திருக்கோவிலூரில் திருவருள் புரியும் ஸ்ரீரகோத்தம சுவாமிகள்!


திருக்கோவிலூர்! இந்த ஊரின் எந்தத் தெருவில் நின்று 'ரகோத்தமன்' என்று கூவி அழைத்தாலும், தெருவுக்கு எட்டு-பத்து ரகோத்தமன்கள் திரும்பிப் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு இங்கே வசிக்கும் மனிதர்களின் மனங்களில் வியாபித்துள்ளவர் ஸ்ரீரகோத்தம சுவாமிகள்!
ஸ்ரீமத்வாச்சார்யர் ஸ்தாபித்த மடங்களில் ஒன்றான, ஸ்ரீஉத்தராதி மடத்தின் 14-வது அதிபதியாக, கருணை நிரம்பிய மகானாக வாழ்ந்தவர்!
உத்தராதி மடத்தின் 13-வது அதிபதி ஸ்ரீரகுவர்ய தீர்த்தர். அவர் சிலகாலமாக மனக்கலக்கத்துடன் இருந்தார். நல்ல சீடன் ஒருவன் தனக்குக் கிடைக்கவில்லையே என்பதுதான் காரணம். 'தனக்குப் பிறகு மூலராமரை பூஜிக்கவும், ஸ்ரீமத்வாச்சார்யரின் த்வைத சித்தாந்தத்தை மக்களிடம் தெளிவுற விளக்கி அருளுவதற்கும், உத்தராதி மடத்தை கட்டிக் காப்பதற்கும் ஏற்றதொரு சீடன் வரமாட்டானா?' என்று ஏங்கினார்; மூலராமரிடமே வேண்டினார். இந்த வேண்டுதலை அடுத்து, 'ஸ்வர்ணவாடிக்குப் போ! அங்கே புத்திர பாக்கியம் வேண்டி வரும் தம்பதியிடம் இருந்து, உனக்கொரு சீடன் கிடைப்பான். இவன் சாதாரணமானவன் இல்லை... அஷ்டதிக் பாலகர்களில் நிருதியின் அம்சம் கொண்டவன்; திரேதா யுகத்தில் துர்முகி எனும் வானரமாகப் பிறந்து, கும்பகர்ணனிடம் சண்டையிட்டவன்; துவாபர யுகத்தில், பீமன்- இடும்பிக்கு மகனாக, கடோத்கஜனாகப் பிறந்து, தன்னுயிரைக் கொடுத்து அர்ஜுனனைக் காப்பாற்றியவன்; இப்போது கலியுகத்தில், மக்களுக்கு அருள் தரும் மகானாக உருவெடுக்கப் போகிறான்!' என்று அசரீரி கேட்டது.
இதில் நெகிழ்ந்து போனவர், ஆந்திர மாநிலம்- ஹைதராபாத் அருகில் உள்ள ஸ்வர்ணவாடி எனும் கிராமத்துக்குச் சென்றார். சுவாமிகள் வந்திருக்கும் சேதி அறிந்து, மொத்த கிராமமும் மடத்துக்கு வந்தது; அவரை நமஸ்கரித்தது; தங்களது கவலைகளையெல்லாம் கொட்டித் தீர்த்தது. அனைவருக்கும் அருளாசி வழங்கினார் சுவாமிகள். அதேநேரம், 'அசரீரியின் வாக்கு இன்னும் பலிக்கவில்லையே...' எனும் தவிப்பில் வருந்தினார்!
இப்படியிருக்க, இந்த ஊரைச் சேர்ந்த சுப்புபட்டரும் இவரின் மனைவி கெங்காபாயும் இதுவரை இல்லாத வகையில், மகிழ்ச்சியில் திளைத்தனர். 'சதாசர்வ காலமும் உனது திருநாமத்தைச் சொல்லிவந்த எங்களுக்கு இப்படியரு கொடுப்பினையா? ராம ராம...' என்று மனம் உருகி ஸ்ரீராமனை வணங்கினர். இவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் ஓர் அசரீரி!
