் இருந்து வெளி வந்தாள்? என்றால் அது ஒரு கதை.
லட்சுமி பிருகு முனிவரின் மகளாக பார்கவி என்ற பெயரில் சொர்க்கத்தில் இருந்தாள். ஒரு முறை துர்வாச முனிவர் திருமாலால் மகிமை பெற்ற பாரிஜாத மலரோடு தேவேந்திரனைக் காண வந்தார். அந்த மலரை அவனுக்கு அளிக்கவும் செய்தார். அதன் பெருமை உணராத இந்திரன், அம்மலரை தன் யானையிடம் கொடுக்க, அது காலால் நசுக்கி அழித்துவிட்டது. இதனால் கோபம் கொண்ட துர்வாசர், “இந்திரனிடமிருந்து லட்சுமி கடாட்சம் விலகட்டும்’ என்று சபித்துவிட்டார்.
லட்சுமியின் அருட்பார்வை நீங்கியதால் இந்திரன் எல்லாவற்றையும் இழந்து விட்டான். அந்நேரம் மகாலட்சுமி சொர்க்கத்தில் இருக்கப் பிடிக்காமல் பாற்கடலைத் தன் இருப்பிடமாகக் கொண்டாள். பின்னர் பாற்கடலைக் கடையும்போது சந்தினர், ஐராவதம், உச்சைஸ்வரவஸ் என்ற குதிரை, காமதேனு இவைகளுடன் பாற்கடலிலிருந்து தோன்றினாள். கையில் மாலையுடன் அவதரித்த லட்சுமி, எல்லாவற்றிலும் நிகரில்லாதவராக விளங்கிய மகாவிஷ்ணுவைத் தன் பதியாக வரித்தாள். அப்போது அவளுடன் அலட்சுமி எனப்படும் மூத்த தேவியும் தோன்றினாள். மூத்த தேவி எல்லா வகையிலும் லட்சுமிக்கு நேர்மாறான குணம் கொண்டவள்.
மகாவிஷ்ணு மகாலட்சுமி திருமணம் ஏற்பாடானது. ஆனால், அக்கா இருக்க தங்கையான எனக்குத் திருமணமா? என்று லட்சுமி கேட்டாள். அலட்சுமியை ஏற்க யாருமே முன்வரவில்லை. அந்த நேரத்தில் உலக நன்மையை உத்தேசித்து உத்தாலக முனிவர் மூத்த தேவியைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார். அவ்வாறே திருமணமும் நடந்தது. அதன் பின்னர் மகாவிஷ்ணு, மகாலட்சுமி தெய்வீகத் தம்பதிகளின் திருமணம் நடந்தது. அன்று முதல் மகாவிஷ்ணுவின் வல மார்பை தன் இருப்பிடமாகக் கொண்டாள் லட்சுமிதேவி.
திருமலைவையாவூரில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளின் இரு மார்புகளிலும் நிலவுகிறாள் லட்சுமி. அதனால் இங்கு வந்து வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யம் இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. திருப்பதியைப் போன்றே அமைக்கப்பட்டிருக்கும் இத்திருக்கோயில் சென்னையை அடுத்து செங்கல்பட்டு செல்லும் பாதையில் உள்ளது.
கார்த்திகை மாதம் நிறைந்த அமாவாசை நாளன்று பாற்கடலிலிருந்து லட்சுமி தோன்றினாள் எனப்புராணங்கள் கூறுகின்றன.
தேவி மகாத்மியத்தின் நடுப்பகுதி மகாலட்சுமியின் தோற்றம் பெருமை ஆகியவற்றை விளக்குகிறது.
பதினெட்டுக் கரங்களுடன் சிவந்த நிறத்தில் உடையணிந்து, அழகின் பிறப்பிடமாக ஞானத்தின் பிரதிநிதியாக அஷ்ட தச புஜ மகாலட்சுமியாகக் காட்சியளிக்கிறாள் அன்னை. ஒவ்வொரு கரமும் ஒரு பொருளைத் தாங்கி நிற்கிறது. இவளின் வாகனம் வெள்ளை ஆந்தை. அன்னை தாங்கி நிற்பவை வருமாறு:
1. ஜபமாலை, 2. கோடரி, 3. தண்டாயுதம், 4. அம்பு, 5. மின்னல், 6. தாமரை, 7. வில், 8. கலசம், 9. வளைதண்டம், 10. ஈட்டி, 11. வாள், 12. கேடயம், 13. சங்கு, 14. மணி, 15. மதுக்கிண்ணம், 16. திரிசூலம், 17. பாசக்கயிறு, 18. சுதர்சன சக்கரம்.
