ஓணகாந்தன் தளி, அநேகதங்காவரம், மேற்றளி காரைக்காடு

“தளி’ என்ற சொல்லுக்கு கோயில் எனப் பொருள் உண்டு. கற்களால் கட்டப்பட்ட கோயிலை “கற்றளி’ என்பர். மேற்கு திசையில் உள்ள திருக்கோயில் “மேற்றளி’ என்று அழைக்கப்படுகிறது.

திருக்கச்சி மேற்றளி
காஞ்சிபுரத்தில் உள்ள திருமுறைத் தலங்கள் ஐந்துள், இதுவும் ஒன்று. ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு தென் மேற்கில் 2 கி.மீ. தொலைவில் “பிள்ளையார் பாளையம்’ எனும் பகுதியில் உள்ளது. ஏற்கெனவே சின்னக் காஞ்சிபுரத்தில் வைணவ ஆலயங்களை தரிசிக்கும்போது சோளீசுவரர், தக்சீசுவரர், வன்மீசேசுவரர், புண்ணிய கோடீசுவரர் திருக்கோயில்களை தரிசித்துவிட்டோம். தேவாரப் பதிகம் பெற்றுள்ள திருத்தலம் என்ற வகையில் கச்சி மேற்றளி தனிச் சிறப்பு பெறுகிறது. தீர்த்தம் - விஷ்ணு தீர்த்தம்.
திருமேற்றளிநாதர் அருள்பாலிக்கும் திருக்கோயில் உள்ள வீதி, “திருமேற்றளித்தெரு’ என்றே வழங்கப்படுகிறது. மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், கிழக்கு திசை நோக்கி உள்ளது.
சிவசாரூப நிலை வேண்டி திருமால் இறைவனை நோக்கி தவமிருந்த தலம் இது. திருமாலினால் பூசிக்கப்பட்ட மேற்றளி நாதர் மேற்கு நோக்கியும், கருவறையின் பின்புறம் கோஷ்ட தேவதையாக திருமாலும் எழுந்தருளியுள்ளனர்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்து பதிகம் பாடும் வரை காத்திருந்தாராம் திருமால். அதுவரை தவம் செய்யுமாறு ஈசனும் அருளினாராம். சம்பந்தர் பாடிய பதிகத்தைக் கேட்டு உருகியதால் “ஓத உருகீசர்’ என்றும் ஈசன் போற்றிப் புகழப்படுகிறார். மூலவர் திருமேனியின் முன்பு இரு திருவடிகள் உள்ளன.
காஞ்சிபுரம் நகரில் பொதுவாக அம்மன் சந்நதிகள் இராது. பிற்காலத்தில் எழுந்த ஓரிரு கோயில்களில், அம்மன் சந்நதிகள் உருவாகியுள்ளன. அதுபோல் உருவானதே இங்கு உள்ள மேற்றளி நாயகி சந்நதி. அம்மன் சந்நதிக்கு அருகே உள்ள மண்டபத்தில் கச்சபேசுவரர் பெருவிழாவின் போது, அம்மனை எழுந்தருளச் செய்து ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
திருஞான சம்பந்தரின் பதிகத்தை உற்றுக் கேட்டவராக தனி சந்நதி கொண்டுள்ளார், “உற்றுக் கேட்ட நாதர்’. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிர்மா, துர்க்கை சந்நதிகள் உள்ளன. சண்டேசுவரர் தனி சந்நதி கொண்டுள்ளார்.
“ஆளுடைப் பிள்ளை’ என்று அழைக்கப்படும் சம்பந்தர் பெருமான் இங்கு தங்கியிருந்ததால் “பிள்ளையார்பாளையம்’ என்றும் பெயர் பெற்றுவிட்டது இப்பகுதி.
“செல்வியை பாகங்கொண்டார், சேந் தனை மகனாக்கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே...!’ என்று அப்பர் பெருமான் போற்றிப் பாடியுள்ளார்.
சம்புவராயர், விஜயநகர மன்னர்கள், பல்லவர் காலங்களில் விரிவாக்கம் பெற்றுள்ள செய்திகள் கல்வெட்டுகளில் தெரிய வந்துள்ளன.