ஆம்... குழந்தை வரம் வேண்டி ஸ்ரீராமனை வழிபட்டு வந்த இவர்களுக்கு அசரீரி வாக்காக அருள் கிடைத்தது: 'ரகுவர்ய தீர்த்தரைப் பாருங்கள். உங்களுக்குப் பிறக்கும் முதல் குழந்தை உங்களவன் இல்லை; இந்த உலகத்துக்கே சொந்தமானவன்; மாபெரும் மகான்! ஆகவே அந்தக் குழந்தையை உத்தராதி மடத்துக்கு தந்து விடுங்கள்' என்று சுப்புபட்டர் தம்பதிக்கு அசரீரி கேட்க... ஆனந்தத்தில் மூழ்கினர் இருவரும்!
பிறகு ரகுவர்ய தீர்த்தரை தரிசித்து நமஸ்கரித்தனர். கண்களில் நிறைவுடனும் மனதுள் கருணையுடனும் அவர்களின் சிரசில் கைவைத்து ஆசீர்வதித்தார் சுவாமிகள். அந்த நிமிடம்... கெங்காபாயின் வயிற்றில் தாமரை மொட்டு விட்டது; அந்த மடமெங்கும் தாமரைப் பூவின் நறுமணம் சூழ்ந்தது.
சில மாதங்கள் கழித்து, நூறுகோடி சூரியப் பிரகாசத்துடன் குழந்தை தகதகவெனப் பிறந்தது; ஒரு சுப தினத்தில், தங்கத் தட்டில் வைத்து ரகுவர்ய தீர்த்தரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். குரு-சீடன் எனும் உறவுகளைக் கடந்து, தந்தையின் ஸ்தானத்தில் இருந்து, குழந்தைக்கு ஸ்ரீராமச்சந்திரன் எனும் திருநாமம் சூட்டினார் சுவாமிகள்; தாயைப் போல குழந்தையைச் சீராட்டி வளர்த்தார். எவருக்குக் கிடைக்கும் இப்படியரு பாக்கியம்? அந்தக் குழந்தை... ஸ்ரீரகோத்தம சுவாமிகள்!
இவரின் அருளாடல்களும் அற்புதங்களும் மூன்று வயதிலேயே துவங்கிவிட்டன.
ரகுவர்ய தீர்த்தர் தினமும் ஸ்ரீமூலராமருக்கு பூஜைகள் செய்யும் போது, குழந்தை ராமச்சந்திரனும் கூடவே இருப்பான். ஒருமுறை, பூஜையை முடித்துக் கொண்டு, மாட்டு வண்டியில் வெளியே கிளம்பினார் சுவாமிகள். கூடவே ராமச்சந்திரனையும் அழைத்துச் சென்றார். வழியில்... குமுதாசுரன் எனும் அரக்கன், குழந்தையை அபகரிக்க வந்தான்; மாட்டுவண்டியை அப்படியே சாய்த்துவிட முனைந்தான். இதைக் கண்ட குழந்தை வண்டியில் இருந்தபடியே, தன் பிஞ்சுக் கால்களால் அந்த அசுரனை உதைக்க... சுமார் இருநூறு அடி தூரத்துக்கு அப்பால் சென்று விழுந்தான்; இறந்தான்! உத்தராதி மடமும் ஊர்மக்களும் குழந்தையைக் கொண்டாடினர். கடோத்கஜனின் மறுபிறப்பு என்பது அங்கே நிரூபணமாயிற்று!
ஏழாவது வயதில் உபநயனம் செய்வித்து, கி.பி.1556-ஆம் ஆண்டு ஸ்ரீமத் உத்தராதி மடத்தின் 14-வது அதிபதியாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார் சுவாமிகள். அன்று முதல்... ஸ்ரீராமச்சந்திரன், ஸ்ரீரகூத்தம தீர்த்தர் என திருநாமத்துடன் விளங்கினார். பின்னாளில் இவரின் பெயர், ரகோத்தமர் என மருவியதாகச் சொல்வர்.
