செவ்வாய்க்கிழமை நெய் விளக்கேற்றினால் செல்வம் பெருகும்!

கருவறையில் மூன்று நரசிம்மர்களை ஒருசேர தரிசிக்க வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம், சிங்கிரி கோயில்.
கிருஷ்ணாரண்ய ÷க்ஷத்ரம், சிங்கர்குடி, சிங்கர் கோயில் என்றெல்லாம் வழங்கப்பட்டாலும் தற்போது சிங்கிரி கோயில் என்றே அழிக்கப்படுகிறது.
திருவஹீந்திரபுரம் தேவனாதப் பெருமாள், பிரகலாதனின் பிரார்த்தனை நிமித்தமாக இரண்ய சம்ஹார நரசிம்மராக காட்சியளித்த தலமிது.
ஆறாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். பதினாறாம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் திருப்பணி செய்யப்பட்டது. ராஜ ராஜ சோழனும் இக்கோயிலுக்கு சில கைங்கர்யங்கள் செய்துள்ளான்.
வசிஷ்ட மாமுனிவர் இத்தலப் பெருமாளை வழிபட்டு தியானம் செய்து ஸித்தி பெற்று தம்முடைய சாபங்களைப் போக்கிக் கொண்டார்.
அது என்ன கதை?
ஒரு சமயம் நிமிச் சக்கரவர்த்தி உலக நன்மைக்காக யாகம் ஒன்று செய்ய விரும்பி, வசிஷ்டரை அணுகினார். அவரோ, நான் இப்போது வைகுண்டம் சென்று கொண்டிருக்கிறேன். திரும்பி வந்தவுடன் யாகத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விடுகிறார்.
வசிஷ்டர் வைகுண்டம் சென்று திரும்பி வருவதற்கு காலதாமதமாகும் என்று கருதிய நிமிச் சக்கரவர்த்தி, வேறு முனிவர்களை வைத்து யாகத்தை செய்து முடிக்கிறார்.
ஆனால், வைகுண்டம் சென்று திரும்பிய வசிஷ்டரோ, தன்னை நிமிச் சக்கரவர்த்தி அவமானப்படுத்தி விட்டதாகக் கருதி, அவர் மேல் கடுங்கோபம் கொண்டு, “உனக்கு ரூபமில்லாமல் போகட்டும்’ என்று சாபம் கொடுக்கிறார்.
நிமிச் சக்கரவர்த்தியோ, “சொந்த நன்மைக்காக நான் யாகம் செய்யவில்லை. உலகத்தில் வாழும் எல்லோருடைய நன்மைக்காகவும்தான் யாம் செய்தேன். அதனால் நீ விட்ட சாபம் உன்னையே சேரட்டும்’ என்று பதிலுக்குச் சாபமிட, வசிஷ்டர் உருவமில்லாமல் போகிறார்.
பின்னர், தன்னுடைய அவசர புத்தியால் அருவமாகிவிட்டதையறிந்து பெரிதும் வருந்தும் வசிஷ்டர், சாபவிமோசனத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது ஒருநாள், சிங்கர்குடியில் பிரகலாதன் தவம் செய்கிறார். அவருடன் நீயும் சேர்ந்து தவம் செய்தால், நரசிம்மர் காட்சி தருவதோடு உன் சாபமும் விலகும் என்று அசரீரி வாக்குக் கேட்கிறது.
அதன்படி பிரகலாதனுடன் வசிஷ்டர் சிங்கர்குடியில் தவம் செய்ய, நரசிம்மர் அவர்களுக்குக் காட்சி தருகிறார். வசிஷ்டரும் சாபம் நீங்கி சுய உருவம் பெறுகிறார். இந்தச் சம்பவம் பிரமாண்ட புராணத்தில் பிருகு ஜெய்முனி சம்பவாதத்தில் கூறப்பட்டுள்ளது.
கோயிலின் மேற்கு நோக்கிய ஐந்துநிலை ராஜகோபுரத்தை ஏழு கலசங்களும் வண்ணமயமான சுதைச் சிற்பங்களும் அலங்கரிக்கின்றன. அதைத் தொடர்ந்து துர்க்கை, நாகர் சன்னதிகளும் திருக்குளமும் அமைந்துள்ளன.
இரண்யனை மேற்குப் பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்தாராம். அதை பிரதிபலிக்கும் வகையில் கருவறையில் பதினாறு கரங்களுடன் பெரிய வடிவில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார் மூலவர் நரசிம்மர். தினமும் பிரதோஷ வேளையில் அவருக்கு பானக நிவேதனம் செய்யப்படுகிறது. மூலவருக்குக் கீழே இடப்புறம் இரண்யனின் மனைவியான நீலாவதி; வலப்புறம் மூன்று அசுரர்கள், பிரகலாதர், சுக்ரர், வசிஷ்டர்; வடக்குநோக்கி யோக நரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோர் இருக்கின்றனர். உற்சவர் பிரகலாத வரதன் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக நிநன்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் சேவை சாதிக்கிறார்.
