கவலைகள் தீர்ப்பாள் ஸ்ரீகாந்திமதி!

காவிரி தென்கரைத் திருத்தலங்களில் தேவாரப் பாடல் பாடப்பட்ட ஐந்தாவது திருத்தலம் திருச்சி உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ் வரர். இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீபிரம்மா சிவனாரைத் தொழுதபோது, பொன்மை (மண்), வெண்மை (தண்ணீர்), செம்மை (நெருப்பு), கருமை (காற்று), புகைமை (சாம்பல் வண்ணம்- ஆகாயம்) என ஐந்து நிறங்களைக் காட்டி அருளினார். ஆகவே, இறைவனுக்கு ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் எனும் திருநாமம்!
உதங்க முனிவருக்குக் காலை வழிபாட்டில் ரத்தின லிங்கம்; உச்சிக்காலத்தில் ஸ்படிக லிங்கம்; மாலையில் பொன் லிங்கம்; முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கம்; அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கம் எனக் காட்சி தந்ததாலும் சிவனாருக்கு இந்தத் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர்.
ஸ்ரீபைரவர், ஸ்ரீசனி பகவான், சூரிய பகவான் ஆகியோர் ஒரே சந்நிதியில் காட்சி தருவதால் கிரக தோஷ நிவர்த்தி தலமாகவும் போற்றப்படுகிறது, உறையூர் திருத்தலம். காசிக்கு நிகரானதாகப் போற்றப்படும் இந்தத் தலத்தில் சாபம், பாபம், தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்து அருள்கிறார் சிவபெருமான். இங்கு ஸ்ரீபஞ்ச முக விநாயகர் விசேஷம். உறையூர் தலத்தின் நாயகி- ஸ்ரீகாந்திமதி அம்பாள். நாகலோகத்து நாக கன்னியர் ஸ்ரீகாந்திமதி அம்பாளை வணங்கித் தொழுது வரம் பெற்றுள்ளனர். எனவே, இங்கு சிவனாருக்கு இணையாக விழாக்களும் விசேஷங்களும் அம்பிகைக்கும் உண்டு!
குறிப்பாக, நவராத்திரி விழா இங்கே விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்த 9 நாட்களை நவராத்திரி விழாவாகக் கொண்டாடுகின்றனர். முதல் மூன்று நாட்களில் ஸ்ரீதுர்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் ஸ்ரீலக்ஷ்மி தேவியாகவும், கடைசி மூன்று நாட்கள் ஸ்ரீசரஸ்வதி தேவியாகவும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருகிறாள் ஸ்ரீகாந்திமதி அம்மை. இந்த நாட்களில் அம்பிகையைத் தரிசித்தால், அனைத்து நலனும் யோகமும் பெறலாம் என்பது ஐதீகம்!
நவராத்திரி நாட்களில் அம்பிகைக்குப் புஷ்பம் சார்த்தி, அபிஷேகப் பொருட்கள் சமர்ப்பித்து வழிபட்டால், தேக வலிமை, பராக்கிரமம், தீர்க்காயுள், புத்திபலம், ஞானம், மனோசக்தி என்று எல்லாவித அம்சங்களும் தந்தருள்வாள் அம்பிகை.  முதல் நாள் ஸ்ரீகஜலட்சுமி அலங்காரத்தில் துவங்கி ஸ்ரீகாஞ்சி காமாட்சி, காசி ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீதனலட்சுமி, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீசரஸ்வதி எனப் பல்வேறு அலங்காரங்களில் அருளும் காந்திமதி அம்மையைக் காணக் கண்கோடி வேண்டும்.
சோழ தேசத்தில், ஸ்ரீகாந்திமதி எனும் திருநாமத்துடன் அம்பிகை குடிகொண்டிருக்கும் தலங்கள் ரொம்பவே அரிது. அதிலும், நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பதுவித கோலங்களில் அருளும் அந்த அம்பிகையைத் தரிசிப்பது வெகுவிசேஷம் என்பதால், இந்த திருநாட்களில் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து ஸ்ரீகாந்திமதியை வணங்கி வரம்பெற்று செல்கிறார்கள்!

Comments