குல்பர்கா மாவட்டம், மணூர் எனும் தலத்தில், பீமா நதிக்கரையில் குருகுலம் அமைத்திருந்த ஆத்யம் வரதாச்சார்யர் என்பவரிடம் வேத- சாஸ்திரங்களை பயில்வதற்காக, ஸ்ரீரகோத்தமரை அனுப்பினார் ரகுவர்யதீர்த்தர். அடுத்த சில நாட்களில் ரகுவர்ய தீர்த்தர், பிருந்தாவனஸ்தரானார். அதாவது முக்தி அடைந்தார்.
இதையடுத்து, மிராசுதார் ஒருவரின் வீட்டில் தங்கி, தினமும் மூலராமருக்கு பூஜைகள் செய்துவிட்டு, குருகுலத்துக்குச் சென்றார் ஸ்ரீரகோத்தமர். மிகச் சிறிய வயதிலேயே மூலராமருக்கு பூஜை; ரகுவர்ய தீர்த்தரின் அளவற்ற அன்பு ஆகியவற்றைப் பெற்றிருந்த ரகோத்தமரின் மீது வெறுப்பு கலந்த பொறாமை வரதாச்சார்யருக்கு! சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ரகோத்தமரின் மனதைக் காயப்படுத்தினார். சற்று தாமதமாக வந்தாலும் மற்ற மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதில் குறியாக இருந்து, ரகோத்தமரைப் புறக்கணித்தார்.
இதில் குறுகிப் போன ரகோத்தமர், ஒருநாள் எவருடனும் பேசவில்லை; எதுவும் சாப்பிடவில்லை. படுக்கையில் அழுது கொண்டே இருந்தார். சீடனின் வாட்டத்தை அறிந்து துடித்துப் போன ஸ்ரீரகுவர்ய தீர்த்தர் அங்கே எழுந்தருளினார். ''ஸ்ரீமூல ராமரின் அருள் உனக்கு பரிபூரணமாகக் கிடைத்து விட்டது. இனிமேல் ஸ்ரீவரதாச்சார்யரிடம் பாடம் கற்கச் செல்ல வேண்டாம். மாறாக, நீயே அனைவருக்கும் பாடம் கற்பிப்பாயாக!'' என்று அருளினார். இதை அறிந்த ஸ்ரீவரதாச்சார்யர் ஓடி வந்து, ஸ்ரீரகோத்தமரை வணங்கி, மன்னிப்பு வேண்டினார். சுவாமிகள், இவரை மன்னித்ததுடன் மடத்திலே தங்கி சேவையாற்றும்படி பணித்தார்!
இதன் பிறகு, தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டார் ஸ்ரீரகோத்தம சுவாமிகள். எண்ணற்ற பக்தர்களை சந்தித்து ஆசி வழங்கினார். ஸ்ரீரங்கத்தில் பல நாட்கள் தங்கி, ஸ்ரீமூலராமரையும் ஸ்ரீஅனுமனையும் வணங்கி, தத்வ பிரகாசிகா பாவபோதம், ஸ்ரீவிஷ்ணு தத்வ விநிர்ணய பாவபோதம், நியாய விவரண பாவபோதம் மற்றும் பிரமேய தீபிகா பாவபோதம் எனும் கிரந்தங்களை எழுதினார். இதனால் இவருக்கு, 'ஸ்ரீபாவபோதகாரர்' எனும் அடைமொழியும் உருவானதாம்!
இவர் எழுதிய கிரந்தங்கள் அனைவராலும் போற்றப்பட்டன. சுவாமிகளை தரிசிக்க ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடி இருந்தது மக்கள் கூட்டம். இதில் பொறாமை கொண்ட விஷமிகள் சிலர், இவரை அவமதிக்கவும் அச்சுறுத்தவும் திட்டமிட்டனர். மாட்டு வண்டியில் யாத்திரையாகப் புறப்பட்ட சுவாமிகளை வழிமறித்தனர். அப்போது, முன்னும் பின்னும் நகர முடியாதபடி அக்னி ஜுவாலை ஒன்று இவர்களைச் சூழ்ந்து தகித்தது. ஆடிப்போன விஷமிகள், ''சுவாமி! எங்களை மன்னியுங்கள்; தீயில் இருந்து காப்பாற்றுங்கள்'' என்று அலறினர். உடனே சுவாமிகள், அவர்களைப் பார்த்து மெள்ளப் புன்னகைத்தார். அந்த ஜுவாலை காணாமல் போனது! சுவாமிகளின் பெருமையை அறிந்து, சாஷ்டாங்கமாக விழுந்து அவரை நமஸ்கரித்தனர்.
