கல்யாண வரம் தரும் பெருமாள்

கல்யாணம் தள்ளிப்போய் கொண்டு இருக்கிறதே எனக் கவலைப்படுபவர்களுக்கு கண்கண்ட தலமாக திகழ்கிறது நல்லாத்தூர்.
நல்லோர்கள் வாழ்ந்தாலும், ஆறுகள் பாய்ந்து வளமுற்றாலும் பெருமாள்கோயில் அமைந்து மக்களை ஆற்றுப்படுத்தியதாலும் நல்லாற்றூர் என வழங்கப்பட்டு பின்னர் நல்லாத்தூராக மருவியது என்கிறார்கள்.
தென்பெண்ணை ஆற்றுக்கும் சங்கராபரணி ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ள இத்தலம் ஒரு காலத்தில் சுவர்ணபுரி என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
திருவஹீந்திரபுரத்தின் அபிமான தலமாக விளங்கும் இத்தலத்திற்கு ஸ்வாமி தேசிகரும், திருமங்கையாழ்வாரும் விஜயம் செய்து எம்பெருமாளை தரிசித்து சென்றிருப்பதற்காகு இங்குள்ள விக்ரக மூர்த்தங்களே சாட்சியாக இருக்கின்றன. விண்ணகர சோழன் காலத்தில் கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு லட்சுமி நாராணயராக வரதராஜபெருமாள் காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது.
அழகாதன கதை வேலைப்பாடுகள் கொண்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் பதினாறு கால் மண்டபத்தில் பலிபீடத்துடன் கடிய துவஜஸ்தம்பம் கம்பீரமாக காட்சிதருகிறது. அடுத்து அஷ்டநாகங்களுடன் கருடாழ்வார் சன்னதி இவருக்கு சுவாதி நட்சத்திர நாளில் விசேஷ திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் இரு ஆஞ்சநேயர்கள் அருளாசிபுரிவது சிறப்பாக கருதப்படுகிறது. இவர்களுக்கு கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமஞ்சனத்துடன் வடைமாலை சேவையும், மார்கழியில் அனுமன் ஜெயந்தி உற்சவமும் விசேஷமாக நடைபெறுகிறது,. பல ஆஞ்சநேயர் அருகில் ராமர் பாதம் உள்ளது. இங்கு ராமர் பாதம் அமைந்ததற்கு பின்னணியில் ஒரு புராண சம்பவம் சொல்லப்படுகிறது.
ராவண வதம் முடிந்ததும் மக்களை சந்திக்க சீதாபிராட்டியோடு ஊர் ஊராக சென்ற ராமபிரான் வழியில் அழகுமூர்த்தியாக கோயில் கொண்டிருக்கும் வரதராஜப்பெருமாளை தரிசிக்க விரும்பி இத்தலத்திற்கு வந்தார். அப்போது மக்கள் திரண்டு வந்து ராமநாமம் சொல்லி அவர்களை வரவேற்றனர்.
மக்களின் உபசரிப்பில் மகிழ்ந்த ராமிடம் தங்களின் திருப்பாதங்களை பதித்து விட்டு செல்லுங்கள். அனுதினமும் அதை பூஜித்து ஆனந்தமடைவோம் என்ற வேண்டுகோள் வைத்தனர். ராமரும் அதை ஏற்று தமது திருவடியை இங்கே பதித்தாகவும் பிறகு அருகிலுள்ள தெண்பெண்ணை ஆற்றில் தமது தினசரி கடமைகளை மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
ராமபிரான், திருமேனியை சற்றே ஒயிலாக வளைத்து மகாமண்டபத்தில் சீதை, லட்சுமணர் சமேதராக திரிபங்கி ராமர் என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார். விநய ஆஞ்சநேயர் ராமருக்கு அருகே அமர்ந்து ராமரின் சூரிய வம்ச கொடியை ஏந்தி வலது கையால் வாய் மூடி பணிவாக காட்சி தருகிறார்.
கருவறையில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அபய வரத ஹஸ்தத்தோடு நின்ற கோலத்தில் புன்னகை தவழ சேவை சாதிக்கும் வரதராஜபெருமாளை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. நமக்கு வேண்டியதை நாம் வேண்டாமலேயே அளித்திடும் பெரும் வரப்பிரசாதியான இவரை பிறகு முனிவரின் மகளாக அவதரித்த ஸ்ரீதேவி இங்கு மனந்ததாக ஐதீகம். அருகில் உற்சவரும் வீற்றிருக்கிறார்.
அர்த்த மண்டபத்தில் மிகப்பழமையான லட்சுமி நரசிம்மர் சிலை உள்ளது. ராமரும், சீதையும் இங்கு வந்து சென்றதற்கு இந்த சிலையை ஆதாரமாக சொல்கிறார்கள்.
போகி பண்டிகையன்று இத்தலத்தில் நடைபெறும் ஆண்டாள் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதை தொடர்ந்து திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு ஆண்டாளின் ஆசியோடு முகூர்த்த மாலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவில் மாலையை வாங்கி சென்றவர்கள் விரைவில் நல்ல இடத்தில் திருமணம் முடிந்து தம்பதி சமேதராக இங்கு வந்து பெருமாளின் திருவடியில் வீழ்ந்து வணங்கி நன்றி செலுத்துவது வாடிக்கை.
தரிசனத்திற்காக காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த ஆலயம் சிங்கிரி கோயில் நரசிம்மர் ஆலயத்திற்கும் பூவரசங்குப்பம் நரசிம்மர் ஆலயத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது சிறப்பு.
உங்கள் இல்லங்களில் மங்கல ஓசை கேட்க நினைத்த காரியம் நிறைவேற நீங்களும் ஒருமுறை நல்லாத்தூர் சென்று வரதராஜபெருமாளை சேவித்து வாருங்களேன்.
கடலூர் மாவட்டம், நல்லாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. சென்னையிலிருந்து வருபவர்கள் பாண்டிச்சேரிக்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் 18 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தை அடையலாம்.

Comments