ஓணகாந்தன் தளி
ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு மேற்கில், சர்வதீர்த்தத்திற்கு வடமேற்கில் பஞ்சுப் பேட்டை அருகில் உள்ளது திருக்கோயில். சுந்தரர் பாடல் பெற்ற திருத்தலம். சிறிய ஆலயம்தான். மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் கூடியது. முகமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய அழகிய கருவறை.
ஓணன் - காந்தன் வழிபட்டது
வாணாசுரனின் சேனைத் தலைவர்களான ஓணன், காந்தன் ஆகிய இருவரும் வழிபட்ட திருத்தலம். இவ்விருவரும் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள், அடுத்தடுத்த சன்னதிகளில் உள்ளன.
ஓணன் வழிபட்ட ஓணேசுவரர், காந்தன் வழிபட்ட காந்தேசுவரரோடு, ஜலந்தரன் என்ற அசுரன் வழிபட்ட ஜலந்தரேசுவரருக்கும் தனிச் சந்நதி உள்ளது.
“பொன் தரும் பதிகம்’
“நெய்யும் பாலும் தயிரும் கொண்டு’ என்று துவங்கும் பாடலைப் பாடி சுந்தரமூர்த்தி நாயனார் பொன்பெற்றார் என்பது வரலாறு. ஐந்தாவது பாடலை சுந்தரர் பாடத் துவங்கியபோது இறைவன் அருகில் உள்ள புளியமரத்தில் சென்று ஒளிந்து கொண்டார். அதனைக் கண்டு கொண்ட சுந்தரர் மரத்தின் கீழ் நின்று பதிகத்தைத் தொடர்ந்து பாடினார்.
சுந்தரரின் பாடலில் மனமுருகிய ஈசன், புளியமரத்தின் காய்களை உதிர்க்க, அவை “பொன் புளியங்காய்களாக’ கீழே விழுந்தனவாம். அந்தப் பொன்னைக் கொண்டே ஈசனுக்கு அழகிய ஆலயம் எழுப்பி வழிபட்டார் சுந்தரர்.
“வயிறு தாரிப் பிள்ளையார்’ என்று தனிச் சந்நதியும் உள்ளது. சுந்தரர் பாடலில் இடம் பெற்றுள்ளார் இந்த அதிசய விநாயகர். ஆலயத்திற்கு வெளியே வலப்புறம் அமைந்துள்ளது தான்தோன்றி தீர்த்தம். தலமரம் - புளியமரம்.

கச்சி அநேக தங்காவதம்
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் மிக்க கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் பாதையில், புத்தேரித் தெருவிற்கு மேற்கில் உள்ளது. சாலையிலிருந்து ச÷ற்ற÷ விலகி உள்ளடங்கியுள்ள கோயில்.
“அனேகபேசுவரம்’ என்அ அழைக்கப்படும் இத்தலம், விநாயகர் வழிபட்ட தலம். சுயம்புலிங்கமாக அநேக தங்காவதேசுவரர் எழுந்தருளியுள்ளார். குபேரன் பூஜித்துப் பேறுபெற்ற தலம் என்பதால், கடன் நிவாரணத் தலமாகவும் கருதப்படுகிறது. சுந்தரர் பாடல் பெற்றது.
சிறிய வாசலுடன் கூடிய சிறிய கோயில். ஏகதள விமானம் கொண்ட கருவறையில் அநேக தங்காவதேசுவரர் எழுந்தருளியுள்ளார்.
“தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு
மானதிடந் திகழைங்கணையக்
கோனை யெரித்தெரி யாடியிடங்குல
வானதிடங் குறையா மறையாம்
மானை யிடத்ததொர் கையனிடம் மத
மாறுபடப் பொழியும் மலைபோல்
யானையுரித்த பிரானதிடங்கலிக்
கச்சியனேகதங் காவதமே’
என்று அழகிய “கும்மி’ மெட்டில் பாடல் புனைந்துள்ளார் சுந்தரர். வள்ளலாரின் அருட்பாவிலும் இடம் பெற்றுள்ளது இத்திருத்தலம்.

கச்சிநெறி காரைக்காடு
காரைச் செடிகள் நிறைந்த பகுதியில், தானே முறைத்தெழுந்த சிவலிங்கத் திருமேனி அமைந்ததால் “காரைக்காடு’ என்று பெயர் வந்தது. காஞ்சிபுரத்தில், ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள பாதை திபருக்காலிமேடு வரை செல்கிறது. ஏகாம்பரநாதர் திருக் கோயிலிலிருந்து 3 கி.மீ. சோழர் காலத்துக் கட்டுமானம்.
“திருக்காலீசுவரர் கோயில்’ என்றே மக்கள் இதனை அழைக்கின்றனர். ற்காலத்தில், காஞ்சிபுரத்திற்கு வரும் வழியாக இந்த பாதை அமைந்திருந்து, காரைச் செடிகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் “காரைக்காடு’ எனும் பெயர் நிலைத்தது.
திருஞானசம்பந்தர் தனது பாடல்களில் இத்தலத்து ஈசனை “கலிக்கச்சி நெறிக் காரைக் காட்டாரே’ என்றே குறிப்பிடுகிறார். மேற்கு நோக்கிய சந்நதி கொண்டு அமைந்ததால், பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
இந்திரன், இங்கே ஒரு புனித தீர்த்தத்தை நிறுவி, ஈசனை வழிபட்டுள்ளதால், “இந்திரபுரி’ என்றும் பெயர் உண்டு. நவகிரகங்களில் புதன் வழிபட்டு, கிரக நிலையை அடைந்ததால் புதன்கிழமையன்று இந்திர தீர்த்தத்தில் நீராடி, காரைக்காட்டீசரை வணங்குவது, நல்ல பலன் தரும். புதன் பரிகாரத்தலம் இது.