லட்சுமி என்ற சொல் லக்ஷ் என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இந்தச் சொல்லுக்கு நோக்கம், அடைதல், வழி எனப் பல பொருளுண்டு. அதே போல மகாலட்சுமியை வழிபடுவோரும் நல்ல நோக்கம், நன்னடத்தை, சோம்பலின்மை ஆகியவை உடையவர்களாக இருக்க வேண்டும். தன்னையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அத்தகையவர்களுக்கே இவளின் அருள் கிட்டும்.
மகாலட்சுமி பொதுவாக அஷ்ட லட்சுமி வடிவத்தில் வணங்கப்படுகிறாள். நிம்மதியான சந்தோஷமான வாழ்வு அமைய இவர்கள் அருள் தேவை. மகாலட்சுமியே தன்னை அஷ்ட சக்திகளாகப் பிரித்துக் கொண்டு அருள் பாலிக்கிறாள். அஷ்ட லட்சுமிகள் 1. ஆதி லட்சுமி, 2. தான்ய லட்சுமி, 3. தைர்ய லட்சுமி, 4. கஜ லட்சுமி, 5. சந்தான லட்சுமி, 6. விஜய லட்சுமி, 7. வித்யா லட்சுமி, 8. தனலட்சுமி. ஒவ்வொரு யுகத்திலும் அன்னை மகாலட்சுமி அஷ்ட லட்சுமி உருவம் தாங்குகிறாள். எனவே யுகங்களுக்கேற்ப இந்த அஷ்ட லட்சுமிகளின் பெயர்கள் மாறும் எனப் புராணங்கள் கூறுகின்றன.
லட்சுமிக்கு பல பெயர்கள் நிலவுகின்றன. தாமரையாள், அலைமகள், திருமகள், செந்திரு எனத் தமிழில் பெயர்கள் இருக்கின்றன என்றால் வடமொழியில் இவளுக்கு பெயர்கள் அநேகம்.
தமிழ்நாட்டில் லட்சுமி குபேர வழிபாடு பிரபலமாக விளங்குகிறது. அட்சய திரிதியை நாள் தங்கம் வாங்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அட்சய என்ற குறைவற்ற என்று பொருள். மகாபாரதத்தில் இந்த அட்சய திரிதியை நாளில்தான் கிருஷ்ணர் திரௌபதிக்கு குறையாத சேலை தந்தருளினார். அவர் சொன்ன வார்த்தை அட்சய. அதனால்தான் எடுக்க எடுக்கக் குறையாமல் புடவை வளர்ந்து கொண்டே போயிற்று.
மேற்கு வங்கத்தில் இந்த அட்சய திருதியை நாளை ஹல்கத்தா என்ற நாளாக லட்சுமி பூஜை செய்து கொண்டாடுகின்றனர். அன்று களிமண்ணால் செய்து லட்சுமி பொம்மைக்குப் பூஜைகள் செய்கிறார்கள். இந்நாளில் தான் அளப்பரிய செல்வத்துக்கு சொந்தக்காரனான குபேரன் தவமிருந்து மகாலட்சுமியிடமிருந்து நவ நிதிகளையும் பெற்றதாக லட்சுமி தந்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. கங்கை பூலோகத்துக்கு வந்த நாளும் இதுவே.
பொதுவாகவே நம் நாட்டில் வடபகுதிகளில் லட்சுமியோடு சேர்த்து பிள்ளையாரையும் வணங்குகிறார்கள். கணபதியின் தாள் பணிவது நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்க வழி செய்யும் என்பது இவர்கள் நம்பிக்கை. அதனால் லட்சுமி விக்ரகங்களை களி மண்ணில் செய்யும்போது தவறாமல் பிள்ளையார் சிலையையும் சேர்த்தே படைக்கிறார்கள்.
வரலட்சுமி பூஜையும் லட்சுமி வழிபாட்டில் ஒரு முக்கியமான பூஜைமுறை ஆகும். தமிழகத்திலும் ஆந்திராவிலும் இந்த விரதம் சிராவண மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அன்று மகாலட்சுமியை வீட்டுக்க அழைத்து, 16 வகையான உபசாரங்கள் செய்து வழிபடுகிறார்கள். பலவிதமான கொழுக்கட்டைகள் விவேதனம் செய்யப்படுகிறது. அன்று பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் பெருகவும், வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும் வேண்டுகின்றனர்.