தனிச் சன்னதியில் கனகவல்லித் தாயார் கிழக்கு நோக்கி அருள்கிறார். அனுமனும் லட்சுமணரும் அருகிலிருக்க சீதா சமேதராக ராமர், மணவாள மாமுனிகள், விஷ்வக்சேனர், ஆழ்வார்கள், ஆண்டாள், தும்பிக்கை ஆழ்வார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. வெளி பிராகாரத்தில் யாகசாலை அமைந்துள்ளது.
இது மிகச் சிறந்த பிரார்த்தனை தலம். இங்கு அருளும் நரசிம்மரையும் தாயாரையும் சுவாதி நட்சத்திரம், பிரதோஷ தினங்களில் தரிசித்தால் நலம் பல கிட்டுமாம்; செவ்வாய்கிழமைகளில் இங்கு நெய் விளக்கேற்றி, துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் செல்வ வளம் பெருகுமாம்; மேலும் நவகிரக தோஷமும் மனநல பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, மகப்பேறின்மை, எதிரிகள் தொல்லை விலகுகிறதாம்; வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் நரசிம்மருக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்வித்து புது வஸ்திரம் சாத்தி மகிழ்கிறார்கள்.
சிங்கிரி கோயில், பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதால், இந்த மூன்று நரசிம்மர்களை ஒரே நாளில் வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கஷ்டங்களும் விலகி, நன்மைகள் அணிவகுக்கும் என்றும் சொல்லப் படுகிறது.
ஆலயத்திற்குப் பின்புறம் ஸ்ரீமத் அகோபிலமடம் 4வது பட்டர் ஜீயர் சுவாமிகள் பிருந்தாவனம் உள்ளது. தாயாருக்கு இங்குள்ள பத்துத்தூண் மண்டபத்தில் வெள்ளிக்கிழமைகளில் மாலை 5.30 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
ஆற்காடு நவாபும், பிரஞ்சுக்காரர்களும் இத்தல நரசிம்மருக்கு திருவாபரணம் செய்து தந்துள்ளனர். ஆனந்தப்பிள்ளை நாட்குறிப்பிலிருந்து பிரஞ்சு அரசாங்கம் அபிஷேகப் பாக்கத்தில் உள்ள குளத்தில் நரசிம்மசுவாமிக்கு தெப்போற்சவம் செய்து வந்த தகவலும் கிடைக்கிறது.
தரிசனத்திற்காக காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும்; மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும் இவ்வாலயத்தில் நரசிம்ம ஜெயந்தியன்று தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு 9 நாள் முன்பாக கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கிவிடுகிறது. மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரியும், ஐப்பசியில் பவித்ர உற்சவமும், வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பும் அன்று மாலையில் கருடசேவையும் பிரதான விழாவாகக் கொண்டாடப்படுகின்றன.
பழுதடைந்த தேருக்கான திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவுபெற்று, அறுபதடி உயரத் தேரில் அரங்கன் எழுந்தருளி சேவை சாதிக்கப்போகும் நாளுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்!

பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில், கடலூர் மாவட்டத்தில் சிங்கிரி கோயில் உள்ளது.

Comments