சத்யவிரதேசுவரர்
நூறு அசுவமேத யாகங்கள் செய்தால், தான் சங்குசக்கரத்துடன் அர்ச்சாவதாரத்தில் காட்சி தருவதாக பிரம்மதேவனிடம் திருமால் கூறினார். நூறு அசுவமேத யாகங்கள் செய்ய நெடுங்காலம் ஆகும் என்பதால், “சத்யவிரத ÷க்ஷத்திரமாகிய’ காஞ்சிபுரம் சென்று ஒரே ஒரு முறை யாகம் செய்யுமாறு பணித்தார். காஞ்சிபுரத்தில் செய்யும் புண்ணியம் நூறு மடங்காகப் பெருகும் என்பது தேவரகசியம்.
காரைக்காட்டில் எழுந்தருளியுள்ள சத்யவிரதேசுவரரின் பெயரை யொட்டியே, காஞ்சி நகருக்கு “சத்யவிரத ÷க்ஷத்திரம்’ என்ற பெயர் நிலைத்தது என்று காஞ்சிபுராணம் கூறுகிறது. திருத்தலத்தின் பெயரையே கொண்டுள்ளதால் “சத்யவிரதேசுவரர்’ தனிச் சிறப்பு பெறுகிறார். ஐம்பதடி உயரம் கொண்ட மூன்று நிலை ராஜகோபுரமும், இரு பிராகாரங்களும் கொண்டு சிறிய அழகிய கோயில். மேற்கு நோக்கிய சன்னதி.
வெளிச்சுற்றை வலம் வந்து, உள்ளே நுழைகிறோம். இடப்புறம் நவகிரகங்கள், அப்படியே ஆனந்த நடனமாடிடும் அம்பல வாணர், சிவகாமி சந்நதி. அடுத்து, சமயக் குரவர் நால்வர், இந்திரன், புதன், பைரவர் திருமேனிகள்.
விநாயகர், வள்ளி தேவயானையுடன் ஆறுமுகர், கஜலட்சுமியோடு, நீலகண்ட சிவாச்சாரியாருக்கும் சந்நதி உள்ளது. கருவறை கோஷ்டங்களில் துர்க்கை, பிரம்மா, அண்ணாமலையார், தட்சிணாமூர்த்தி, விநாயகர் உள்ளனர்.
துவார விநாயகரையும், துவார சுப்ரமணியரையும் தொழுதுவிட்டு, மூலவரை தரிசித்திட விழைகிறோம்.
சத்திய விரதேசுவரர், உயர்ந்த பாணலிங்க வடிவில் லேசான செம்மண் நிறத்துடன் காட்சி தருகிறார். அருகே அம்மன் திருமேனி, பிரமராம்பிகை எனும் வண்டார் குழலியம்மையின் உற்சவத் திருமேனி இடம்பெற்றிருக்கிறது.
“அனறாலின் கீழிருந்து அங்கு அறம் புரிந்த அருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற் கோளரவ நாண்கொளுவி
ஒன்றாதார் புரமூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய
நின்றாருங் கலிக் கச்சி நெறிக்காரைக் காட்டாரே’ என்று திருஞான சம்பந்தர்பிரான் தனது பதிகங்களில் போற்றி பாடியுள்ளார்.
இதுவரை காஞ்சிபுரம் நகரத்தில் அமைந்துள்ள எண்ணற்ற திருக்கோயில்களுள், நம்மால் முடிந்தவரை வலம் வந்துவிட்டோம். வரைபடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, வீதி வீதியாக அலைந்து சில கோயில்களைக் கண்டறிய வேண்டியிருந்தது. நகரம் விரிவடைந்து, கோயில்களின் நிலப்பகுதிகள் தனியார் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, கருவறையைச் சுற்றிலும் உள்ள இடங்கள்கூட சுருங்கியுள்ள அவலநிலையை, சில கோயில்களில் கண்டு வேதனைப்பட வேண்டியுள்ளது.

Comments