சுவாமிகளுக்கு உணவு சமைக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார் ஏழை அந்தணர் ஒருவர். படிப்பு வாசனையே அறியாதவர்; சமையற்கலையில் திறமைசாலி. யாத்திரையின்போது இவரும் கூடவே சென்று, சமைத்து பரிவுடன் பரிமாறுவார். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட இவரை அசடன், முட்டாள் என மடத்து ஊழியர்கள் சிலர் ஏளனம் செய்தனர். இவர்களது கிண்டல் பேச்சை அறிந்த ரகோத்தம சுவாமிகள், ஒருநாள் சமையற்காரரை அழைத்தார்; தனக்கு எதிரே உட்காரச் சொன்னார்.
சுவாமிகளுக்கு முன்பு நின்றே பழக்கப்பட்டவர் என்பதால், கூச்சத்துடன் அமர்ந்தார் சமையற்காரர். அவரை கனிவுடன் பார்த்த சுவாமிகள், முதுகையும் நெஞ்சையும் மெள்ள வருடிக் கொடுத்தார். பிறகு, அவரின் உச்சந் தலையில் கை வைத்து கண்மூடி ஆசிர்வதிக்க... மயங்கிச் சரிந்தார் சமையற்காரர். சில நிமிடங்கள் கழித்து எழுந்தார். முகத்தில் தேஜஸ் தெரிய, மனதுள் வேதங்கள் அனைத்தும் நிரம்பியிருந்தன. அதன் பிறகு இவரிடம் வேத- சாஸ்திரங்கள் கற்றுக் கொண்ட மாணவர்கள் ஏராளம்!
''கருணையும் அன்பும் ஒன்றுசேர இருப்பதுதான் இறைபக்தி! சக மனிதர்களிடம் அளவற்ற அன்புடனும் தாய்மைக்கே உரிய கருணையுடனும் இருப்பவர்கள், இறைவனை வெகு எளிதில் உணருவார்கள்; இவர்களுக்கு குருவருளும் இறையருளும் கிடைக்கும்'' என்பதை போதித்த சுவாமிகள், திருக்கோவிலூரில் பலகாலம் தங்கினார். தான் வந்த கடமையை செவ்வனே நிறைவேற்றிவிட்டதாக உணர்ந்த சுவாமிகள், தன்னுடைய சீடனான ஸ்ரீவியாஸாச்சார்யரை அழைத்து, ஸ்ரீவேதவியாசதீர்த்தர் பட்டத்தை அளித்து, மடாதிபதியாக்கினார். பெண்ணை நதிக்கரையில் உள்ள இந்த மடத்திலேயே பிருந்தாவனதாரராக எண்ணம் கொண்டார்.
வேட்டவலம் ஜமீன்தாருக்குச் சொந்தமான இடம் இது! அன்றிரவு... ஜமீன்தாரின் கனவில் தோன்றிய இறைவன், 'ரகோத்தமரின் பிருந்தாவனத்துக்கு இந்த இடத்தை வழங்கு!' என்று சொல்ல... விடிந்ததும் சுவாமிகளை தரிசித்து அந்த இடத்தை ஸ்ரீஉத்தராதி மடத்துக்கு எழுதிக் கொடுத்தார் ஜமீன்தார். பிறகு சுவாமிகளின் திருவுளப்படி அங்கே... உத்தராதி மடம் அமைக்கப்பட்டது.