நம் நாட்டின் வடக்குப் பகுதியில் தீபாவளியை ஒட்டி லட்சுமி பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்றும் அவள் அருள் வேண்டி தீபங்கள் ஏற்றப்படுகின்றன. தீபாவளியை ஒட்டி எப்படி லட்சுமி வழிபாடு வந்தது? அதற்கும் ஒரு புராணக் கதை இருக்கிறது. செல்வத் திருமகள் மகாபலிச் சக்ரவர்த்தியால் சிறை பிடிக்கப்பட்டாள். அதனால் அவன் நாடு நகரம் எல்லாம் செல்வம் வழிந்தோங்கியது. அவன் லட்சுமியை விடுதலை செய்ய எண்ணவேயில்லை. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து அவனை அழித்த போது லட்சுமியும் தன் சிறையிலிருந்து மீண்டாள். அதனால் தான் தீபாவளியை ஒட்டிய பௌர்ணமியில் நம் நாட்டின் வட பகுதியில் லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது. துர்கா பூஜையை ஒட்டிய பௌர்ணமி நாளில் இந்த பூஜை செய்யப்படுகிறது. அன்று சிறிதாக மஞ்சளாலோ அல்லது அரிசிமாவினாலோ லட்சுமியின் பாதம் வீட்டின் வாசலிலிருந்து பூஜை நடக்கும் இடம் வரை அழகாக வரையப்படுகிறது. விதவிதமான ரங்கோலிகள் போடப்படுகின்றன. அன்னைக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மந்திரங்கள் படிக்கப்படுகின்றன. அன்று அந்த பூஜை எந்தக் குறைவும் இன்றி நடந்துவிட்டால் வருடம் முழுவதும் தங்கள் இல்லத்தில் மங்களம் தங்கும் என்பது இவர்கள் நம்பிக்கை. அஸ்ஸாம் மாநிலத்தில் மறுநாள் நவானா என்ற அறுவடைத் திருநாள் தொடங்குவதால் அவர்கள் இந்தப் பூஜையை இன்னமும் சிறப்பாகப் பக்தி சிரத்தையோடு கொண்டாடுகிறார்கள்.
தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றுவதும், கோபூஜை செய்வதும், மகாலட்சுமிக்கு உகந்தவைகளாகும். இந்துக்களிடம் ஆலய வழிபாடு செல்வம் தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதோடு லட்சுமி பூஜையும் குபேர வழிபாடும் சேர்ந்து கொண்டால் செல்வச் செழிப்பிற்குக் குறைவில்லை என்பது நம்பிக்கை. நம் இந்து மதத்தில் லட்சுமி தேவி வழிபாடு மிகவும் தொன்மையானது. வேதங்களிலும் லட்சுமி தேவியைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. பஞ்ச பாண்டவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் லட்சுமியின் அருளைப் பெற்றுத் தந்ததாக மகாபாரதம் கூறுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையில் ஒரு இடத்தில் கிட்டத்தட்ட 1400 வருடப் பழைய லட்சுமி தேவியின் சிலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே லட்சுமி வழிபாட்டின் தொன்மை நன்று விளங்கும்.
லட்சுமிக்கு அடுத்தபடி குபேரன் செலவத்துக்கு உரியவராகக் கருதப்படுகிறார். இவர் வடக்கு திசைக்கு உரிய திக்குப்பாலகன். அதேபோல உலகத்தில் இருக்கும் எல்லாப் புதையங்களுக்கும் இவர்தான் அதிபதி. பணம் மற்றும் அதைச் சார்ந்த நூல்களுக்கும் இவர் உரியவர் என விஷ்ணு தர்மோத்தர புராணம் கூறுகிறது. இவருக்கு ஒரு கண் மற்றும் மூன்று கால்கள் உள்ளதாகவும், கண்கள் மஞ்சள் நிறமாக இருப்பதாகவும், நிறைய நகைகள் அணிந்திருப்பதாகவும் அதே புராணம் கூறுகிறது. தமிழ்நாட்டில் மகாலட்சுமியோடு சேர்த்து குபேரனையும் பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. அதில் தவறில்லை என்றாலும் செல்வத்திற்கு அதி தேவதை மகாலட்சுமி மட்டும்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. அவள் அருளைப் பெற நாம் வீட்டில் லட்சுமி பூஜை செய்தும், ஹோமங்கள் செய்தும் மங்கல நாட்களில் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களைத் தானம் செய்தும் அவளை வேண்டுகிறோம்.
லட்சுமியின் அருளைப்பெற என்ன செய்ய வேண்டும்?
எப்போதும் உண்மையே பேசுபவர்கள், சுத்தமாக இருப்பவர்கள், வீட்டை அழகாக வைத்துக் கொள்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்கமுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள் என இவர்களிடம் லட்சுமி இஷ்டமாக வசிப்பாள் எனப் புராணங்கள் கூறுகின்றன.
லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் அன்னை இருக்கும் இடங்கள்தான். அதனால் இயற்கையைப் பேணி பாதுகாப்பதும் நம் கடமைதான். அனைத்து செல்வங்களையும் பெற்று குபேர வாழ்வு வாழ திருமகளை வழிபடுவோம்!

Comments

  1. ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது செல்வம் பெருக பரிகாரங்கள்

    ReplyDelete

Post a Comment