கி.பி. 1596-ஆம் ஆண்டு (ஏகாதசி நாளில்), முக்தி அடைந்தார் ஸ்ரீரகோத்தம சுவாமிகள்! அடுத்து, இங்கே பிருந்தாவனம் அமைக்கப்பட்டது; இப்போதும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமா? பிருந்தாவனத்தை வலம் வந்து வணங்கும் பக்தர்களுக்கு, சுவாமிகளின் அருளாசியும் கிடைத்து வருகிறது.
ஒருமுறை... சித்த சுவாதீனமற்ற மகளை அழைத்துக் கொண்டு மடத்துக்கு வந்த பெண்மணி, தினமும் பெண்ணையாற்றங்கரையில் நீராடி, மகளுடன் சேர்ந்து அனுமனை வணங்கி, நாகப் பிரதிஷ்டையையும் வழிபட்டுவிட்டு, பிருந்தாவனத்தை வலம் வந்தாள். எந்தச் சிந்தனையும் இல்லாமல் வெறித்த பார்வையுடன் வலம் வந்த இளம்பெண், ஒருநாள்... பிருந்தாவனத்தைப் பார்த்தாள்; பார்த்தபடியே நின்றாள்; சட்டென்று மயங்கிச் சரிந்தாள். மறுநாள், அதிகாலையில் தானாகவே எழுந்து, பெண்ணையாற்றில் நீராடி, பிருந்தாவனத் தின் எதிரே விளக்கேற்றி, 11 முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். பிறகு மனம் தெளிந்த அந்த இளம்பெண், ஸ்ரீரகோத்தம சுவாமிகளின் தீவிர பக்தையானாள்!
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரின் மணம்பூண்டியில் உள்ளது ஸ்ரீரகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனம். தற்போது இந்த மடத்தின் 42-வது பீடாதிபதியாக ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த சுவாமிகள் இருந்து வருகிறார். தமிழகம், கர்நாடகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் இங்கே வந்து, பிருந்தாவனத்தை வணங்கி, சுவாமிகளின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.
ஒரு சின்ன அகல்விளக்கை ஏற்றி வைத்து, சுவாமிகளின் பிருந்தாவனத்தை 11 முறை வலம் வந்தால் போதும்... குழந்தைகள், கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவார்கள்; இளைஞர்கள், நல்ல வேலை கிடைக்கப் பெறுகின்றனர்; பெண்களுக்கு அழகும் அறிவும் கொண்ட குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி! முக்கியமாக, நம் எண்ணங்களையும் ஆசைகளையும் நினைத்த மாத்திரத்தில் நிறைவேற்றி வைப்பார் ஸ்ரீரகோத்தம சுவாமிகள்.
வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி திருக்கோவிலூர் மணம் பூண்டியில் அமைந்துள்ள ஸ்ரீரகோத்தம சுவாமிகளின் 437-வது ஆராதனை விழா நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. விழாவில், கலந்து கொள்ளுங்கள்; பிருந்தாவனத்தில் சூட்சும ரூபமாக வீற்றிருக்கும் ஸ்ரீரகோத்தம சுவாமிகளின் பரிபூரண அருளைப் பெறுங்கள்!
ஸ்ரீதிக்விஜய ராமே - விஜயதே ஸ்ரீரகோத்தம தீர்த்த குருப்யோ நமஹ
எங்கே இருக்கிறது?
விழுப்புரத்தில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலை வில் உள்ளது திருக்கோவிலூர். இந்த ஊருக்கு முன்னதாக பெண்ணையாற்றின் பாலத்தை அடுத்து உள்ளது மணம்பூண்டி கிராமம். இங்கே, ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீரகோத்தம சுவாமி களின் பிருந்தாவனம்.
விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து வரும் பேருந்தில் பயணித்தால், மணம்பூண்டி பஸ் ஸ்டாப் அருகிலேயே பிருந்தாவனம் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 5 முதல் மதியம் 12 மணி வரை.
மாலை 4:30 முதல் இரவு 8 மணி வரை.
தொடர்புக்கு:
04153 - 224690, 94428 65395

Comments